Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 10

பண்டைய நாகரிகங்கள் – 10

ஆரம்பம்

chinazithermusicசீனா என்றவுடன் சில காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றும். தொங்குமீசை வைத்த சினிமா வில்லன்கள், இந்தி – சீனி பாய், பாய் என்று பண்டித நேருவுக்கு  சீனத் தலைவர்களோடு இருந்த ஒட்டுறவு, 1962ல் இந்தியாவோடு அவர்கள் நடத்திய போர், தொடர்கின்ற நட்பும், உரசலும் கலந்த வினோத உறவு, நம்பிக்கை வைக்க முடியாத தரத்தில், நம்பவே முடியாத விலையில் உலகச் சந்தையில் அவர்கள் கொண்டுவந்து கொட்டும் வகை வகையான பொருட்கள்.

கலைடாஸ்கோப் வைத்து கண்ணாடித் துண்டுகளைப் பார்ப்பதுபோல், இவை வண்ண மயமான பிம்பங்கள். ஆனால், சீனாவைப் பிரதிபலிக்கும் நிஜங்கள் அல்ல. இவை அனைத்தையும் தாண்டி, சீனா பிரம்மாண்டமானது, பாரம்பரியப் பெருமைகள் கொண்டது.

வீரியம் குறையாமல் தொடரும் பண்டைய நாகரிகங்கள் ஒரு சிலவே. அவற்றுள் முக்கியமானது சீன நாகரிகம். இதன் தொடக்கம் கி.மு. 5000, அதாவது சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால் என்று கருதப்படுகிறது. ஆனால், சீனாவில் மனித இனம் வாழத் தொடங்கி 14 லட்சம் வருடங்கள் ஆகிறது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது.

ஐந்தாம் அத்தியாயத்தில், கோர்டன் சைல்ட் என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் நகரக் கட்டமைப்பு, அரசாங்கம், தொலைதூர வாணிபம், கலை, எழுத்துக்கள், கணிதம்  போன்ற பத்து அம்சங்கள்தாம் நாகரிகத்தின் பத்து அளவுகோல்கள் என்று சொன்னார். மனித வாழ்க்கை 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தாலும், நாகரிக அம்சங்கள் சீனாவில் வளரத் தொடங்கியது கி.மு. 5000 பிறகுதான்.

நாகரிக ஆதாரங்கள்

சீனாவின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டறியப்பட்டன. இவற்றில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்; வெண்கலப் பொருட்கள், தந்தக் கைவினைப்பாடுகள், பச்சைக் கல் (Jade) நகைகள், எலும்பால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள், மண் பாண்டங்கள், இசைக் கருவிகள் போன்றவை.  இந்த அடிப்படையில்தான், நாகரிக முன்னேற்றங்களும், அவை நிகழ்ந்த காலங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

மஞ்சள் ஆறு

சீன நாகரிகத்தில் மஞ்சள் ஆறு தனியிடம் பெறுகிறது,  ஹூவாங் ஹே (Huang He) என்ற இந்த ஆறு திபெத் வழி பாய்ந்து வரும்போது, அங்குள்ள மணலால் மஞ்சள் நிறம் பெறுகிறது. இதுதான் பெயர்க் காரணம். இதன் பள்ளத்தாக்கு மிக வளமானது. எனவே சீன நாகரிகத் தொட்டில் என்று இப்பள்ளத்தாக்கைச் சொல்வார்கள். மஞ்சள் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஒடி சீனாவின் நெற்களஞ்சியம் எனப்படும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மூழ்கடிக்கும். இதனால் மஞ்சள் ஆறு சீனாவின் சோகம் (China’s Sorrow) என்றும் அழைக்கப்படும்.

சீன நாகரிகத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பதின்மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்,

1.    ஆரம்ப நாட்கள் (கி.மு. 20,000 முதல் – கி.மு. 5000 வரை)

அகழ்வாராய்ச்சிகளில் மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் கி.மு. 20,000 அல்லது கி.மு. 19,000 – த்தில்  உருவான பாத்திரங்கள் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.  இவை முழுக்க முழுக்கக் கைகளால் செயப்பட்ட களிமண் பாண்டங்கள்.

கி.மு. 7600 வாக்கில், வீடுகளில் மிருகங்கள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. பன்றிகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.மு. 6000 வாக்கில்  நாய்களும் கோழிகளும் வீட்டுப் பிராணிகளாக இருந்தன.

கி.மு. 7500ல் விவசாயம் தொடங்கிவிட்டது. திணை (Millet) தான் முதற் பயிர். நெல் சாகுபடி பிறகு வந்தது.

2.    கி. மு. 5000 முதல் கி. மு. 1800 வரை  – புதிய கற்காலம் (Neolithic Age)

ஆரம்ப நாட்களில், ஆதிவாசிகள் தனிமரங்களாகத்தான் வாழ்ந்தார்கள். கி.மு. 5000 ல் திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பாதுகாப்பும் குடும்பத்தினரின் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றது. வீடுகள் கட்டினார்கள், சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமூக வாழ்க்கை தொடங்கியது.

திணை, நெல் போன்ற பயிர் நாற்றுக்களை வரிசையாக நட்டால் அவை சிறப்பாக வளரும் என்று மேலை நாட்டு ஆராய்சியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டறிந்தார்கள். ஆனால், கி. மு 5000 – த்தில் சீனர்கள் இந்த முறையைப் பின்பற்றினார்கள்.

விவசாயத்தில் ஆண் பெண் ஆகியோரின் மனித சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உடல் உழைப்பை எப்படிக் குறைக்கலாம் என்று சிந்தித்தார்கள். மாடுகளை வீட்டில் வளர்த்தார்கள். விவசாயத்துக்கும் பால் தரவும் இவை உதவின. அடுத்த கட்டமாக, விவசாய உபகரணங்கள் தயாரித்தார்கள்.  உலோகங்களை அவர்கள் அறியாத காலம். எனவே, அன்றைய ஆயுதங்கள் அத்தனையும் செய்யப்பட்டது கற்களால்.

தொடக்கத்தில், இலை, தழைகளும், மரப் பட்டைகளுமே, ஆண் பெண்களின் ஆடையாக இருந்தது. துணையாளின் அழகுக்கு அழகூட்ட என்ன செய்யலாம்? தேடியபோது பருத்தி நூல் கண்ணில் பட்டது, கைகளில் கிடைத்தது. காதல் பெண்கள் கடைக்கண் பார்வை நெசவுத் தொழிலுக்கு அச்சாரம் போட்டது.  கி.மு. 3630 – இல் சீனப் பெருமகன் பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் கற்றுக்கொண்டான். காலம் காலமாக சீனாவின் முக்கிய தொழிலாகப்போகும் பட்டுத் தொழில் பிறந்து ஆழமாக வேரூன்றியது.

கி.மு. 5000 முதல், கி.மு. 1800 வரையிலான 3200 ஆண்டுகளில், பல முன்னேற்றங்கள்.  தனிமரங்களாக வாழ்ந்த மனிதர்கள் குடும்ப வாழ்வு தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பங்களாக வசித்தார்கள். சமூக வாழ்க்கை முறை பரவலாகத் தொடங்கியது. குடியிருப்புகளின் தொகுப்புகள் கிராமங்கள், ஊர் எனப் பரிணாம வளர்ச்சி கண்டன. முதலில், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற மாதிரி,  கைகளில் அதிகாரம் இருந்தவர்கள் எல்லோருமே தலைவர்கள் ஆனார்கள். ஆனால், மக்கள் தொகை பெருகப் பெருக, இது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது புரிந்தது. அவர்களாகவே, தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் தலைவன் தனக்கு உதவியாளர்களை அமர்த்திக்கொண்டான். அரசாங்கம், அதிகாரிகள் ஆகிய கட்டமைப்பு தொடங்கியது.

அதிகாரத்தைச் சுவைத்த தலைவன், பதவியைத் தானும் தன் குடும்பமும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். காய்களை நகர்த்தினான். தலைவன் அரசனானான். இவர்கள் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu Xi) என்பவர் முதல் மன்னரானார். அடுத்து,  பதின்மூன்று சக்கரவர்த்திகள் தொடர்ந்தார்கள். இவர்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை: இதிகாசங்களை மட்டுமே நம்பவேண்டிய நிலை.

அறிவியல் முன்னேற்றமும் அட்டகாசமானது. கி.மு. 2500 – க்கு முன்னாலேயே மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சீனர்களின் தனித்துவமான அக்யுபங்ச்சர்.  உடலின் பிரதான 12 இடங்களில் தோலிலும், தோலுக்கு அடியிலுள்ள திசுக்களிலும் ஊசிகள் சொருகுவார்கள்.  இதனால், நோய்த் தடுப்பு தரும் இயற்கைச் சுரப்பிகள் தூண்டிவிடப்படும் என்பது அடிப்படைக் கருத்து. உடல் அமைப்பு, நோய்கள் வரும் காரணங்கள், தடுப்பு முறைகள் ஆகியவை பற்றிய ஆழமான அறிவு இருந்தால்தானே இது சாத்தியம்? சீன டாக்டர்களே, உங்களுக்கு ஒரு சல்யூட்.

கி.மு. 2400 – த்திலேயே, வானியல் பற்றிய அறிவு இருந்தது. பல ஆய்வுக் கூடங்கள் இருந்தன.

3.    கி. மு 1600 முதல் கி. மு 1046 வரை – ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி

கி.மு. 1600 ல், டா யி (Da Yi ) என்னும் மன்னர், சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பாகங்களில் இருந்த பெரும்பாலான குட்டி ராஜாக்களைப் போரில் வென்றார். தெற்குப் பகுதி தவிர்த்த மிச்சச் சீனாவின் பெரும்பகுதி டா யி ஆட்சியின் கீழ் வந்தது. இவர் வம்சாவளியில் தொடர்ந்து 32 அரசர்கள் சீனாவை ஆண்டனர். ஷாங் என்றால் உயர்ந்த என்று பொருள். அந்த அடிப்படையில், ஷாங் என்னும் பெயர் வைக்கப்பட்டது. ஷாங் வம்சத்தில் மொத்தம் 33 மன்னர்கள். அன்றைய சீனப் பாரம்பரியப்படி, மன்னர் மரணமடைந்தால், அரியணை ஏறுவது அவர் மகனல்ல: அவருடைய அண்ணன் அல்லது தம்பி: இவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், சகோதரர்களின் மகன்கள் தலையில் கிரீடம் ஏறும்.
ஷாங் வம்ச மன்னர்கள் நல்லாட்சி நடத்தினார்கள். அவர்கள் தலைமையில் சீனா மாபெரும் முன்னேற்றங்கள் கண்டது. அந்தப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சில:

  • மண்பாண்டங்கள் பரவலாகப் பயன்பட்டன. இந்தப் பாத்திரங்களைத் தயாரிக்கத் திகிரி (Potter’s Wheel) பயன்படுத்தப்பட்டது.
  • வெண்கலம் தயாரிக்கும் கலை அன்றைய சீனர்களுக்குத் தெரிந்திருந்தது. வெண்கலப் பாத்திரங்களும், ஆயுதங்களும் புழக்கத்தில் இருந்தன.
  • கி.மு. 1500 – இல் எழுத்து வடிவ மொழி தொடங்கியது. ஆரம்பத்தில் ஆமை ஓடுகளில் எழுதினார்கள். பின்னாளில், களிமண் பாத்திரங்கள், மிருக எலும்புகள், கற்கள்,  வெண்கலப் பாளங்கள்,  பட்டுத் துணி ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். இவை அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
  • தசமக் கணித முறை (Decimal Arithmetic System) கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டல், கழித்தல் கணக்குகளுக்குக் குச்சிகள், எலும்புகள், மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.
  • வர்ணாசிரம முறை இருந்தது. அரசரும், பிரபுக்களும் உயர்ந்த ஜாதி: அடுத்து, மத குருக்கள், போர் வீரர்கள், கை வினைஞர்கள், விவசாயிகள் எனத் தர வரிசை. அடித்தட்டில் அடிமைகள்.
  • நகரங்களைச் சுற்றி கோட்டைகள் இருந்தன. அரசர், மத குருக்கள், போர் வீரர்கள்  பூசாரிகள் ஆகியோரும் அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே நகரத்துக்குள் வாழலாம்.  கை வினைஞர்கள், விவசாயிகள், அடிமைகள் நகரத்துக்கு வெளியேதான் வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
  • உயர் குடியினர்  தங்கள் போக்குவரத்துக்குக் குதிரைகள் இழுக்கும் தேர்களைப் பயன்படுத்தினார்கள்.
  • மக்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். மறுபிறவியை நம்பினார்கள். மதச் சடங்குகளில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. மனித பலியும் உண்டு.
  • விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மக்களின் முக்கியத் தொழில் வியாபாரம். ஆரம்ப காலங்களில் நத்தையின் மேலோடுகள் நாணயங்களாகப் பயன்பட்டன. பின்னாட்களில், வெண்கல நாணயங்கள் இந்த இடத்தைப் பிடித்தன.
  • வருடத்துக்கு 365 1/ 4 நாட்கள் என்று கண்டுபிடித்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.
  • ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த ஷாங் குலத்துக்குக் கோடரிக் காம்பாய் வந்தார், 33- ம் அரசர்  டி ஜின் (Di Xin). இவரும் நல்லபடியாகத்தான் ஆட்சியைத் தொடங்கினார். பெண் சபலம் கொண்ட இவர் சின்ன வீடு வைத்துக்கொண்டார். விரைவில் தலையணை மந்திரம் வேதமானது. தன் சொந்த மகனைக் கொன்றார். முக்கிய அமைச்சர்களைச் சித்திரவதை செய்து கழுவேற்றினார். மக்கள் கொதித்து எழுந்தார்கள். ஆட்சி கவிழ்ந்தது. டி ஜின் தற்கொலை செய்துகொண்டார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top