கோல்மென் பல கட்டடங்களை வடிவமைத்துக் கட்டுவதில் வெற்றி பெற்றதால் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைத்தன. பொதுக் கட்டடங்கள், வீடுகள், தேவாலயங்கள் போன்ற கட்டடங்கள் மட்டுமல்லாது பெரிய மனிதர்கள் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கவும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஊர் பெரிய மனிதர்கள், உயர் அரசு அதிகாரிகள், செல்வச் செழிப்பில் இருந்த வணிகர்கள் போன்றவர்கள் இறந்ததும் அவர்களுக்காக நினைவுச் சின்னம் கட்டுவது ஒரு பழக்கமாக இருந்தது.
முக்கியமாக கிறிஸ்துவர்கள், சீனர்கள், இஸ்லாமியர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நினைவுச் சின்னங்கள் இருந்தபடியால் இப்படிப்பட்ட நினைவு மண்டபங்கள் கட்டுவதிலும் நிபுணத்துவம் பெற்றார். ராஃபிள்ஸ் இங்கிலாந்தில் இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும் ராஃபிள்ஸ் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கினார்.
அதில் மலாய், சீனம்,லத்தீன் மற்றும் ஆங்கிலத்தில் ராஃபிள்ஸ் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் இந்த நினைவு மண்டபத்தைக் கட்ட முடியவில்லை. அதற்காகக் பெறப்பட்ட நிதி ராஃபிள்ஸ் கல்வி நிலையம் உருவாக்கச் செலவழிக்கப்பட்டது.
ஆனால் இன்றும் ஃபோர்ட் கேனிங்கில் அவர் கட்டிய இரண்டு நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அவருடைய புராதன செவ்வியல் அமைப்போடு குயுப்போலா என்று அழைக்கப்படும் வட்டவடிமான மேற்கூரையைத் தாங்கும் தூண்களுடன் அமைந்திருக்கிறது.
பதினைந்து வருடங்கள் சிங்கப்பூரில் வேலை செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப் படி 1841 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். இவருக்கும் மற்ற ஆங்கிலேய அலுவலர்கள் போல் சிங்கப்பூரின் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல் உடல் நலம் கெட்டது. இங்கிலாந்து சென்றால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் என்று இங்கிலாந்து திரும்பினார். இங்கிலாந்து சென்றதும் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் உடல் தேறினாலும் அவர் மனம் மீண்டும் எப்போது சிங்கப்பூர் செல்வோம் என்று ஏங்கியது. மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார். ஆனால் அதன் பிறகு மூன்று மாதங்கள் கூட அவர் உயிருடன் இல்லை. 1844 ஆம் ஆண்டு அவர் இறந்தார். இறக்கும்போது அவருக்கு நாற்பதியெட்டு வயது தான் ஆகியிருந்தது.
எண் 3 கோல்மென் சாலையில் அவருடைய மாளிகை இருந்தது. கோல்மென் மாளிகை 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடிக்கப்பட்டு பெனின்சுலர் ஹோட்டல் கட்டப்பட்டது. அவர் சிங்கப்பூரை விட்டு இங்கிலாந்து திரும்பும்போது வாடகைக்கு விட்டு விட்டுப் போனதால் மூன்று வருடங்கள் கழித்து அவர் தன் புது மனைவியான மரியா ஃபிரான்ஸிஸ் வெர்னோன் (Maria Frances Vernon) உடன் திரும்பி வரும்போது கோல்மென் சாலையில் 1 & 2 இலக்கத்தில் இருந்த மாளிகையில் குடியேறினார். அவர் 1844 ஆம் ஆண்டு இறந்ததும், அவருடைய கல்லறை, போக முடியாத அரசரின் மலை என்று அழைக்கப்பட்ட புக்கிட் லாராங்கன் மலையில் (Bukit Larangan) இருக்கிறது. இது தான் இன்றைய ஃபோர்ட் கேனிங். அவரது நினைவு மண்டபம் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் இன்றும் இருக்கிறது.
ஹில் ஸ்ட்ரீட்டையும் நியூ பிரிட்ஜ் சாலையையும் இணைக்கும் பாலம் அவரது பெயரைத் தாங்கி நிற்கும் கோல்மென் பாலம். இது முதலில் கேன்டனீஸ் மொழியில் யி மா ல கீ (yi ma lo khiu or “the bridge at the second road” ) இரண்டாவது சாலையில் இருக்கும் பாலம் என்று அழைக்கப்பட்டது. முதல் பாலம் நார்த் பிரிட்ஜ் ஏற்கெனவே இருந்ததால் இது இரண்டாவது பாலம் என்று அழைக்கப்பட்டது. கோல்மென் பாலம் முதலில் செங்கல்லினால் கட்டப்பட்டது. அப்போது இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு இந்தப் புதிய பாலம் வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. சிங்கப்பூர் ஆற்றைச் சுற்றி நகரம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. நார்த் பிரிட்ஜ் சாலையை ஒட்டி நகர வர்த்தக மையம் அமைந்திருந்தது. வாகனப்போக்குவரத்துகள் பெருகின. மக்கள் நடமாட்டமும் பெருகியது.
ஆற்றங்கரை துறைமுகத்திலிருந்து இறங்கும் வர்த்தகர்கள் உள்ளூர் மக்களைச் சந்திக்கும் இடமாக எப்போதும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அதனால் அந்தக் கூட்டத்தைச் சமாளிக்க கூடுதலாக ஒரு பாலம் இருக்க வேண்டும் என்று அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பான ஒரு முறையில் கட்டப்பட்ட பாலம் நியூ பிரிட்ஜ். புதியதாக பாலம் கட்டப்பட்டவுடன் அந்த ஓல்ட் பிரிட்ஜ் சாலை நியூ பிரிட்ஜ் சாலை ஆனது. ஒன்பது வளைவுகளைக் கொண்டு செங்கல்லினால் ஆன நியூ பிரிட்ஜ் கட்ட ஆன செலவு எட்டாயிரத்து அறுநூற்று தொண்ணூறு வெள்ளி. ($8,690). 1840 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த செங்கல் பாலம் இடிக்கப்பட்டு 1865 ஆம் ஆண்டு மரத்தால் கட்டப்பட்டது. இதற்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் வெள்ளி செலவானது.
இது சரியாக இல்லை என்று மறு வருடமே 1866 ஆம் ஆண்டு இரும்பால் செய்யப்பட்டப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கோல்மென் பாலம் என்று அழைக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் இருந்தது. அந்தக் காலத்தில் மெட்றாஸ் என்றாலே எல்.ஐ.சி கட்டடத்தைக் காட்டுவார்கள். பாம்பே என்றால் கேட் வே ஆஃப் இந்தியா என்ற கட்டடத்தைக் காட்டுவார்கள். அதுபோல் சிங்கப்பூர் என்றால் கோல்மென் பாலம், எல்கின் பாலம் (நார்த் பிரிட்ஜ் சாலையையும், சௌத் பிரிட்ஜ் சாலையையும் இணைக்கும் பாலம்), இவற்றைக் காட்டுவார்கள்.
நூறு ஆண்டுகள் இருந்த இரும்புப் பாலத்தை இடித்து விட்டு 1986 ஆம் ஆண்டு கான்கிரரீட்டால் கட்டப்பட்டப் பாலத்தை இன்று காணலாம். ஆனால் பழைய கதைகளுக்குச் சாட்சியாக அதில் இருக்கும் தெரு விளக்குகளும், கிராதிக் கம்பிகளும் புதிய பாலத்திலும் இருக்கின்றன.
கோல்மென் தான் தங்குவதற்காகக் கட்டிய மாளிகை அவர் ஆசை நாயகி டொகொயி மானுக் என்ற டச்சு யுரேஷியப் பெண்மணிக்காக என்று சொல்லப்படுகிறது. இந்த மாளிகையில் அவர்கள் வாழ்ந்து அவர்களுக்கு மெடா எலிஸபெத் கோல்மென் என்ற மகளும் பிறந்தாள். பிறகு அவருக்கு முறைப்படி திருமணம் நடந்து ஜியார்ஜ் வெர்னோன் என்ற மகனும் பிறந்தான்.
ஆர்மீனியன் தெருவையும் செயின்ட் ஆன்ட்ரூஸ் சாலையையும் இணைக்கும் இந்த கோல்மென் சாலை இன்று பெரிய வியாபார மையமாக இருக்கிறது.
கோல்மென்னுக்குப் பிறகு நில அளவையாளராகப் பணிபுரிந்த ஜே. டி. தாம்சன் கோல்மென் மீது பெரு மதிப்பு கொண்டவர். “சிங்கப்பூரைப் பார்ப்பவர்கள் அதன் அழகைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இதற்கு முக்கியக் காரணம் கோல்மென் உருவாக்கிய நகரத் திட்டமும், நகர வடிவமைப்பும்தான்” என்று கோல்மென்னின் திறமையைப் பாராட்டினார். சிங்கப்பூர் அசுர வளர்ச்சியில் பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்ட வண்ணம் இருக்கின்றன. ஆனால் கோல்மென் உருவாக்கிய பாரம்பரிய கட்டடங்களுக்கு ஈடாக எந்தக் கட்டடமும் இல்லை என்று இன்றும் அவர் புகழ் மங்காமல் இருக்கின்றது.
தொடரும்…