அமானுஷ்யன் – 70

டெல்லியில் புறநகர்ப் பகுதியில் அந்த வீடு தனியாக இருந்தது. அந்த வீட்டைச் சுற்றியும் காலியிடமே இருந்தது. நூறு மீட்டர் தொலைவில் ஏதோ ஒரு ஃபேக்டரி மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தது. வேறு வீடுகளோ, கட்டிடங்களோ அந்தப் பகுதியில் இருக்கவில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் போன் வசதி மட்டும் இருக்கவில்லை.

அங்கு அவளை அழைத்துப் போன பட்டாபி ராமன் அவளுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தான். சமையலறையில் எல்லா சாமான்களும் இருந்தன. “நீங்கள் என்ன வேண்டுமானாலும் சமைத்துக் கொள்ளலாம் அம்மா. உங்களுக்குப் பசிக்கும் என்று நினைக்கிறேன். வேண்டியதை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.” என்றான்.

“நான் ஆனந்த் வந்த பிறகு சேர்ந்தே சாப்பிடுகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் நான் இப்போது ஏதாவது செய்து தரட்டுமா?”
சாரதா அக்கறையுடன் கேட்ட போது ஒரு கணம் பட்டாபிராமன் என்றழைக்கப்பட்டவன் நெகிழ்ந்து போனான். இந்த அம்மாளைப் போய் நாம் ஏமாற்றுகிறோமே என்று தோன்றியது. ஆனால் மறு கணம் அந்த வருத்தத்தை உதறி எறிந்தான். இந்த வேலையில் ‘செண்டிமெண்ட்ஸ்’க்கு இடமில்லை.

“வேண்டாம் அம்மா. எனக்கு இப்போது முக்கியமான வேலை வேறு இருக்கிறது. ஆனந்த் வந்த பின் நான் கிளம்பி விடுவேன். அவருக்காகக் காத்திருக்கிறேன்….”

பின் அவளை ஒரு அறையில் இளைப்பாறச் சொல்லி உட்கார வைத்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டான். சிறிது நேரத்தில் கோட்டு சூட்டுடன் இன்னொரு வயதான நபர் காரில் வந்து இறங்கினார்.

அவர் அவனிடம் கேட்டார். “பிரச்னை ஏதும் இல்லையே?”

“இல்லை. ஆனந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாள் அந்தம்மாள்”

அவர் தலையை மட்டும் அசைத்தார். இருவரும் உள்ளே வந்தனர். பட்டாபி ராமன் சாரதாவிடம் அவரை அறிமுகப்படுத்தினான். “இவர் எங்கள் தலைமை அதிகாரி….”

சாரதா கை கூப்பி வணங்கினாள். ‘இந்த ஆள் ஏன் இங்கு வந்தார்? ஆனந்த் ஏன் வரவில்லை’ என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல் அந்த அதிகாரி சொன்னார். “ஆனந்த் போன வேலை இன்னும் முடியவில்லை. வர நேரமாகும். அதற்கு முன் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன்….”

சாரதாவுக்கு குழப்பமாக இருந்தது.

அந்த அதிகாரி பட்டாபி ராமனைப் பார்த்து சொன்னார். “நீங்கள் போகலாம் பட்டாபி”

பட்டாபி அவருக்கு சல்யூட் அடித்து விட்டு சாரதாவைப் பார்த்து தலையசைத்து விட்டுப் போனான். பட்டாபிராமன் போய் சில நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல நடித்த அந்த அதிகாரியை ஒன்றும் விளங்காமல் சாரதா பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியில் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு அந்த அதிகாரி “அம்மா உங்களிடம் நான் விரிவாகப் பேச வேண்டி இருக்கிறது. ஹாலிற்கு வாங்கள்” என்று அவளை ஹாலிற்கு அழைத்து வந்தார். சாரதா குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள்.

ஹாலில் ஒரு சோபாவில் அவளை அமர வைத்து விட்டு அவர் சொன்னார். “உண்மையில் நானும் ஆனந்தும் சேர்ந்து வருவதாகத் தான் இருந்தது. ஆனால் சற்று நேரமாகும் என்பதால் ஆனந்த் “நீங்கள் போங்கள். அம்மாவிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டிருங்கள். நான் வந்து விடுகிறேன்….” என்று சொல்லி விட்டார்…..”

சாரதா திருதிருவென்று விழித்தாள். “என்ன விவரங்கள்?”

அவர் பதில் சொல்லாமல் ஒரு சிடியை எடுத்து அங்கிருந்த டிவியில் போட்டார். சிறிது நேரத்தில் டிவியில் டெல்லி புறநகர்ப்பகுதியில் வெடிகுண்டு வைத்த தீவிரவாதியைப் பற்றி புகைப்படத்துடன் வந்த செய்தி தெரிய ஆரம்பித்தது. அவர் சாரதா மீது வைத்த கண்களை சிறிதும் நகர்த்தவில்லை.

டிவியில் அந்த செய்தியைப் பார்த்த சாரதாவிற்கு அதில் வந்த புகைப்படம் தன் மகனுடையது என்று தெரியவில்லை. ஏதோ சம்பந்தமில்லாத செய்தியைப் பார்ப்பது போல அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடைசியில் அவர் கேட்டார். “அம்மா இந்த ஆள் யாரென்று தெரிகிறதா?”

சாரதா வெகுளித்தனமாக சொன்னாள். “அவன் ஒரு தீவிரவாதி என்று சொன்னார்களே”

ஒன்றும் சொல்லாமல் அவளையே சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு அவர் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். “உங்கள் இரண்டாம் மகன் அக்‌ஷயின் சாயல் அவனுக்கு இருக்கிறது போல் உங்களுக்குத் தோன்றவில்லையா?”

சாரதாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவர் ஒரு பதிலை எதிர்பார்க்கிறார் என்பதை சிறிது நேரம் கழித்து தான் அவள் உணர்ந்தாள். “இது அக்‌ஷய் இல்லையே. வேறு யாரோ?…”

அவர் ஒன்றும் பேசாமல் போய் திரும்பவும் அந்த சிடியை ஓட விட்டார்.

சாரதா அந்தப் படத்தை மறுபடி உற்றுப் பார்த்தாள். உற்றுப் பார்க்கையில் சில ஒற்றுமைகள் அவளுக்குத் தென்பட்டன. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் ஆணித்தரமாக சொன்னாள். “என் பிள்ளை அப்படி எல்லாம் செய்ய மாட்டான்….”

அவள் குரலில் தெரிந்த உறுதியை அவர் கவனித்தார். ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் சொன்னாள். ” இவனுக்கும் அக்‌ஷயிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது, அக்‌ஷய் வயதிலும் சிறியவனாய் இருக்கிறான்”

அவர் சொன்னார். “அதையே தான் நானும், ஆனந்தும் நம்புகிறோம். ஆனால் போலீஸ் அவன் பற்றி சொல்லும் தகவல்கள் எல்லாம் அக்‌ஷயிற்கு எதிராக இருக்கின்றன. இதில் அக்‌ஷயிற்கு பழைய நினைவு வேறு போய் விட்டதும் நமக்கு சிக்கலாக இருக்கிறது. ஆனந்திடம் அவன் இப்போது நினைவுக்கு வந்தததை எல்லாம் சொன்னதை அவர் குறித்து வைத்திருக்கிறார். அக்‌ஷய் உங்களிடம் சொல்லியிருக்கும் விஷயங்களையும் கேட்டு வைக்கச் சொன்னார். ஒருவேளை உங்களிடம் அவன் சொல்லும் போது கொஞ்சம் அதிகமாகக் கூட நினைவுக்கு வந்திருக்கலாம் என்று ஆனந்த் நினைக்கிறார்… அக்‌ஷய் உங்களிடம் என்ன சொன்னான் என்பதை ஒன்று விடாமல் சொல்கிறீர்களா?”

அவள் சொல்ல ஆரம்பிக்கும் முன் சைகையால் நிறுத்தி சொன்னார். “ஒரு நிமிடம் இருங்கள். நான் நீங்கள் சொல்வதை டேப் செய்து கொள்கிறேன். ஆனந்த் வந்தவுடன் இன்னொரு தடவை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. பிறகு ஆனந்த் குறித்து வைத்திருக்கும் தகவல்களுடன் இதையும் ஒப்பிட்டுப் பார்த்து நாங்கள் அக்‌ஷயை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வழியை யோசிக்கிறோம்”

சாரதாவிற்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. அநியாயமாக அவள் மகன் இந்த வழக்கில் எப்படி மாட்டிக் கொண்டான், இது பற்றி ஆனந்த் ஏன் அவளிடம் சொல்லவில்லை என்று நினைத்தவளாக அக்‌ஷய் சொன்னதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.

அக்‌ஷயை புத்த பிக்குகள் காப்பாற்றியது, சஹானா என்ற பெண் அடைக்கலம் கொடுத்தது, அவளும், மரகதமும், வருணும் அவனிடம் பாசமாக இருந்தது, காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் ஏஜென்சி ஒன்றிற்கு சஹானா தகவல் கொடுத்தது, பின் ஆனந்த் தகவல் கிடைத்து தம்பியை அழைத்துக் கொண்டது எல்லாவற்றையும் அக்‌ஷய் சொன்னது போலவே அவள் சொல்ல அந்த நபர் அனைத்தையும் டேப் செய்து கொண்டார்.

அவர் அவள் சொல்லி முடித்த பிறகு எல்லாம் விளங்கியது போல தலையசைத்தார். பிறகு ஒன்றும் பேசாமல் செல் போனில் பேசுவது போல நடித்தார். “ஆனந்த்….நான் அம்மா பேசுவதை எல்லாம் டேப் செய்து விட்டேன். உங்கள் வேலை முடிந்து விட்டதா…. என்ன இன்னும் நேரமாகுமா? சரி எப்போது தான் வருகிறீர்கள்?…சரி அம்மாவிடம் பேசுகிறீர்களா….?”

அவர் செல்போனை அவளிடம் தந்தார். அவள் ஆர்வத்துடன் வாங்கி பேச முயற்சித்து “என்ன ஒன்றுமே கேட்கவில்லையே” என்றாள்.

“இணைப்பு போய் விட்டது போல இருக்கிறது. இருங்கள். ஆனந்தே போன் செய்வார்”

சில நிமிடங்கள் ஆகிய பிறகும் ஆனந்தின் போன் வராததைக் கண்டு அவர் சொன்னார். “ஆனந்த் இருக்கும் இடத்தில் டவர் பிரச்னை என்று நினைக்கிறேன். கவலைப் படாதீர்கள். ஆனந்த் நேரிலேயே வந்து விடுவார்”

***********

ஒரு மணி நேரம் கழித்து அந்த டேப்பைப் போட்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சிபிஐ மனிதன் ஒரு எண்ணிற்குப் போன் செய்தான்.

“அந்த டிவிக்காரி மகன் வருணை உடனடியாக கடத்துங்கள்……”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top