ரகுவின் வீட்டிலும் ரவியின் வீட்டிலும் அதிகம் பிரச்சனை இருக்கவில்லை. ரகுவின் வீட்டில் அவனுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு வகைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
படுக்கை ஹோல்டார்கள், காம்பிங் பொருட்கள், துணி மணி, குறிப்பு புத்தகங்கள், விளக்குகள், மருந்து மாத்திரை, சமைக்கும் பொருட்கள் என்று ஆராய்ச்சிக்கு செல்லும் போது தேவையான விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டு தந்திருந்தார் சந்திரசேகர்.
எங்கெல்லாம் செல்லவேண்டும் எந்த விஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன, யாரை சந்தித்தால் என்ன தகவல் கிடைக்கும் என்று அணைத்தையும் விளக்கியிருந்தார் பழனியப்பனுக்கு.
இங்க பாருங்க நமக்கு இப்ப தேவையான விஷயங்கள் நான்கு
1. களப்பிறர் ஆட்சிக்கு முன் ஆட்சி செய்தது யாரு
2. எதனால களப்பிறர் ஆட்சி வந்தது
3. எத்தனை வருஷம் இந்த ஆட்சி நடந்தது
4. எந்த மன்னன் இந்த களப்பிறர் ஆட்சியை முடிச்சி வைச்சான்
அதனால எடுத்த காரியத்தில டிவியேட் ஆகமா இதைப் பற்றி மாத்திரம் விஷயங்களை சேகரிச்சிகிட்டு வாங்க. நீங்க போகறது பிக்னிக்கு இல்லை. சின்ன பிள்ளைகள் கூட இருக்கறதால அவங்களை அப்படி இப்படின்னு கவனம் சிதராம பார்த்துக்க வேண்டிய உங்கப் பொறுப்பு.
வெளிய சுத்தற வேலை 3 பசங்களுக்கு கொடுங்க. விடுதியில் தங்கி குறிப்பெடுக்கற வேலை புகைப்படம் கட்டுரை எழுதற டாக்குமெண்டேஷன் வேலைகளை பெண்கள் செய்யட்டும்.
எல்லாவற்றையும் பவ்யமாக கேட்டுக் கொண்டார் பழனியப்பன். அவரிடமிருந்த நூற்றுக் கணக்கான காகிதங்களையும் வாங்கிக் கொண்டார்.
கல்லூரியில் இந்த ஆராய்ச்சிக்கா ஒப்புதல் வாங்கி அனைவுருக்கும் மாதாமாதம் ரூபாய் 1250 கிடைக்குமாறும் வகைசெய்தார். அவர்கள் படிப்பு கெடாமல் இருக்க அவர்களுக்கு பிரத்யேக பரீட்சைக்கும் அனுமதி வாங்கித் தந்தார்.
சங்கருக்கு ஆகா 600 சொல்லி 1250 கிடைக்குதே என்று ஒரே சந்தோஷம்.
கரிகாலன் வாகனத்துக்கு வாடகைக்கு கொடுக்கும் காசையும் வாகன ஓட்டுனருக்கு கொடுக்கும் காசையும் தனக்கே கொடுத்துவிடும் படி கூறினார். பழனியப்பனும் சரியென்று சொல்ல அவர் தன்னுடயை டாட்டா சுமா வாகனத்தை எடுத்து வந்துவிட்டார். 45 வயதனாலும் கரிகாலன் பார்க்க போலீஸ் அதிகாரி போல கும்மென்று இருந்தார்.
கரிகாலனும் பழனியப்பனும் பால்ய ஸ்நேகிதர்களாக இருந்தாலும் மாணவர்களுக்கு முன்பாக சார் சார் என்றே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டனர்.
வெள்ளிக் கிழமை இரவு சிதம்பரத்திற்கு பிரயாணித்தனர். முதன் முதலில் களப்பிறர் பற்றிய கட்டுரை எழுதிய தம்பிரானை போய் சந்திக்கவேண்டும் என்று பட்டியலில் இருந்தது.
மாணவர்கள் ஐவரும் பின்னே அமர்ந்துக் கொள்ள முன்னால் பழனியப்பனும் ஓட்டுனர் இருக்கையில் கரிகாலனும். வண்டியின் மேல் இவர்களின் மூட்டை முடிச்சுகள்.
வண்டியில் அமர்ந்ததும் அனைவருக்கு 20-30 தாள்களை தந்தார் பழனியப்பன். இதை எல்லாரும் படிங்க. பத்திரமா வைச்சிக்குங்க. இதுக்கு பிரதி கூட இல்லை. நீலா, சவிதா சிதம்பரம் போனதும் நீங்க இரண்டு பேரும் இதை கம்ப்யூட்டரில் பதிக்க ஆரம்பிச்சிடுங்க என்றார்.
அனைவரும் வாங்கிக் கொண்டனர். வண்டி செங்கல்பட்டை கடந்திருக்கும். சிறிசுகள் சில்மிஷம் செய்யலாம் என்று நினைத்திருக்க முன்னால் இரண்டு பெரிசுகளும் தூங்கும் பாடில்லை. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சங்கர், இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி கொஞ்சம் சொல்லு நீலா என்றான் முன்னால் அமர்ந்திருந்த நீலவேணியை பார்த்து. அவளும் சிரத்தையுடன் பேசத் தொடங்கினாள்.
தென்னிந்தியாவை பல பேர் ஆட்சி செஞ்சிருக்காங்க. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது 1956ல தான். அதுக்கு முன்னாடி ஆங்கிலேய காலத்துல மெட்ராஸ் பிரசிடெண்ஸின்னு தென் மாநிலங்களை சொன்னாங்க.
பல மன்னர்கள், பேரரசர்கள், குறு மன்னர்கள், நிலசுவாந்தார்கள் ஆட்சி செஞ்சிருக்காங்க. நமக்கு இதுவரைக்கும் கிடைச்ச தகவல் படி கடுங்கோன் அப்படிங்கற முதலாம் பாண்டிய பேரரசர்களிலிருந்து, பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், முகமதியர்கள், மதுரை சுல்தானியர்கள், விஜய நகர அரசர்கள், மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள், தஞ்சை மராட்டியர்கள், அப்புறம் சுகந்திரம் கிடைக்கவிருந்த கொஞ்சம் வருஷம் முன்பு வரை புதுக் கோட்டை தொண்டைமான்கள் என்று நம் நாட்டையே கட்டம் போட்டு ஆண்டிருக்காங்க.
சுமார் 4வது நூற்றாண்டுல வடக்கேர்ந்து வந்ததாக சொல்லப்படுபவர்கள் தான் இந்த கள்வர் அல்லது களபிறர். அதாவது கள்ள பிறர் என்பது தான் களப்பிறர் ஆகிடுச்சு. களப்பிரர் அப்படின்னு கூட சொல்றாங்க. பெரிய ற சின்ன ர குழப்பம் இருக்கு. பல்லவர்கள் ஆட்சி ஆரம்பிச்ச பிறுகு தான் இந்த களப்பிரர் ஆட்சி முடிஞ்சிது. இது தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நேரம் என்கிறார்கள். இது தான் கறுப்பு வரலாற்றின் ஆதாரமே.
தொடரும்…