Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 14

பண்டைய நாகரிகங்கள் – 14

the-forbidden-city-009-b

9. கி. பி. 907 முதல் கி.பி. 1279 வரை –  ஸாங் வம்ச (Song Dynasty) ஆட்சிக் காலம்

டாங் வம்சாவளி சரிந்தபின், அடுத்த 54 ஆண்டுகளுக்குச் சீனாவில் உள்நாட்டுக் கலவரங்களும், நிலையில்லா ஆட்சியும்தான். நாடு பத்துப் பகுதிகளாகச் சிதறுண்டது. ஐந்து வம்சாவளிகள் ஆண்டன. மறுபடியும் கி.பி. 960 – இல் தான் நிலைத்தன்மை வந்தது. அப்போது ஆட்சிக்கு வந்தது ஸாங் வம்சம். கி.பி. 1279 வரை ஆட்சி செய்த ஸாங் பரம்பரையினர் சீனாவைப் பாரம்பரியத்திலிருந்து நவீன காலத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

எல்லா நாகரிகங்களிலுமே, ஆரம்ப காலங்களில் விவசாயம்தான் ஒரே தொழிலாக இருக்கும். இயற்கையை நம்பிப் பிழைக்கும் இவர்கள் பொருளாதாரம் மழையின் வரவுக்கு ஏற்ப, ஏறும், இறங்கும். கையில் பணம் வைத்திருப்பவர்கள் இவர்களுக்குக் கடன் கொடுப்பார்கள், காலப்போக்கில் நிலங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்வார்கள். இத்தோடு, வியாபாரம் விதை விடத்தொடங்கும், வணிகர்களும், இடைத் தரகர்களும், விவசாயி உழைப்பில் பணம் பார்ப்பார்கள். பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என மூன்று பிரிவுகள் சமுதாயத்தில் உருவாகும்,

கி.பி. 960 காலகட்டத்தில், சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினரையும்விட மிக அதிகமானது. கவிதை, கட்டடக் கலை ஆகியவற்றில் இவர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்தத் துறைகள் அமோக வளர்ச்சி கண்டன.

தொழில்களைப் பொறுத்தவரை, இரும்புத் தயாரிப்பில் முக்கிய அறிவியல் மாற்றம் வந்தது. கி.பி. 1000 வரை, இரும்பை உருக்க, சாதாரணக் கரி பயன்பட்டது. ஆயிரம் ஆயிரம் மரங்களை எரித்து, சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து, இந்தக் கரி எடுக்கவேண்டும். சீன அறிவியல் அறிஞர்கள், Bituminous Coke என்னும் நிலக்கரியைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்கள். சாதாரணக் கரியைவிட அதிக வெப்பசக்திகொண்ட இந்த நிலக்கரி, தொழில் புரட்சியை ஏற்படுத்தியது.

கி.பி. 1010. சக்கரவர்த்தி ஜென்ஜாங் (Zhenzong), சீனாவின் தேசப்படப் புத்தகம் (Atlas) வெளியிட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், விலாவாரியாக விவரிக்கும் இந்தப் படப் புத்தகம், 39 ஆண்டுகள் பல்வேறு துறை அறிஞர்களின் கடுமையான உழைப்பில் உருவான 1,556 அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்ட அறிவுக் களஞ்சியம்.

மருத்துவ உலகின் மாபெரும் படைப்பான  Bencao Tujing என்னும் நூல் கி.பி. 1070-ல் வெளியிடப்பட்டது. தாவரவியல், விலங்கியல், கனிப்பொருள் இயல் (மினராலஜி) ஆகிய பல்வேறு துறைகளின் அறிவைச் சாறாகப் பிழிந்து, சிகிச்சைக்கான மருந்துகளாக்கும் சீன மேஜிக் பிரமிக்கவைக்கும் மந்திரவாதம்!

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது நம்மைத் திகைக்கவைக்கும் இன்னொரு வியப்பு. ஷென் குவோ (Shen Kuo) என்னும் உடல் முழுக்க மூளைகொண்ட சகலகலாவல்லவர் களத்துக்கு வருகிறார். இவருடைய சில பரிமாணங்கள் என்னென்ன தெரியுமா? நிதி அமைச்சர், கணித மேதை, வானியல் அறிஞர், தாவரவியல் நிபுணர், விலங்கியல் வித்தகர், மருத்துவர், அகழ்வாராய்ச்சியாளர், ராணுவத் தளபதி, கல்வியாளர், கண்டுபிடிப்பாளர்……கட்டுரைகள் மூலம் தன் அறிவைப் பொதுமக்களோடு இவர் பகிர்ந்துகொண்டார். கால்க்குலஸ், திரிகோணமிதி போன்ற நுணுக்கமான கணிதத் துறைகளில் இவர் காட்டும் புலமை நம்பமுடியாத திறமை!

இத்தனை சாதனைகள் கொண்ட ஸாங் ஆட்சிக்கு ஒரு கறுப்புப் புள்ளி உண்டு.  நீண்ட நெடுங்காலமாகப்  பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக வாழந்தார்கள். அதை ஸாங் தகர்த்தார்கள். விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் சீனாவில் இருந்தது. அரசாங்கம் இதைத் தடை செய்தது. கோவில்களுக்கும், குறிப்பிட்ட சில திருவிழாக்களையும் தவிர, வேறு எதற்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சட்டம் வந்தது.

ஸாங் சக்கரவர்த்திகள் ஏனோ, ராணுவ பலத்தைப் பெருக்குவதில் கவனம் காட்டவில்லை. அண்டை நாடான மங்கோலியாவுக்குச் சீனாமேல் எபோதும் ஒரு கண் உண்டு. கி.பி. 1260 – ல் குப்ளாய் கான் (Kublai Khan) மங்கோலிய அரசரானார். கி.பி. 1265-ல் போர் தொடுத்து வந்த அவர், சீனப் படைகளைத் தோற்கடித்து, 146 ஸாங் கப்பல்களைச் சிறைப்பிடித்தார். தொடர்ந்தன பல யுத்தங்கள். கி.பி. 1279 – ல் ஸாங் ஆட்சி வீழ்ந்தது. குப்ளாய் கான் தலைமையில் யுவான் வம்ச ஆட்சி எழுந்தது.

10. கி. பி. 1279 முதல் கி.பி. 1368 வரை –  யுவான் வம்ச (Yuan Dynasty) ஆட்சிக் காலம்

அரியணை ஏறிய குப்ளாய் கானுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகள். தங்கள் நாட்டை ஜெயித்த அந்நியனைச் சீனர்கள் வெறுத்தார்கள். அதேசமயம், பிற மங்கோலியச் சிற்றரசர்களுக்கும் பொறாமை – தங்களுள் ஒருவனாக இருந்த சிற்றரசன் சீனச் சக்கரவர்த்தியாகிவிட்டானே என்று.  இவை அத்தனையையும், குப்ளாய்கான் இரும்புக்கரத்தால் சமாளித்தார். பீரங்கிகள், ராக்கெட்கள் போன்ற நவீனப் போர் ஆயுதங்கள் அவரிடம் இருந்தன. அவற்றைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். எதிரிகளைக் கட்டுக்குள் வைத்தார். 1274 – ல் முதலில் சீனாவின் வடக்குப் பகுதியையும், அடுத்துத் தெற்குப் பகுதியையும் ஆண்ட அரசர்களை வென்று, சீனாவை ஒருங்கிணைத்தார்.

சொந்த மண்ணிலேயே சீன மக்களை அடக்கி, மங்கோலியர் ஆண்ட கொடுமைக்காலம் இது. குப்ளாய்கான் நான்கு அடுக்கிலான சமூக அமைப்பை உருவாக்கினார்.  மங்கோலியரும், மத்திய ஆசிய மக்களும் முதல் இரண்டு அடுக்குகளிலும், வட சீன மக்கள் மூன்றாவதிலும், தென் சீனாவினர் கடைசியான நான்காம் படிநிலையிலும் வைக்கப்பட்டனர். முதல் அடுக்கில் இருந்த மங்கோலியர்களுக்கு அரசு நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் முக்கியப் பதவிகள் சீனர்களுக்கு மறுக்கப்பட்டன, வெளி நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் பயனடைந்தவர் மார்க்கோ போலோ. இத்தாலியின் வெனிஸ் நகர வணிகரான இவர் கி.பி. 1274 – வாக்கில் குப்ளாய்கான் அரசவைக்கு வந்தார். சக்கரவர்த்திக்கு மார்க்கோ போலோவை மிகவும் பிடித்துவிட்டது. சீனாவிலேயே பதினேழு ஆண்டுகள் தங்கவைத்தார், உயர் பதவிகள் கொடுத்தார். தொலைதூர நாடுகளுக்குச் சீனாவின் பிரதிநிதியாக அனுப்பிவைத்தார்.

குப்ளாய்கானின் ஒரே குறிக்கோள் சீனாவைச் சுரண்டுவதிலேயே இருந்தது.  வெளிநாட்டு, குறிப்பாக மங்கோலிய வியாபாரிகளுக்குச் சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கினார். சீனச் செல்வம் அந்நிய மண்களுக்குப் பறந்தது. ஆட்சி நடத்தப் பணம் வேண்டுமே? வரிச் சுமை எகிறியது.

மக்களின் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. ஜூ யுவான்ஜாங் (Zhu Yuanzhang) என்னும் விவசாயி தலைமையில் மக்கள் திரண்டார்கள். மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜூ யுவான் ஜாங் (Zhu Yuanzhang) என்னும் மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தியானார். அவருடைய மிங் வம்ச ஆட்சி தொடங்கியது.

11. கி. பி. 1368 முதல் கி.பி. 1644 வரை –  மிங் வம்ச (Ming dynasty) ஆட்சிக் காலம்

1382-ல், சக்கரவர்த்தி, தனக்குப் பாதுகாப்பளிக்க, கறுப்புப் பூனைகள் போன்ற ஜினிவே என்னும் அமைப்பைத் தொடங்கினார். இவர்கள் விரைவிலேயே மன்னரின் ஐந்தாம் படை ஆனார்கள். அரசியல் எதிரிகள், பொது மக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளை நோட்டமிட ஆரம்பித்தார்கள். மக்கள் பயந்து வாழும் நிலை. அன்றைய அரசர் செயல் இன்றும் தொடர்கிறது. கம்யூனிஸ ஆட்சியிலும், தனி மனிதன் அரசின் கழுகுப் பார்வையின் கீழ்தான் வாழ்கிறான்.

மிங் ஆட்சியில் வந்த முக்கிய மாற்றம் – காலம் காலமாக, நாங்கிங் (Nanking) நகரம் சீன நாட்டின் தலைநகரமாக இருந்தது. மிங் சக்கரவர்த்திகள் பீக்கிங் (Beijing) நகருக்கு மாற்ற முடிவெடுத்தார்கள்.  அரண்மனை வளாகம் கட்டும் பணி 1406ல் தொடங்கியது.  பதினான்கு வருடக் கட்டுமானம். ராஜா வாழப்போகும் இடம் அல்லவா? இழைத்து இழைத்துக் கட்டினார்கள்.  980 கட்டடங்கள், 9000 அறைகள், 78 லட்சம் சதுர அடி. சுற்றிலும் அகழிகள், பிரம்மாண்ட அரண்மனைகள், அவற்றில் தங்க ஓடுகள் வேய்ந்த கூரை, உயர்ந்த மதில் சுவர்கள், நான்கு மூலைகளிலும் கோபுரங்கள். இந்த வளாகத்துக்குள் சாதாரண மக்கள் யாரும் நுழையக்கூடாது. இதனால், இந்த வளாகத்துக்குத் தடை செய்யப்பட்ட நகரம் (Forbidden State) என்றே பெயர் வைத்தார்கள்.

1420ல் சக்கரவர்த்திகள் இங்கே குடியேறினார்கள். பீக்கிங் சீனத் தலைநகரமானது. 1911 வரை சக்கரவர்த்திகள் இந்த வளாகத்தில் வசித்தார்கள். 1925-ல் வளாகம், அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தடைகள் உடைந்தன. சாமானியன் உரிமையோடு இன்று உள்ளே நுழைகிறான்.   மிங் ஆட்சியில் பதினான்கு சக்கரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், மிங் ஆட்சியை நினைக்கும்போது,இன்று நம் நினைவுக்கு வருபவர் இவர்களில் யாரமில்லை, தன் அறிவாலும், உழைப்பாலும் சிகரம் தொட்ட  ஜெங் ஹி என்னும் சாமானியர்தான்.

பிற நாடுகளோடு நட்பை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், கிணற்றுத் தவளையாக இருந்த சீனா, தன் சுவர்களைத் தாண்டி வெளியுலகத்தைப் பார்க்கத் தொடங்கியது. நட்புக் கரங்களை மெள்ள மெள்ள அந்நியருக்கு நீட்டியது.  சீனாவின் நட்புத் தூதராகச் சக்கரவர்த்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெங் ஹி (Zheng He).  இவர் ஒரு திருநங்கை. அன்றைய சீனாவில். ஏராளமான திருநங்கையர் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். அவர்களுள், மிக உயர்ந்த பதவியான கப்பற்படைத் தளபதி பதவியைத் தன் முப்பத்தைந்தாவது வயதிலேயே எட்டினார் இவர். ஹியின் திறமையில் வைத்த முழு நம்பிக்கையால்தான், சக்கரவர்த்தி நாட்டின் நட்புத் தூதராக இவரை நியமித்தார்.

ஜெங் ஹி மகா சாமர்த்தியசாலி. ஆகவே, அவருடைய பயணங்கள் வெறும் நட்புப் பயணங்களாக மட்டும் இருக்கவில்லை. சீனாவின் வணிகத்தை வளர்க்கவும், சீனாவின் பலத்தை அண்டை நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் அவர் பயணங்களைப் பயன்படுத்திக்கொண்டார். 1405 தொடங்கி 1432 வரையிலான 27 வருடங்களில், ஜெங் ஹே ஏழு கடல் பயணங்கள் செய்தார். இவரோடு 317 கப்பல்களும், 27,000 ஆட்களும் பயணித்தார்கள். இவற்றுள் பல, சீனாவின் கட்டுமானத் திறமையைப் பறைசாற்றும் 400 அடி நீள பிரம்மாண்டக் கப்பல்கள்!

ஜெங் ஹி முப்பது ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தப் பட்டியலில், இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, யேமன், சவுதி அரேபியா,  சோமாலியா, கென்யா போன்ற நாடுகள் அடக்கம்.  இந்த உலகம் சுற்றும் வாலிபர் கப்பல்கள் நிறைய, சீனாவின் பிரசித்தி பெற்ற பட்டுத் துணிகளையும், பீங்கான் கலைப் பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். சீனச் சக்கரவர்த்தியின் பரிசுகளாக அவற்றை உள்ளூர் ராஜாக்களுக்குக் கொடுப்பார். அவர்கள் மறு மரியாதையாக, நகைகள், மர சாமான்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைச் சீனச் சக்கரவர்த்திக்கு  அன்புப் பரிசுகளாகக் கொடுப்பார்கள். நம் நாட்டு வங்காள அரசர் எல்லோரையும் மிஞ்சினார், வித்தியாசப் பரிசு கொடுத்தார். அவர் தந்த பரிசு என்ன தெரியுமா? கென்ய நாட்டிலிருந்து ஆசை ஆசையாக அவர் இறக்குமதி செய்துவைத்திருந்த ஒட்டகச் சிவிங்கி!

ஜெங் ஹி தென் இந்தியாவில் கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு இடங்களுக்கு வந்தார். நல்ல மிளகு, கிராம்பு, ஏலம், லவங்கம் போன்ற வாசனைத் திரவியங்கள் சீனர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. இவைதாம் அவரைக் கேரளத்துக்கு ஈர்த்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு ஊர்களும் கொச்சி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள். கொச்சி மன்னர் ராஜ உபசாரம் தந்தார். ஜெங் ஹியின் கப்பல்கள் கொச்சித் துறைமுகத்தில் நங்கூரம் தட்டியவுடன், தாரை, தப்பட்டை, நாதஸ்வரம், செண்டை மேளம், நடனக் கலைஞர்கள் ஆட்டம் என அட்டகாச வரவேற்பு. ஜெங் ஹே சீனச் சக்கரவர்த்தி சார்பாகப் பட்டு ஆடைகள், பீங்கான் கலைப் பொருட்கள் தந்தார். பதிலாகக் கொச்சி ராஜா ஓர் அசத்தலான பரிசை அளித்தார்.

நாட்டின் தலை சிறந்த ஆச்சாரிகளிடம் 50 அவுன்ஸ் தங்கம் கொடுத்தார். பார்த்தோரைப் பிரமிக்கவைக்கும் அற்புதமான நகையை உருவாக்கச் சொன்னார். நகைக் கலைஞர்கள் தங்கத்தைத் தலைமுடிபோல் மெல்லிய இழைகளாக்கினார்கள். இந்த இழைகளில் விலை மதிப்பிடமுடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும் கோத்தார்கள். இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற நகை உருவானது. ஆண்கள், பெண்கள் இரு பாலரும் அணியலாம், ஒட்டியாணத்தைப் பார்த்த ஜெங் ஹி அசந்தே போனார். அதை உருவாக்கிய பல ஆசாரிகளையும் அவர் தன்னோடு சீனாவுக்கு அழைத்துப்போனார். இந்திய சீன உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

இந்தியாவைப்போல், சீனாவோடு நெருக்கம் வளர்ந்த இன்னொரு நாடு போர்ச்சுகல். 1517ல் இரு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சீனா வந்தார்கள். 1582 முதல் கிறிஸ்தவ மதம் வேரூன்றத் தொடங்கியது.

வெளிநாட்டு உறவுகளில் கவனம் காட்டிய சக்கரவர்த்திகள் உள்நாட்டை அத்தனை கவனமாகக் கண்காணிக்கவில்லையோ?   பல உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன. உள்நாட்டுப் புரட்சித் தலைவர்கள் சிலர், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசித்த மஞ்சூரியர்களின் உதவியை நாடினார்கள். ஆடுகள் சண்டையில் ஓநாய் நுழைந்தது. மஞ்சூரியா சீனாவை அடக்கியது. அரியணை ஏறியது கிங் வம்சாவளி.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top