உலகத்தில் சில சங்கமங்கள் பிரமிக்கவைப்பவை, நம்ப முடியாதவை. ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் 1: 2 சதவிகிதத்தில் கலக்கும்போது, இன்னொரு வாயு பிறப்பதில்லை. இவை இரண்டின் வடிவங்களுக்கே தொடர்பில்லாத திரவ வடிவம் வருகிறது. அதே போல் இன்னொரு சங்கமம். சுமேரியர்களின் மத நம்பிக்கைகளும், கணித அறிவும் சங்கமித்தன. பிறந்தது ஒரு புத்தம் புதுத் துறை – வானியல்!
அடிக்கடி மழை பெய்தது. கண் பார்வையைப் பறித்துவிடுமோ என்று பயப்படவைக்கும் பளிச் மின்னல், காதுகளைச் செவிடாக்குமோ என மிரட்டும் இடி, பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடுவோமோ என அஞ்சவைக்கும் மழை. என்ன செய்வதென்றே தெரியாத மக்கள் மழை, இடி, மின்னல் போன்ற தங்களால் கட்டுப்படுத்தமுடியாத அத்தனை இயற்கை சக்திகளையும் கடவுள்கள் ஆக்கினார்கள். தீங்குகள் செய்யாதிருக்கும்படியும், தங்களைக் காப்பாற்றும்படியும் இவர்களிடம் வேண்டிக்கொண்டார்கள். இந்தக் கடவுகள்கள் காண முடியாத தூரத்தில், விண்வெளியில் இருப்பதாகக் கற்பனை செய்தார்கள். இந்தக் கற்பனை, கர்ண பரம்பரைக் கதைகளானது. ஒரு கட்டத்தில் மக்கள் மனங்களில் நம்பிக்கைகளாகவும் இவை உருமாறின.
கடவுள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆசை பலருக்கு வந்தது. பிரபஞ்சம், திசைகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று பல்வேறு கோணங்களில் தேடல் தொடங்கியது. இந்தத் தேடலில் தங்கள் கணித அறிவைக் கலந்தார்கள். இந்தச் சங்கமத்தில் வானியல் பிறந்தது. பௌர்ணமி, அமாவாசை, கிரகண தினங்கள், இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes), சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்களான உத்தராயணம், தட்சிணாயனம் (Solstices) ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்கள்.
வரலாற்றின் ஆரம்ப காலங்களில், இரவும், பகலும் சந்திரச் சுழற்சியால் வருகின்றன என்று நம்பினார்கள். இதனால், சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப்படையில், நாட்காட்டிகளை அமைத்தனர். அதில் 354 நாட்களும், 12 மாதங்களும் இருந்தன. இவற்றுக்குச் சந்திர காலண்டர்கள் * என்று பெயர்.
(* இன்று உலகம் முழுவதும் சூரிய காலண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. சந்திரக் காலண்டர்கள், சூரியக் காலண்டர்களாக மாறிய வளர்ச்சிக்குப் பின்னால், பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர்:
டாலமி (Ptolemy)
கி.பி. 110 – கி.பி. 170 வரை வாழ்ந்த கிரேக்க நாட்டு விண்ணியலாளர், கணித மேதை. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோணத்தில் பதிக்கப்பட்டிருப்பதாகவும், பகல், இரவு, மாதம் ஆகியவற்றை அளிக்கும் விதமாக இவை சுழல்வதாகவும் கூறினார். அடுத்த சுமார் 1500 ஆண்டுகளுக்கு, வானியலில் டாலமியின் கொள்கைதான் வேதம்.
நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus)
கி.பி. 1473 முதல் கி.பி. 1543 வரை வாழ்ந்த போலந்து நாட்டு வானியல் அறிவியலாளர். டாலமியின் கொள்கையிலிருந்து உலகத்தை மாற்றியவர். கிறிஸ்தவ மதப் பாதிரியாராக இருந்தவர். கணிதம், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். கோப்பர்நிக்க முறை என்று அழைக்கப்படும் இவருடைய கொள்கை சூரியமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, பூமி தனது அச்சில் தினமும் சுழல்கிறது. நிலையாக இருக்கும் சூரியனை ஆண்டுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. உலக வானியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், நாம் இன்றும் பின்பற்றுவதும், காப்பர்நிக்கஸ் போட்டுச் சென்றிருக்கும் ராஜபாட்டைதான்.
மருத்துவம்
சுமேரியர்கள் மருத்துவத் துறையில் கண்டிருந்த முன்னேற்றங்கள் பற்றி ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அஷூர்பானிப்பால் (Ashurbanipal) என்னும் மன்னர், மெசபடோமியாவின் ஒரு பகுதியான அஸிரியாவை (Assyria) கி.மு. 683 முதல் கி.மு. 627 வரை ஆட்சி செய்தார். இவர் அறிவுத் தேடல் கொண்டவர். தன் அரண்மனையில் பெரிய நூலகம் வைத்திருந்தார். இங்கே, 20,000 நூல்கள் வைத்திருந்தார். க்யூனிஃபார்ம் என்னும் உளி மொழியில் எழுதப்பட்ட களிமண் பாளங்கள் இவை.
எதிரிகள் அஸிரியா மீது போர் தொடுத்தார்கள். நூலகத்துக்குத் தீ வைத்தார்கள். ஓலைச் சுவடிகளாகவோ, காகிதமாகவோ இருந்திருந்தால், இந்த அறிவுப் பொக்கிஷம் முழுக்கச் சாம்பலாகியிருக்கும். மாறாக, நெருப்பில் சுடப்பட்ட இந்தப் பாளங்கள் ஓடுகளாயின. இருபதாயிரம் பாளங்களில், பல்லாயிரம் பாளங்கள் அகழ்வாராய்ச்சியில் ஓடுகளாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் 660 பாளங்கள் சுமேரியரின் மருத்துவ அறிவுக்கு அற்புத ஆதாரங்கள்.
சுமேரியரின் மருத்துவ அணுகுமுறையில் மூட நம்பிக்கைகளும் அறிவியலும் ஒன்றாகக் கலந்துள்ளன. உடலின் பாகங்கள் பற்றிய உடற்கூறு அமைப்பியல் (Anatomy) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால் தலைவலி, கழுத்து வலி, வயிற்று வலி, மூட்டு வலி ஆகிய உபாதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், இந்தச் சுகவீனங்கள் துர்தேவதைகளால் வருகின்றன என்று முடிவு கட்டினார்கள். தலைவலி, கழுத்துவலி, மூட்டு வலி போன்ற ஒவ்வொரு உபாதைக்கும் ஒவ்வொரு துர்தேவதை காரணம்.
அந்தந்த தேவதைக்குப் பரிகாரங்களும், பூசைகளும் நடத்தினார்கள். அதே சமயம், சடங்குகளோடு நிறுத்திக்கொள்ளாமல், செடிகள், பூக்கள் ஆகிய இயற்கைப் பொருட்களால் மருந்துகள் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கஷாயங்கள் வெறுமனே, நோயின் வெளிப்படை அடையாளங்களை நீக்கும் சிகிச்சைகளாக இல்லாமல், அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பவையாக இருந்தன.
உடல் காயங்கள் அடிக்கடி மக்கள் சந்தித்த பிரச்னை. இதற்கு, சில மருந்து செடிகளின் சாறுகளையும், உப்புகளையும் சேர்த்து, ஒருவிதப் புண் கட்டுத் துணியைச் (Bandage) சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். ரத்தக் காயங்களுக்கு மூன்று படிநிலை சிகிச்சையைக் கையாண்டார்கள். முதலில் அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவதாக மருந்து போடவேண்டும். மூன்றாவதாகக் கட்டுத் துணியால் காயத்தை மூடவேண்டும்.
மருத்துவர்கள் இரண்டு வகையினர். மாந்திரீகங்களால் சிகிச்சை அளிப்பவர்கள் மந்திரவாதிகள். கஷாயமும் களிம்புகளும் தரும் அறிவியல் அணுகுமுறை கொண்ட மருத்துவர்கள் இரண்டாம் வகையினர். இந்த இரண்டு முறைகளையும் மக்கள் பின்பற்றினார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அறுவை சிகிற்சைகளும் நடைமுறையில் இருந்தன. அதிலும், ஒரு களிமண் பாளம், மண்டையோட்டில் செய்யும் அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கிறது. கிருமி நாசினியாக அவர்கள் எதைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா? நல்லெண்ணெய்!
பொறியியல்
உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள், சக்கரங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சுமேரியர்கள் சொந்தக்காரர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது. இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை உருவாக்கினார்கள்.
நாகரிக மறைவு
கி.மு. 6000 முதல், அதாவது 8000 ஆண்டுகளுக்கு முன்பு கொடி கட்டிப் பறந்த நாகரிகம், கற்பனையே செய்யமுடியாத அளவு முன்னேற்றங்கள் கண்டிருந்த கலாசாரம் கி.மு. 600 வாக்கில் காணாமல் போனது. நமக்குக் கிடைத்திருக்கும் சொற்ப சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போதே இந்நாகரிகம் எவ்வளவு பிரமாண்டமாக அப்போது இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம். உண்மையில் சுமேரியர்களின் வாழ்க்கைமுறை இன்றைய நாடுகளின் கலாசாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.
சுமேரிய நாகரிகம் எப்படி மறைந்திருக்கும்? சுமேரிய நாகரிகத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. ஆரம்ப காலம் – கி.மு. 6000 முதல் கி.மு. 2600 வரை
2. வளர்ச்சிக் காலம் – கி.மு. 2600 முதல் கி.மு. 1750 வரை
3. சரிவு / மறைவு காலம் – கி.மு. 1750 முதல் கி.மு. 600 வரை
சுமேரியர்கள் உருவாக்கிய நாடு, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடு. ஒவ்வொரு நகரத்துக்குமிடையே கால்வாய்கள் இருந்தன. இந்தக் கால்வாய்கள் பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், மனோரீதியாகவும் மக்கள் மனங்களில் தூரத்தை ஏற்படுத்தின. நாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு மறைந்து, என் நகரம், உன் நகரம் என்னும் மனப்பாங்கு தோன்றியது. இந்த ஒட்டுறவின்மையின் அடுத்த கட்டம் மன வேறுபாடுகள், சச்சரவுகள், சண்டைகள். பெரும்பாலான சச்சரவுகளுக்கு மண்ணாசையும், அடுத்தவர் கால்வாய்களைத் தம்முடையதாக்கும் ஆசையும்தான் காரணம்.
நகரங்களுக்கு நடுவிலான முதல் போர் கி.மு. 3200 வாக்கில் நடந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள். ஆனால், கி.மு. 2500ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் போர்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாயின. நகரங்கள் அணி சேர்வதும், அணிகள் மாறுவதும் வாடிக்கையானது. பலசாலி நகரங்கள் வலிமை இல்லாதவர்களைத் தோற்கடித்தார்கள், தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். கி.மு. 2340 முதல் கி.மு. 2316 வரையிலான காலகட்டத்தில் கிஷ், உர், உருக், லகாஷ் ஆகிய நகரங்கள் போர் வெற்றிகளால் பரிணாம வளர்ச்சி பெற்று குட்டி சாம்ராஜ்ஜியங்களாயின.
இந்தக் குட்டி நகர சாம்ராஜ்ஜியங்களை இணைத்து ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தவர் ஹமுராபி மன்னர். அவருக்குப் பின் வந்த மன்னர்களுக்கு, சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காக்கும் திறமை இருக்கவில்லை. இதனால் உள்நாட்டுச் சண்டைகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும் ஏற்பட்டன. சுமேரியா சரியத் தொடங்கியது. கி.மு. 330ல் மாவீரன் அலெக்சாண்டர் மெசபடோமியாமீது போர் தொடுத்து வென்றார். சுமேரியர்களைக் கிரேக்க ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இன்னொரு பக்கம், சுமேரியாவை தாங்கிப் பிடித்து வந்த விவசாயமும் பருவ நிலை மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களாலும் நசிவடையத் தொடங்கின. இருநூறு ஆண்டுகளுக்கு வறட்சி தொடர்ந்தது. சுமேரியா காணாமல் போகத் தொடங்கியது.
நம் வாழ்க்கையைச் செழுமையாக்கிய சுமேரியர்களுக்கு மனமார நன்றி கூறி விடை பெறுவோம். நம் வணக்கத்துக்குரிய மூதாதையர்களாக சீனர்களைச் சந்திக்கத் தயாராவோம்.
தொடரும்…