குடும்பங்கள்
கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்து வசிப்பார்கள்.
கிரேக்கச் சமுதாயத்தில் ஆண்களே முக்கியமானவர்கள். பெண்களுக்குச் சம உரிமை கிடையாது. ஆண்கள் சாப்பிடும் அறையில் பெண்கள் சாப்பிடக்கூடாது. கடைகளுக்கும், தெருவுக்கும் போகக்கூடாது.
பெண்கள் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கவேண்டும். சமைப்பது, ஆடைகள் நெய்வது, வீடைச் சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். கூடுதலாகப் பாட்டு, நடனம் கற்கவேண்டும். பண்டிகை மற்றும் விழா நாட்களில் உறவினர்கள் முன்னால் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும்.
புகுந்த வீட்டில் குழந்தைகள் பராமரிப்பும், வீட்டு வேலைகளும் முழுக்க முழுக்கப் பெண்கள் பொறுப்பு. செல்வந்தர் வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் வருந்த வேலை செய்யவேண்டாம். ஆனால், அடிமைகள் மூலமாக இதை முடிக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு. வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் ஆண்கள் துரும்பைக்கூடத் தூக்கிப் போடவேண்டாம்.
திருமணங்கள்
பெண்களுக்கு 14 முதல் 18 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு இருபதுகளிலும் திருமணம் நடக்கும். ஆண்கல் 30 வயதில்கூட மணம் செய்துகொள்வதுண்டு. பெற்றோர்கள்தாம் வரன் தேடுவார்கள், பேசி முடிப்பார்கள். வரதட்சணை கேட்பதும் வாங்குவதும் சாதாரணம், பெற்றோர் தேர்வு செய்த வரனைத்தான் பெண்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம். தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் சுதந்திரம் ஆண்களுக்கு இருந்தது.
ஆண்கள் முப்பது வயதுவரை ராணுவ சேவை கட்டாயம் செய்யவேண்டும்,. எனவே, எந்த வயதில் மணம் முடித்துக்கொண்டாலும், இல்லற வாழ்க்கையை முப்பது வயதுக்குப் பிறகுதான் தொடங்கினார்கள்.
திருமணங்களில் சடங்குகள் உண்டு, ஆனால், புரோகிதர்களோ, பூசாரிகளோ கிடையாது. ஆண்களும், பெண்களும் குளித்து, புத்தாடை உடுத்தித் தயாராகவேண்டும். மாப்பிள்ளை ரதம் அல்லது குதிரை வண்டியில் மாமனார் வீட்டுக்குச் சுற்றமும், நண்பர்களும் புடைசூழ ஊர்வலமாகப் போவார். அங்கே விமரிசையாக விருந்து நடக்கும்,
வயிறாரச் சாப்பிட்ட மாப்பிள்ளை, பெண்ணோடு தன் வீட்டுக்கு வருவார். அவரை அவர் குடும்பத்தார் மனமார வரவேற்று உட்காரவைப்பார்கள். பிறகு எல்லோரும் அவர்கள் மேல் பழங்கள், பழக் கொட்டைகள் ஆகியவற்றைச் சொரிவார்கள். இது ஒரு வகையான ஆசீர்வாதம். இது முடிந்தவுடன், கணவனும் மனைவிக்கும் சாந்தி முகூர்த்தம்!
கனவன் மனைவிக்குள் மனக் கசப்பு வந்தால், விவாகரத்து பெறும் உரிமை ஆண்களுக்கு இருந்தது. பெண்களுக்குக் கணவன் சரியாக அமையாவிட்டால், சுமையை வாழ்நாள் முழுக்கத் தாங்கி நடக்கத்தான் வேண்டும். வேறு வழி கிடையாது.
குழந்தைகள்
ஆண் குழந்தைகள்தான் பெற்றோரின் முதல் தேர்வு. குழந்தைகள் பிறந்து பத்து நாட்களுக்குப் பிறகுதான் பெயர் சூட்டினார்கள். ஏனென்றால், பெரும்பாலான குழந்தைகள் அதற்குள்ளாகவே அகால மரணமடைவது சாதாரணமாக இருந்தது. குழந்தைகள் நோஞ்சானாகவோ, உடல் ஊனம் கொண்டவர்களாகவோ இருந்தால், இந்த மரணத்தைக் குழந்தையின் அப்பா முடிவு செய்வார். அடிமைகளின் கைகளில் சிசுவைக் கொடுப்பார். அவர்கள் ஏரி, குளங்களில் வீசி எறிவார்கள். இதில் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கண்டெடுக்கப்படுபவர்களால் அடிமைகளாக்கப்படுவார்கள் .
பணக்கார வீட்டுப் பெண்கள் மட்டுமே பள்ளிகளுக்குப் போனார்கள். மற்றவர்களுக்கு, வீட்டில் அம்மா தரும் பயிற்சிதான். ஆண் குழந்தைகள் இதற்கு நேர் எதிர். ஆறு வயதானதும் கட்டாயம் பள்ளிக்குப் போகவேண்டும். கல்வியோடு, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியும் கட்டாயம். இத்தோடு, ஈட்டி எறிதல், குத்துச் சண்டை ஆகியவையும் பயிற்றுவிக்கப்பட்டன. ஸ்பார்ட்டா நகரத்தில் மட்டும், ஏழு வயதானவுடன் சிறுவர்கள் ராணுவக் கூடாரங்களுக்குப் போயாகவேண்டும். முப்பது வயதுவரை கல்வியும், ராணுவப் பயிற்சியும் அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும், பிற நகரங்களில், ஏழு முதல் பதினெட்டு வயதுவரை பள்ளிக்கூடம். அதற்குப் பின் முப்பது வயதுவரை ராணுவப் பயிற்சி.
தெய்வ நம்பிக்கை
கிரேக்கர்கள் ஏராளமான கடவுள்களையும், தேவதைகளையும் நம்பினார்கள், வணங்கினார்கள். அவர்களுடைய முழு முதற் கடவுள் ஜீயஸ்.
சூரியக் கடவுள் அப்பல்லோவுக்கும் தெய்வங்கள் வரிசையில் உயர்ந்த பீடம். நோய்கள் வராமல் உடல் நலம் காப்பவர் இவர்தான்.
கிரேக்க நாடுகளுக்குள் பொழுதொரு சச்சரவு, தினமொரு சண்டை. ஆகவே, ஆரெஸ் (Ares) என்னும் யுத்தக் கடவுள் மிக முக்கியமானவர், சின்னத் தகராறுகள்கூட ஆரெஸ் பூசை, படையல் ஆகியவறோடுதான் ஆரம்பிக்கும். ஆயுதம் ஏந்தலாம் என்று ஆரெஸ் முதலில் ஆசீர்வாதம் தரவேண்டும்.
அறிவுத் தேடலும், கல்வியும் அத்தியாவசியமானவை. நம்மூர்க் கலைமகள்போல் கிரேக்கத்தில் அத்தீனா (Athena).
மக்கள் அடிக்கடி வழிபட்ட தெய்வம் டெமெட்டர் (Demeter) என்னும் பூமாதேவி. இதற்குக் காரணங்கள் உண்டு. நாடு மலைப் பிரதேசம். வறண்ட பூமி, வானம் பார்த்த பூமி. சாப்பிட உணவு வேண்டுமே விளைச்சல் கிடைக்கவேண்டுமே? டெமெட்டர் விவசாயிகளின் தேவதையானார். விதை விதைக்கும்போது, விதைத்தவுடன் மழை வேண்டி, மழை பெய்தவுடன், நல்ல விளைச்சலுக்குப் பிரார்த்தித்து, அறுவடைக்குப் பின் என சதா சர்வகாலமும் டெமெட்டர் நினைவுதான், பாராயணம்தான்.
வீரத்துக்கு, அறிவுக்கு, விவசாயத்துக்குத் தனியாகத் தெய்வங்கள் இருக்கும்போது,அழகுக்கு, ஆசைக்கு,காமத்துக்கு, காதலுக்கு வேண்டாமோ? இருந்தார் கவர்ச்சிக் கடவுள் அஃப்ரோடைட் (Aphrodite). வாரிசுகள் பெருக, மக்கள் வழிபடுவது இந்த அம்மனைத்தான்.
இவர்கள் தவிர அக்னி, வாயு,கடல், எமதர்ம ராஜா என்பதுபோன்ற பகவான்கள். இவை போதாதென்று பாம்பு, பசு, பன்றி போன்ற மிருகங்களையும் பய பக்தியோடு கும்பிட்டார்கள்.
வீடுகளில் பூசை அறைகள் இருந்தன. தெரு முனைகளிலும் தேவதைகள் பிரசன்னமாகியிருந்தார்கள். இத்தனை இருந்தபோதும், பிரம்மாண்டக் கோயில்கள் கட்டி அங்கேபோய்க் கும்பிட அவர்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு கடவுளுக்கும் எந்த மாதிரியான பூசைகள் நடத்தவேண்டும், எத்தகைய நைவேத்தியங்களும், படையல்களும் சமர்ப்பிக்கவேண்டும் என்று விலாவாரியான செயல்முறைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. விசேட நாட்களில் ஆண்டவர்கள் வீதி உலா வருவதும், பக்தகோடிகள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்குவதும் சாதாரண நிகழ்வுகள்.
இத்தனை ஆழமான தெய்வ நம்பிக்கை இருக்கும்போது, பரவலான மூட நம்பிக்கைகள் இருந்தாகவேண்டுமே? ராட்சசன், பேய், பிசாசு, துஷ்ட தெய்வங்கள் ஆகியவை இருக்கின்றனவென்று நினைத்தார்கள், பயந்தார்கள், பரிகாரங்கள் செய்தார்கள். செய்வினை, பில்லி சூன்யம் ஆகிய அடுத்தவரை ஒழித்துக்கட்டும் வேலைகளிலும் சர்வ சாதாரணமாக ஈடுபட்டார்கள்.
ஏழு புனிதமான, அதிர்ஷ்டமான எண். எதையுமே ஏழின் வடிவமாகப் பார்த்தால் ராசி. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது ஏழு பேர் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பது எல்லோரும் ஒத்துக்கொண்ட கருத்து.
வருங்காலம் பற்றித் தெரிந்துகொள்வதிலும், குறி கேட்பதிலும் எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. எல்லா ஊர்களிலும் கோவில்களில் குறி சொல்பவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுள்களின் அவதாரங்களாகக் கருதப்படார்கள். ஆகவே, இவர்கள் கோவில்களில் மட்டுமே வருங்காலதைக் கணிப்பார்கள். மன்னர்களேயானாலும், இவர்களை அரண்மனைக்கு அழைக்க முடியாது. இவர்களிடம்தான் போக வேண்டும்.
நாடி ஜோசியம் என்றாலே, நினைவுக்கு வருவது வைத்தீஸ்வரன் கோவில். இதைப்போல். அந்த நாட்களில் குறி கேட்பது என்றாலே, புகழ் பெற்ற இடம் டெல்ஃபி (Delphi) என்னும் ஊர், அங்கே இருக்கும் அப்பலோ கோவில்.
இறந்தவர் சடங்குகள்
ஒரு வீட்டில் மரணம் நடந்தால், உற்றார், உறவினர், நண்பர்களுக்குச் சேதி அனுப்பப்படும். உடலைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, மலர் மாலைகளால் அலங்கரிப்பார்கள். அவர் வாயில் நாணயம் ஒன்று வைக்கப்படும். துக்கம் விசாரிக்க வருபவர்கள் கறுப்பு ஆடை அணிந்து வரவேண்டும். இரண்டு நாள்கள் உடல் வீட்டிலேயே, மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். மூன்றாம் நாள் ஊர்வலமாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள், மயானத்தில் எரி மூட்டுவார்கள். மறுநாள் அஸ்தியைப் பானையில் போட்டுக் குழிதோண்டிப் புதைப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் விருந்து நடக்கும், இதற்குப் பிறகு எந்தச் சடங்கும் கிடையாது.
கோயில்கள்
மலைகளில் கற்கள் எராளமாகக் கிடைத்ததால், வீடுகள் போலவே கோவில்களும் கருங்கல், சுட்ட களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டன. கோவில்களின் கட்டமைப்புக்கு மார்பிளும், சிலைகள், தூண்கள் ஆகியவற்றுக்கு மார்பிள், யானைத் தந்தம் ஆகியவையும் உபயோகப்படுத்தப்பட்டன.
மூன்றுவிதமான கட்டுமானப் பாணிகள் இருந்தன. அவை – டோரிக், அயானிக், கோரிந்தியான். டோரிக் பாணி, மிக எளிமையான பாணி, இத்தகைய கட்டடங்களில் தூண்கள் உருளை வடிவில் இருக்கும். நேர்கோடு தூண்களின் உடல் முழுக்க ஓடும். மேற்பாகம் தட்டையான உருவம் கொண்டது. ஏதென்ஸ் நகரத்தில், அக்ரோப்போலிஸ் என்னும் குன்றின்மேல் இடத்தில் இருக்கும் பார்த்தினான் கோயில் டோரிக் பாணியிலானது. இது அத்தீனா என்னும் கல்வி தெய்வத்தின் கோயில். கி.மு. 5 – ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கோயிலின் அகன்ற பிரகாரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தந்தம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட 40 அடி உயர அத்தீனா சிலை. (அந்தச் சிலை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சிலை பற்றிய முழு விவரங்களும், உருவ அமைப்பும் கிடைள்ளன.) போர்வீரன் உடை, கையில் பாம்பு, வெற்றிச்சின்னம். பாரசீகத்தோடு நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றியாக, இந்தக் கோவிலும், சிலையும் அமைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
அயானிக் பாணிக் கட்டடங்கள், டோரிக்கைவிட அழகானவை, அதிக உயரமானவை, தூண்களில் வேலைப்பாடுகள் கொண்டவை. பார்த்தினான் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இரிக்தியம் (Erechtheum) அயானிக் வகைக் கோவில். கி.மு. 421 – 407 காலகட்டத்தில் கட்டப்பட்ட அழகான ஆலயம். அத்தீனா, பொஸைடான் (கடல் தெய்வம்), முன்னாள் மன்னர் இரிக்தியஸ் ஆகியோர் இங்கே வழிபடப்பட்டார்கள்.
கோரிந்தியான், கலைநயத்தில், கை நுணுக்கத்தில் அயானிக் பாணியைவிட உச்சமானது. தூண்களின் உடல் பாகத்தில் பல நேர்க்கோடுகள் ஓடும்: உச்சியில் இலைகளும், பூக்களும் செதுக்கப்பட்டிருக்கும், மெஸ்ஸினியா என்னும் பகுதியில் சூரியக் கடவுள் அப்பல்லோ ஆலயம் இருக்கிறது. இது, டோரிக், கோரிந்தியப் பாணிகள் இரண்டும் சேர்ந்த அழகுக் கலவையின் அற்புதப் படைப்பு.
இப்படி எத்தனையோ கோயில்கள், கிரேக்கக் கட்டடக் கலைத் திறமையின் உச்ச வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.
தொடரும்…