கடவுள் ஜெயித்த கதை
மாயன் நாகரிகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று. கி. மு. 2600 ல் தொடங்கி கி. பி. 900 வரை நீடித்த நாகரிகம். இது.
மாயன் நாகரிகம் அமெரிக்க இந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப் பகுதிகள், காலத்தின் போக்கால், அரசியல் மாற்றங்களால், இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை: மெக்ஸிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார்.
மாயன் நாகரிகம் எந்தெந்த துறைகளில் எல்லாம் முத்திரை பதித்திருக்கிறது? உலக வரலாற்றுக்கு, மனித முன்னேற்றத்துக்கு, மாயன் நாகரிகத்தின் பங்களிப்பு என்ன?
சாக்லெட், கணிதம், வானியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் தொட்ட சிகரங்கள், இன்றும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
மாயன் நாகரிகம் கி. மு. 2600ல் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு முன்னால், மாயர்கள் எங்கே இருந்தார்கள்? மாயமாக, கி. மு. 2600- இல் ஒரு நல்ல நாளில் வானத்தில் இருந்து குதித்தார்களா?
கடவுள் படைத்த பூமி
மாய நாகரிகத்தின் இதிகாசங்கள்பற்றி மட்டும் அல்லாமல், அவர்களுடைய மத நம்பிக்கைகள், வாழ்க்கை முறை போன்ற பல அம்சங்களை அறிய போப்பல் வூ (Popol Vuh) என்னும் புத்தகம் உதவுகிறது. இதன் பொருள் சமுதாயத்தின் புத்தகம்.உலகம் எப்படித் தோன்றியது, மக்கள் எப்படி வந்தார்கள் என்பதையெல்லாம் விளக்கும் பல கதைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதிலிருந்து கிடைத்திருக்கின்றன.
பல ஆயிரம், லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முன்னால், உலகில் மலைகள், நதிகள், செடி கொடிகள், பறவைகள், மீன்கள், மிருகங்கள், மனிதர்கள் என எந்த ஜீவராசிகளும் இல்லாத காலம்.
என்ன இருந்தது? வானமும், கடலும் மட்டுமே. உலகைப் படைத்தவர் கேட்ஸால்கோயோட்டெல் (Quetzalcoatl) . இறக்கைகள் கொண்ட பாம்பு உருவம் இவருடையது.
தன்னை வணங்க, தன் புகழ் பாட யாருமே இல்லையே என்று இவர் நினைத்தார். தன் பக்தகோடிகளைப் படைக்கத் தொடங்கினார்.
“பூமி” என்றார் கேட்கோ. கடலுக்குள்ளிருந்து பூமி எழுந்து வந்தது. மலைகளை அவர் மனதில் நினைத்தார். பூமிப் பரப்பில் மலைகள் உயர்ந்தன. பிறகு ஒவ்வொன்றாக செடிகள், மரங்கள் படைத்தார். தான் படைத்த பொருட்களில் சோளச் செடிகளை அவருக்கு மிகவும் பிடித்தது. இதற்கு என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை. அப்படி ஒரு பிரியம்!
அடுத்ததாக, மான்கள், புலிகள், பாம்புகள், பறவைகள் என்ற பல ஜீவராசிகளை கேட்கோ படைத்தார். இவை தங்க இடம் வேண்டுமே?
“மான்களே, பிற மிருகங்களே, நதிக்கரைகள் உங்கள் வீடு. பறவைகளே, மரங்கள் உங்கள் உறைவிடம். உங்கள் இனத்தைப் பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று எல்லா மிருகங்களையும், பறவைகளையும் ஆசீர்வதித்தார்.
கேட்கோவுக்குத் தன் படைப்புகள் பற்றி ஒரே பெருமை. இனி இந்த மிருகங்களும், பறவைகளும் எப்போதும் தன் புகழ் பாடும் என்று நம்பினார்.
“மிருகங்களே, உங்களைப் படைத்த என் புகழ் பாடுங்கள்.”
விலங்குகளுக்குப் பேசத் தெரியாதே? அவை முனகின, கத்தின, ஊளையிட்டன.
பேசவில்லை.
“பறவைகளே, நீங்களாவது என் புகழ் சொல்லுங்கள்.”
பறவைகள் குரல் எழுப்பின. குரல் இனிமையான குரல்! ஆனால் வார்த்தைகள் இல்லை.
கேட்கோவுக்குத் திருப்தி வரவில்லை.
“என்ன செய்யலாம்?” என்று யோசித்தார். பேசும் சக்தி கொண்ட உயிர்வகையை உருவாக்க முடிவு செய்தார்.
பூமியிலிருந்து களிமண்ணையும் மணலையும் எடுத்தார். அவை இரண்டையும் சேர்த்துக் குழைத்தார். தலை, முகம், கண்கள், காது, மூக்கு, கைகள், கால்கள் கொடுத்தார். முதல் மனித உருவம் பிறந்தது.
அந்த முதல் மனிதனைப் பார்த்தார்.
“ஐயோ, இவன் அழகாக இல்லையே?”
கடவுள் கையில் எடுத்தவுடன் அவன் உடைந்து போனான். அவர் யோசித்தார். களிமண்ணும் மணலும் சரியில்லை என்று முடிவு செய்தார். அவனை அழிக்கவேண்டும், இன்னொரு வகை உயிரைப் படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இயற்கை நியதிப்படி கடவுளுக்குப் படைப்பது எளிது, அழித்தல் மிகக் கடினம்.
உலகம் இருட்டியது. வெள்ளம், பெரு வெள்ளம் வந்தது. பூமியைச் சூழ்ந்தது. முதல் பிரளயம் வந்தது. மண் மனிதனும், எல்லா ஜீவராசிகளும் மறைந்தார்கள்.
இனி மண் வேண்டாம், மரங்களால் மனித உருவம் செய்யலாம் என்று நினைத்தார். அவர் படைத்த மர மனிதன் அழகாக இருந்தான்.
“மனிதா, நீ பேசு பார்க்கலாம்.”
மனிதன் பேசினான். பேச்சா அது? சுத்த உளறல். அவருக்கே புரியவில்லை.
மர மனிதனிடம் இன்னொரு முக்கிய குறை. அவன் வெறும் மரம்தான். அவனுக்கு உயிர் இல்லை. உயிர் இல்லாத இவன் தன்னைப்போல் மனிதர்களைப் படைக்க முடியாதே? உலகில் மனித இனம் பெருக முடியாதே?
கேட்கோ யோசித்தார். மறுபடி பிரளயம். மர மனிதன் மறைந்தான்.
“நான் படைக்கும் மனிதனுக்கு உயிர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் பேசுவான், தன் இனம் பெருக்க அவனால் முடியும். எதை வைத்து அவனைப் படைக்கலாம்?”
“நமக்குப் பிடித்த சோளத்தால் மனிதனைப் படைக்கலாமா?”
மனிதன் உருவானான். அவனைப் பார்த்த அவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
“மனிதா பேசு.”
சோள மனிதன் பேசினான்.
“வானக் கடவுளே, உங்களுக்கு என் நன்றி.”
“மனிதா, என் புகழ் பாடு.”
பாடினான். தன் முயற்சியில் கடவுள் ஜெயித்து விட்டார். அவர் படைத்த இந்த மனிதனுக்கு உயிர் இருக்கிறது. தன் மனித இன எண்ணிக்கையை அவன் பெருக்குவான். அவனுக்குப் பேசத் தெரியும். அவன் கேட்கோவை நம்புவான், அவர் புகழ் பாடுவான். இதற்குத் தானே அவர் ஆசைப்பட்டார்?
கடவுளுக்கு மனம் நிறைந்த திருப்தி, மகிழ்ச்சி.
“மனிதா, உனக்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் என்னை எப்போதும் நம்பு. பூமியை வாழ வை. நீ மிகச் சிறப்பாக வாழ்வாய்.’
கேட்ஸால்கோயோட்டெல் உலகத்தைப் படைத்தது இப்படித்தான், மனித வாழ்வு தொடங்கியது இப்படித்தான், என்கிறது மாய இதிகாசம்.
தொடரும்…