முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் தரிசு மண்ணில் தானாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு.
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்(யானை நெருஞ்சில்)
பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்.
ஆங்கிலப் பெயர் : Tribulus terretris; linn; zygophyllaceae
மருத்துவக் குணங்கள் : நெருஞ்சில் சமூலம் 2, அருகு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவாக 3 வேளை 3 நாள்கள் குடித்து வர கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், நீர்ச்சுருக்கு குணமாகும்.
பெரு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.
நெருஞ்சில் சமூலச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம் போவது நிற்கும்.
சிறு நெருஞ்சில் அல்லது செப்பு நெருஞ்சில் சமூலம் ஒன்றுடன், அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு, வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
நெருஞ்சில் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதேயளவு அருகம்புல் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி இரண்டையும் கலக்க வேண்டும். இந்தப் பொடியை அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்து வர வெட்டை, இரத்தப்போக்கு குணமாகும்.
நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். இதையே இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.
வாகை, முல்லை, பாதிரி, சிற்றாமுட்டி, பேராமுட்டி, பூவிளம், சிறுவழுதணை, கண்டங்கத்திரி, குமிழ் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை 3 வேளையாக வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி நோய்களிலிருந்து குணமாக்கும்.
நெருஞ்சில் காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர நீரடைப்பு சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி குணமாகும்.
நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடிக்க சிறுநீரைப் பெருக்கும்.