அமானுஷ்யன் – 73

சஹானாவின் நிலைமையைப் பார்த்த மதுவிற்கு அக்‌ஷய் மீது தான் கோபம் வந்தது. அக்‌ஷய் மீது வந்த கோபத்தை வாய் விட்டே மது சொன்னான். “நான் அன்றைக்கே அக்‌ஷயை இங்கே சேர்க்க வேண்டாம் என்று உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ தான் கேட்கவில்லை. இப்போது பார் எந்த மாதிரியான நிலைமையை அவன் ஏற்படுத்தி விட்டான்!”

ஆனால் சஹானாவிற்கு அந்த சூழ்நிலையிலும் அக்‌ஷயைத் தங்களுடன் அழைத்து வந்ததில் சிறிது கூட வருத்தம் தோன்றவில்லை. மதுவிடம் அவள் சொன்னாள். “அக்‌ஷய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வருணை நான் அன்றைக்கே நான் இழந்திருப்பேன் மது. அதனால் இப்போது கூட நான் அதற்கு வருத்தப்படவில்லை.”

அவளுடைய மனதில் அக்‌ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத்தை வேறு சிலர் மிகக் குறுகிய காலத்திலேயே எப்படி பிடிக்க முடிகிறது என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் சொன்னான். “இப்போது அவர்களுக்கு நீ அக்‌ஷயிற்கு சில நாட்கள் அடைக்கலம் தந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அதனால் தான் உன்னிடம் இருந்து முழு உண்மையைத் தெரிந்து கொள்ள அவர்கள் வருணைக் கடத்தி இருக்கிறார்கள். அதனால் ஒரு வேளை அவர்கள் உன்னிடம் நடந்தது எல்லாவற்றையும் கேட்டால் நீ சொன்னால் தான் வருணைக் காப்பாற்ற முடியும் சஹானா”

சஹானா சொன்னாள். “நான் அதை எல்லாம் ஒளிக்காமல் சொன்னாலும் அவர்களுக்கு இப்போது அக்‌ஷயைக் கண்டு பிடிக்க அது எப்படி உதவும் மது?”

மதுவிற்கும் அந்தக் கேள்வி மனதில் தோன்றாமல் இல்லை. இவள் சொல்லாமலேயே அவர்களுக்கு அவன் இங்கே தங்கியது தெரிந்திருந்தால் இனி இவளிடம் கேட்க என்ன இருக்கிறது? அவர்கள் வருணை ஏன் கடத்தினார்கள்? யோசித்த போது அவனுக்கு ஒரே பதில் தான் கிடைத்தது. அக்‌ஷய் எங்கு தங்கியிருக்கிறான் என்பது சஹானாவிற்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல் தோன்றியது. அதை அவன் வாய் விட்டுச் சொன்னான்.

சஹானா சொன்னாள். “ஆனால் அவன் எங்கே போனான், எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாதே”

மதுவிற்கு அவர்கள் அதை நம்புவார்களா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால் அதைத் தெரிவித்து அவளை மேலும் பயப்படுத்த அவன் விரும்பவில்லை.

சஹானா கேட்டாள். “இனி என்ன செய்யலாம் மது?”

“எதற்கும் நம் டிவியிலும், பத்திரிக்கைகளிலும் வருண் போட்டோவைத் தந்து காணவில்லை என்று விளம்பரம் செய்யலாம் மது. யாராவது ஏதாவது தகவல் தருகிறார்களா என்று பார்க்கலாம். ….. அப்புறம் கடத்தியவர்கள் போன் செய்யும் வரை நாம் காத்திருக்கலாம்…. நமக்கு இப்போதைக்கு வேறு எதுவும் வழி தெரியவில்லை சஹானா”

அவள் தலையசைத்து விட்டு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள்.

அதைப் பார்க்கையில் அவன் மனதில் இரத்தம் கசிந்தது. “கடவுளே இவளை ஏன் இப்படி சோதிக்கிறாய். இது வரை சோதித்தது உனக்கு போதவில்லையா?”

*********

அக்‌ஷய் கிளம்பத் தயாரானான்.

ஆனந்த் கேட்டான். “நீ இப்போது எங்கே கிளம்பி விட்டாய்?”

அக்‌ஷய் சொன்னான். “டிஐஜி கேசவதாஸையும், உன் ஆபிஸ் ஆள் மகேந்திரனையும் ஒரு தடவை பார்த்து விட்டு வருகிறேன். நீ அந்த மகேந்திரன் விலாசம் மட்டும் சொல்”

ஆனந்த் மகேந்திரன் விலாசத்தைச் சொல்லி விட்டு “ஜாக்கிரதை. உன்னை எல்லோரும் வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

அக்‌ஷய் கேட்டான். “என்னைப் பார்த்தால் அந்தப் போட்டோவில் அவர்கள் காண்பித்த ஆள் மாதிரியா தெரிகிறது”

ஆனந்த் இல்லை என்று ஒத்துக் கொண்டான். “ஆனால் உன்னால் எப்படி சின்னச் சின்ன மாறுதல் செய்து ஒரேயடியாய் வேறு ஆளாய் மாற முடிகிறது அக்‌ஷய்”

“வெளித் தோற்றம் மாற்றினால் மட்டும் போதாது ஆனந்த். உள்ளேயும் மாற்ற வேண்டும். நாம் கற்பனை செய்த ஆளாய் முழுவதுமாய் மாறி விட வேண்டும். அவன் எப்படி நடப்பான், எப்படி உட்காருவான், எப்படி சிந்திப்பான் என்று யோசித்து முழுவதுமாக அவனாகவே மாறி விட வேண்டும். அது தான் ரகசியம். சரி நீ என்ன செய்வதாய் இருக்கிறாய் ஆனந்த்”

“நான் இனியும் ஜெயினிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது அக்‌ஷய். அவருக்கு எல்லாம் சொல்லியாக வேண்டும். இல்லா விட்டால் தேவை இல்லாமல் என் மீதே அவர் சந்தேகப்படும்படி ஆகி விடும். அது மட்டுமல்ல நமக்கு அடுத்ததாக அவர் உதவியும் தேவைப்படும்.”

“நீ அவர் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறாயா. ஆனந்த்?”

“அவர் மேல் சந்தேகப்பட இது வரைக்கும் ஒன்றுமில்லை அக்‌ஷய். அவர் நாணயமான மனிதராக இருந்ததால் தான் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டு ஆச்சார்யா கொலை வழக்கில் என்னை விசாரணைக்கு அழைத்தார்.”

“சரி நீ அவரிடம் எப்படி சொல்லப் போகிறாய்?”

“போனில் இதை எல்லாம் சொல்ல முடியாது. நேரில் போய் தான் விளக்கமாகச் சொல்ல வேண்டும். அதுவும் ஆபிஸில் போய் சொல்ல முடியாது. அங்கே தான் நம் உளவாளியும் இருக்கிறான். அதனால் அவர் வீட்டுக்குப் போய் சொல்லலாம் என்று இருக்கிறேன். அவர் வீட்டுக்குப் போக இரவு ஒன்பது ஆகி விடும். அதற்கு மேல் அவர் வீட்டுக்குப் போகலாம் என்று இருக்கிறேன். நானும் உன் மாதிரி ஏதாவது வேஷம் போட்டுத் தான் போக வேண்டும்…..”

“சரி….அவர்கள் போன் உனக்கு வந்தாலும் வரலாம். அவர்கள் அம்மாவை ஒப்படைக்க வேண்டுமானால் என்னை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட உன்னிடம் சொல்லலாம். பதில் பேசாமல் ஒத்துக் கொள். எங்கே எப்படி ஒப்படைக்க வேண்டும் என்று மட்டும் கேட்டு வைத்துக் கொள்….”

அக்‌ஷய் கிளம்பி விட்டான்.

மகேந்திரன் வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. நகரத்தின் பிரதான இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் நான்காவது மாடியில் உள்ள ஃப்ளாட்டில் அவன் வசித்து வந்தான். அழைப்பு மணி அடித்தவுடன் ஒரு வயதான மனிதர் வந்து கதவைத் திறந்தார். மகேந்திரனின் தந்தையாக அவர் இருக்க வேண்டும் என்று அக்‌ஷய் அனுமானித்தான்.

“மகேந்திரன்…..”

“அவன் கான்பூரில் அவன் நண்பன் மகேஷ் கல்யாணத்திற்கு போயிருக்கிறான். நீங்கள்….”

“நானும் அவன் நண்பன் தான். ராகுல்…..”

“அவன் நாளை இரவு தான் வருவான்…. உள்ளே வாருங்களேன்….”

“இல்லை சார். எனக்கு வேறு ஒரு ஆளைப் பார்க்கப் போக வேண்டி இருக்கிறது. நான் நாளை மறு நாள் அவனைப் பார்க்கிறேன்…..”

அக்‌ஷய் அங்கிருந்து கிளம்பி விட்டான். அங்கிருந்து கேசவதாஸின் வீடு சுமார் ஒன்றரை மைல் தான் இருக்கும். அதனால் நடந்தே செல்லலாம் என்று தீர்மானித்து அவன் கேசவதாஸ் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மனம் அமைதி இல்லாமல் தவித்தது. அம்மாவைக் காப்பாற்றும் வரை மனதிற்குக் கண்டிப்பாக அமைதி கிடைக்காது என்று தோன்றியது. வழியில் ஒரு டிவிக் கடை அருகில் நடக்கையில் தற்செயலாக விளம்பரத்திற்காக வைத்திருந்த டிவியில் ஒரு சிறுவனின் படம் காண்பிக்கப்பட்டது. வருண் படம் போலவே இருக்கிறதே என்று நினைத்து உற்று பார்த்தவன் அதிர்ந்தே போனான். அது வருண் படமே தான். காணவில்லை என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

வருண் சிறுவனானாலும் விவரமான பையன். கவனக் குறைவால் காணாமல் போகிறவன் அல்ல. அப்படி இருந்து காணாமல் போகிறான் என்றால் அவனையும் அவன் எதிரிகள் கடத்தி இருக்க வேண்டும் என்பதை அவனால் உடனடியாக ஊகிக்க முடிந்தது.

முதலில் அம்மா, இப்போது வருண். எதிரிகளின் பிடி இறுக ஆரம்பித்து விட்டது என்பதை அவன் உணர்ந்தான். அவனுக்கு உதவப் போய் சஹானா இப்படிப் பட்ட ஆபத்தில் மாட்டிக் கொண்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top