சாரதா கடத்தப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியான பிறகு ஆனந்த், அக்ஷய் இருவராலும் நிறைய நேரம் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அக்ஷய் தான் மௌனத்தைக் கலைத்தான்.
“உனக்கு நானிருக்கும் இடம் தெரியும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. உன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்கத் தான் அவர்கள் அம்மாவைக் கடத்தி இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்ன என்றால் அம்மா எப்படி சிறிதும் யோசிக்காமல் யாரோ ஒரு ஆள் கூப்பிட்ட உடன் போய் விட்டார்கள்…”
ஆனந்த் சொன்னான். “அம்மாவை ஏமாற்றுவது ரொம்பவே சுலபம் அக்ஷய். அதுவும் மகன் சிபிஐயில் இருக்கிறதால் தன்னை ஏமாற்ற யாருக்கும் தைரியம் வராது என்று நினைக்கிற ரகம் அவர்கள்…”
அக்ஷயிற்கு அம்மாவை நினைக்கையில் மனம் ரணமாகியது. “எல்லாம் என் ராசி என்று நினைக்கிறேன் ஆனந்த். நான் போகிற இடம் எல்லாம் பிரச்னை தான். பெற்றவர்களானாலும் சரி, வளர்த்தவர்களானாலும் சரி எல்லாருக்கும் ஆபத்து தான் வருகிறது….”
ஆனந்த் சொன்னான். “அப்படியெல்லாம் பைத்தியம் மாதிரி பேசாதே… இனி என்ன செய்யலாம் என்று யோசி”
அக்ஷய் தன் மனதில் எழுந்த துக்கத்தை பலவந்தமாக ஒரு ஓரத்தில் தள்ளி விட்டு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான். தன் தம்பி முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை ஆனந்த் கவனித்தான். உணர்ச்சிகளே இல்லாத முகமாக அவன் முகம் மாற ஆரம்பித்தது. அவன் கண்களில் ஒருவித அமானுஷ்யத் தனம் தெரிய ஆரம்பித்தது. இந்த புதிய அவதாரத்தில் அலட்டிக் கொள்ளாமல் அவனால் கொலையே கூட செய்ய முடியும் என்று ஆனந்திற்குத் தோன்றியது. அவனுடைய எதிரிகளில் ஓரிருவர் இந்த முகபாவனை வரும் போதெல்லாம் அவன் ஆபத்தானவன் என்று கிலியுடன் குறிப்பிட்டிருந்தது அந்த ஃபைலில் அவன் படித்திருக்கிறான்….
அக்ஷய் சொன்னான். “ஆனந்த் சரித்திரம் திரும்பத் திரும்ப வரும் என்று சொல்வார்கள். என்னுடைய அதிர்ஷ்ட சரித்திரம் அப்படித் திரும்பத் திரும்ப வருவதில் எனக்கு விருப்பமில்லை. நம் அம்மாவுக்கு என்னால் ஒரு ஆபத்து என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எதிரியை நேரடியாக சந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்….”
ஆனந்த் சொன்னான். “ஆனால் நமக்கு எதிரியே யாரென்று தெரியாதே அது தானே பிரச்னை…”
“நமக்குத் தெரியா விட்டாலும் யாருக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியுமே. டிஐஜி கேசவதாஸிற்குத் தெரியும். அப்புறம் நீ உன் ஆபிசில் யாரையோ சந்தேகப்பட்டாயே அந்த ஆள் பெயரென்ன?….”
“மகேந்திரன்….”
“ஊம்…. அந்த மகேந்திரனுக்குத் தெரியும்…. அந்த இரண்டு பேரையும் பார்த்து கேட்கிற விதத்தில் கேட்டால் சொல்லாமலேயா போய் விடுவார்கள்….”
ஆனந்த் தம்பியுடன் ஆன முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை செயலிழக்க வைத்த விதம் இப்போதும் அவனுக்கு விளங்காத புதிராக இருந்தது. இவன் கையாளும் விதத்தில் யாரும் இவனிடம் எதுவும் மறைக்க முடியாது என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. ஆனால் பணயக் கைதியாய் அம்மாவை எதிரிகள் வைத்திருக்கிறார்கள், எதிரிகள் சாதாரண மனிதர்கள் அல்ல அரசாங்கமே அவர்கள் கையில் இருக்கிறது என்கிற யதார்த்த நிலை அவனை சற்று தைரியம் இழக்கவே வைத்தது…..
*********
சிறிது நேரத்தில் வருணும் சாரதாவும் மிக அன்னியோன்னியமாகி விட்டார்கள். தன் மகனுக்கு ஆதரவு தந்தது இந்த சிறுவனின் தாய் தான் என்கிற தகவல் சாரதாவுக்கும், அக்ஷய் அங்கிளின் தாய் இந்த பாட்டி என்ற தகவல் வருணுக்கும் கிடைத்த பின்னர் இருவரும் ஒரு குடும்பமாகவே ஆகி விட்டார்கள். அக்ஷயால் பந்தப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவரை எதிர்பாராமல் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சியில் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைத்து வைக்கப் பட்டு இருக்கிறோம் என்பதையே மறந்து சந்தோஷமாக சிறிது நேரம் பேசிக் கொண்டார்கள்.
பேச்சின் போது சாரதாவிற்கு அக்ஷய் அங்கிளின் முழுத் தகவலும் தெரியாது என்பதைப் புரிந்து கொண்ட வருண் தன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் விவகாரமான தகவல் எதுவும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டான். தன் பிறந்த நாள் விழாவை எப்படி அக்ஷய் ஒரு மறக்க முடியாத ஒன்றாய் செய்தான், தனக்கு என்ன எல்லாம் வாங்கிக் கொடுத்தான் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தான். சாரதாவும் தன் மகன் அவனுடைய மூன்றாம் வயதில் எப்படிக் காணாமல் போனான், இப்போது திடீரென்று வந்து எப்படி எல்லாம் கிண்டல் செய்தான் என்றெல்லாம் சொன்னாள்.
பிறகு இருவருமே சிறிது அமைதியாக மாறிய போது தான் தங்களுடைய தற்போதைய நிலைமையின் பயங்கரம் மீண்டும் அவர்களுக்கு உறைத்தது. சாரதா வருத்தத்துடன் சொன்னாள். “ஏதோ வெடிகுண்டு வைத்த ஆளைப் பிடிக்க முடியாமல் அக்ஷய் மீது போலீஸ் பொய் வழக்கு போடப் போகிறது போல இருக்கிறது. அதை அவன் தான் செய்தான் என்று அவனை சம்மதிக்க வைக்க என்னைக் கடத்தி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஏதோ அவனுக்கு தங்க இடம் கொடுத்த பாவத்திற்கு உன்னையும் கடத்தி வந்திருக்கிறது தான் வருத்தமாய் இருக்கிறது. அவனைப் பிடித்து விட்டார்களா என்று கூட எனக்கு சந்தேகமாய் இருக்கிறது…..” அவள் கண்களில் நீ தேங்கியது.
ஆனால் வருணைப் பொறுத்த வரை அக்ஷயால் முடியாத செயல் எதுவுமில்லை. அதனால் அவன் உற்சாகமாக சொன்னான். “நீங்க கவலையே படாதீங்க பாட்டி. அக்ஷய் அங்கிளை அப்படி எல்லாம் சுலபமாய் பிடித்து விட முடியாது. அவர் நம் இரண்டு பேரையும் அலட்டிக்காமல் காப்பாத்தி விடுவார் பாருங்களேன்…. அவரை பத்தி உங்களுக்கு தெரியாது…..”
**********
சிபிஐ மனிதன் போன் செய்து அந்த வீட்டுக்கு காவலுக்கு நிறுத்தி வைத்திருந்த ஆளிடம் நிலவரத்தை விசாரித்தான். “அந்த கிழவியும், பொடியனும் எதுவும் பிரச்னை செய்யவில்லையே”
“இப்போது தான் ரகசியமாய் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வருகிறேன் சார். அவர்கள் இரண்டு பேரும் சொந்த வீட்டில் இருப்பது போல இருக்கிறார்கள். அந்தக் கிழவி அந்த பையனுக்கு தோசை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். இரண்டு பேரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்….”
சிபிஐ மனிதனுக்கு அவர்கள் இருவரால் பிரச்னை எதுவும் இல்லை என்பது திருப்தியாக இருந்தாலும் அவர்களுடைய நடவடிக்கை நம்ப முடியாததாக இருந்தது. அந்தம்மாள் சென்னையில் இருந்து கிளம்பி வந்தது முதல் இப்போது வரை நடந்து கொள்ளும் விதம் வரை எதுவும் இயல்பாக இல்லை. ‘அப்புறம் அமானுஷ்யனைப் பெற்ற பெண்மணி இயல்பாக இல்லாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை’.
“என்ன பேசுகிறார்கள்?”
“அந்த அக்ஷயைப் பற்றி தான் சார். அந்தப் பையன் சொல்கிறான். ’அக்ஷய் அங்கிளை யாராலும் பிடிக்க முடியாது. அவர் நம்மை அலட்டிக்காமல் காப்பாற்றி விடுவார்’ என்கிறான்.”
சிபிஐ மனிதன் அடுத்த கேள்வி கேட்காமல் போன் இணைப்பைத் துண்டித்தான்.
***********
ஆரம்பத்தில் வருண் பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சஹானாவிற்கு எல்லா இடங்களிலும் தேடியும், விசாரித்தும் வருண் கிடைக்காமல் போன பிறகு தான் பயம் கிளம்பியது. நேரம் ஆக ஆக அந்த பிளாட் ஆட்கள் அத்தனை பேரும் கூடி தேட ஆரம்பித்து பிறகும் அவன் கிடைக்கவில்லை என்ற போது அவள் உடைந்து போனாள். அவளும் மரகதமும் வருணுக்கு என்ன ஆயிருக்கக் கூடுமோ என்ற பீதியில் ஆழ்ந்தார்கள்.
மது உடனடியாக அங்கே வந்தான். போலீசில் புகார் கொடுத்தான். தனிமையில் சஹானாவை அழைத்துக் கேட்டான். “உனக்கு இன்னும் என்ன ஆகி இருக்கும் என்ற சந்தேகமே வரவில்லையா சஹானா?”
“எனக்கு எதுவும் சிந்திக்க முடியவில்லை மது. சொல், நீ என்ன நினைக்கிறாய்?”
“வருணை யாராவது கடத்தியிருக்கலாம்”
“ஏதோ பணக்கார வீட்டுப் பையனைக் கடத்தினாலாவது அவர்களுக்கு ஏதாவது பெரிய தொகை கிடைக்கும். என் மகனைக் கடத்தினால் என்னால் என்ன பெரிதாகத் தர முடியும் மது?”
“அக்ஷய் என்ற மனிதனைப் பற்றி நீ அவர்களுக்குத் தகவல் தரமுடியும் அல்லவா”
சஹானா அவனை வெறித்துப் பார்த்தாள்.
“ஆமாம் சஹானா. இதற்கு எல்லாமே நீ அவனுக்கு இங்கே இடம் கொடுத்து வைத்திருந்தது தான் காரணமாயிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது….”
சஹானாவிற்குத் தலை சுற்றியது.
(தொடரும்)