அறிவியல் அறிவு : உலோகங்கள்
செம்பு, வெள்ளீயம் இரண்டையும் கலந்தால் வெண்கலம் செய்யலாம் என்னும் அறிவியல் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுட்ட செங்கற்களால் ஆன தொட்டிகளில் செம்பையும், வெள்ளீயத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து காய்ச்சி, வெண்கலம் தயாரித்தார்கள். வெண்கலத்தால் அரிவாள், கோடரி போன்ற கருவிகள் செய்தார்கள். இவை செப்புக் கருவிகளைவிட உறுதியானவை என்று உணர்ந்தார்கள். வெண்கலப் பாத்திரங்களும், அடுக்களையில் மண்சட்டிகளின் இடங்களைப் பிடித்தன. ஒரு பெண்ணுக்குத் தன் அழகைத் தானே ரசிக்கும் ஆசை. கணவனிடம் சொன்னாள். அவன் வெண்கல முகம் பார்க்கும் “கண்ணாடி” கொண்டுவந்தான். விரைவில் இது பல இல்லங்களை அலங்கரிக்கத் தொடங்கியது.
பீங்கான்
பீங்கான் செய்யும் ரகசியம் அவர்கள் கைவசம் இருந்தது. களிமண்ணையும் சில கனிமங்களையும் சேர்த்து பீங்கான் உருவாக்கப்பட்டது. ஆடைகளுக்கான பொத்தான்கள், சிறு கிண்ணங்கள், வளையல்கள், தாயத்துக்கள், சிற்பங்கள் ஆகியவை பீங்கானில் தயாராயின.
சக்கரங்கள்
சக்கரங்கள் மனிதர்களின் முன்னேற்றத்தின் மூலாதாரங்கள், ஒரு நாகரிகம் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறது என்பதன் அளவுகோல்கள். குயவர் எப்படி மண்பாண்டங்கள் செய்கிறார்? தன் குயவர் சக்கரத்தைச் சுழற்றுவதால். தொழிற்சாலைகள் எப்படித் தயாரிப்புப் பொருட்களைச் செய்து குவிக்கின்றன? இயந்திரங்களின் சக்கரம் சுழல்வதால். மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எப்படிப் போகிறோம்? சைக்கிள்களில், மோட்டார் சைக்கிள்களில், கார்களில், பஸ்களில், ஆட்டோக்களில், ரயில்களில், விமானங்களில் போக்குவரத்து நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் சக்கரம்.
சக்கரங்கள் இல்லை என்றால், நம் தனிப்பட்ட வாழ்க்கை, போக்குவரத்து, வர்த்தகம் அத்தனையும் நின்றுவிடும். ஆகவே. சக்கரங்கள் பற்றி ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தெரிந்திருக்கிறது என்றால், அவர்கள் அதைப் பயன்படுத்தினார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வானதாக இருந்தது, அவர்கள் நாகரிகம் உச்சத்தில் இருந்தது என்று பொருள்.
சிந்து சமவெளியினர் சக்கரங்கள் பற்றித் தெரிந்துவைத்திருந்தார்கள், அவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினார்கள். மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் நிறைய வெண்கல பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றுள் ஏராளமானவை வண்டி பொம்மைகள். மூன்று விதமான வண்டிகள் இருந்தன. ஒன்று சாதாரணமான இரண்டு சக்கர வண்டி. இவை பெரும்பாலும் சரக்குகளின் போக்குவரத்துக்காக உபயோகப்படுத்தப்பட்ட வண்டிகளின் நகல்களாக இருக்கலாம். இரண்டாம் வகை வண்டிகள் ஓட்டுபவரின் தலைக்கு மேல் வளைவான கூரையோடு உள்ளன. தனி மனிதர்கள் பயணம் செய்ய இத்தகைய வண்டிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்றாம் வகை வண்டிகள் நான்கு, ஐந்து பேர் பிரயாணம் செய்யும் விதத்தில் கூண்டு வகையில் உள்ளன.
மருத்துவ அறிவு
சிந்து சமவெளியினரின் மருத்துவ ஞானம் குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் கிடைத்த மண்டை ஓடுகளில் தலையில் ஆணியால் அடித்துத் துளையிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. இவை ஏதாவது மருத்துவ முறையோ, அல்லது பேய், பிசாசுகளைத் துரத்தச் செய்த மாந்திரீகமோ, தெரியவில்லை. பல மண்டை ஓடுகளில் இருக்கும் பற்களில் துளைகள் காணப்படுகின்றன. இவை ஏதோ கூர்மையான கருவிகளால் செய்யப்பட்ட ஒழுங்கான துளைகள். பல் மருத்துவம் அன்று இருந்ததோ என்னும் சந்தேகத்தை இவை எழுப்புகின்றன.
கணித அறிவு
நீளம், எடை, நேரம் ஆகியவற்றை அளக்கச் சிந்து சமவெளிக்காரர்கள் அறிந்திருந்தார்கள். வியாபாரத்தில் கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட எடைகளைப் பயன்படுத்தினார்கள் என்று பார்த்தோம். அவர்களுடைய எடைகள் 5:2:1 என்னும் விகிதத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. இதற்குக் கணித ரீதியிலான காரணம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தக் காரணம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. எடைகள் 0.05, 0.1, 0.2, 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 என்னும் அளவைகளில் இருந்தன. ஒரு அளவை சுமார் 28 கிராம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல் இதே அளவைகளைப் பயன்படுத்துவது ஆச்சரியமான விஷயம்!
சிந்து சமவெளியில் நீளங்களை அளக்கும் அளவைகள் (அடி ஸ்கேல்) இருந்தன. இவை வெண்கலம், யானைத் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. பழங்கால அளவை ஒன்று கிடைத்துள்ளது. இதன் உதவியால் அளக்க முடியும் குறைந்த நீளம் 1.0704 மில்லி மீட்டர். ஆமாம், அத்தனை துல்லியமான அளவைகள்!
கலைகள்
குயவர் சக்கரம் உருவாக்கிய களிமண் பொம்மைகள், சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சங்கள். பசுக்கள், கரடிகள், குரங்குகள், நாய்கள் ஆகிய பொம்மைகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இவை மக்களிடையே பிரபலமாக இருந்திருக்கவேண்டும். பாதி உடல் காளை மாடு, மறுபாதி வரிக்குதிரை என ஏராளமான பொம்மைகள். அப்படிப்பட்ட மிருகங்கள் வாழ்ந்தனவா அல்லது கலைஞர்களின் கற்பனையா? தெரியவில்லை. ஏராளமான பெண் பொம்மைகள். இவை தெய்வங்கள் அல்லது தேவதை வடிவங்களோ? ஒரே மாதிரியான பொம்மைகளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தோதாக, மர அச்சுக்கள் பயன்பட்டன.
கடலில் மூழ்கிச் சங்கு எடுத்தார்கள். இவற்றால், நகைகள், வளைகள் ஆகியவை செய்து அணிந்தார்கள். இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்காகத் தொழிற்கூடங்கள் இருந்தன. இங்கே, யானைத் தந்தத்தால் கைவினைப் பொருட்களும் உருவாக்கப்பட்டன.
களிமண், சங்கு, தந்தம் ஆகியவற்றோடு, தங்கள் கலைத்திறமையை வெளிக்காட்ட அவர்கள் பயன்படுத்திய இன்னொரு முக்கிய ஊடகம் – மாக்கல் (Soap Stone)! அழகு அழகான சிற்பங்கள், செப்புகள், முத்திரைகள் ஆகியவை மாக்கல்லில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டன.
வண்ணக் கற்களால் மணிகள் செய்து, நூலில் கோர்த்து நகைகள் செய்தார்கள். நகைகள் உறுதியாக இருக்க, தங்கத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடாது, வெள்ளியையும் அத்தோடு சேர்க்கவேண்டும் என்னும் சூட்சுமம் எப்படியோ அவர்களுக்கு அத்துப்படி!
சாதாரணமாகப் பண்டைய நாகரிகங்களில் சிற்பக் கலை செழித்தோங்கி வளர்ந்திருக்கும். அந்த விதத்தில், சிந்து சமவெளி அதிக ஆதாரங்கள் தரவில்லை. ஆனால், மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள இரண்டு சிற்பங்கள் அவர்களின் கலையுணர்வையும், சிற்பத் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. அவை – பூசாரி மன்னன் (Priest King), நடன மங்கை (Dancing Girl) என்னும் பெயர்களில் அழைக்கப்படும் சிற்பங்கள்.
பூசாரி மன்னரைப் பாருங்கள். மாக்கல் படைப்பு. 17 சென்டிமீட்டர் உயரம். அடிப்பாகம் சிதைந்திருக்கிறது. மார்பளவுச் சிற்பம். பாதி மூடிய கண்கள். தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாரோ? தாடி. சவரம் செய்யப்பட்ட மீசைப் பாகம். தலைமுடியை இணைத்துக் கட்டிய துணிப்பட்டை, மார்புக்குக் குறுக்கே பூ வேலைப்பாட்டோடு அமைந்த மேலங்கி. காதுகளுக்குக் கீழே இரண்டு துவாரங்கள் – கழுத்தில் நெக்லஸ் போன்ற நகையைச் சிற்பத்துக்கு அணிவித்திருந்திருக்கலாம். அந்தக் காலத்துப் பூசாரிகள் பற்றிய அதிக விவரங்கள் இல்லை. ஆகவே, பூசாரி மன்னர் என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்திருந்தாலும், இவர் நிஜத்தில் அரசராகவோ, வணிகராகவோ இருக்கலாம் என்று பல யூகங்கள் உள்ளன.
கலைநுட்பத்துடன் இருக்கும் நடன மங்கை 10. 8 சென்டிமீட்டர் உயரத்தில் வெண்கலச் சிலையாக நிற்கிறாள். இரண்டு கைகளிலும் வளையல்கள். வலது கை இடுப்பில். இடது கை, சற்றே உயர்த்தி வைத்திருக்கும் இடது காலின்மேல். பிதுக்கிய உதடுகளோடு தருவது ஒய்யார போஸ். பாவம், காலப்போக்கில் அவள் பாதங்கள் உடைந்திருக்கின்றன.
மொழி
சிந்து சமவெளியினரின் எழுத்து, பிற நாகரிகங்களின் எழுத்துக்கள்போலவே, சித்திர எழுத்து. வலமிருந்து இடது பக்கமாகப் படிக்கவேண்டும். பழங்கால இலச்சினைகளில் அறுநூறுக்கும் அதிகமான சித்திர எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவற்றின் அர்த்தங்களை ஆராய்ச்சியாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
தொடரும்…