13. கி. பி. 1912 முதல் இன்று வரை
தேசியம், மக்களாட்சி, மக்கள் நலம் ஆகிய மூன்று கொள்கைகளைத் தன் தாரக மந்திரங்களாக அறிவித்து, சன் யாட்-சென் ஆட்சியமைத்தார். முதல் உலகப் போர் தொடங்கியபோது, சன் யாட்-சென் சீன ஆதரவை நேச நாடுகளுக்கு வழங்கினார். அவர் போட்ட ஒரே நிபந்தனை – சீனாவின் சில பகுதிகளை ஜெர்மனி ஆக்கிரமித்து வைத்திருந்தது. போர் முடிந்தவுடன், நேச நாடுகள், அந்தப் பிரதேசங்களைச் சீனாவுக்குத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். நேச நாடுகள் இந்த நிபந்தனையை ஏற்றன. போர் முடிந்தது. ஆனால், வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.
சீனாவுக்கு இது ஒரு முக்கியக் கட்டம். மாணவர்கள் களத்தில் குதித்தார்கள். மே 4, 1919. ஊடகம் மாணவர்கள் பின்னால் அணிவகுத்தன. வியாபாரிகளும், பொதுமக்களும் வரி கொடுக்க மறுத்தார்கள். நேச நாடுகளின் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட மறுத்தது. அதே சமயம், மாணவர் கிளர்ச்சியையும், வன்முறையால் அரசு அடக்கியது.
ஜூலை 1, 1921. சீன வரலாற்றில் மிக முக்கியமான நாள். கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சன் யாட் – சென்னோடு இவர்களுக்கு நல்ல உறவு இருந்தது. 1925 – இல் அவர் மறைந்து, சியான் கைஷேக் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சியை இவர் அடக்க நினைத்தார். அதற்குள் ஆலமரமாகத் தழைத்து வளர்ந்துவிட்ட கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார்கள். உண்மையில், இவை போராட்டங்களல்ல, சீன ராணுவத்தோடு நடத்திய போர்கள். தொடர்ந்து 1949ல் சீனா முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வந்தது.
சியாங்கும் அவர் ஆதரவாளர்களும், சீனாவின் பகுதியான ஃபர்மோஸா தீவுக்கு ஓடிப் போனார்கள். தாங்கள்தாம் உண்மையான சீனக் குடியரசு என்று பிரகடனம் செய்துகொண்டார்கள். (அன்றைய ஃபர்மோஸாதான் இன்றைய தைவான்.) கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டின் பெயரை சீன மக்கள் குடியரசு என்று மாற்றியது. உலகம் முழுக்க, சீனா என்று அங்கீகரிப்பது, சீன மக்கள் குடியரசைத்தான்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த மா சே துங், சீன மக்கள் குடியரசின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். 1976 – இல் மறையும்வரை, 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். மாவோ சீனாவின் பொருளாதாரம், வாழ்க்கை முறை, கலாசாரம் ஆகியவற்றில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தினார். சீனா உலக வல்லரசாவதற்கு அடித்தளம் போட்டவர் இவர்தான். தன் கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற இவர் பயன்படுத்தியது ஈவு இரக்கமேயில்லாத இரும்புக் கரம். அரசுக்கு எதிராக இருந்த அத்தனை பேரும் அடக்கப்பட்டனர். வாழ்நாள் முழுக்கச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அல்லது ‘காணாமல் போனார்கள்’.
அதிரடி நிலச் சீர்திருத்தங்கள் அரங்கேறின. சுவான்தாரர்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டு, ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. தன் நாடு தொழில்நுட்பத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பின் தகங்கியிருக்கிறது, உலகம் மதிக்கவேண்டுமானால், தொழிலிலும், தொழில்நுட்பத்திலும் அவசர கதியில் முன்னேறியாகவேண்டும் என்பதை மாவோ உணர்ந்தார். 1953 – இல் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கினார். ரஷ்ய உதவியோடு, பல கனரகத் தொழில்கள் நாடெங்கும் நிறுவப்பட்டன. சீனா தொழிற்பாதையில் முன்னேறத் தொடங்கியது.
1956. யாருமே எதிர்பாராத மாற்றத்தை மாவோ அறிவித்தார். அதுதான், நூறு மலர்கள் இயக்கம். ‘நூறு மலர்கள் மலர வேண்டும், நூறு வகையான சிந்தனைகள் உருவாகவேண்டும் என்கிற இந்தக் கொள்கை, கலைகளை வளர்க்கவும், அறிவியலை முன்னேற்றவும், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை.’
கம்யூனிச ஆட்சியில் கருத்து சுதந்திரமா? சீன மக்கள் சிலிர்த்தார்கள், உலகப் பொதுவுடமைவாதிகள் அதிர்ந்தார்கள். இந்த அறிவிப்பின்படி, பொதுமக்களில் எல்லோரும், பகிரங்கமாக அரசாங்கத்தை விமரிசிக்கலாம், குறை சொல்லலாம். ஆனால், விமரிசனங்கள் சுனாமியாக அடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 1957 மே 1 முதல் ஜூன் 7 வரையிலான 37 நாட்களில் மட்டும், பத்து லட்சத்துக்கும் அதிகமான குறைப் பட்டியல்கள், வீதிகள் எங்கும் போஸ்டர்கள், மாணவர், பொதுமக்கள் ஊர்வலங்கள். தூங்கிக் கிடந்த சிங்கத்தை எழுப்பி விட்டுவிட்டோம், சீண்டிவிட்டோம் என்று மாவோ புரிந்துகொண்டார். அடுத்த சில மாதங்களில், நூறு மலர்கள் இயக்கம் பின்வாங்கப்பட்டது. கருத்து சுதந்தரத்தின் கதவுகள் சீனாவில் நிரந்தரமாக மூடப்பட்டன. இனிமேல், சீனாவும் உலகமும் பார்க்கப்போவது மாவோவின் சர்வாதிகார முகத்தை.
1958 – இல், மாவோ, மாபெரும் பாய்ச்சல் என்னும் தொழில் வளர்ச்சிக் கொள்கையை அமலாக்கினார். சீனா மக்கள் தொகை அதிகமான, ஏழை நாடு. மூலதனம் குறைவான, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில்களை உருவாக்கவேண்டும் என்பது பெரும் பாய்ச்சல் கொள்கையின் நோக்கம்.
கனரக இயந்திரங்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. சிறு சிறு எஃகுத் தொழிற்சாலைகளும், குடிசைத் தொழில்களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். அவசரக் கோலமாகவும், அரசியலை முன்னணியாக்கியும் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பலன்? தொழில்கள் தோல்வி கண்டன. விவசாயம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது, பெரும் பஞ்சம் வந்தது. மூன்றே வருடங்களில் அரசாங்கம் பெரும் பாய்ச்சல் கொள்கையைப் பின் வாங்கியது.
மா சே துங்கின் இன்னோரு சீர்திருத்தம் பண்பாட்டுப் புரட்சி. பழைய உலகை அழிப்போம், புதிய உலகை உருவாக்குவோம் என்பது இதன் கோஷம். உண்மையில், தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களைத் தீர்த்துக்கட்ட மாவோ போட்ட திட்டம் இது. ஏழு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியிலேயே, மாவோவுக்கு எதிர்ப்பு தோன்றியது. பிரதமராக இருந்த சூ என் லாய் வலதுசாரி நிலையை எடுத்தார். முதலாளித்துவம் இணைந்த பொதுவுடமைத் தத்துவம், அமெரிக்காவோடு உறவு, மக்களுக்கு கூடுதல் கருத்துச் சுதந்தரம் ஆகியவற்றை இவர் உயர்த்திப் பிடித்தார்.உதவிப் பிரதமர் டெங் சியோ பிங், சூ என் லாய்க்கு பக்கபலமாக நின்றார்.
ஜனவரி 1976. சூ என் லாய் மரணமடைந்தார். மாவோ அரசு அவர் மறைவுக்குச் சம்பிரதாய அஞ்சலி மட்டும் செலுத்தியது. தக்க அரசாங்க மரியாதைகளை மறுத்தது. மரபுப்படி, டெங் பிரதமராகவேண்டும். பதவி தரவில்லை. அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். கொந்தளித்த மக்கள் போராட்டங்கள் அடக்கப்பட்டன.
எட்டே மாதங்களில் கதை தலைகீழாக மாறியது. செப்டெம்பர் மாதம் மாவோ மரணடைந்தார். மக்கள் ஆதரவு டெங் பின்னால் திரண்டது. ஆனால் டெங், அதிகார பீடங்களான நாட்டுத் தலைமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிய எந்தப் பதவிகளையும் ஏற்கவில்லை. தன் ஆதரவாளர்களை அந்தப் பதவிகளில் அமர வைத்தார். திரைக்குப் பின்னால், அத்தனை முக்கிய முடிவுகளையும் எடுத்தவர் டெங்தான் என்பது உலகறிந்த உண்மை. டெங், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைக் கைவிட்டு சுதந்தரமான பொருளாதார, தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.
கட்சியின் பழமைவாதிகளோடு போராடிக்கொண்டே, சீர்திருத்தங்கள் கொண்டுவந்துகொண்டிருந்த டெங், விரைவில் இருதலைக் கொள்ளி எறும்பானார். மேற்கத்திய (குறிப்பாக அமெரிக்க) தாக்கத்தால், வகை வகையான பொருட்கள் சீனச் சந்தைகளுக்கு வரத் தொடங்கின. இவற்றின் சுவை கண்ட இளைஞர்கள், இன்னும் இன்னும் என்று அவற்றுக்கு ஏங்கத் தொடங்கினார்கள். முதலளித்துவப் பாதையில் சீனா அதிவேகமாகப் பயணிக்கவேண்டும் என்பது இவர்கள் ஆதங்கம்.
1989ம் ஆண் மாணவர் அணி திரண்டது. தியானென்மென் சதுக்கம் என்னும் பீகிங் நகரின் மத்திய பகுதியில் பத்து லட்சம் மாணவர்களும், பொதுமக்களும் அணி திரண்டனர். சீனா ஜனநாயக நாடாகவேண்டும், தொழில், வியாபாரம் ஆகியவற்றை அரசின் பிடியிலிருந்து விடுவித்துத் தாராளமயமாக்கவேண்டும் என்பவை இவர்கள் கோரிக்கைகள். டெங் அரசு, அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராணுவமும், டாங்கிகளும் களத்தில் இறக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் தள்ளப்பட்டார்கள். உலகத் தலைவர்களும், ஊடகங்களும் ஒருமித்த குரலோடு டெங் ஆட்சியைக் கண்டித்தார்கள். இந்தக் கரும்புள்ளியோடு, உலகப் பார்வை வெளிச்சத்திலிருந்து டெங் ஒதுங்கிக்கொண்டார்.
அதிவேகப் பொருளாதார வளர்ச்சி வராவிட்டால், மக்கள் விரக்தி எல்லை தாண்டும் என்பதை உணர்ந்த அரசினர் உலகப் பொருளாதார நீரோட்டத்தில் கலக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டார்கள். 1991ல் அமெரிக்காவின் பிரபலத் துரித உணவகமான மெக்டொனால்ட்ஸ் பெய்ஜிங் நகரில் கடை விரித்தது. இது சாதாரணக் கடைத் திறப்பல்ல, அமெரிக்க நாகரிகத்தை சீனா இருகரம் நீட்டி வரவேற்றதன் பிரதிபலிப்பு.
2001ல் சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினரானது. சீனப் பொருட்கள் இன்று உலகச் சந்தைகளில் வந்து குவிகின்றன. குறைந்த உற்பத்திச் செலவில் பொருள்களைத் தயாரிப்பதால், ஆப்பிள், ரீபாக், டெல் கம்ப்யூட்டர், ஜெனரல் எலெக்ட்ரிக், மாட்டெல் பொம்மைகள் போன்ற அமெரிக்கக் கம்பெனிகள் தங்கள் உற்பத்தியைச் சீனாவுக்கு மாற்றிவிட்டார்கள். இதனால், சீனப் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்தது. இன்னும் பத்தாண்டுகளில், சீனா மாபெரும் பொருளாதார வல்லரசாகும் என்று மேதைகள் கணிக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், பொருளாதார வளர்ச்சி, ஏழை, பணக்காரர் என்னும் இரு வர்க்கங்களை உருவாக்கிவருகிறது. அவர்களுக்கு இடையிலான இடைவெளி விரிவாகி வருகிறது. மெக்டொனால்ட் பர்கர், கேஎஃப்சி சிக்கன், ஸ்டார்பக்ஸ் காபி, கோகோ கோலா, ஐ ஃபோன் போன்ற அமெரிக்க நாகரிக அடையாளங்களைத் தேடி சீன இளைய தலைமுறையினர் அலையத் தொடங்கிவிட்டனர். கி.மு. 5000 தொடங்கி, 7000 வருடங்களுக்கும் அதிகமாக உலகத்துக்கே பெருமை சேர்க்கும் பாரம்பரியப் பெருமைகொண்ட சீன நாகரிகம், அமெரிக்கக் கலாசார சுனாமிக்கு பலியாகிவிடுமோ? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
தொடரும்…