Home » சிறுகதைகள் » ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!

ஆண்டவன் உலகத்தின் முதலாளி!

வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான்.
இருந்தாலும் அவன், “”பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது!” என்று வருத்தப்பட்டு வணங்குவான்.

அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார்.

வேலு அவரிடம், “”சுவாமி! என்னைப் போல ஒரு விவசாயிக்குத் தான் எப்ப வெயிலடிக்கணும்! எப்ப மழை பெய்யணுங்கிற விபரம் நல்லாத் தெரியும். உங்களைப் போல தேவலோகத்தில் இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி விஷயத்திலே அனுபவமில்லே!” என்றான்.

பிள்ளையாரும்,””நீ சொல்றது உண்மை தான்! இன்று முதல் மழை, காற்று, வெயில் தேவதைகள் எல்லாமே உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். நீ நினைச்சபடி வேலை வாங்கிக் கொள்,” என்று வரம் அளித்தார்.

இனிமேல் மனம் போல வேலை வாங்கி நிறைய மகசூல் அடையலாம் என்று வேலு மனதில் சந்தோஷம் கொண்டான்.
காலையில் எழுந்ததும் வானத்தை நோக்கினான்.

“”மழையே இப்போதே பெய்!” என்று ஆணையிட்டான். என்ன ஆச்சரியம்! பிள்ளையார் அளித்த வரத்தின்படியே நடந்தது.
வானில் கருமேகம் கூடியது. மழை கொட்டத் தொடங்கியது.
வயலுக்குச் செல்ல ஆயத்தமானான். கலப்பையுடன் வாசலுக்கு வந்தான்.

“”மழையே! இப்போது நீ நிற்கலாம்!” என்றான். மழையும் நின்றது.

ஈரமான வயலை கலப்பையால் உழத் தொடங்கினான். காற்றை அழைத்து சீராக வீசச் செய்து விதைகளைத் தூவினான்.
மழை, வெயில், காற்று என எல்லாம் அவன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தன.

பயிர்கள் பச்சைப் பசேல் என வளர்ந்து நின்றன. காற்றில் பயிர்கள் நர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ந்தான். அறுவடை காலம் வந்துவிட்டது.

வேலு பயிரை அறுக்கத் தொடங்கினான். அதில் தானியம் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான்.

வேலுவுக்கு கண்ணீர் வந்தது. குளக்கரைக்கு ஓடினான். அங்கு பிள்ளையார் “சிவனே’ என அமர்ந்திருந்தார்.

“”அப்பனே!” என அவரது காலில் விழுந்து அழத் தொடங்கினான்.

“”மழை, காற்று, வெயில் எல்லாமே தகுந்த நேரத்தில் இருந்தும் பயிர்கள் தானியங்களைத் தரவில்லையே! என் உழைப்பு வீணாகி விட்டதே! ஏன்?” என்றான்.

இப்போதும் பிள்ளையார் புன்முறுவல் பூத்தபடி அவன் முன் தோன்றினார்.

“”வேலு! என் கட்டுப்பாட்டில் அவை இருந்தபோது, இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்ந்தன என்று நீ யோசிக்கவில்லை. நிலம் நன்றாக விளைந்து வருமானம் செழித்த போது, உலக மக்கள் என்னை நினைத்துப் பார்த்தார்களா? எல்லாம் அவரவர் திறமையால் வந்ததாக மார்தட்டிக் கொண்டனர்.

இறைவனாகிய நான் வகுத்த சட்டதிட்டங்களை மறந்து, பணம் தந்த மமதையால் தேவையில்லாத கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டார்கள். அதில் நீயும் அடக்கம். அது மட்டுமல்ல! வாழ்வில் போராட்டமே  இல்லாவிட்டால் ஏது ருசி?

சோம்பேறித்தனம் தான் மேலிடும். எனவே தான் இயற்கையை என் கட்டுப்பாட்டில் வைத்து, மக்கள் அட்டூழியம் செய்யும் போது பூகம்பம், புயல் முதலான சீற்றங்களை தருகிறேன். அந்த சமயத்தில், நீங்கள் பயத்தில் என்னைச் சரணடைகிறீர்கள். அதனால் தான் நான் உலகின் முதலாளியாக இருக்கிறேன். புரிகிறதா!” என்றார்.

பதில் சொல்ல முடியாத வேலு தலை குனிந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top