வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லதுஎப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றிகிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றிபெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டைபார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவுநன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.
பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும் என்றஅறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால் அரைமணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.
நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல,இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.
அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட் இலவசம் . பணம்கட்டத்தேவையில்லை.
தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.