வீரேந்திரநாத்தை சந்தித்து ஜம்முவில் பேசிய போது அக்ஷய் அந்த மனிதரின் பதவி, அதிகார ஆசையின் ஆழத்தை முழுமையாக அறிந்து கொண்டான். அவருக்குத் தர வேண்டிய பிரதமர் பதவியை கட்சியின் தலைமைக்குழு இன்னொருவருக்குத் தந்தது தான் உலகத்திலேயே நிகழ்ந்த மிகப்பெரிய அநியாயம் என்று அவர் உண்மையிலேயே நினைத்தார். மிகவும் கண்ணியமான மனிதராகவும், திறமை வாய்ந்தவராகவும் மக்களிடத்தில் பெயரெடுத்திருந்த அவரை விட்டு விட்டு மக்களிடம் பெரும் செல்வாக்கு இல்லாத ஒரு தலையாட்டி பொம்மையை பிரதமர் பதவியில் உட்கார வைத்த தலைமைக்குழு மேலும், பிரதமர் மீதும் அவருக்கு அளவில்லாத கோபம் இருந்தது. அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் தீவிரமாக ஆசைப்பட்டார். இதையெல்லாம் அவர் அவர்களுக்குத் தெரிவிக்கையில் அவர் கண்களில் தெரிந்த வெறி இந்த மனிதர் மிக அபாயமானவர் என்பதை அடையாளம் காட்டியது.
அளவுக்கு அதிகமான பேராசையும், பொறாமையும், கோபமும் கொண்ட மனநிலையில் இருந்த அவரைப் பேச வைப்பது அவனுக்கு கஷ்டமாக இருக்கவில்லை. தலிபான் தலைவர்களை விட அதிகமாக அவனே பேசினான். அவன் புத்திசாலித்தனமாக அவரைப் பேச வைத்து அவர் திட்டத்தை முழுவதும் விளக்கவும் வைத்து அவரைக் கையாண்ட விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர்கள் அவனையே பேச விட்டிருந்தார்கள். எல்லாமே வீடியோவும் எடுக்கப்பட்டிருந்த போது தான் அந்த ரகசிய காமிராவை அவருக்குப் பின்னால் நின்றிருந்த பாதுகாவலர் ஒருவர் கண்டு பிடித்து விட்டார். அவர் பார்த்து விட்டு அதை மந்திரியிடம் சொல்லக் குனிந்ததை எதிர்முனையில் இருந்த தலிபான் தலைவர்கள் கவனித்து என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்குள் அக்ஷய் அந்த பாதுகாவலரைத் தாக்கி படுக்க வைத்தும் விட்டான். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தும் விட்டது.
தன் புத்திசாலித்தனமான திட்டங்களைச் சொல்லி தலிபான் தலைவர்கள் முன்னால் பிரகாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்த மந்திரிக்கு ஒரு கணம் ஒன்றும் பிரியவில்லை. எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் அவர்களுக்கு இடையே இருந்த நீண்ட மேசையைத் தாண்டி அருகில் எப்படி வந்தான், தன் பாதுகாவலர் ஒருவர் ஏன் கீழே விழுந்து கிடக்கிறார் என்று விளங்காமல் வீரேந்திரநாத் “என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.
அக்ஷய் அந்தப் பாதுகாவலர் தலிபான் தலைவர்களைக் கொல்ல துப்பாக்கி எடுக்கக் குனிந்ததைப் பார்த்ததாகவும் அதனால் அந்த ஆளைத் தள்ளி விட தாவிக் குதித்ததாகவும் சொன்னான்.
“இது என்னுடைய ஆள். அப்படியெல்லாம் செய்ய மாட்டார். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்”
“பின் ஏன் அந்த ஆள் திடீரென்று குனிந்தார்”
அது அப்போது மந்திரிக்கும் விளங்கவில்லை. “தெரியவில்லையே. சரி நீங்கள் என்ன செய்தீர்கள்?”
“நான் அவரைத் தள்ளி விட்டேன் அவ்வளவு தான்”
“பரவாயில்லை, அவரை எழுப்புங்கள்” என்று மந்திரி தன் ஆட்களிடம் சொன்னார்.
அவர்கள் எழுப்பி உட்கார வைத்த அந்தப் பாதுகாவலருக்கு உயிர் இருந்தது என்றாலும் உணர்வில்லாமல் இருந்தார்.
அக்ஷய் வருத்தமாக சொன்னான். “விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டு இப்படி ஆகி விட்டார் என்று நினைக்கிறேன் பாவம்”
சிலர் அந்த ஆளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்பும் மந்திரியுடனான பேச்சு தொடர்ந்தது என்றாலும் மந்திரி பழைய வேகத்தில் இருக்கவில்லை. வெடிகுண்டு வெடிக்க கண்டிப்பாக எல்லா விதங்களிலும் உதவுவதாக மந்திரி சொன்னார். பரஸ்பரம் என்னென்ன செய்ய வேண்டும் என்று அவரும் தலிபான் தலைவர்களும் பேசிக் கொண்டார்கள். தன் அவசர புத்தியால் ஒருவர் இப்படி மருத்துவமனை போகும் அளவு ஆகி விட்டதே என்ற வருத்தம் காட்டுவது போல அக்ஷய் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டிருந்தான்.
வீரேந்திரநாத் போன பிறகு தலிபான் தலைவர்கள் அக்ஷயை மனதாரப் பாராட்டினார்கள். சந்தேகப்பட்ட தலிபான் தலைவன் கூட அந்த சமயத்தில் சந்தேகம் தீர்ந்தான். அவர்கள் மூவரும் அவனிடம் கேட்டார்கள். “நீ எப்படி கண்மூடித் திறக்கும் முன்னால் அந்தப் பக்கம் போய் அந்த ஆளை வீழ்த்தினாய். அவன் எப்படி கோமாவிற்குப் போனான்.”
அவர்கள் அறிந்த அப்துல் அஜீஸிற்கு கொரில்லா தாக்குதல் தெரியும் என்றாலும் இன்று அவன் நிகழ்த்திய சாகசத்தை அவர்கள் என்றும் அவனிடம் கண்டதில்லை.
“அந்த ஆள் வீரேந்திரநாத்திடம் வாய் திறந்து பேசினால் ஆபத்து என்று புரிந்த பிறகு நான் கொஞ்சமும் யோசிக்கவில்லை. இந்த வித்தை நான் சமீபத்தில் கற்றுக் கொண்டது. கடைசி தாக்குதலில் உயிர் போய் உயிர் வந்த பிறகு என்னைத் தற்காத்துக் கொள்ள நான் புதிதாகக் கற்றுக் கொண்ட வித்தை இது..”
“எங்கே கற்றுக் கொண்டாய்?”
அக்ஷய் எரிச்சலைக் காட்டினான். “நீங்கள் என்ன என்னை பேட்டி எடுக்கிறீர்களா? ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்.”
அவன் மனமிருந்தால் விவரமாகச் சொல்வான், மனமில்லா விட்டால் சிறிதும் சொல்ல மாட்டான் என்று ஏற்கெனவே அறிந்திருந்ததால் அவர்கள் பேசாமல் இருந்து விட்டார்கள்.
எடுத்த வீடியோ நிகழ்ச்சியை அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாய் அவனொரு பென் டிரைவில் எடுத்து வைத்துக் கொண்டான்.
அவர்கள் ஆப்கானிஸ்தான் கிளம்பும் போது அவன் அவர்களுடன் செல்லவில்லை. “நாம் திட்டமிட்டபடி குண்டு வெடிக்கும் போது நான் இந்தியாவில் இருக்க விரும்புகிறேன். அதற்கு இன்னும் சில நாட்கள் தானே
இருக்கின்றன. அதனால் இங்கேயே நான் இருக்கின்றேன்….” என்று அவன் சொன்ன போது அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
ஆனால் மந்திரி வீரேந்திரநாத்தின் பாதுகாவலன் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகவே மந்திரிக்கு எங்கேயோ பிசகு நடந்திருக்கிறது என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. டாக்டர்களிடம் கேட்ட போது அவர்கள் இது சாதாரணமாக விழுந்ததால் ஏற்பட்ட நிலை அல்ல யாரோ மனித உடலின் முழு சூட்சுமத்தை அறிந்திருந்தவர் மிக கவனமாகக் கையாண்ட விதமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகச் சொன்னார்கள். கத்தி பட்டால் உயிர்சேதம் ஏற்படும், கத்தி உபயோகிக்காமல் இருந்தாலோ கோமாவில் இருந்து மீள முடியாது என்ற திரிசங்கு நிலைமை உருவாகியது.
அப்போது தான் மும்பையில் முன்னம் இருந்திருந்த டாக்டர் ஒருவர் தன் அனுபவத்தில் இதையே மும்பையில் ஒருவன் செய்திருப்பதாகவும், கடைசியில் அவனே அவர்களில் பெரும்பாலானோரை சரிப்படுத்தி விட்டதாகவும் சொன்னார். மந்திரி உளவுத்துறை மூலமாக அப்படிப்பட்ட மனிதனின் முழு வரலாற்றையும் வரவழைத்தார். அமானுஷ்யன் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்ட அவனால் கோமா நிலைக்குப் போனவர்கள் சொன்ன வர்ணனனைகள் எல்லாம் அப்துல் அஜீஸ் என்ற பெயரில் அவரிடம் பேசிய தலிபான் குழு நபர் போலவே இருந்தது. மின்னல் வேகம், காற்றின் வேகம் என்றெல்லாம் அவர்கள் சொன்னதைப் படித்த மந்திரிக்கு அவர் நேரில் கண்ட அனுபவமும் அப்படியே இருக்க சந்தேகம் வலுவடைந்தது.
உடனே அப்துல் அஜீஸ் பற்றிய தகவல்களை அறிய உளவுத் துறையை மந்திரி வீரேந்திரநாத் முடுக்கி விட்டார். உளவுத்துறை அந்த மனிதன் உண்மையிலேயே இறந்து விட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக சொன்னது. மந்திரி உடனடியாக தலிபான் தலைவர்களைத் தொடர்பு கொண்டார். ஒரு போலி அப்துல் அஜீஸை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரக்காரணம் என்ன, அவன் ஏன் அவருடைய பாதுகாவலரை அந்த நிலைமைக்கு ஆளாக்கினான் என்பதன் காரணத்தை அறிய விரும்புவதாக நேரடியாகவே கேட்டார். அவர்கள் அதை நம்ப மறுத்த போது உடனடியாக அவர் அப்துல் அஜீஸ் இறந்தது உண்மை என்பதற்கான உளவுத்துறை ஆதாரங்களையும், அமானுஷ்யன் பற்றிய விவரங்களையும் அனுப்பி வைத்தார். அப்போது தான் அமானுஷ்யனிடம் மந்திரி மட்டுமல்லாமல் தாங்களும் ஏமாந்து போனது தலிபான்களுக்கு புரிந்தது.
அவசர அவசரமாக தலிபான்கள் இன்னொரு முறை மந்திரியை சந்தித்தார்கள். நடந்தவற்றை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. மந்திரிக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. ஆனால் இதற்கெல்லாம் அமானுஷ்யனே சூத்திரதாரி என்றும் அவன் தான் திட்டமிட்டவன் என்றும் சொல்லி அவர்கள் சமாளித்தார்கள். அவன் தான் இப்போதைக்குத் தங்கள் முதல் எதிரி என்றும் உடனடியாக அவனைத் தீர்த்துக்கட்டுவது தான் தங்கள் முதல் வேலை என்றும் சொன்னார்கள். ஒருவேளை மந்திரி தன் அதிகாரத்தை உபயோகித்து அவனைக் கொன்றால் பெரும் தொகை ஒன்றையும் கொன்றவனுக்குத் தரத்தயார் என்றும் சொன்னார்கள். மந்திரி கடைசியில் ஒருவழியாக கோபம் தணிந்தார். இந்திய மண்ணில் அவன் வந்து விட்டதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனைக் கொல்வது சுலபம் என்று அவர்கள் கணக்கிட்டார்கள். ஆனால் அவனைக் கொல்வது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவர்கள் போகப் போக உணர்ந்தார்கள்.
எடுத்த வீடியோவின் பிரதியை ஆச்சார்யாவிற்கு ஈ மெயில் மூலம் அனுப்பி விட்டு ஒரு ப்ரவுசிங் செண்டரில் இருந்து அக்ஷய் வெளியே வந்த போது முதல் முறையாக கண்காணிக்கப்படுவதை உணர்ந்தான். யாரோ ஒருவன் அவனைப் பின் தொடர்ந்தான். அந்த ஒருவன் பார்வையில் இருந்து தப்பிப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. தப்பித்தவன், அவன் அப்துல் அஜீஸ் அல்ல என்பதைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை ஊகித்து விட்டான். இனி என்ன செய்வது என்று மிக தீவிரமாக அவன் யோசித்தான். மறுநாள் காலையில் ஆச்சார்யா கொலையான செய்தியைப் பத்திரிக்கைகளில் படித்தவுடன் அவருக்கு அனுப்பியிருந்த தடயத்திற்கும் அவர் கதி தான் ஆகி இருக்கும் என்பதை உணர்ந்தான். முதல் வேலையாக தன்னிடமிருந்த பென் டிரைவை வங்கி லாக்கரில் வைத்து சாவியை மசூதியில் இருந்த பெரியவரிடம் ஒப்படைத்தான்.
அவனை வலை போட்டுத் தேடிய எதிரிகள் அன்றிரவே ஒரு லாட்ஜில் தங்கி இருந்த அவனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்ல வந்தார்கள். அவன் அங்கிருந்தும் தப்பிப் போனான். மேலும் ஒரு நாள் மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்தான். ஆனால் எதிரிகள் அங்கும் அவனைக் கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அவனைத் துரத்திக் கொண்டே வந்தவர்கள் நள்ளிரவில் அவன் மலை உச்சியை அடைந்தவுடன் அவனைக் கொல்ல முயன்றனர். அவன் லாவகமாக நகர்ந்து தப்பிக்க அவர்கள் திட்டமிட்டு ஒரே நேரத்தில் சிறிது சிறிது இடைவெளிகள் விட்டு துப்பாக்கியால் சுட்டார்கள். அவர்களது துப்பாக்கி ரவைகளில் இருந்து முழுவதும் தப்பிக்க முடியாமல் தோள்பட்டையில் காயப்பட்டவன் மலையுச்சியில் இருந்து கவனமாகக் குதித்தான். அதற்குப் பின் அவன் எழுந்த போது அவன் புத்த விஹாரத்தில் இருந்தான்…..
அவன் தியானத்தில் இருந்து கண்விழித்த போது அவனின் குருவான வயதான புத்த பிக்கு அவனைப் பார்த்தபடியே இன்னமும் நின்றிருந்தார். அவன் மனத்திரையில் வந்த அந்த பழைய காட்சிகளை எல்லாம் அவரும் எதிரில் நின்று பார்த்தது போல் அவனுக்குத் தோன்றியது.
“எல்லாம் நினைவுக்கு வந்ததா?” அவர் கேட்டார்.
ஆமாம் என்று அவன் தலையாட்டினான்.
புத்த பிக்கு சொன்னார். “உனக்காக வெளியில் ஒருவன் காத்துக் கொண்டிருக்கிற மாதிரி தெரிகிறது. அவன் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீயாக வெளியே வருவாயா இல்லை அவன் உள்ளே வர வேண்டி இருக்குமா என்று யோசிப்பது போல இருக்கிறது…”
அக்ஷயும் அமைதியாக யோசித்தான்.
(தொடரும்)