ஜப்பானிய ராணுவ தளபதி யமஷிடா ஜோஹோர் சுல்தானின் அரண்மனையைத் தன் ராணுவத் தலைமைச் செயலகமாகக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து வரும் பீரங்கித் தாக்குதல்களைத் தவிர்த்தார். சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதி வழியாக ஜப்பானியப் படைகள் நுழைவதைப் போல் ஒரு நாடகம் நடத்தி பிரிட்டிஷ் படைகளை வட கிழக்குப் பகுதியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு இடம் மாறச் செய்தார்.
சாங்கிப் பகுதியில் ஜப்பானியர்களைத் தாக்கத் தயாராக இருந்த பிரிட்டிஷ் படைகளை ஏமாற்றி வட கிழக்குப் பகுதி வழியாக மலேயாவையும் சிங்கப்பூரையும் பிரிக்கும் குறுகிய கடல் பகுதியை ஜப்பானியர்கள் எளிதாக ரப்பர் மிதவைப் படகுகளில் கடந்தனர்.
வட கிழக்குப் பகுதிக்கு பிரிட்டிஷ் படையினர் வருவதற்குள் புக்கிட் தீமாப் பகுதியை ஜப்பானியப் படைகள் அடைந்து விட்டனர். புக்கிட் தீமா மலையின் வட கிழக்குப் பகுதியில் நகரின் முக்கிய நீர்த்தேக்கம் அமைந்திருந்தது. மேலும் புக்கிட் தீமாப் பகுதியில்தான் உணவுக் கிடங்கு, ராணுவக் கிடங்கு போன்றவை அமைந்திருந்தது. ராணுவ வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் பாதுகாக்கும் பொருட்டு பெருத்த சண்டை நடைபெற்றது.
பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு உதவியாக அங்கு இருந்த கிராமத்தில் இருந்த சீனர்கள் தங்கள் கையில் கிடைத்த அரிவாள், கத்தி, வேட்டையாடுவதற்கு வைத்திருந்த துப்பாக்கிகள் இவற்றைக் கொண்டு ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டனர். இந்தக் கடுமையான சண்டையில் பிரிட்டிஷ் படையினர் பின் வாங்கியதும் அவர்களுக்கு உதவியாக இருந்த சீனர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து முன்னேறியது ஜப்பானியப் படை.
1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 11 ஆம் தேதி புக்கிட் தீமாப் பகுதியைப் கைப்பற்றியதும் பாசிர் பாஞ்சாங் பகுதியை நோக்கி ஜப்பானியப் படை நகர்ந்தது. பாசிர் பாஞ்சாங் மலைக்குப் பக்கத்தில் இருக்கும் அலெக்சாந்திரா பகுதியில் பிரிட்டிஷ் ராணுவத் தளவாடங்கள் இருந்தன.
ராணுவ மருத்துவமனை அமைந்திருந்தது. மலாய் படையின் லெஃப்டினன்ட் அட்னன் பின் சைதி மிக வீரமாகப் போரிட்டார். பாசிர் பாஞ்சாங்கில் நடைபெற்ற இந்தச் சண்டையில் கடுமையாக காயமடைந்தவரை சிறைப்பிடித்து கத்தியால் குத்திக் கொன்றனர். ஜப்பானியப் படையினர் இந்திய சீக்கிய வீரர்கள் போல் வேடமணிந்து தாக்கியதை உடனே கண்டுபிடித்து தீவீரமாக அவர்கள் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தார் அட்னன்.
இரண்டு பக்கங்களிலும் பலத்த உயிர் சேதம். இறுதியில் ஜப்பானியர்கள் அலெக்ஸாந்திராப் பகுதியைக் கைப்பற்றி அலெக்ஸாந்திரா மருத்துவமனைக்குள் நுழைந்தனர். மருத்துவமனை என்று பாராமல் மனிதாபிமானமற்ற முறையில் அங்கிருந்த மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள், அறுவை சிகிச்சை மேசையிலிருந்த ராணுவ வீரர், பொதுமக்கள் என்று அனைவரையும் கொன்று குவித்தனர்.
1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 15 ஆம் தேதி சீனப் புத்தாண்டு மாலை. கோலாகலமாக கொண்டாடப்படும் புத்தாண்டின் தொடக்க நாளாக இல்லாமல் அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஃபோர்ட் கேனிங் கீழ்தளத்தில் இருந்த ரகசிய அறையில் ராணுவத் தளபதி பெர்சிவல் ஜப்பானியர்களை எதிர்த்து தாக்குதலைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
ஆனால் சுற்றியிருந்த மற்ற ராணுவ அதிகாரிகள் அந்தத் திட்டத்தை வரவேற்கவில்லை. அதிக எண்ணிக்கையில் உயிர்சேதம் ஏற்பட்டிருந்தது. உணவுப் பொருள்கள் தீர்ந்து போகும் நிலையில் இருந்தது. ராணுவத் தளவாடங்களும் பெரும்பாலும் ஜப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டு விட்டன. பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களாலும், அதனைத் தொடர்ந்த தோல்விகள், உயிர் இழப்பு போன்றவற்றாலும் களைத்துப் போயிருந்தனர்.
ஜப்பானியர் நகர மையத்திற்கு வந்து விட்டால் இன்னும் உக்கிரமான சண்டையும், அதனால் ஏற்படும் உயிர் இழப்பும் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்தனர். தோல்வி நிச்சயம் என்று தெரிந்து சண்டையிட்டு உயிர் இழப்பதற்குப் பதில் சரணடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஃபிப்ரவரி 15 ஆம் தேதி புக்கிட் தீமாப் பகுதியில் இருந்த ஃபோர்ட் தொழிற்சாலையில் ஜப்பானியர்களிடம் சரணடைந்தனர். பெர்சிவல் சற்று அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டார் என்றே சொல்லலாம். பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு ஏற்பட்ட அதே அளவு உயிர் சேதம் ஜப்பானியப் படைகளுக்கும் ஏற்பட்டது. ஜப்பானியப் படையினரிடமும் தேவையான அளவு ராணுவத் தளவாடங்கள் இல்லை. பிரிட்டிஷ் படைகள் விட்டுச் சென்ற போர்த் தளவாடங்கள் மட்டும் தான் அவர்களிடமும் இருந்தது. இதைப்பற்றி சரியாகத் தெரியாமல் பெர்சிவல், பிரிட்டிஷ் படைகளுடன் யமஷிடாவிடம் சரணடைந்தார். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது ஒரு கொடுங்கனவு!!!!
சண்டையிட்டு வெற்றி பெற்று எதிரிகளின் நாட்டைப் பிடித்த பிறகு என்ன கொடுமைகள் செய்ய முடியுமோ அத்தனையையும் ஜப்பானியர்கள் செய்தனர். இரண்டரை ஆண்டு சிங்கப்பூர் என்ற பெயர் மாற்றப்பட்டு ஷோனன்தோ (தெற்கின் ஒளி) என்று அழைக்கப்பட்டது.
ஷோனன்தோ என்பது தெற்கின் ஒளி என்ற பொருளில் பெயர் வைக்கப்படவில்லை. தெற்கு நகரம் அல்லது சூரிய ஒளி நகரம் என்ற அர்த்த்த்தில் பெயர் வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
ஜப்பானியர்களின் ஆட்சி ஷொனன்தோவில் தொடங்கியது. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து ஆசியர்களை விடுவிக்க தாங்கள் வந்ததாக ஜப்பானியர்கள் கூறினார்கள். ஆனால் பொதுமக்களுக்கு இது ஒரு விடுதலையாக இல்லை. எஜமான மாற்றமாகவே இருந்தது.
தொடரும்…