முக்கிய மன்னர்கள்
கி.மு. 3165. மெனிஸ் என்ற மன்னர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனசு அவருக்குச் சொல்கிறது. ‘மெனிஸ், நீ ஒரு மாவீரன். இத்தனை சிறிய ராஜ்ஜியம் உனக்கு எப்படிப் போதும்?’
கொட்டியது முரசு. புறப்பட்டது மெனிஸ் அரசரின் படை. பக்கத்து ராஜ்ஜியங்கள் மீது பாய்ந்தது. எகிப்து நாட்டின் மேற்பகுதி நைல் பள்ளத்தாக்கு என்றும், கீழ்ப்பகுதி நைல் டெல்ட்டா என்றும் அழைக்கப்பட்டன. ஆரம்ப நாள்களில் இவை இரண்டும் இரு தனி நாடுகளாக இருந்தன. கி. மு. 3150 -இல் மெனிஸ் மன்னர் நைல் பள்ளத்தாக்கு, நைல் டெல்ட்டா ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைத்து, எகிப்தை ஒரே நாடாக்கினார். பண்டைய எகிப்து நாகரிகம் தொடங்கியது இப்போதுதான்.
மெனிஸ் சரித்திரம் படைத்தார். அண்டை ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து, அவற்றை அடி பணிய வைத்து, தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த முதல் மன்னர் அவர்தான். அவற்றுள் சில ராஜ்ஜியங்களைப் பூசாரிகள் ஆண்டு வந்தனர். தங்களைக் கடவுளின் தூதர்கள் என அறிவித்துக் கொண்டு, அவர்கள் மக்களைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.
‘கடவுளின் அவதாரம் பூசாரிகள் அல்ல, நான்தான்’ என்று மெனிஸ் அறிவித்தார். இன்னொரு முக்கிய மன்னர் மூன்றாம் துத்மோஸிஸ் (Tuthmosis III). கி.மு. 1479 முதல் கி.மு. 1425 வரை இவர் ஆட்சி செய்தார். இவர் பதவிக்கு வந்தவுடன், எகிப்தின் பாகங்களாக இருந்த பாலஸ்தீனம், சிரியா போன்ற பகுதிகள் புரட்சிக் கொடிகளை உயர்த்தின. தன் படைகளைத் தலைமை ஏற்று நடத்திய அவர் பாலஸ்தீன, சிரிய நாடுகளை அடக்கினார். ஒரு முறை ஆப்பிரிக்காவில் வேட்டைக்குப் போனபோது ஒரே நாளில் நூற்றி இருபது யானைகளைக் கொன்று வீழ்த்தினார் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. பதினேழு போர்களைத் தலைமை தாங்கி நடத்தினார். நாற்பத்து இரண்டு நகரங்களை ஜெயித்தார். எகிப்தைப் பெரிய சாம்ராஜ்ஜியமாக்கினார்.
இந்த மாவீரர் பெரும் கலா ரசிரும்கூட. காலம் காலமாக எகிப்தின் புகழ் சொல்லும் பல அரண்மனைகள், மாளிகைகள், கட்டடங்கள், பூங்காக்கள், சிற்பங்கள் இவர் ஆட்சியில் வந்தவைதாம். கார்னாக் (Karnak) என்ற இடத்தில் இருக்கும் இவர் கட்டிய கோயிலின் அமைப்பு, ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
இந்த மாவீரரை, கலா ரசிகரைச் சந்திக்க விரும்புகிறீர்களா? உடனே புறப்படுங்கள் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு. போக வேண்டிய இடம் கெய்ரோ மியூஸியம். 1881- இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கல்லறையில் மூன்றாம் தூத்மஸின் உடலைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, அவர் இறந்து சுமார் 3331 ஆண்டுகளுக்குப் பிறகும் உடல் பத்திரமாக இருந்தது. அவர் கெய்ரோ மியூஸியத்தில் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
எகிப்திய மன்னர்களியே தலை சிறந்தவராகக் கருதப்படுபவர் இரண்டாம் ராம்சேஸ் (Rameses II). எகிப்தை அதிக காலம் ஆண்டவர் இவர் – 66 ஆண்டுகள் (கி.மு. 1279 – கி.மு. 1213). வயது மட்டும்தான் இவர் சாதனையா? இல்லை, இல்லை. தனக்கு முன்னால் வந்த ஃபாரோக்கள்போல் இவரும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார். இவருடைய முக்கிய உருவாக்கம் அபூ ஸிம்பெல் ஆலயம் (Abu Simbel).
மலைக்குள் 200 அடி நீளத்துக்குக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முகப்பில் 67 அடி உயர இரண்டாம் ராம்சேஸ் சிலை. அவர் காலடியில் ஆள் உயர ராணிகளின் சிலைகள். இவையும், கெய்ரோவில் 11 மீட்டர் உயரத்தில் தனக்காகவே இவர் அமைத்துக்கொண்ட கிரானைட் உருவச் சிலையும், ராம்சேஸ் படைப்புத் திறமையின் அடையாளங்கள். (யாரும் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் இன்னும் பல இவருக்கு உண்டு – 8 மனைவிகள், 100 ஆசை நாயகிகள், 56 மகன்கள், 44 மகள்கள் என்று மொத்தம் 100 குழந்தைகள்!)
ஆனால், வரலாறு இரண்டாம் ராம்சேஸை நினைவு வைத்திருப்பது வேறு காரணங்களுக்காக. யூத இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை இரண்டாம் ராம்சேஸ் அடிமைகளாக நடத்தினார். யூதர்களின் தலைவரும் வழிகாட்டியுமான மோஸஸ் மன்னருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். இறைவனிடம் “பத்துக் கட்டளைகள்” பெற்ற அதே மோஸஸ் தான்!
அரசரின் அடக்குமுறை தாங்காத யூதர்கள் மோஸஸ் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுக் கூட்டமாக வெளியேறினார்கள். வழியில் செங்கடல் அவர்கள் எதிரே வழி மறித்தது. பின்னால் பார்த்தார்கள். பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது எகிப்துப் படை.
மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவர்கள் பதறினார்கள். மோஸஸ் கடவுளை வேண்டிப் பிரார்த்தித்தார். அதிசயம் நடந்தது. செங்கடல் இரண்டாகப் பிரிந்தது. யூதர்கள் எகிப்தை விட்டுப் பத்திரமாக வெளியேறினார்கள். ஃபாரோக்கள் கடவுளின் அவதாரங்கள் என்ற நம்பிக்கை இருந்த காலம். கடவுளே ஃபாரோ இரண்டாம் ராம்சேஸஸைக் கை விட்டு விட்டார்!
இதற்குப் பிறகு ராம்சேஸுக்கு இறங்கு முகம்தான்!
(ஒரு துணுக்குச் செய்தி. எல்லா நாட்டு மன்னர்களுக்கும், விநோதப் பழக்க வழக்கங்கள் உண்டு. பண்டைய எகிப்தில் ஈக்களின் தொல்லை மிக அதிகம். ஈக்களை விரட்ட, ஒட்டகச் சிவிங்கிகளின் ரோமத்தால் செய்யப்பட்ட swatter (ஈக் கொல்லிக் கருவி) உபயோகித்தார்கள். ஒரு ராஜா சாமானியர்களின் இந்த முறையைப் பயன்படுத்தலாமா? ஒரு புத்திசாலி மன்னர்களுக்குத் தனிவழி சொன்னார் – நூற்றுக்கணக்கான அடிமைகள் நிர்வாணமாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உடல் முழுக்கத் தேன் தேய்க்கப்படும். தேனைத் தேடிவரும் ஈக்கள் அடிமைகளை மொய்க்கும், ராஜா எஸ்கேப்! )
மத நம்பிக்கை
எகிப்து நாகரிகத்தின் பலமான தூண்களில் முக்கியமானது மத நம்பிக்கை. கடவுள், மறுபிறப்பு என்ற இரண்டு தத்துவங்களும் எகிப்தியரின் ஆழ்ந்த நம்பிக்கைகள். நூற்றுக்கணக்கான கடவுள்களை அவர்கள் நம்பினார்கள், தங்கள் தெய்வங்களைத் தினமும் வணங்கினார்கள். இந்த வழிபாடு வீடுகளில்தான். ஏனென்றால், கோவில்களில் விழாக் காலங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். எல்லா நாட்களும் கோவில்களுக்குப் போனவர்கள் பூசாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்தான்.
ரே என்கிற சூரியன்தான் முக்கிய கடவுள். ஆமன் (Aamon) வாயுதேவன். நம் ஊர் காதல் தெய்வம் மன்மதன் பசு வடிவில் காட்சி அளித்தார். ஹாதர் (Hather) என்று அழைக்கப்பட்டார்.
கடவுள்கள் இப்படி ஆண் வடிவங்களில் மட்டுமல்லாமல், பெண்களாகவும், எருதுகள், மான்கள், குரங்குகள், நரிகள், பாம்புகள், முதலைகள், பருந்துகள் போன்ற மிருக, பறவை வடிவுகளிலும் வணங்கப்பட்டார்கள்.
ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) எகிப்தின் கற்பனை உயிரினம். நம் ஊர் கிராம எல்லைகளில், காவல் தெய்வங்களாக, முரட்டு உருவம், முறுக்கு மீசை என்று பயமுறுத்தும் தோற்றத்தோடு இருக்கும் ஐயனார் சிலைகளை ஒரு நிமிடம் கண்கள் முன்னால் கொண்டுவாருங்கள். ஸ்ஃபிங்க்ஸ் நம் ஊர் ஐயனார் போலத்தான். எகிப்தின் காவல் தெய்வங்கள். எகிப்தின் பலபாகங்களில் ஸ்ஃபிங்க்ஸ் சிலைகள் இருக்கின்றன. இவற்றின் முகம் மனித வடிவிலும், உடல் சிங்கம் போன்றும் இருக்கும்.
எகிப்தின் மிகப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் கிஸா (Giza) நகரில் இருக்கிறது. இதைப் பெரிய ஸ்ஃபிங்க்ஸ் (The Great Sphinx) என்று அழைக்கிறார்கள். ஏன் தெரியுமா? இதன் ஸைஸ் அப்படி. 65 அடி உயரம். 260 அடி நீளம். 20 அடி அகலம்!
ஆரம்ப காலங்களில், ஸ்ஃபிங்க்ஸ் தலைக்கனம் கொண்ட கடவுளாக இருந்தது. தான் பிரபஞ்சத்தின் மகா பெரிய புத்திசாலி என்று நினைத்தது. நம் ஊரில் சரஸ்வதி மாதிரி எகிப்தில் ம்யூஸ் (Muse) படிப்பு தெய்வம். ஓர் நாள் ம்யூஸ் ஸ்ஃபிங்ஸுக்குப் புதிர் போட்டாள். அந்தப் புதிருக்குப் பதில் சொன்னால்தான், அதன் அறிவைத் தான் ஒத்துக் கொள்ள முடியும் என்றாள்.
புதிர் இதுதான். “உலகில் ஒரு உயிரினம் இருக்கிறது. அதற்குக் குரல் ஒன்றுதான். தன் வாழ்வில் அது முதலில் நான்கு கால்களில் நடக்கும். அடுத்ததாக இரண்டு கால்களில் நடக்கும். கடைசியாக மூன்று கால்களில் நடக்கும். அந்த உயிரினம் எது என்று நீ நாளைக்குள் கண்டுபிடிக்க வேண்டும்?”
ஸ்ஃபிங்க்ஸ் தன் மூளையைக் கசக்கியது. பதில் கிடைக்கவில்லை. எகிப்து மக்கள் புத்திசாலிகள் ஆயிற்றே? அவர்களிடம் உதவி கேட்க முடிவு செய்தது. எகிப்துக்குப் போனது. மக்களை சந்தித்தது. தன் சந்தேகத்துக்குப் பதில் கேட்டது.
ஒடிபஸ் (Oedipus) என்ற அறிஞர் கேட்டார். “ஸ்ஃபிங்க்ஸ், நான் உனக்குச் சரியான பதில் சொன்னால், நீ எங்களுக்கு என்ன தருவாய்?”
“உங்கள் பதில் கரெக்ட் என்று ம்யூஸ் ஒத்துக் கொண்டால், உலகம் இருக்கும்வரை உங்கள் நாட்டையும், மக்களையும் நான் பாதுகாப்பேன்”
“ஸ்ஃபிங்க்ஸ், ம்யூஸ் குறிப்பிட்ட உயிரினம் மனிதன்.”
“எப்படி?”
“மனிதன் குழந்தையாக இருக்கும்போது இரண்டு கைகள், இரண்டு கால்கள் என நான்கு கால்களில் தவழ்கிறான். வளர்கிறான். இரண்டு கால்களில் நடக்கிறான். வயதாகும்போது ஊன்றுகோல் என்கிற மூன்றாவது கால்.”
அவர் பதிலை ம்யூஸ் ஏற்றது. அன்று முதல் ஸ்ஃபிங்க்ஸ் எகிப்து நாட்டில் தங்கியது. என்றென்றும் , எகிப்தைப் பாதுகாத்து வருகிறது. பிரதி உபகாரமாக மக்களும் பிரம்மாண்டச் சிலைகள்வைத்து மதிப்பும், மரியாதையும் தருகிறார்கள்.
தொடரும்…