“வீ ஆர் ஹெல்ப்லெஸ்!” என்று சொல்லிவிட்டு நகர முயன்ற டாக்டர் மனோரஞ்சிதத்தின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குரல் தழுதழுத்தாள் திலகம்.
“டாக்டர், என்னோட மருமகப் பொண்ணை எப்படியாவது காப்பாத்திக் குடுங்க. என் மகன் ஹரி உயிரோடு இருக்கிறான்னு பம்பாயிலிருந்து தகவல் கிடைச்சிருக்கிற இந்த நேரத்துல இவ எங்களை விட்டுட்டுப் போயிடக் கூடாது டாக்டர்!”
மனோரஞ்சிதம் உயிரில்லாத புன்னகையொன்றைப் பூத்தாள். “ரெண்டு உயிர்களையும் காப்பாத்தறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கிட்டேன். குழந்தை பிறந்ததுக்கப்புறம் கீதாம்பரியோட பல்ஸ் ரேட் சரியில்லை. அதைச் சீரான அளவுக்குக் கொண்டுவர்ற முயற்சி இப்போ நடந்துக்கிட்டிருக்கு. பல்ஸ் ரேட் சீரான நிலைமைக்கு வந்தாலும், கீதாம்பரிக்கு ஃபிட்ஸ் வரக்கூடிய சாத்தியமும் இருக்கு. பிரசவமான பெண்ணுக்கு ஃபிட்ஸ் வந்தா அது நிச்சயமான ஒரு மரணத்துக்கு அறிகுறி…”
“டா… டாக்டர்…”
“நீங்க கும்பிடற தெய்வங்களை வேண்டிக்குங்க. பல்ஸ் ரேட் சரியாகி ஃபிட்ஸ் வராம இருந்தா… கீதாம்பரியை உயிரோடு பார்க்கலாம்.”
மாசிலாமணி கைகள் நடுங்கக் கும்பிட்டார்.
“டா… டாக்டர்…”
“ஸாரி! ஃபால்ஸ் ஹோப் கொடுத்து உங்களையும் உங்க மனைவியையும் ஏமாத்த நான் தயாராயில்லை. ஐ ட்ரைட் மை லெவல் பெஸ்ட்.”
“உ… உள்ளே போ… போய்க் கீதாம்பரியைப் பார்க்கலாமா டாக்டர்?”
“தாராளமா! ஆனா, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடாதீங்க! குழந்தையை இப்போ எடுத்துக்கவும் வேண்டாம். வெயிட்லஸ் சைல்ட். ஒரு நாள் முழுக்க லைட் பாக்ஸுக்குள்ளே வைக்கணும்.” சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்து விட, மாசிலாமணியும் திலகமும் கதவைத் தள்ளிக்கொண்டு லேபர் அறைக்குள் நுழைந்தார்கள்.
பல்ஸ் ரேட்டை அப்சர்வ் செய்தபடி தலைமாட்டில் ஒரு நர்ஸ் தெரிய, கீதாம்பரி வெளுத்த முகமாய் மல்லாந்து கிடந்தாள். துவண்ட கைகள். இறுக மூடிய இமைகள். பிளந்த வாய். நிதானமாக ஏறித்தாழும் மார்புச்சுவாசம்.
திலகத்துக்குக் கண்களில் நீர் முட்டியது.
“கீதாம்பரி பிழைப்பாளா?”
“தாயே… செளடேஸ்வரீ…! மொட்டு விட்டிருக்கிற இந்தப் பூச்செடியை நெருப்புக்குக் கொடுக்கும்படியாப் பண்ணிடாதேம்மா!
இவளைக் கண் திறந்து பார்க்க வை… உனக்குக் குடம் குடமா பாலைக் கொட்டி, குளிரக் குளிர அபிஷேகம்… பண்…”
திலகத்தின் பிரார்த்தனை முடியவில்லை. கீதாம்பரியின் பல்ஸ் ரேட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நர்ஸின் முகம் பதற்றத்துக்குப் போயிற்று. ஏதோ ஒரு கருவியோடு பொருத்தப்பட்டிருந்த மானிட்டர் ‘திடும்’ என்று விழித்துக் கொண்டு ‘பீப்… பீப்… பீப்… பீப்…’ என்று சத்தம் கொடுக்க ஆரம்பித்தது.
மலபார் ஹில்ஸ் அந்த முன்னிரவு நேரத்தில் மின்சார நியான்களின் உதவியால் ஒரு வைர அட்டிகை மாதிரி மின்னியது. நேற்று பெய்த மழையின் ஈரம், அடித்த காற்றில் தெரிந்தது.
கமலா நேரு பார்க்கின் பின்புறம் கொட்டியிருந்த இருட்டில் போலீஸ் ஜீப்பை நிறுத்தினார் மல்ஹோத்ரா.
டாக்ஸி டிரைவர் சஹாடே முதல் ஆளாய்க் கீழே இறங்க, ரமணியும் திவாகரும் அவனைத் தொடர்ந்து இறங்கினார்கள். எரிய வேண்டிய தெருவிளக்குகள் எந்தக் காரணத்துக்காகவோ கண்கள் களைப்புற்று, இருட்டு ஆட்சியைப் பிடித்திருந்தது.
பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்ச உபயத்தால் பானிபூரி ஸ்டால் ஒன்றில் மகத்தான வியாபாரம் நடந்து கொண்டிருக்க, சஹாடேவிடம் மல்ஹோத்ரா கேட்டார்:
“அன்னிக்கு அவர் எந்த ரோட்ல போனார்?”
“பக்கத்து ரோட்ல ஸாப்!”
“நட…”
சஹாடே நடக்க, மூன்று பேரும் தொடர்ந்தார்கள். ரோட்டின் ஆரம்பத்திலேயே செவன்த் க்ராஸ் பெயர்ப்பலகை இந்தி பேசியது.
“நல்லாத் தெரியுமா… இந்த ரோடுதானே…?”
“ஆமா ஸாப்!”
ரோட்டுக்குள் பிரவேசித்தார்கள். சற்றுக் குறுகலான ரோடு. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் பங்களாக்கள் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, கண்ணாடி ஜன்னல்களில் ட்யூப்லைட் வெளிச்சம் ஒட்டியிருந்தது. காற்றில் தப்பித்து வந்த, டி.வி-யின் விளம்பர இரைச்சல்.
“ரமணி!…” மல்ஹோத்ரா கூப்பிட்டார்.
“சார்!…”
“இந்த ரோட்ல வீடுகள் நிறைய இருக்கும் போலிருக்கே! உங்க ப்ரதர் ஹரிஹரன் யாரைப் பார்க்கிறதுக்காக இங்கே வந்தார்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?”
“எனக்கும் அதே திகைப்புதான் சார்.”
“சார்! எனக்கொரு யோசனை” இது திவாகர்.
“சொல்லுங்க!”
“ஹரிஹரன் இங்கே பார்க்க வந்தது ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட்டை… இல்லையா?”
“ஆமா…”
“இந்த செவன்த் க்ராஸ் ரோட்ல இருக்கிற வீடுகள்லே இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் யார் யார்னு தெரிஞ்சுக்கிட்டு விசாரணையை ஆரம்பிக்கிறது நல்லது. அநாவசியமானவங்களை இதன் மூலமா தவிர்த்துடலாம்.”
“இதுவும் நல்ல யோசனைதான். விசாரிக்கப்படறவங்களோட வட்டம் சின்னதா இருந்தாத்தான் ஒரு ஆழமான விசாரணை மேற்கொள்ள முடியும்.”
திவாகர் அந்த இரண்டாவது மினி பங்களாவைக் காட்டினான்.
“சார்… அது ஒரு ஆடிட்டர் வீடுன்னு நினைக்கிறேன். வாசல்ல பார்த்தீங்களா போர்டு… மங்கள்பாண்டே, சார்ட்டட் அக்கௌண்டன்ட். இவர்கிட்ட கேட்டா, இந்த ரோட்டில் இருக்கிறவங்கள்ல இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் யார் யார்னு தெரிய வாய்ப்பிருக்கு.”
“கேட்டுடுவோம்!”
மல்ஹோத்ரா அந்த வீட்டின் காம்பெளண்ட் கேட்டைத் தொட்டுத் தள்ள… சத்தம் கேட்டு உள்ளேயிருந்த நாய் ஒற்றைக் குரலில் “லொள்” என்றது. உடனே ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் நிழல் உருவமாய் எட்டிப் பார்த்து “கோன்?” என்றது.
மல்ஹோத்ரா இந்தியில் குரல் கொடுத்தார்.
“ஆடிட்டர் இருக்காரா?”
“இருக்கார். உள்ளே வாங்க!”
“லொள்… லொள்…”
“ரோஜர்…! கீப் கொய்ட்!” அந்தப் பெண்ணின் குரலை ராணுவக் கட்டளையாக ஏற்றுக் கொண்ட நாய் உடனே ஒரு மெளன விரதத்தை மேற்கொண்டது.
நான்கு பேரும் உள்ளே நுழைந்து வாசல் கதவுக்கு வர, கறுப்பு வெயிஸ்ட் கோட் அணிந்து ஐம்பது வயது மங்கள்பாண்டே வெளியே வந்தார். மல்ஹோத்ராவின் போலீஸ் யூனிஃபார்மைப் பார்த்ததும் தன் பெரிய நெற்றியில் சுருக்கங்களை உண்டாக்கினார்.
“யெஸ்…!”
“வீ ஹேவ் கம் ஃபார் அன் என்கொய்ரி…”
“வாட் அபெளட்?”
மல்ஹோத்ரா ஹரிஹரனைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல், ஃபோகஸ் ப்ராடக்ட் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு வந்திருப்பதாகச் சொல்லிவிட்டுக் கேட்டார்:
“இந்த செவன்த் க்ராஸ் ரோட்டில் பிரபலமான இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் யாராவது இருக்காங்களா?”
மங்கள்பாண்டே தன் புருவங்களின் மத்தியை இடது கை ஆட்காட்டி விரலால் கீறிக்கொண்டே அரை நிமிஷம் யோசித்துவிட்டு நிமிர்ந்தார்.
“குறிப்பா இந்த செவன்த் க்ராஸ் ரோடா… இல்லை ஏரியாவா?”
“இந்த ரோடுதான்.”
” ‘இண்டஸ்ட்ரியலிஸ்ட்’னு எடுத்துக்கிட்டா இந்த ரோட்ல ஏழெட்டுப் பேர் இருக்காங்க…”
“அவங்க யார் யார்னு லிஸ்ட் பண்ணிக் கொடுக்க முடியுமா?”
“அது வந்து… நாளைக்கு ஏதாவது ஒரு ப்ராப்ளம்னு வந்துட்டா… எனக்குக் கஷ்டமாகிப் போயிடுமே!”
“நோ நோ… மிஸ்டர் மங்கள்பாண்டே! இது ரகசியமான என்கொய்ரி. நீங்க தர்ற விவரங்களை வெச்சுக்கிட்டு ரகசியமாத்தான் விசாரணை நடத்துவோம். உங்க பெயர் நிச்சயமா வெளியே வராது.”
“இட்ஸ் ஓ.கே! போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் பெயர்களைச் சொல்றேன். நோட் பண்ணிக்குங்க.”
மல்ஹோத்ரா தன் சிறிய பாக்கெட் டயரியையும் பேனாவையும் எடுத்துக்கொள்ள… ஆடிட்டர் மங்கள் பாண்டே யோசித்து யோசித்து மெல்லிய குரலில் ஒவ்வொரு பெயராகச் சொல்ல ஆரம்பித்தார்.
“காயாலால்
தேஷ்முக்
முரளிதர் பவார்
ஜோஷி
நாராயண பிரகாஷ்
ஷங்கர் டக்கலே…”
பெயர்களைக் குறித்துக் கொண்டு மல்ஹோத்ரா கேட்டார்: “இப்போ சொன்ன நபர்கள்ல உங்களுக்கு யார் நல்ல பழக்கம்?”
“யாருமில்லை. வாக்கிங் போகும்போது எதிர்ப்பட்டால் புன்னகை செய்வதோடு சரி.”
“இந்த லிஸ்ட்டில் முதலில் யாரை விசாரிக்கலாம்?”
“மிஸ்டர் ஜோஷி. நான்கைந்து பங்களாக்கள் தள்ளி ரோட்டின் வளைவில் அவருடைய பங்களா இருக்கிறது. நல்ல மனிதர்.
அவருக்கு நிறைய பிஸினஸ் இருக்கிறது. முதலில் நீங்கள் அவரிடம் பேசிவிட்டுப் பின் மற்றவர்களை விசாரிக்கப் போகலாம். எல்லா வகையிலும் அவர் உங்களுக்கு உதவியா இருப்பார்.”
“தேங்க்யூ வெரிமச் மிஸ்டர் மங்கள்பாண்டே!” அவருடன் கைகுலுக்கிவிட்டு மல்ஹோத்ரா வெளியே வர ரமணி, திவாகர்,
சஹாடே பின்தொடர்ந்து வந்தார்கள்.
தள்ளி, ரோட்டின் வளைவில் தெரிந்த ஜோஷியின் பங்களாவை நோக்கி நடைபோட்டார்கள்.
ஜன்னலினின்றும் நடுக்கமாய்க் கீழே குதித்தாள் ஆர்யா. அடிவயிற்றில் உற்பத்தியான பிரளயம் இப்போது இதயத்துக்கு இடம் பெயர, முகம் அந்தக் குளிரையும் மீறிக் கொண்டு சொதசொதவென்று வியர்த்தது.
வால் சந்த் கலக்கமாய்க் கேட்டான்:
“அம்மா… உள்ளே கிடக்கிறது யாரு…?”
“டா… டாக்டர்…”
“எ… என்னது… டாக்டர் அய்யாங்களா?!”
“ஆமா… தலையில பலத்த ரத்தக் காயம்! ரத்தம் நிறைய வெளியே வந்து குளம் கட்டியிருக்கு.”
“என்னம்மா இது… ஆச்சரியமாயிருக்கு! பங்களா உட்பக்கமா பூட்டியிருக்கு. பின்பக்கமும் வழியில்லை. காம்பெளண்ட் கேட்டும் நாம வர்றப்ப உட்பக்கமா பூட்டியிருந்தது. வெளியாள் உள்ளே புகுந்து டாக்டர் அய்யாவைத் தாக்கியிருக்க முடியாதேம்மா!”
ஆர்யாவின் குரல் நடுங்கியது. “வா… வால் சந்த்!… டாக்டரைத் தாக்கியது வெளியே இருந்து வந்த நபர் இல்லை.”
“பி… பின்னே…?”
“உள்ளேயிருக்கிற ஒரு பெண்தான்.”
“பெண்ணா…?!”
“ஆமா… அவ பேர் நிஷா. பத்திரிகையிலிருந்து வர்ற மாதிரி டாக்டர் பங்களாவுக்கு வேவு பார்க்க வந்தா. மடக்கி மயக்க ஊசி போட்டு கேஜ் ரூம்ல அடைச்சு வெச்சிருந்தோம். நான் விட்டல் டெட் பாடியோடு கார்ல புறப்பட்டு வந்ததும், டாக்டர் தனியா எக்ஸ்பரிமெண்ட் ஷெட்யூலில் ஆழ்ந்திருந்த சமயம் நிஷாவுக்கு மயக்கம் தெளிஞ்சு, கேஜ் ரூமை விட்டு வெளியே வந்து டாக்டரைத் தாக்கியிருக்கணும்.”
“அப்படி இருந்திருந்தா… அந்த நிஷா பொண்ணு வெளியே தப்பிச்சுப் போயிருக்கணுமேம்மா… பங்களாவோட உட்பக்கக் கதவு பூட்டியிருக்கே?!…”
“வால் சந்த்! பங்களாவோட கதவு லாக்கர் கொஞ்சம் நுட்பமானது. அதை லாக் பண்ணவும் திறக்கவும் எனக்கும் டாக்டருக்கும் மட்டும்தான் தெரியும்.”
வால் சந்த்தின் முகத்தில் கலவரம் பரவியது.
“நீங்க சொல்றதைப் பார்த்தா… டாக்டரைத் தாக்கின அந்தப் பொண்ணு உள்ளாரத்தான் இருக்கா…”
“ஆமா… இருட்டுக்குள்ளே பதுங்கியிருக்கலாம். நான் ஏதாவது சாவியை உபயோகிச்சு உள்ளே வரலாம்னு நினைச்சு, எனக்காக உள்ளே காத்துக்கிட்டிருக்கலாம். அவ கையில ஏதாவது இருக்கலாம்.”
“இப்ப என்னம்மா பண்றது?”
“யோசிக்கணும் வால் சந்த்!”
-தொடரும்