1953 ஆம் ஆண்டு காலனி அரசாங்கம், சர் ஜியார்ஜ் ரெண்டல் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை உருவாக்கியது. இந்த குழு சிங்கப்பூரை முழுமையாக தன்னாட்சி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முனைந்தது. சிங்கப்பூர் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களை மறு பரிசீலனைச செய்தது.
சிங்கப்பூர் தன்னிறைவு பெற்று தனித்து இயங்கக்கூடிய நிலையில் இருந்தால் மற்றும் சிங்கப்பூர் ஒரு பெரிய நாட்டுடன் இணைந்து செயல்படும் அளவிற்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருந்தால் அதற்குத் தன்னாட்சி வழங்கலாம்.
அது முழுமையான தன்னாட்சியாக இல்லாமல் ஒரு பெரிய நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டும் இயங்கலாம். எனவே முழுமையான தன்னாட்சி வழங்காமல் உள் நாட்டுப் பாதுகாப்பு, சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை போன்றவற்றை பிரிட்டிஷ் அரசு தன் வசம் வைத்துக் கொண்டது. முப்பத்தியாறு உறுப்பினர்கள் கொண்ட சட்டசபை உருவாக்கப்படலாம் என்ற பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒரு அடுக்கு சட்டமன்றமாக இயங்கும் ஆட்சியில் 25 உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருப்பர். சட்ட திருத்தங்கள் ஆளுநர் அனுமதியுடன் நடைபெற வேண்டும். ஆளுநருக்கு அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவுகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் உண்டு.
இந்தப் பரிந்துரைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக் கொண்டு 1954 ஆம் ஆண்டு ரெண்டல் அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. இதன்படி சட்டசபைத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்த அனைவரையும் குடிமக்களாகக் கணக்கில் கொண்டு வாக்காளர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சென்ற முறை நடந்த அரைகுறைத் தேர்தல் போலில்லாமல் இந்தத் தேர்தலில் மூன்று லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்தப் புதிய சட்டசபைத் தேர்தல் மூலம் சிங்கப்பூருக்கு முழுமையாகச் சுதந்திரம் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தபோதிலும் கிடைத்த வாய்ப்பை அப்போது செயலாக இருந்த அரசியல் கட்சிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன என்றே சொல்லலாம்.
பாட்டாளிக் கட்சியிலிருந்த துடிப்பான இரு உறுப்பினர்கள், லிம் இயூ ஹோக், ஃபிரான்ஸிஸ் தாமஸ் இவர்களோடு அறிவுத் திறன் மிக்க வழக்கறிஞராக இருந்த டேவிட் மார்ஷல் என்பவர் ஆக மூவரும் இணைந்து புதியதாக ஒரு கட்சி பாட்டாளி முன்னணிக் கட்சி (labour front) என்ற பெயரில் 1954 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் உருவாக்கினர்.
டேவிட் மார்ஷல் சிங்கப்பூரில் சிறுபான்மையாக இருந்த யூத குலத்தைச் சேர்ந்தவர். லண்டனுக்குச் சென்று சட்டம் பயின்றார். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது தொண்டூழியப் படை வீரராக ஜப்பானியரை எதிர்த்து போரிட்டார். பின்னர் ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதியாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு ஹோக்கைடோ நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்தார். இவர் தலைமையில் உருவான புதிய பாட்டாளிக் கட்சி ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துகளைக் கொண்டது. சிங்கப்பூருக்கு உடனடியாக ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை வழங்கப்பட வேண்டும் என்பது இவரது முக்கிய தேர்தல் பிரசாரம் ஆயிற்று. சிங்கப்பூர் மலேயா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும். நாடு முழுவதும் அரசாங்கப் பணிகளில் மலேயாவைச் சேர்ந்தவர்களை நான்கு வருட கால அவகாசத்தில் நியமிக்க வேண்டும்.
ஏற்கனவே அரசாங்கப் பணியில் இருக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து உள்ளூர் மக்கள் அந்தப் பணிகளைச் செய்ய ஆயத்தமாக இந்தக் கால அவகாசம் தேவையாக இருந்தது. நெருக்கடி நிலை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சீனர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் பல மொழிகளுக்கும் அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
அப்போது விஷப்புழு போல் பரவிக் கொண்டிருந்த கம்யூனிஸக் கொள்கைகளுக்கு எதிரான ஆற்றல் மிகுந்த சமவுடைமைக் கொள்கைகளோடுக கூடிய அரசு அமைத்து அப்போது முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பொது மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்த்து பல கருத்துகளைத் துணிச்சலோடு தன் பிரச்சாரக் கூட்டங்களில் உரை ஆற்றினார்.
1954 ஆம் ஆண்டு விக்டோரியா மெமோரியல் அரங்கத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு பேர் குழுமியிருந்த கூட்டத்தில் மக்கள் செயல் கட்சி என்ற ஒரு புதிய கட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்சி இங்கிலாந்து சென்று மேல் படிப்புப் படித்துப் பட்டம் பெற்ற நடுத்தர வர்க்கத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
இவர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு படித்து 1950களில் படிப்பை முடித்தவர்கள். 25 வயது இளைஞரான லீ குவான் இயூ தலைவராகக் கொண்டு, பொதுச் செயலாளர்களாக தோ சின் சாய், கோ கெங் சுவீ, ராஜரத்தினம் போன்றோர் கட்சிப் பணிகளில் ஈடுபட மக்கள் செயல் கட்சி செயல்படத் தொடங்கியது. இவர்கள் அதிகப் படிப்பறிவு இல்லாத ஆங்கிலம் பேசத் தெரியாத ஏழை எளிய மக்களின் நலனில் பெரிதும் அக்கறை காட்டினர்.
திரு லீ 1952 ஆம் ஆண்டு முதல் பல தொழிலாளர் சங்கங்களுக்கு சட்ட ஆலோசகராக உதவி புரிந்தார். தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடுபவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார். 1954 ஆம் ஆண்டு தேசிய சேவையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பாதுகாப்புக்கு உதவி செய்தார். திரு லீ சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சீனக் குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த துடிப்பு மிக்க இளைஞர்.
ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியதும் சமூகத்தின் பல நிலைகளில் இருந்தவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தொழிலாளர் சங்கம் மற்றும் மாணவர்களுக்குப் பல உதவிகள் செய்ததால் ஆங்கில அரசுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள், கம்யூனிஸக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர்கள், கம்யூனிஸக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என பலவகைப்பட்ட மனிதர்களோடு தொடர்பு ஏற்பட்டது.
அன்று தொடங்கப்பட்ட மக்கள் செயல் கட்சியின் அறிமுகக் கூட்டத்தில் கம்யூனிஸக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் போன்றோர் வருகை அளித்திருந்தனர். அதில் குறிப்பிடத்தக்க இருவர் ஃபொங் சுவீசுவான், தேவன் நாயர். இவர்கள் இருவரும் மக்கள் செயல் கட்சியில் சேர்ந்தனர்.
மலேயாவைச் சேர்ந்த பிரபல அரசியல் தலைவரான துங்கு அப்துல் ரஹ்மான், உம்னோ (UMNO) கட்சித் தலைவர், சர் டான் செங் லாக், மலேய சீனக் கழகத்தின் தலைவர் போன்றோர் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். மக்கள் செயல் கட்சி அவசர கால சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிங்கப்பூர் மலேயாவுடன் இணைய வேண்டும், அனைவருக்கும் பொதுவாக மலேயக் குடியுரிமை வழங்க வேண்டும், மலேயாவைச் சேர்ந்த மக்கள் அரசாங்கப் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும், அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆனால் ஆங்கில ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதல் கடமை என திரு லீ குறிப்பிட்டார். ஆனால் இது நடைபெறுவதற்கு படித்த சீன மக்களும், கம்யூனிஸக் கட்சிகளால் வளர்க்கப்பட்ட தொழிலாளர் சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இது நிறைவேறும் என்பதையும் வலியுறுத்தினார்.
கம்யூனிஸக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டால் தான் நாம் விரும்பும் முழுமையான சுதந்திரம் பெறமுடியும் என்பதை உணர்ந்த மக்கள் செயல் கட்சி தங்களை கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் சொல்லவில்லை. கம்யூனிஸக் கொள்கைகளை எதிர்க்கிறோம் என்றும் சொல்லவில்லை, ஆனால் கம்யூனிஸத்தைச் சாராதவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டது. கம்யூனிஸக் கொள்கைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு இது நேரம் இல்லை. முழுமையானச் சுதந்திரம் பெற்ற பிறகு தங்களின் கருத்துகளை வெளியிடலாம். அதுவரை கம்யூனிஸக் கட்சிக்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
இவர்களைத் தவிர இன்னும் இரண்டு அரசியல் கட்சிகளும் தேர்தலில் நுழைந்தன. முற்போக்குக் கட்சி (progressive party) என்ற கட்சியின் தலைவர்கள் இங்கிலாந்து அரசிக்கு நெருக்கமான சீனர்கள் என்ற பெயர் பெற்றவர்கள். ஆங்கில அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்தனர். பழமைவாதத்தனமான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள்.
பொதுமக்களிடம் முக்கியமாக புதிதாக வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களிடம் எந்தவிதத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் பொதுமக்களுக்கு இவர்கள் மேல் எந்தவித நம்பிக்கையும் ஏற்படவில்லை. 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எழுபத்தி ஆறாயிரம் பேர் வாக்களித்தனர். 1955 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரும் வாக்களிக்க உரிமை பெற்றவர் என்ற முறையில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு செல்வச் செழிப்பு மிக்க சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த சீன வர்த்தகச் சபையின் உறுப்பினர்கள் இணந்து புதிய ஜனநாயகக் கட்சி என்ற ஒன்றைத் தோற்றுவித்தனர். இவர்கள் சீனக் கல்வியை மேம்படுத்தவது, சீன மொழியை ஆட்சி மொழியாக்குவது, சீனாவில் பிறந்த சீனர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்குவது போன்ற பல பிரசாரங்கள் சீனர்களைக் கவரும் விதத்தில் செய்தனர். இவை சிங்கப்பூர் சீனர்களைக் கவர்ந்தாலும் இவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் அப்போதைய சூழலுக்கு ஒத்து வரவில்லை.
ஏற்கனவே இருந்த முற்போக்குக் கட்சியின் கொள்கைகளைப் போலவே இவர்களின் கொள்கைகளும் இருந்ததால் மக்களின் மத்தியில் அதிக செல்வாக்கைப் பெறவில்லை.
இந்நிலையில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்!!! வெற்றி பெற்றது யார்?
தொடரும்…