குலசேகரப்பட்டினமும் ‘தூக்குமேடை’யும்
1942 ஆகஸ்ட் புரட்சியை தலைமையேற்று நடத்த காங்கிரசின் தலைமையில் யாருமே வெளியில் இல்லை; அனைவருமே சிறையில் அடைபட்டுவிட்டனர் என்றால், இதை பின் யார் தான் வழிநடத்தியிருக்க முடியும்?
காங்கிரஸ் தீர்மானத்தில் காணப்படுவதைப் போல அவரவர் தனக்குத் தானே தலைவராக ஆகியிருந்தால் ஒரேமாதிரியான போராட்டம் நாடு முழுவதும் எப்படி நடந்திருக்க முடியும்?
யாருமே சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா இது. ஆம்! சில தலைவர்கள் இருந்தார்கள். இந்த ஆகஸ்ட் புரட்சிக்குத் தலைமை வகித்தார்கள். வரலாற்று நாயகர்களான அவர்கள் யார் தெரியுமா?
இரண்டாம் ஜனநாயகப் புரட்சி செய்த ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, அருணா ஆசப் அலி, அசோக் மேத்தா, அச்சுத் பட்டவர்தன் முதலான தேசபக்தர்களே அவர்கள்! அவர்களுடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை.
வட இந்தியத் தலைவர்கள் மனதில் தமிழ்நாடு எப்போதுமே எல்லா விஷயங்களிலும் பிந்தங்கிய பகுதி என்பது எண்ணம். ஆனால் முதல் சுதந்திர முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், நெல்கட்டான்சேவல் பூலித்தேவன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, செங்கோட்டை வாஞ்சிநாதன் போன்ற பலர் தோன்றிய தென் தமிழ்நாடு எதிலும் பின் தங்கியதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆகஸ்ட் போராட்டத்திலும் தங்கள் வீரமுழக்கத்தை உரக்க எழுப்பினர்.
மற்றவர்களைப் போல தாங்களும் நடந்து கொண்டால் தங்களுடைய வரலாற்றுக்கு என்ன பெருமை? ஆகவே அவர்கள் ‘திருநெல்வேலி மாவட்டத்தை மட்டுமாவது சுதந்திர பிரதேசம்’ என்று பிரகடனப்படுத்திவிட வேண்டுமென்று விரும்பினார்கள்.
குரும்பூர் சதி வழக்கு
நெல்லை தேசபக்தர்கள் ஓரிடத்தில் கூடினார்கள். கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், தங்கவேல், நாராயணன், ஆர்.செல்லத்துரை ஆகியோர் சேர்ந்து ‘சுதந்திர சேனை’ எனும் ஒரு படையை உருவாக்கினார்கள். தேசபக்த இளைஞர்கள் பலரும் விரும்பி இதில் சேர்ந்தனர்.
1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆறுமுகநேரியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவர்கள் கூடினார்கள். ஏராளமான மக்கள் அதில் பங்கு கொண்டார்கள். அதில் முதல்நாள் பம்பாயில் நிறைவேறிய காங்கிரஸ் தீர்மானத்தை தலைவர்கள் விளக்கிச் சொன்னார்கள். பின்னர் கே.டி.கோசல்ராம் ஒரு அறிவிப்பினைச் செய்தார்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று ஆறுமுகநேரி சந்தைத் திடலில் ஆயிரக் கணக்கான மக்கள் கூட வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை அப்போது தெரிவிக்கப்படும். மக்கள் ஏகோபித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டனர்.
முடிவுசெய்தபடி ஆகஸ்ட் 12-ஆம் தேதி திடல் நிரம்பி வழிந்தது. அவர்கள் மத்தியில் சில தலைவர்கள் பேசிவிட்டு அனைவரும் புறப்பட்டு உப்பளம் நோக்கிச் சென்றார்கள். உப்பளத்தில் தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் கூட அங்கு வேலைகள் நின்றுபோயின. உடனே போலீசார் அத்தனை தொண்டர்களையும் கைது செய்து திருச்செந்தூர் சப்ஜெயிலுக்குக் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு அவர்கள் போலீசாரால் துன்புறுத்தப் பட்டனர். எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் 15 நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான தொண்டர்கள் அனைவரும் மீண்டும் போலீசார் கையில் அகப்படாமல் கிராமம் கிராமமாகச் செல்லத் தொடங்கினர். வழியில் குரும்பூர் ரயில் நிலையம் இருந்தது. அதை வசப்படுத்திக் கொண்ட தொண்டர்கள் நிலைய அதிகாரியைத் துரத்திவிட்டனர்.
சாத்தாங்குளம் எனும் ஊருக்குச் சென்று அங்கிருந்த போலீஸ் நிலையத்தைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டனர். காவல் நிலையத்தை ஆக்கிரமித்துக் கொண்ட செய்தி வெளிவராமலிருக்க தந்திக் கம்பிகளை அறுத்துவிட்டனர். எனினும் தகவல் கிடைத்து திருநெல்வேலியிலிருந்து மலபார் போலீஸ், தொண்டர்களைப் பிடிக்க வந்து சேர்ந்தது.
இதன் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து விட்டார். இவர்கள் இப்படி பல நாட்கள் தலைமறைவாகச் சுற்றித் திரிந்துவிட்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கூடினர்.
அங்கு இவர்களைச் சுற்றிவளைத்த போலீசாரை தொண்டர்கள் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பிடுங்கிக் கொண்டனர்.
உப்பளத்திலிருந்து கூட்டமாக இவர்கள் ஊருக்குள் மறுநாள் விடியற்காலை இருள் பிரியாத நேரத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முசாபரி பங்களா எனும் அதிகாரிகள் ஓய்வெடுத்துத் தங்கும் விடுதியில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி மது அருந்திய போதையில், கையில் தன் ரிவால்வரை ஏந்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி வந்தான்.
தேசபக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்து அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. இவர்களை ஆங்கிலத்தில் கண்டபடி திட்டிக் கொண்டே துப்பாக்கியை அவர்களை நோக்கிச் சுட முயற்சி செய்தான். தொண்டர் ஒருவரின் மார்பில் அவன் ரிவால்வர் பதிந்தது.
எங்கே அவன் தொண்டரைச் சுட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த வேல் கம்பை அந்த லோனின் மார்பில் செலுத்திவிட்டார். கூட இருந்தவர்களும் ஆளாளுக்குத் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவனைப் போட்டுத் தள்ளிவிட்டனர். அவன் உடலில் மொத்தம் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாக பின்னால் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறியது. அங்கேயே அலறி வீழ்ந்து லோன் இறந்து போனான்.
அன்று காலை அந்தப் பகுதி முழுவதும் ஒரே பரபரப்பு. இந்தக் கொலை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இவர்கள் பக்கத்து நியாயத்தை ஆங்கிலேயர்கள் அரசு உணர்ந்து கொள்ளவா போகிறது? லோன் துரையைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதித்துவிடப் போகிறார்கள். இவர்கள் கையில் மாட்டாமல் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர்.
போலீஸ், காங்கிரஸ் தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. உப்பளத்தில் கூடி சதி செய்தது, குரும்பூர் ரயில் நிலையத்தைக் கைப்பற்றியது, தபால் நிலையம் எரிப்பு, தந்திக் கம்பிகள் அறுப்பு போன்ற பல குற்றச்சாட்டுகளோடு ‘குரும்பூர் சதி வழக்கு’ எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு
லோன் துரையின் கொலை சம்பந்தமாகத் தனியாக ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ எனும் பெயரில் வேறொரு வழக்கு தொடுக்கப்பட்டது. முன்னதில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் தலைவர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். லோன் கொலை வழக்கில் 64 தேசபக்தர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர், அதில் 61 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. முக்கியமான எதிரிகளாகச் சேர்க்கப்பட்டவர்கள் காசிராஜன், ராஜகோபாலன், பெஞ்சமின், மங்களபொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம் முதலான 26 பேர்.
இந்த வழக்கு, சிறப்பு அதிகாரங்கள் படைத்த தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியாக இருந்தவர் டி.வி.பாலகிருஷ்ண ஐயர், ஐ.சி.எஸ். என்பார். குற்றவாளிகளின் சார்பாக டேனியல் தாமஸ், சிவசுப்பிரமணிய நாடார் முதலான ஐந்து வழக்கறிஞர்கள் ஆஜராயினர். 1942 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இந்த வழக்கு 1943 பிப்ரவரி 6-ஆம் தேதி முடிவடைந்தது. பிப்ரவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வந்தது. குற்றவாளிகளாக நின்றவர்களுக்கு நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண ஐயர் மிகமிகக் கடுமையான தண்டனைகளை அறிவித்தார்:
1) குலசேகரப்பட்டினம் சதிவழக்கில் காசிராஜனுக்கும், ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை. அது தவிர மூன்று ஜன்ம தண்டனையும் (மொத்தம் 60 ஆண்டுகால சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். அதாவது தூக்கு தவிர 74 ஆண்டுகால சிறைவாசம்.
2) ஏ.எஸ்.பெஞ்சமினுக்கு மொத்தம் 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.
3) செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜன்ம தண்டனை. ஏனையோருக்கு 5 முதல் 12 ஆண்டுகால சிறை தண்டனை.
-தீர்ப்பை வாசித்து முடித்து நிமிர்ந்தார் டி.வி.பாலகிருஷ்ண ஐயர், ஐ.சி.எஸ். அப்போது சிரித்துக் கொண்டே காசிராஜனும், ராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்துக் கேட்டனர்: “ஐயா, நீதிபதி அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரேயொரு ஜென்மம்தான். தாங்கள் அதைப் பறிக்கத் தூக்கு தண்டனை விதித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அதற்கு மேல் மூன்று ஜென்ம தண்டனை விதித்திருக்கிறீர்களே, அதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகா, அல்லது முன்பா?”
தீர்ப்பைக் கேட்டு திடுக்கிட்டு நின்றிருந்த மக்கட்கூட்டம் இப்படி இவர்கள் கேட்டதும், கொல்லென்று சிரித்து நீதிமன்ற அறையே அல்லோலப் பட்டுவிட்டது. நீதிபதி பாலகிருஷ்ண ஐயர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அப்போது இன்னொரு குற்றவாளி சொன்னார்: “இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மங்கள் உண்டோ அத்தனை ஜென்மங்களிலும் நீதிபதி ஐயா விதித்த மூன்று ஜென்ம தண்டனைகளை வரிசையாக அனுபவித்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் விட மாட்டார்” என்றார். மறுபடியும் ஒரே சிரிப்பு. அழுது துன்பப்பட்டு வருந்த வேண்டிய மக்கட்கூட்டம் இந்த எகத்தாள விமர்சனங்களைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தது.
தூக்கு தண்டனை பெற்ற காசிராஜனும் ராஜகோபாலனும் மதுரை சிறைக்குக் கொண்டு சென்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை சிறையை உடைத்து அவர்களை வெளிக் கொணர்வேன் என்று ஆத்திரப்பட்டார். அவர் சொன்னதைச் செய்துவிடுவார் என்பதை உணர்ந்து போலீஸ் அவர்களை அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
தூக்கு தண்டனை கைதிகளான காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதற்காக அவர்கள் சென்னை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்போது ராஜகோபாலன் கழுத்தில் ஒரு கட்டிக்கு வைத்தியம் செய்து கொள்ளவும், காசிராஜனின் காசநோய்க்கு சிகிச்சை பெறவும் இருவரும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அந்தச் சமயம் காந்திஜி சென்னைக்கு வருகை புரிந்தார். ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில் காந்திஜி மருத்துவமனைக்குச் சென்று இவ்விருவரையும் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோர் இருபது வயது நிரம்பிய இளைஞர்கள். இந்த இளம் வயதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பலவும் இவர்கள் நிலைமையை விளக்கி எழுதி, இவர்களுக்கு ஆதரவாக கருத்தினை உருவாக்கினார்கள். மாகாணத்தின் பல இடங்களிலும் இவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்கள் ஆயிரக் கணக்கில் கையெழுத்திட்டு மனுக்களை அரசாங்கத்துக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். ராஜாஜி என்ன பாடுபட்டேனும் இவ்விருவரின் விடுதலைக்குப் பாடுபடுவதென்று உறுதி பூண்டிருந்தார்.
இவ்விருவரின் அப்பீல் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ரிவிஷன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடியானது. வழக்கு தில்லி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கும் இவர்கள் மேல்முறையீடு தள்ளுபடி செய்து தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இறுதி முயற்சியாக லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. அங்கு திறமையான வழக்கறிஞர் ஒருவரை ராஜாஜி ஏற்பாடு செய்து கொடுத்தார். வழக்கு லண்டனில் நடந்தது. அந்த கோர்ட்டில் இருந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்குத் தங்கள் இனத்தான் லோனைக் கொன்ற இந்த இந்தியர்களிடம் கருணை காட்ட விருப்பம் இல்லை. அவர்களும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.
இவ்வளவும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் வானில் சில மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இந்திய சுதந்திரம் கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருப்பதை எல்லாத் தரப்பினரும் உணரத் தலைப்பட்டனர். இவ்விருவர் சார்பில் அவர்களின் உறவினர்கள் வைஸ்ராய்க்கு கருணை மனுவொன்றை அனுப்பி வைத்தனர். இதற்காக ராஜாஜி வைஸ்ராயைச் சந்தித்து இவ்விரு இளைஞர்களுக்கும் கருணை காட்டவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். கருணை உள்ளம் கொண்டு வைஸ்ராய் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஒப்புக் கொண்டார்.
இந்த விஷயத்தில் ராஜாஜி காட்டிய அக்கறை போற்றி வணங்கத் தக்கது. இதைப் போல பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கும் நடந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். என்ன செய்வது?
அதற்குள் இந்தியாவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1946-ஆம் ஆண்டில் நடந்த மத்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆந்திரகேசரி டி.பிரகாசம் மாகாண முதன்மை மந்திரியாக பதவியேற்றார். அந்தப் பெருந்தகை பதவியேற்றதும் செய்த முதல் வேலை, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது தான்.
இந்த சந்தர்ப்பத்தில் திருவையாறு வழக்கு, சீர்காழி வழக்கு, கோவை வழக்கு ஆகியவற்றால் சிறையில் கிடந்துழன்ற பல தேசபக்தர்கள் விடுதலையானார்கள். இத்தனை களேபரத்துக்கு இடையில் மங்களா பொன்னம்பலம் எனும் இளைஞர் மட்டும் முதலில் இருந்தே போலீசாரிடம் அகப்படாமல் தலைமறைவாகவே இருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய ராஜகோபாலனுடைய பெயர் அதன்பின் ‘தூக்குமேடை ராஜகோபாலன்’ என்றே அழைக்கப்படலாயிற்று. தண்டனை அறிவித்த பின்னர் அவர் அத்தனை மனத்திண்மையோடு நீதிபதியைப் பார்த்து கேட்ட கேள்வியை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.
தேசபக்தி எனும் உணர்வு வேறு எதையும் காட்டிலும் வலிமையானது, உயர்வானது என்பதை உணர முடிகிறது. அந்த தேசபக்தச் சிங்கங்களை நம் மனத்தால் வணங்கி மகிழ்வோம்!
(கர்ஜனை தொடரும்…)