ரொம்ப வித்தியாசமான தகவல்கள் கிடைச்சிருக்கு செல்லம். நீ வந்து உன் மூளையை கடன் கொடுத்தா நல்லா இருக்கும் என்றான் ஓட்டலுக்கு திரும்பிய ரமேஷ்.
சரிம்மா. நாளைக்கு காலையில் அங்கே இருப்பேன். உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கா வெளியிலே என்று கேட்டாள். அவளுக்கு இப்போதே அவனை பார்த்து என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம்.
இல்லை. ஓட்டல்ல தான் என்றான்.
சரி. நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி தொலைபேசி மூலம் ஒரு முத்தத்தை பதித்து வைத்தாள்.
தான் சேகரித்த விஷயங்களை தன்னுடைய மடிகணினியில் நுழைத்தான். தான் எடுத்த புகைப்படங்களை அதில் ஏற்றினான். பிறகு ஒரு கோப்பையில் தேனீர் கலந்துக் கொண்டு வந்தான். இன்னிக்கு ஜெயாதான் இல்லையே என்று நினைத்துக் கொண்டு கணினியின் உள் பையில் மறைத்து வைத்திருந்த சுருட்டுப்பெட்டியை எடுத்தான். நன்றாக அதன் தலையை எரித்துவிட்டு ஒரு இழுப்பு இழுத்து அறையை புகையாக்கினான்.
பிறகு விஷயங்களை ஏற்ற ஏற்ற தனக்குத்தானே பேசியவாறு அருகில் இருந்த காகிதத்தில் வரைய ஆரம்பித்தான்.
முதல் பட்டியல் லண்டன் வருவதற்கு முன்பே தெரிந்திருந்த விஷயம். சந்திரசேகர் பழனியப்பனை ஆராய்ச்சிக்காக ஊக்குவித்திருக்கிறார். கரிகாலனை உளவு பார்க்க அனுப்பியிருக்கிறார். பழனியப்பன் மற்ற ஐந்து மாணவர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் சங்கர் உயிருடன் இல்லை. கரிகாலனை கழற்றி விட்டுவிட்டேன். கரிகாலனை தொடர்ந்து சென்ற அதிகாரி மின்னஞ்சலில் தகவல் அனுப்பியிருந்தார். கரிகாலன் நேராக ராஜ மன்னார்குடிக்கு சென்றுவிட்டார். யாருடனும் இதுவரை போனில் தொடர்பு கொள்ளவில்லை. சந்திரசேகரையும் போய் பார்க்கவில்லை. ஒருவேளை தாங்கள் தொடர்ந்து வருவது அவனுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் ஒரு வேளை அவர் போலீஸை சுத்தலில் விடுவதற்காக தன் சொந்து ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க முடிவு செய்திருக்கலாம்.
சுருட்டு பாதி புகைந்திருந்தது. அவன் மூளைக்குள் பல கணிதங்கள்.
இரண்டாவது பட்டியல். படத்தை உற்றுப் பார்த்தான். இன்று கண்டெடுத்தது. ஜான் ஸ்டுவர்ட் என்பவருக்கு சொந்தமான இடம் அது. வங்கி போக்குவரத்தில் கைவைத்ததில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சுமார் 8 பேருக்கு பல முறை பணம் அனுப்பப்படுள்ளது. சந்திரசேகரும் கணிசமான அளவு பணம் பெற்றிருந்தார்.
மற்ற ஏழு பேரு யாரு என்று கேட்டுக் கொண்டான். அவர்களை கண்டுபிடிப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் எதற்காக இவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் ஜான். அப்படியென்றால் களப்பிறர் அவர்களின் புதையல் இந்த கட்டுக்கதையெல்லாம் நிஜமா. ஜான் இத்தனை பணம் அனுப்பி இந்த ஆராய்ச்சியை தொடர வைக்க முட்டாளா. பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அப்படி புதையல் புதைத்து வைத்திருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவன் அதை தேட முயலுகிறான், அதற்காக இத்தனை ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்கிறான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
சரி நாம் எடுத்த புகைப்படங்களை பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டே அவன் அன்று எடுத்தவைகளை ஒன்றொன்றாக பார்த்தான். அவனுடைய ஆச்சர்யம் எல்லை மீறி போனது.
ஜெயா கம் அன்ட் கிவ் மீ ஏ ப்ரேக் என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றான்.
தொடரும்…