அக்ஷய் தங்கி இருந்த ஓட்டல் அறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஓட்டலின் வாசல் தெரிந்தது. நான்கு பேர் வாசலில் நின்று எதைப் பற்றியோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு யாரும் முன்னால் இல்லை என்றாலும் சலீம் எங்கேயாவது மறைவில் நின்று கொண்டிருக்க வேண்டும் என்று அவன் சந்தேகப்பட்டான். சலீம் யாருக்காவது போன் செய்து சொல்லி பலரை வரவழைக்க வாய்ப்பு இருந்தது என்றாலும் சலீம் அப்படிச் செய்யாதது அவனைப் பற்றி நிறைய தகவல் சொன்னது. தனியாக இயங்குபவன், எதிலும் மற்றவர்களை உதவிக்கழைக்கவோ, கூட்டு சேர்க்கவோ பிரியப்படாதவன் என்பது புரிந்தது. அதே நேரத்தில் பல ஆட்கள் சேர்ந்தாற்போல இருப்பதை விட அவன் அபாயமானவன் என்பதும் அக்ஷயிற்குத் தெரிந்தே இருந்தது. இந்த ஒரு நாளில் அவர்களிருவரும் ஒரு வகையில் நெருக்கமானவர்களாகி விட்டார்கள். ஒருவரின் நிழலாக இன்னொருவர் இருந்து வருகிறார்கள்.
இப்போது அந்த நிழலை விட்டுப் பிரிந்தே ஆக வேண்டும் என்று எண்ணியவனாக அக்ஷய் புன்னகை செய்தான். சில நிமிடங்களுக்கு முன் தான் ஓட்டலிற்குப் பின்னால் ஒரு வழி இருப்பதைக் கண்டு பிடித்தான். பின் புறம் ஒரு சின்ன சந்து இருந்தது. ஓட்டலின் வேலையாட்கள் அந்தப் பின் பகுதியை உபயோகிப்பதைக் கண்டுபிடித்தவன் அந்த வழியாக வெளியேறத் தீர்மானித்தான். அப்படி வேளியே வந்த போது சலீம் பின் வாசலிலும் காத்திருப்பானோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் நல்ல வேளையாக சலீம் அங்கு இல்லை.
அக்ஷய் வரும் வழியில் பார்த்திருந்த மசூதி ஓட்டலிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. தன் பழைய வாழ்க்கையில் அந்த மசூதி ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்ததில் இருந்து முதலில் அங்கே போக வேண்டும் என்று அந்தக் கணமே தீர்மானித்திருந்தான். பின்புற சந்திலிருந்து பிரதான சாலைக்கு வந்து ஒரு டாக்சியில் அந்த மசூதியை அடைந்தான்.
மசூதியில் இருபது பேர் தொழுகைக்குத் தயாராக இருந்தார்கள். நுழைந்த அக்ஷய் இருபத்தியோராவது ஆளாக தொழுகைக்குத் தானும் தயாரானான். இறைவன் ஒருவன் என்பதில் அக்ஷயிற்கு என்றுமே இரண்டு அபிப்பிராயங்கள் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே தொழுகை செய்து பழகிய அவனுக்கு இன்று இறைவனின் அருள் நிறையவே தேவைப்பட்டது. வெடிகுண்டுகள் வெடிக்க குறுகிய காலமே இருக்கிறது, தடுக்கத் தேவையான எந்த ஆதாரமும் அவனுக்கு நினைவில்லை, இன்னும் எதிரிகளிடமிருந்து அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதெல்லாம் அவனுக்கு பிரதிகூலமாக இருக்கையில் எல்லாவற்றிற்கும் தீர்வு இறைவனிடம் தான் இருக்கிறது என்று தொழ ஆரம்பித்தான். தொழுகையில் அவன் முழு மனதுடன் ஐக்கியமானான்.
முகமது யூனஸிற்கு வரும் பிப்ரவரியுடன் எண்பது வயது முடிகிறது. அவர் இறைப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த மசூதியில் தொழ வருகிற அனைவரையும் அவர் மிக நன்றாக அறிவார். அவ்வப்போது யாத்திரீகர்களும் தொழுகைக்கு வருவதுண்டு. இன்று புதிதாக வந்தவனும் அப்படிப்பட்ட யாத்திரீகன் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தார். அவனை இதற்கு முன் அவர் பார்த்ததில்லை. ஆனால் அவன் தொழத் தயாரானது முதல் தொழுகை முடிகிற வரை இயங்கிய விதம் அவருக்கு இன்னொருவனை நினைவுறுத்தியது. அவனைக் கூர்ந்து கவனித்தார். ஒவ்வொரு அசைவும் ஒரு இயல்பான நளினமாக இருந்தது. தொழுத போது உண்மையில் அவன் ஆண்டவன் எதிரில் இருக்கிறார் என்று உணர்ந்து தொழுதது போல இருந்தது. இது நிச்சயமாக அவனே தான். தோற்றம் எத்தனை மாறி இருந்தாலும் அவருக்கு அதில் சந்தேகமே இல்லை. தாடியும் மற்ற ஒப்பனைகளும் அவரை ஏமாற்ற முடியாது.
சில மணி நேரங்களாக அவன் புகைப்படத்தை டிவியில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சற்று முன் பத்திரிக்கையிலும் அவன் படத்தை அவர் பார்த்தார். அவனைத் தீவிரவாதி என்று அறிவித்திருந்தார்கள். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானமாக பெரிய தொகையையும் அறிவித்திருந்தார்கள். ஆனால் அவன் கண்டிப்பாக தீவிரவாதி இல்லை என்று அவர் அறிவார். அவனிடம் எத்தனையோ நாட்கள் அவர் மனம் விட்டுப் பேசி இருக்கிறார். இஸ்லாமிய மதத்தில் அவன் அறியாத சூட்சுமம் இருக்கவில்லை. அதில் மட்டுமல்ல புத்த மதத்திலும், இந்து மதத்திலும் கூட அவன் ஆழமான ஞானத்தைப் பெற்றிருந்தான். மூன்று மதங்களிலும் இருந்த ஒற்றுமை, வேற்றுமைகளை அவரிடம் பல முறை பேசி இருக்கிறான். ஒவ்வொரு மதத்தைப் பற்றி அவன் பேசும் போதும் அவன் அந்த மதம் தான் என்று அவருக்கு நினைக்கத் தோன்றும். அப்துல் அஜீஸ் என்ற பெயரில் அறியப்பட்ட அவன் உண்மையில் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று அவனிடம் கேட்டிருந்தால் அவன் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் அவனை இஸ்லாமியனாக மட்டுமே நினைக்கத் தோன்றிய அவர் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கத் துணியவில்லை.
சில தீவிரவாதிகளுடன் அவன் அங்கு ஆரம்பத்தில் வந்த போது அவனையும் அவர் தீவிரவாதி என்று தான் நினைத்தார். ஆனால் அவன் தொழும் போது அவன் முகத்தில் தெரிந்த பக்தி அப்பழுக்கற்றதாக இருந்தது. அது நடிப்பாக இருக்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். அவருக்கு இந்த உலகில் மற்ற விஷயங்களைப் பற்றி தெரிகிறதோ இல்லையோ, தொழ வந்தவர்களின் சிரத்தையும், உண்மைத் தன்மையும் தெரியாமல் இருந்ததில்லை. பல்லாண்டுகளாக அந்த இடத்தில் இருந்து கவனித்த அனுபவ அறிவு அது. வித்தியாசமாக இருந்த அவனிடம் அவர் ஆரம்பத்தில் அடிக்கடி பேச்சுக் கொடுத்தார். தீவிரவாத நண்பர்கள் கூட இல்லாத சமயமாகப் பார்த்து பேசினார். சிறிய பேச்சுகள் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களாக மாற ஆரம்பித்தன. உருதுவிலும் அவன் இலக்கிய ரசனையுடன் பேசி அவரை அசத்தினான். ஒரு நாள் அவர் அவனிடம் வருத்தத்துடன் கேட்டார். “அப்துல் நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். பின் ஏன் இந்த மாதிரி ஆட்களுடன் நட்பு வைத்துக் கொண்டிருக்கிறாய்?”
அவன் சொன்னான். “சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளாத வரை அது உங்களுக்கு நல்லது”
பின் அவர் அவனிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை. ஆனால் ஆன்மிகப் பேச்சுகள் மட்டும் அவர்களிடையே தொடர்ந்தன.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவில் அவன் அவசரமாக அவரைத் தேடி வந்தான். ஒரு சின்ன கவரைக் கொடுத்து விட்டு சொன்னான். “இதை வைத்திருங்கள். சில நாட்கள் கழித்து வாங்கிக் கொள்கிறேன்”
அவர் அதில் என்ன இருக்கிறது என்று கேட்கவில்லை. தந்ததை வாங்கி வைத்துக் கொண்டார். அன்று சென்றவனை அவர் இன்று தான் பார்க்கிறார். அதுவும் மாறு வேடத்தில்.
மற்றவர்கள் எல்லாரும் போகிற வரை அவன் அங்கு நின்றான். அவன் பார்வை அவர் மேல் வந்து தங்கியது. புன்னகைத்தான். புன்னகைக்கும் போது முகமே பிரகாசமாகி அழகாக மாறின அவனைப் பார்த்த போது அவர் நினைத்துக் கொண்டார். எத்தனை தான் மாறு வேடமிட்டாலும் இந்தப் புன்னகை இவனை அடையாளம் காட்டி விடும்.
அவனுக்கும் அந்த நல்ல மனிதரைப் பார்த்த போது அவருடன் மணிக்கணக்கில் பேசிய ஒருசில நினைவுகள் வந்தன.
அவர் அவனருகே வந்து மெல்ல கேட்டார். “அந்தக் கவர் வாங்கிப் போக வந்தாயா?”
அவன் தலையை மட்டும் அசைத்தான். அவர் சென்று அதை எடுத்து வந்து தந்தார். அவன் அவர் முன்பே அதைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு சாவி மட்டும் இருந்தது.
அவரிடம் நன்றி தெரிவித்து விட்டு சொன்னான். “நான் அவசரமாகப் போக வேண்டி இருக்கிறது. அதனால் இன்னொரு நாள் வந்து பேசுகிறேன். இதைக் கொடுத்த போது நான் வேறு ஏதாவது சொன்னேனா?”
“இல்லையே. இதை வைத்திருங்கள். இன்னொரு நாள் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று மட்டும் தான் சொன்னாய்”
அக்ஷய் அந்த முதியவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.
முகமது யூனஸ் மனதார சொன்னார். “ஜாக்கிரதையாக இரு. அல்லா உனக்குத் துணை இருப்பார்”
சலீம் அக்ஷய் ஓட்டலில் இருந்து வெளியேறி விட்டிருக்க வேண்டும் என்பதை அவன் போய் அரை மணி நேரத்திலேயே கண்டுபிடித்து விட்டான். அக்ஷய் வெளியே வராததைக் கண்ட அவன் அந்த ஓட்டலிற்கு பின்புற வழி இருக்கிறதா என்று விசாரித்தான். ஆமென்று பதில் வந்த போது அவன் போய் விட்டான் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது.
எங்கு போயிருப்பான் என்று யோசித்த போது அவனுக்கு அந்த மசூதி நினைவு வந்தது. அமானுஷ்யன் அந்த மசூதியை சில நொடிகளே பார்த்திருந்தாலும் பார்த்த விதத்தில் அது முக்கியமான இடம் என்பது புரிந்து விட்டிருந்ததும் நினைவுக்கு வர உடனடியாக டாக்சியில் ஏறி அந்த மசூதிக்கு அவன் கிளம்பினான். டாக்சியை மசூதிக்கு எதிரிலேயே நிறுத்தச் சொன்னான்.
இறங்கி அவன் மசூதிக்கு உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்த போது அமானுஷ்யன் மசூதியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது போல் இருந்தது. அவன் சலீமைக் கவனிக்கத் தவறி விட்டான் என்பதும் புரிந்தது. அமானுஷ்யனும் சில சமயங்களில் சாதாரண மனிதனைப் போல கவனக் குறைவாக இருக்கிறான் என்பதை உணர்ந்த போது சலீமிற்குத் திருப்தியாக இருந்தது. அப்படியே மறைவிடத்தில் பதுங்கி நின்றான்.
அவன் நினைத்தது போல அக்ஷய் அந்த நேரத்தில் கவனக்குறைவாகத் தான் இருந்தான். அவன் மனமெல்லாம் அந்த சாவியைச் சுற்றியே இருந்தது. அதனால் தான் அவன் எதிர்ப்புறம் இருந்த சலீமைக் கவனிக்கத் தவறினான். இந்த சாவி ஏதாவது பேங்க் லாக்கரின் சாவியாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு அந்த கல்லூரியில் வந்த பழைய நினைவுக் காட்சி நினைவுக்கு வந்தது. அது சர்ச் எதிரே இருந்த ஏதோ பேங்க்….
உடனே சற்று தள்ளி இருந்த டாக்சி ஸ்டேண்டிற்கு சென்றான். இரண்டு டாக்சி டிரைவர்கள் ஏதோ அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்ததும் ஒரு டிரைவர் கேட்டான். “வாருங்கள். எங்கே போக வேண்டும்”
“பேங்க் போக வேண்டும்” என்ற அக்ஷய் திடீரென்று பேங்க் பெயர் மறந்து விட்டது போல நடித்துக் சொன்னான். “அந்த பேங்க்… அது தான்…சர்ச்சிற்கு எதிரே இருக்கிற பேங்க்…”
“ஜம்மு காஷ்மீர் பேங்க்”
“ஆ… அது தான்…. அங்கே போக வேண்டும்” என்று சொல்லி விட்டு அக்ஷய் டாக்சியில் ஏறி அமர டாக்சி கிளம்பியது.
டாக்சி கண்களில் இருந்து மறையும் வரை காத்திருந்த சலீம் டாக்சி ஸ்டேண்டிற்கு விரைந்தான். கிளம்பிப்போன டாக்சி டிரைவருடன் பேசிக் கொண்டிருந்த இன்னொரு டிரைவரிடம் போய் சொன்னான். “இப்போது டாக்சியில் போகிறானே அவன் என் நண்பன். அவனிடம் பேசலாம் என்று ஓடி வந்தால் அவன் போய் விட்டான். அவன் எங்கே போகிறான் என்று தெரியவில்லையே”
“அவர் ஜம்மு காஷ்மீர் பேங்க் போகிறார்.”
சலீம் யோசிப்பது போல பாவனை செய்தான்.
“செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச்சிற்கு எதிரே இருக்கிறதே அந்த ப்ராஞ்ச்…”
அமானுஷ்யன் இத்தனை அபாயங்களுக்கு இடையில் நேரில் ஜம்முவிற்கு வருகிறான் என்ற போதே ஏதாவது பேங்க் லாக்கரில் ரகசிய ஆதாரங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும், அவன் நேரில் போனால் தான் அதை எடுக்க முடியும் என்ற நிலைமை இருக்க வேண்டும் என்று சலீம் ஊகித்தது சரியாகப் பொருந்துகிறது. அவன் அதன் சாவியை இந்த மசூதியில் யாரிடமாவது கொடுத்து வைத்து இப்போது திரும்பப் பெற்றிருக்க வேண்டும்… நினைக்க நினைக்க சலீம் திருப்தியுடன் புன்னகை செய்தான். இந்த முறை அவன் கண்டிப்பாக அமானுஷ்யனை வெல்லப் போகிறான்.
(தொடரும்)