கரிகாலன் தலைமறைவாக இருந்து அலுத்துப் போனார். இதற்கு மேலும் யாராவது தன்னை தொடர்வார்களா என்று யோசித்தார். இத்தனை நாள் நல்ல பிள்ளையாக இருந்தாயிற்று. இதற்கு மேலும் அவரை தொடர்பு கொள்ளவில்லையென்றால் சந்திரசேகர் தன்னை கொன்றுவிடுவார் என்று தெரியும் அவருக்கு.
ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு ராஜ மன்னார்குடியின் விளிம்பிலிருந்த அவருடயை பழைய வீட்டை விடுத்து நகரம் சென்றடைந்தார்.
ஒரு தொலைபேசி பூத்தில் நுழைந்தார். சுற்று முற்றும் நன்றாக நோட்டம் விட்டார். பிறகு ஒரு செய்தித்தாளை எடுத்து வைத்து சற்று நேரம் படித்தார். யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.
சார் நான் கரிகாலன் பேசறேன்.
என்ன கரிகாலன். எங்கே போய் தொலைஞ்சீங்க. எதுக்கு என் வீட்டு நம்பர்ல போன் பண்றீங்க.
சார். ஒரு பிரச்சனையாயிடுத்து. அதனால தான் தலைமறைவாயிட்டேன். சங்கர்….. பண்ணவேண்டியதா போச்சு.
என்ன காரியம் பண்ணிட்டீங்க. எதுக்காக …………
சார். அவன் நீங்க உங்க பேர்ல டாக்டருக்காக பதிவு பண்ணதை பார்த்துட்டான்.
அதெப்படி அவன் கிட்டே போச்சு.
சார் நீங்க போட்டோ காபி எடுத்துட்டு வர சொன்னீங்க இல்லையா, நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி. அதை டாஷ்போர்டில் வெச்சிருந்தேன். அவன் தன்னோட பேப்பர்ஸ் அதில வைச்சி எடுத்தான் போலிருக்கு. இதுவும் வந்திடுத்து. சின்ன தப்பாயிடுத்து. என்னால தான்.
அந்த பார்த்தா என்னைய்யா. அதுக்காக கொலை பண்றதா.
இல்லை சார் அவனை அடிச்சிட்டு, பேப்பர்ஸை எடுத்துகிட்டு சரிகட்டிலாம்னு பார்த்தேன். ஆனா அடி பலமாயிடுத்து. இது பழனியப்பனுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் இல்லையா.
சரி. நாம அனுப்ப வேண்டிய ஷிப்மென்ட் ரெடியாக இருக்கு. உங்களை தேடிகிட்டு இருக்கேன். சீக்கிரம் சென்னை போங்க. அப்புறம் ஒரு விஷயம். ஜான் கால் பண்ணியிருந்தாரு. ரமேஷ்னு ஒரு சிஐடி ஆபீஸர் அவரோட ஆபீஸ்ல நோன்டியிருக்கான். வங்கி போக்குவரத்தெல்லாம் அவருக்கு போயிடுத்து. நேரடியா எந்த பிரச்சனையில்லயின்னாலும் எப்படியோ மோந்து பார்த்து வந்திருவாங்க. கொஞ்ச நாள் அமைதியாக இருந்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம். நீங்க யாருகி்ட்டேயும் மாட்டாம ஜாக்கிரதையா இருங்க.
சரி என்றுவிட்டு வெளியே வந்து பணம் கொடுத்து நிமிர்ந்தவரை இரண்டு காவல் அதிகாரிகள் எதிர் கொண்டனர். உங்களை கைது பண்றோம் கரிகாலன் என்றார் ஒருவர். இன்னொருவர் அவர் பேசிய எண்ணை பிரின்ட் செய்து எடுத்துக் கொண்டார். கரிகாலனின் முகம் கறுத்து போயிருந்தது.
தொடரும்…