ஆனந்த் சொன்னான். “சொல்லுங்கள்”
”நான் சொல்கிற இடத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன மிஸ்டர் எக்ஸ் டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பிரியும் ஒரு சாலையைக் குறிப்பிட்டு அதில் சுமார் ஏழு கிலோமீட்டர் பயணம் செய்தவுடன் ஒரு புதிய வணிக வளாகம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கும் என்று சொல்லி அதை மேலும் சிறிது விவரித்தார்.
பின் தொடர்ந்தார். “…. அங்கு வேறெந்த பெரிய கட்டிடமும் கிடையாது. அதனால் அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சிரமம் எதுவும் கிடையாது. நாளை காலை சரியாக நான்கு மணிக்கு நீங்களும், அக்ஷயும் ஒரு வாடகைக் காரில் வந்து சேருங்கள். அங்கு நீங்கள் இறங்கிக் கொண்டு அந்தக் காரைத் திரும்ப அனுப்பி விடுங்கள். பின் சரியாக பத்து நிமிடங்கள் பொறுத்திருங்கள். அங்கே நாங்கள் உங்கள் அம்மாவையும், அந்தப் பையனையும் கூட்டிக் கொண்டு வருகிறோம். அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் செல் போனிற்கு கூப்பிட்டு சொல்கிறேன்.”
ஆனந்த் கேட்டான். “நாங்கள் எப்படி உங்களை நம்பி அங்கே வந்து தனியாக நிற்பது? ஒரு வேளை நீங்கள் அம்மாவையும், அந்தப் பையனையும் அங்கே கூட்டிக் கொண்டு வராமல் ஏமாற்றினால்? எங்களுக்கு என்ன பாதுகாப்பு?”
“தம்பி உடையான் படைக்கஞ்சான் என்று ஒரு பழமொழி உண்டு. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் பொருந்தும் ஆனந்த். அக்ஷய் இருக்கையில் நீங்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவது அர்த்தமில்லாதது. எங்களுக்கு உங்கள் அம்மாவிடமும், அந்தப் பையனிடமும் எந்த விரோதமும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால் எங்களுக்கு அவர்கள் தேவையில்லாத தலைவலி தான். எவ்வளவு சீக்கிரம் அவர்களை விட்டு விடுகிறோமா அவ்வளவு நல்லது என்றே நாங்கள் நினைக்கிறோம். அதனால் கண்டிப்பாக அவர்களைக் கூட்டிக் கொண்டு வருவோமா என்று நீங்கள் சந்தேகப்படத் தேவையில்லை. நீங்கள் வேறு யாரிடமாவது சொல்லி, அந்த டாக்சிக்காரனோ, உங்களுடைய வேறு ஏதாவது ஆட்களோ அங்கே பின் தொடர்ந்து வந்தாலோ, அங்கே எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலோ மட்டும் தான் நாங்கள் பேச்சு மாறுவோம்…..”
ஆனந்த் தம்பியைப் பார்த்தான். அக்ஷய் ‘சரி என்று சொல்’ என்று தலையசைத்தான். ஆனால் ஆனந்திற்கு தொண்டையை அடைத்தது. எதுவும் சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.
மிஸ்டர் எக்ஸ் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டது போல மிகவும் கனிவாகப் பேசினார். ”ஆனந்த், அங்கே உங்கள் அம்மாவையும் அந்தப் பையனையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டு உங்கள் தம்பியைக் கூட்டிக் கொண்டு போகிறோம் . அவரிடம் நாங்கள் பேச வேண்டியது, தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர் ஒத்துழைத்தால் அவரை மூன்றே மூன்று நாட்கள் வைத்திருந்து பின் கண்டிப்பாக அனுப்பி விடுகிறோம். அதற்குப் பிறகு அவரால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிறகு எங்களால் உங்கள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது. ஒரு விதத்தில் நாங்கள் வியாபாரிகள். எங்களுக்கு லாபம் வர வேண்டும் என்று யோசிப்போமே தவிர மற்றவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.”
ஆனந்திற்கு அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்தன. “ஆனந்த், அவனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள். எனக்காக இவர்களிடம் அவனை அனுப்பி விடாதே. நான் எல்லாவற்றையும் வாழ்ந்து முடித்தவள். அவனும் நீயும் நல்லபடியாக இருந்தால் எனக்கு இனி இந்த உயிர் உட்பட எதுவும் வேண்டாம்….”
ஆனந்தின் தயக்கம் அக்ஷயிற்கு எரிச்சலைத் தந்தது. அவன் ஆனந்திடம் இருந்து செல் போனை எடுத்து சொன்னான். “சரி. வேறெதாவது சொல்ல வேண்டுமா?”
அக்ஷயின் குரல் கேட்டதுமே மிஸ்டர் எக்ஸ் லேசாகத் தயங்கி விட்டு சொன்னார். “வேறெதுவும் இல்லை அக்ஷய். உங்கள் இரண்டு பேரிடமும் துப்பாக்கி, கத்தி எதுவும் இருக்கக் கூடாது. முதலிலேயே சொன்னது போல வேறெந்த ஆட்களும் உங்கள் பின்னாலோ, முதலிலேயே அந்த பகுதிக்கு வந்தோ இருக்கக் கூடாது. அப்படி ஒரு ஆளைப் பார்த்தாலும் உங்கள் அம்மா அல்லது அந்தப் பையன் இரண்டு பேரில் ஒருவருக்கு உடம்பில் ஒரு உறுப்பு போய் விடும். அப்படி முட்டாள்தனமாக நீங்கள் எதுவும் செய்யாத வரை எங்களைப் போல கண்ணியமான ஆட்களை நீங்கள் பார்க்க முடியாது. உங்கள் அம்மாவே உங்களிடம் அதைச் சொன்னார்கள் பார்த்தீர்களா?”
அக்ஷய் சொன்னான். “நாங்களாக அந்த மாதிரி முட்டாள்தனம் எதுவும் செய்ய மாட்டோம். அம்மாவும், வருணும் ஆனந்திடம் பிரச்சனை இல்லாமல் ஒப்படைக்கப்பட்டால் போதும். அப்படியில்லாமல் நீங்களாக ஏதாவது முட்டாள்தனம் செய்தால் அதன் விளைவை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
அக்ஷயின் அந்த வார்த்தைகள் மிஸ்டர் எக்ஸை கோபம் கொள்ள வைத்தது போலத் தோன்றியது. ஆனாலும் அவர் அதை அடக்கிக் கொண்டு சொன்னார். “நாங்கள் கடத்தல்காரர்கள் அல்ல. உங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் அவர்களைக் கடத்தினோமே ஒழிய அவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் எங்களுடன் வந்தால் கண்டிப்பாக சரியாக காலை மணி நான்கு பதினொன்றுக்கு அவர்கள் இருவரும் உங்கள் அண்ணனிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.”
போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல் போனைத் திரும்பவும் ஆனந்திடம் அக்ஷய் தந்தான். ஆனந்தின் முகத்தில் தாள முடியாத துக்கம் தெரிந்ததைப் பார்த்த போது அவனுக்கு மனம் நெகிழ்ந்தது. அவனருகில் அமர்ந்து அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு அவன் மீது சாய்ந்தபடியே சொன்னான். “நீ இப்படி சோகமாய் இருந்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது”
ஆனந்தின் கண்களில் நீர் கோர்த்தது. ஏதாவது சொல்ல நினைத்தான். ஆனால் அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
அக்ஷய் மெல்ல சொன்னான். “ஆனந்த், நீ ஒரு உண்மையைப் புரிந்து கொள்வது முக்கியம். கடவுள் எனக்கு குறித்த நேரத்திலிருந்து ஒரு வினாடி முன்பும் என்னை யாரும் கொல்ல முடியாது. ஒரு வினாடி பின்பும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்படி இருக்கையில் நீ ஏன் பயப்படுகிறாய்? அவர்கள் என்ன கடவுளை விடவா சக்தி வாய்ந்தவர்கள்? நான் அங்கே போகிறேன் என்பதாலேயே அவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியாது ஆனந்த். அவர்களுக்கு என்னிடம் இருந்து சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. அது முடியும் வரை என்னை ஒன்றும் செய்து விட முடியாது. எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் எப்படி உபயோகப்படுத்துவது என்று எனக்குத் தெரியும். நீ கவலைப்படாதே.”
ஆனந்திற்கு கண்களில் கோர்த்திருந்த நீர் மடை திறந்த வெள்ளம் போல் வழிய ஆரம்பித்தது. குரல் தழுதழுக்கச் சொன்னான். “என் மூளைக்குப் புரிகிறது. ஆனால் என் மனதிற்குப் புரிய மாட்டேன் என்கிறது. அக்ஷய் நீ பத்திரமாய் திரும்பி வரும் வரை நான் அம்மாவை என்ன சொல்லி சமாதானப்படுத்துவேன்?
…அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் இல்லை. பதவி, அதிகாரம், பணம் என்று எல்லா பலமும் அவர்களிடம் இருக்கிறது. நீ தனி ஒருவன் என்ன செய்வாய்?”
“உண்மையான எதிரி அவர்கள் அல்ல ஆனந்த். பயம் தான் உண்மையான எதிரி. நான் தனி ஒருவன் என்று எப்படி சொல்கிறாய்? என்னுடன் நம் அம்மாவின் பிரார்த்தனை இருக்கிறது. வருடக்கணக்கில் அம்மா எனக்காக செய்த பிரார்த்தனைகள் என்னை மும்பையில் காப்பாற்றி இருக்கிறது, இமயமலையில் காப்பாற்றி இருக்கிறது, இனியும் காப்பாற்றும். கவலைப்படாதே. தைரியமாயிரு. இனி என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசி”
அக்ஷயின் வார்த்தைகள் மேலோட்டமாய் வந்ததில்லை என்பதை ஆனந்தால் உணர முடிந்தது. முழு நம்பிக்கையோடும் அசைக்க முடியாத தைரியத்தோடும் அவன் பேசினான். ஒரு கணம் நம்பிக்கை வந்தது. இன்னொரு கணம் ஹரித்வாரில் அந்த சாதுவிற்கு ஞானதிருஷ்டியில் தெரிந்த அந்த காட்சி நினைவுக்கு வந்து பாடாய் படுத்தியது. ஆனால் அக்ஷய் சொன்னது போல கவலைப்பட்டு ஒன்றும் ஆகி விடப் போவதில்லை என்று எண்ணியவன் பலவந்தமாக எல்லா பயங்களையும் ஒதுக்கி விட்டு தம்பியிடம் பல நாட்களாய் தன் மனதில் இருந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்டான். “உன்னை அவர்கள் அமானுஷ்யன் என்கிறார்கள். நீ ஒரு படைக்கு சமம் என்று அந்த எக்ஸ் சொல்கிறான். உன்னால் என்னவெல்லாமோ முடிகிறது. அப்படி இருக்கையில் உனக்கு ஏன் பழைய நினைவுகளை மட்டும் திரும்பக் கொண்டு வர முடியவில்லை?…”
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “ஒரு விஷயத்தில் நூறு சதவீதம் முழுமையாய் இருக்கும் போது எதுவும் முடியும். என்ன தேவை என்றாலும் ஆழ்மனம் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும். ஆனால் கொஞ்சம் அமைதி இழந்தாலும், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு புகுந்து விட்டாலும் மனம் என்கிற குட்டை குழம்பி விடும். குழம்பிய குட்டையில் அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது அல்லவா? அதே போல் தான் எனக்கும் ஆகிறது என்று தோன்றுகிறது”
ஆனந்த் மனத்தாங்கலோடு சொன்னான். “ஆனால் இப்போது நினைவுக்கு வராதது இனி வந்து உனக்கு என்ன நல்லது செய்யப் போகிறது. அக்ஷய், நீ தயவு செய்து ஏதாவது முயற்சி செய். அவர்களிடம் போவதற்கு முன் நமக்கு ஏதாவது அதிகம் தெரிந்தால் அது உபயோகமாக இருக்கும். சிறிது நேரத்திற்கு முன்னால் கூட உனக்கு அந்த கோமாவை உருவாக்குகிற மருந்து பற்றி நினைவு வந்ததல்லவா? நமக்கு நாளை அதிகாலை வரை நேரமிருக்கிறது. அது வரை நீ முயற்சி செய் அக்ஷய்”
அக்ஷய் அண்ணனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டான். ஆனால் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு சொன்னான். “சரி ஆனந்த். நான் ஆழ்நிலை தியானம் செய்து பார்க்கிறேன். நான் தியானத்தில் இருக்கும் போது எந்தக் காரணம் கொண்டு என்னைத் தொடாதே. மற்றபடி நீ என்ன சத்தம் செய்தாலும் என் தியானம் பாதிக்காது. நீ சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து என் தியானத்தைக் கலைக்க ‘அக்ஷய்’ என்று என் பெயரைச் சொல்லி மட்டும் கூப்பிடு. அந்த ஒரு சொல் தான் என் தியானத்தைக் கலைக்கும். நான் சொன்னது நினைவு இருக்கட்டும். என்னைத் தொட்டு விடாதே….”
அக்ஷய் அண்ணனைப் பார்த்து புன்னகை செய்து விட்டு அறையின் மூலைக்குச் சென்று பத்மாசனத்தில் அமர்ந்தான். சில நிமிடங்களில் சிலை போல ஆனான். நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. அக்ஷய் உட்கார்ந்த நிலையில் சிறிய மாற்றம் கூட இல்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல ஆனந்த் உணர்ந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க, அவனைப் பற்றி நினைக்க நினைக்க ‘அமானுஷ்யன்’ என்ற அந்த பட்டம் அவனுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. எத்தனை பேரால் இப்படி உட்கார்ந்து தியானம் செய்ய முடியும்?
சில நிமிடங்களில் ஆனந்தின் மனம் நாளைய நிகழ்ச்சிகளுக்குத் தாவியது. மனதைப் பயம் மறுபடி கவ்வியது. அவன் மனதார கடவுளைப் பிரார்த்தித்தான். “கடவுளே, என் அம்மாவுக்காகவாவது நீ அவனைக் காப்பாற்றியே ஆக வேண்டும். அவனுக்கு நீ தான் பக்க பலமாக இருக்க வேண்டும்….”
(தொடரும்)