நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.
100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. முட்டை 100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.
ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம். புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.
மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். முட்டையில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை வழங்கலாம். இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.
அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.
100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.
இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.
பல்வேறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முட்டையில் காணப்படுகிறது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.