Home » உடல் நலக் குறிப்புகள் » சில வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்:-
சில வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்:-

சில வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்:-

சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

இலந்தைப்பழம்:

சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்

இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:

தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’ உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.

பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top