அமானுஷ்யன் – 114

அக்‌ஷய் குருவிடம் சொன்னான். “குருவே நான் வெளியே போகும் முன் போனில் என் அண்ணனிடம் பேச வேண்டும். உங்கள் போனை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா?”

“புத்தரின் போனை பக்தனான நீ தாராளமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்”

பேச்சுக்காகக் கூட என்னுடைய என்ற சொல்லைப் பயன்படுத்தாத குருவைப் பெருமிதத்துடன் பார்த்த அக்‌ஷய் புத்த விஹாரத்தின் முன் பகுதி அறையில் இருந்த போனில் அண்ணனின் ரகசிய செல் போனிற்கு போன் செய்தான்.

“ஹலோ” ஆனந்தின் குரல் ஆவலுடன் ஒலித்தது.

அக்‌ஷய் அண்ணனிடம் தனக்கு முழு நினைவு திரும்பியதைச் சொல்லி விட்டு முன்பு நடந்தது அனைத்தையும் சொன்னான். தற்போதைய நிலவரத்தையும் சொன்னான். சலீம் தன்னைத் தொடர்ந்து வந்து புத்த விஹாரத்தின் வெளியே நிற்பதை மட்டும் சொல்லவில்லை. அண்ணனை அனாவசியமாகப் பயமுறுத்த அவன் விரும்பவில்லை. “… அந்த பென் டிரைவை அந்த மந்திரியின் போலீஸ் அடியாள்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்போது நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் குண்டு வெடிக்க சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. ஆனந்த் அப்பாவி ஜனங்கள் நிறைய பேர் சாகப்போவதைத் தடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்?”

ஆனந்த் சொன்னான். “இரு மகேந்திரன் ஏதோ பேச வேண்டுமாம்…”

மகேந்திரன் குரல் பரபரப்புடன் கேட்டது. “அக்‌ஷய். நீ பேசியதை நானும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்… நீ மெயிலில் அனுப்பிய அட்டாச்மெண்ட் இருக்கிறதா என்று நான் ஆச்சார்யாவின் இ-மெயிலுக்குள் போய் பார்த்து விட்டேன். அவர் பாஸ்வர்டு கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமாய் இருக்கவில்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட மெயிலை நம் எதிரிகள் நமக்கு முன்பே போய் அழித்து விட்டிருக்கிறார்கள். இப்போது ஒரு வழி இன்னும் இருக்கிறது. உன் இ-மெயிலில் அனுப்பிய நகல் இருக்கிறதா என்று பார்க்கலாம். நீ பார்த்து சொல்கிறாயா?”

“நான் இப்போது எந்த ப்ரவுசிங் செண்டருக்கும் போக முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். நீயே பார்த்து சொல்லேன். நான் மெயில் ஐ.டி, பாஸ்வர்டு இரண்டையும் சொல்கிறேன்…”

“சொல். நான் லாப்டாப் முன்னால் தான் இருக்கிறேன். இப்போதே பார்த்து விடுவோம்….”

அக்‌ஷய் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்ட அவன் சில வினாடிகள் கழித்து வருத்ததுடன் சொன்னான். “அக்‌ஷய் அவர்கள் உன் இ- மெயிலுக்குள்ளேயும் போய் அதை அழித்திருக்கிறார்கள். அவர்கள் இதை முன்பே செய்து வைத்திருக்கிற மாதிரி தான் தெரிகிறது.”

“மகேந்திரன் நீங்கள் எல்லாரும் சேர்ந்து உங்களால் என்ன முடியும் என்று யோசித்து செய்யுங்கள். நம் கையில் எத்தனையோ பேர் உயிர்கள் இருக்கின்றன என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும். சரி நான் பிறகு பேசுகிறேன்”

“அக்‌ஷய் போனை வைத்து விடாதே. ஆனந்த் பேச வேண்டுமாம்….”

அடுத்ததாக ஆனந்த் குரல் உணர்ச்சிவசப்பட்டு கேட்டது. “அக்‌ஷய். இனி நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம். அதைப் பற்றிய கவலையை விடு. நீ உன்னைப் பார்த்துக் கொள். நீ பத்திரமாக வந்து சேர். நீ நினைத்தால் அது கண்டிப்பாக முடியும். உன்னை எல்லோரும் அமானுஷ்யன் என்று கூப்பிடுவது அர்த்தம் இல்லாமல் அல்ல…”

அக்‌ஷய் மனம் வைத்தால் கண்டிப்பாக தப்பித்து விடுவான், மனம் வைப்பது மட்டும் தான் பாக்கி என்கிற வகையில் ஆனந்த் பேசியதைக் கேட்ட அக்‌ஷயிற்கு வேடிக்கையாக இருந்தது.

“ஆனந்த், நீ ஒரு சாதுவிடம் போய் கேட்ட போது நான் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்ததை ஞான திருஷ்டியில் பார்த்து சொன்னதை மறந்து விட்டாயா?”

ஆனந்திற்கு என்ன சொல்வது என்று என்று தெரியாமல் கோபப்பட்டான். “நீ ஒன்றும் அவருக்கு இளைத்தவன் அல்ல. நீ மனம் வை. அந்த பழைய விதியை நீ மாற்ற முடியும். ஞாபகம் வைத்துக் கொள். உனக்காக அம்மா காத்துக் கொண்டிருக்கிறாள். வருணும் சஹானாவும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்….”

சஹானாவின் பெயரை ஆனந்த் அழுத்திச் சொன்னது போல் இருந்தது. ஒரு கணம் அக்‌ஷயும் பேச முடியாமல் நின்றான். வருணின் பிறந்த நாள் இரவு அவள் பாடிய பாடல் வரிகள் அவள் குரலிலேயே மனதில் மறு ஒலிபரப்பு ஆனது.

Love can touch us one time
and last for a lifetime
and never let go till we’re gone.

ஒரு கணம் தடுமாறிய அவன் மறுகணம் தன்னை சுதாரித்துக் கொண்டான். அவனுக்கு இப்போது அவன் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரமில்லை.

“சரி ஆனந்த். பிறகு பேசலாம்” என்று போனை வைத்து விட்டுத் திரும்பினான். அவனுடைய குரு அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். ஒரு கண நேரம் அவன் தடுமாறியதை அவரும் கவனிக்கவே செய்தார். அது அவரை யோசிக்க வைத்தது போல் இருந்தது. ஆனால் அவர் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அவனாகவும் எதுவும் சொல்லவில்லை.

அவன் அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

**********

மந்திரி வீரேந்திரநாத் ராஜாராம் ரெட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “…வெடிகுண்டு வெடிக்கிற நேரம் நான் டெல்லியில் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் ஜம்முவிற்குப் போகலாம் என்றிருக்கிறேன். அவன் பிணத்தை நான் முதலில் பார்க்க வேண்டும். அப்போது தான் நிம்மதி…”

மந்திரி அவனைப்பற்றி பேசும் போதெல்லாம் ஒரு வித படபடப்பை அவரிடம் ராஜாராம் ரெட்டியால் கவனிக்க முடிந்தது. அவனை சந்தித்த நாளில் இருந்து ஆரம்பித்த அந்த படபடப்பை மந்திரியால் அகற்ற முடியவில்லை. ஆரம்பத்தில் அவனை இமயமலையில் கொல்ல மந்திரி ரெட்டியைத் தான் அவர் நாடினார். எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்யவும், கச்சிதமாகச் செய்யும் ஆட்களைத் தேர்ந்தெடுக்கவும் முடிந்த ரெட்டிக்கே அமானுஷ்யன் சவாலாகத் தான் மாறி இருந்தான். ஆனால் பென் டிரைவ் கிடைத்த உடனேயே அவனை ஜெயித்து விட்டதாக ரெட்டி நிம்மதியடைய ஆரம்பித்திருந்தார்.

கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆச்சார்யாவின் இ-மெயிலிலும், அமானுஷ்யனின் இ-மெயிலிலும் சம்பந்தப்பட்ட ஃபைலை அழித்திருந்த அவருக்கு அவனால் மந்திரியை எந்த விதத்திலும் காட்டிக் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. டிவி, பத்திரிக்கைகள் மூலம் ஏதாவது தகவலைக் கசிய வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் டெல்லியின் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கப்படுவது குறித்த வதந்திகள், மொட்டைக் கடிதங்கள், அனாமதேய போன் கால்கள் என்று பத்திரிக்கைகளுக்கும், போலீசுக்கும் தொடர்ந்து வருமாறு பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் சொன்ன இடம் இன்னொருவர் சொல்லாத படி எல்லா இடங்களையும் யாராவது ஒருவர் சொல்லும்படி பார்த்துக் கொண்டதால் பெரும் குழப்பத்தில் ஊடகங்கள் இருந்தன. இத்தனைக்கும் நடுவில் அந்த டிவிக்காரி மூலமாக தகவல் சொல்லப்பட்டாலும் யாருக்கும் அதை நம்பத் தோன்றாது. மேலும் அதிகார மையம் மந்திரியிடம் வலுவாக இருப்பதால் அவரை அவன் எதுவும் செய்ய முடியாது என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆனாலும் மந்திரி சொன்னது போல அவனை அழித்து விட்டால் பின் எந்த யோசனையும் இல்லாமல் இருக்கலாம்…

“அந்த சைத்தானை நம் ஆட்கள் யாராவது ஜம்முவில் பார்த்திருக்கிறார்களா? தோராயமாகவாவது எங்கிருப்பான் என்று தெரியுமா அவர்களுக்கு?” மந்திரி கேட்டார்.

ராஜாராம் ரெட்டி சொன்னார். “அவர்கள் அவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை”

மந்திரி எரிச்சலுடன் சொன்னார். “நேரா நேரத்திற்கு சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர உருப்படியாக எதுவும் செய்கிற மாதிரி தெரியவில்லை. அந்த வெளிநாட்டுக் காரன் சலீம்?”

“ஆரம்பத்திலிருந்தே அவன் தான் அமானுஷ்யனை சரியான கண்காணிப்பில் வைத்திருக்கிறான்.”

மந்திரி சொன்னார். “அவன் தலிபான்களிடம் அமானுஷ்யன் பிணத்தைக் கண்டிப்பாக ஒப்படைக்கிறேன் என்று சொன்னானாம். உயிரோடு பிடித்துத் தருவது தான் கஷ்டம். கொன்று விடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றானாம். அவர்களுக்கு சலீம் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவன் எடுத்த காரியத்தை இது வரையில் கோட்டை விட்டதில்லையாம்.”

“எதற்கும் நீங்கள் தலிபான் தலைவனிடம் பேசுவது நல்லது…தாடிக்காரனிடம் பேசுவது வீண்.” என்ற ராஜாராம் ரெட்டி தலிபான் தலைவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொன்னார்.

மந்திரிக்கு அவர் சொன்னது பிடித்திருந்தது. என்னமாய் சிந்திக்கிறார் மனிதன் என்று ஆச்சரியப்பட்டார் அவர். ஆரம்பத்திலிருந்தே ரெட்டியின் ஆலோசனைகள் இல்லாமல் இருந்திருந்தால் அவர் நிறைய விஷயங்களை சாதித்திருக்க முடியாது. உடனடியாக தலிபான் தலைவனுக்கு வீரேந்திரநாத் போன் செய்தார்.

********

ஆனந்த், மகேந்திரன், மது மூன்று பேரும் அடுத்து என்ன செய்வது என்று பதட்டத்தில் இருந்தார்கள். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் வெடிகுண்டு வதந்திகள் வந்த வண்ணம் இருப்பதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட டெல்லியின் எல்லா பகுதிகளிலும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்பது போல செய்திகளால் பீதி கிளம்பி இருந்தது. அரசாங்கமோ விஷமிகளின் இந்தப் போக்கைக் கண்டித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தது. கடிகார முள் நகர நகர அவர்கடைய பதட்டம் அதிகரித்தபடியே இருந்தது. பல விதமான திட்டங்கள் அவர்கள் மனதில் எழுந்தன. அந்த பென் டிரைவை எப்படியாவது அபகரித்து விட்டால் என்ன என்று கூட அவர்களுக்குத் தோன்றியது.

“வீரேந்திரநாத்தின் உயிரை எடுப்பது அதை விடச் சுலபம்” என்றான் மகேந்திரன்.

“ஒரே வழி பிரதமரை சந்திப்பது தான். ஆனால் உடனடியாக அவரைப் பார்ப்பது கஷ்டம். பார்த்தாலும் நாம் சொல்வதை அவர் நம்புவது அதை விடக் கஷ்டம்” மது சொன்னான்.

“ஆனாலும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை” மகேந்திரன் சொன்னான்.

“அவரை நெருங்கக் கூட முடியாது” மது சொன்னான்.

ஆனந்த் கேட்டான். “அரசியல் செல்வாக்கிருக்கும் யார் உதவியையாவது நாம் கேட்டால் என்ன?”

“சாதாரண செல்வாக்கெல்லாம் போதாது. உடனடியாக சந்திக்க வேண்டுமென்றால் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும்.” மது சொன்னான்.

ஆனந்த் மகேந்திரனைக் கேட்டான். “மகேந்திரன், உனக்கு மந்திரி யாரையோ தெரியும், அவர் மூலம் உனக்கு நம் டிபார்ட்மெண்டில் நல்ல செல்வாக்கு என்று சொல்கிறார்களே. அதை இந்த விஷயத்தில் பயன்படுத்தினால் என்ன?”

மகேந்திரன் சொன்னான். “என் ஒன்று விட்ட மாமா ஒருவர் மத்திய இணை அமைச்சர். அவரைக் கேட்டுப் பார்க்கலாம் தான். ஆனால் அவர் கூட இந்த மாதிரி விஷயத்தில் நமக்கு உதவுவாரா என்பது சந்தேகம் தான். அவர் ஒருவேளை வீரேந்திரநாத் பிரதமரானால் அவரிடமிருந்து பெரிய இலாக்கா ஏதாவது கேட்டு வாங்கலாமே என்று நினைக்கக்கூடிய ஆள்…”

ஆனந்த் அங்கலாய்த்தான். “தேசத்தின் மேல் உண்மையான அக்கறை இருக்கும் அரசியல்வாதியே இங்கே இல்லையா?”

மகேந்திரன் சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னான். “அவர் சுத்த மோசம் என்று சொல்ல முடியாது. அதே நேரம் நல்ல ஆள் என்றும் சொல்ல முடியாது. மதில் மேல் பூனை மாதிரி எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடிய ஆள்.”

“எதற்கும் அவரிடம் பேசித்தான் பாரேன்” என்றான் மது.

“நாம் சொன்னதை வீரேந்திரநாத்திடம் சொல்லி விடக்கூடிய ஆள் அல்லவே அவர்?” ஆனந்த் சந்தேகத்தை எழுப்பினான்.

“சேச்சே அப்படி செய்ய மாட்டார். ஒரு காலத்தில் என் அப்பா அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அதனால் காட்டிக் கொடுக்க மாட்டார். ஆனால் நமக்கு உதவாமலும் இருக்க வாய்ப்பும் இருக்கிறது. எதற்கும் பேசிப் பார்க்கிறேன்” மகேந்திரன் உடனடியாக அவருக்குப் போன் செய்து பேசினான்.

சுமார் கால் மணி நேரம் நிலவரத்தை சுருக்கமாகச் சொன்ன மகேந்திரன் “மாமா, இப்போதைக்கு நம் நாட்டைக் காப்பாற்ற உங்களால் தான் முடியும். பிரதமரிடம் நாங்கள் பேச வேண்டும். அதற்கு தயவு செய்து நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்”

அவர் ஆரம்பத்தில் தயங்கினார். “ஆதாரம் இல்லாமல் பேசி என்ன பயன்?”

“மாமா, வெடிகுண்டு வெடித்த பிறகு நாங்கள் சொன்னது உண்மை என்பது புரியும். ஆனால் அப்போது புரிந்து என்ன ஆகப்போகிறது. குறைந்த பட்சம் வெடிகுண்டு வெடிப்பதையாவது தடுக்க ஏதாவது செய்யுங்களேன்”

“நீ சொல்வது போல வீரேந்திரநாத் இதில் உடன்பட்டிருந்தால் நாம் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கும்படி முதலிலேயே முக்கியமானவர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பார். ஒரே வழி பிரதமர் தலையீடு தான். எதற்கும் அவரை நீங்கள் சந்திக்க ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.” என்றவர் போனை வைத்தார்.

சரியாக இருபது நிமிடங்களில் திரும்பவும் போன் செய்தார். “அவருடைய அப்பாயின்மெண்ட் கிடைக்காது என்று அவருடைய செகரட்டரி சொல்கிறார். இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகள் இருக்கின்றனவாம். நீங்கள் அல்ல நானே போனாலும் பார்த்து பேச முடியாது என்கிற நிலைமை.”

மூவரும் இந்த இருபது நிமிடங்கள் கிடைத்த லேசான நம்பிக்கையும் சிதைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top