Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 8

கறுப்பு வரலாறு – 8

கரிகாலன் வந்து வண்டியை அந்த கிராம வீட்டின் முன் நிறுத்தினார். ரகு வெளியே வந்து பொட்டலங்களை கையில் வாங்கியபடியே சங்கர் எங்க சார் என்று கேட்டான்.

அவனாப்பா அவன் கிராமத்து வெளியிலே இறங்கிட்டான். வயல் வரப்புல நடந்து வர ஆசைன்னு சொன்னான். வந்திடுவான். நீங்கள்லாம் சாப்பிடுங்க என்றார்.

அனைவரும் சிதம்பரத்தின் ருசியான உணவை உண்டு மகிழ்ந்தனர். பிறகு தம்பிரானை காண தயாரகினர்.

பழனியப்பன் வந்து, எங்கப்பா இந்த சங்கரு. தம்பிரான் ஐயாவை பார்க்க நேரமாகுதுல்ல என்றார் சலிப்புடன்.

அவன் வரட்டும் சார். நாம போகலாம் என்று நீலவேணி சொன்னாள். இரு பெண்களும் சொல்லி வைத்தால் போல பச்சை புடவை கட்டியிருந்தார்கள். நீலா தன் தந்தை வாங்கித் தந்த புதிய லாப்டாப்பை தாங்கி வந்தாள். ரவியும் ரகுவும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கிராம மணத்துடன் ஒன்றியிருந்தனர்.

தம்பிரானுக்கு 52 வயது இருக்கும். ஒல்லியான தேகம். கண்ணாடி போட்டிருந்தார். வெறும் மார்ப்புடன் அமர்ந்திருந்தார். நெற்றியில் பெரிய பட்டை. அவருடைய வீடு பழய வீடாக இருந்தாலும் அழகாக இருந்தது.

வாங்க வாங்க என்று வரவேற்றார். குனிந்து வாங்க. இது பழைய காலத்து வீடு என்றார்.

அனைவரையும் பாயில் ஒட்கார வைத்து விட்டு தானும் தரையில் அமர்ந்தார். பெரிய தாழ்வாரம். வானத்திலிருந்து சூரியன் நேராக வீட்டில் வருகை. கம்பியின் வழியே அழகான கோடுகளின் நிழல் கோலங்கள்.

சோபா இருந்தாலும் ஆற அமர உட்காருனும்னா அது பாய் தான், இல்லையா என்றார்.

இரு இளைஞர்களும் நெளிந்தனர்.

அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு பழனியப்பன் பேசினார். ஐயா, சந்திரசேகர் ஐயா தான் உங்களை பார்த்து வரச் சொன்னார். நீங்க தான் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி ஆரம்பிச்சிட்டு பாதியிலே நிறுத்திட்டீங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நீங்கள் அந்த முயற்சி எடுத்தீங்க. உங்களால உதவ முடியும்னு சொன்னாரு.

விட்டத்தை சில நிமிஷங்கள் பார்த்துவிட்டு, நீங்க இத்தனை தூரம் என்னை பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. என்னால உங்களுக்கு உதவியாக இருக்க முடியமான்னு சந்தேகமாக இருக்கு. ஏன்னா நான் ஆரம்பத்திலேயே நிறுத்திட்டேன்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, என்னை இந்த தலைப்பில ஆராய்ச்சி செய்யவேண்டாம்னு சொன்னதே சந்திரசேகர் சார்தான்.

அப்படியா என்று ஒரே நேரத்தில் ஆச்சர்யத்துடன் கேட்டனர் அனைவரும்.

ஆமா. ஒரு பத்து-பதினைந்து பக்கம் எழுதிட்டு அப்ப என்னுடயை லக்சரரா இருந்த சந்திரசேகர் சார் கிட்ட போய் காட்டினேன். பல்லவர்கள் எப்ப ஆட்சி செஞ்சாங்க, நாயக்கர் ஆட்சி காலம் எதுன்னு 2-3 கேள்வி கேட்டார். எனக்கு பதில் தெரியலை. ஒழுங்கா புத்தகத்தில இருக்கற விஷயத்தை முதல்ல படி, அப்புறம் பெரிய ஆராய்ச்சி பண்ணலாம்னு திட்டி அனுப்பிச்சிட்டாரு.

அவரு ஒரு பர்பெக்ஷனிஸ்ட். அவரு எந்த ஒரு பாடம் நடத்தினாலும் கையில புத்தகம் வைச்சிகிட்டது இல்லை. தேதிகள் அவருக்கு அத்துப்படி. அன்னிக்கு அவரு திட்டினது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் நான் சரின்னு வந்திட்டேன். அப்புறம் அந்த உத்வேகம் இல்லை. நான் எழுதினது கூட அவர்கிட்டேயே விட்டுட்டு வந்திட்டேன்.

காலேஜ் முடிச்சதும் அவரே கூப்பிட்டு நான் எழுதின கட்டுரை திருப்பி கொடுத்துட்டு, இனிமே முதுகலை பண்ணப்போறே, அதுக்கப்புறம் இந்த தலைப்புல ஆராய்ச்சி செய் அப்படின்னு சொல்லி அனுப்பினாரு.

ஆனா அதே கல்லூரியில் முதுகலை பண்ணினாலும் அப்புறம் அந்த தலைப்பை தொடரனும்னு தோணவே இல்லை.

அவர் பேசி முடித்து விட்டு கண்ணாடியை கழற்றினார். பிறகு விட்டத்தை பார்த்தார். பிறகு ஒரு பெரும் மூச்சு விட்டார்.

ரகுவினுள் ஒரு சிறந்த கலைஞன் இருந்தான். ஓவியன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கிராம வீட்டை தன் கையேட்டில் அழகாக வரைந்திருந்தான்.

அதைப் பார்த்த தம்பிரான், அடடே, தம்பி, காட்டுங்க. என்ன அழகா வரைஞ்சிருக்கீங்க. நானும் உங்களை மாதிரி தான், பார்த்ததை பார்த்த மாதிரியே வரைஞ்சிடுவேன். உங்க பேரு என்ன சொன்னீங்க.

ரகு சார் என்றான்.

ரகு. உங்களுக்கு என்ன என்னால கொடுக்க முடியும்னு யோசிச்சேன். உங்களுக்கு சில விஷயம் கொடுக்க முடியும். இருங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

ஒரு பெரிய தகரப்பெட்டியை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அதை திறந்து சுருட்டி வைத்திருந்த ஒரு படத்தை எடுத்தார். அதை பிரித்து கீழே வைத்தார்.

தம்பி, இதை நல்லா பாருங்க. இது நரசிம்ம வர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு. இதை நான் ஒரு லைப்ரரியில் பார்த்தேன். உடனே வரைஞ்சிட்டேன். இதுல என்ன எழுதியிருக்குன்னா களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே என்று நரசிம்மவர்மனை புகழந்து பாடியிருக்கிறார் ஒரு புலவர். சுமார் ஆயிரம் நூல்கள் தேடினாத்தான் களப்பிறர் பத்தி ஒரு வரி கிடைக்கும்.

ஆனால் அதிர்ஷ்ட்டவசமாக எனக்கு இது முதல் வாரத்திலேயே கிடைச்சிடுத்து. இது யாருக்கும் தெரியாது. ரிசர்ச் தொடர்ந்தா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா, உடல் நலம் சரியில்லாததால வேலையை விட்டுட்டு சொந்த ஊரான இந்த கிராமத்திலே வந்து செட்டிலாயிட்டேன்.

அனைவரும் மிகுந்த ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ரகு உடனே அதை பிரதியெடுக்க ஆரம்பித்துவிட்டான்.

அவர் இன்னும் சில காகிதங்களை எடுத்து பழனியப்பனிடம் கொடுத்தார். அதை பவ்யமாக வாங்கிக் கொண்ட அவர் அதை எடுத்துப் பார்த்தார். சுமார் 15-20 பக்கங்கள் இருக்கும். அதை வாங்கி கண்களை ஓட விட்டவருக்கு கண்கள் வெளுத்தது. படபடப்பாக இருந்தது.

எனக்கு என்ன தோனுதுன்னா இதுக்கு மேல எங்கிட்ட எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்காது. அதனால நீங்களே மேலே முயற்சி செய்யுங்க. என் ஆசீர்வாதம் என்றார்.

சவிதா அமைதியாக இருந்தவள் மறுபடியும் ஒரு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாள். சார், உங்களுக்கு எதனால இந்த தலைப்பில ஆர்வம் வந்தது.

ஆ……..ங், நானும் என் நண்பனும் கதை கவிதைகள் எழுதுவோம். அவன் பேரு ஞானபிரகாசம். ஒரு நாள் எதோ பேச்ச வாக்கிலே எம் ஏக்கு அப்புறம் ரிசர்ச் பண்ணனும் அப்படி பண்ணா தமிழ் நாட்டை சம்பந்தப்பட்ட தலைப்பில தான் ஆராய்ச்சி பண்ணனும்னு பேசிக்கிட்டோம். தமிழக வரலாறுல குழப்பமா இருக்கற ஒரு தலைப்பு களப்பிறர் ஆட்சிக்காலம் தான்.

சிலர் அவங்க 3000 வருஷம் ஆட்சி செஞ்சாங்கன்னு சொல்றாங்க. சிலர் 300 அப்படிங்கறாங்க. அதனால இந்த தலைப்பில ஆர்வம் ஆனோம். ஆ. ஒன்னு சொல்ல மறந்திட்டேன். அவன் முதுகலை முடிச்சப்பின்னும் அந்த தலைப்பில தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தான்னு சொன்னாங்க. எனக்கு தொடர்பு விட்டுப் போச்சு.

சார். நல்ல விஷயமா சொன்னீங்க. சொல்லுங்க அவரு எங்கிருக்கிறார்.

அவன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில வேலை செஞ்சதா கேள்வி. மேல தொடர்பு இல்லை.

ரொம்ப நன்றி சார். உங்களோட இந்த நூலை வெச்சி நாங்க மேலே தொடர முயற்சி பண்றோம் என்று அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

அவருடைய மனைவி அதற்குள் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்.

எங்கப்பா இந்த சங்கர். சின்னப் பசங்களை இந்த மாதிரி முக்கியமான வேலைக்கெல்லாம் அழைச்சிகிட்டு வந்தது என் தப்பு என்றார் பழனியப்பன் கோபமாக.

நண்பர்கள் குழப்பத்துடன் கரிகாலனைப் பார்த்து எங்க சார் இறக்கிவிட்டீங்க என்றனர்.

இந்த ஊர் எல்லையில தாம்பா. ஏதோ வயல் வெளி போறேன்னு சொன்னான். ஆளை காணோமே.

சரி நீங்க சாப்பிடுங்க. அந்த தம்பி வந்தா தனியா பரிமாறிக்கலாம் என்றார் தம்பிரான் விருந்தோம்பலுடன்.

அனைவரும் மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர். தாமரை இலையில் சோறும் சாம்பாரும் சுடச்சுட அப்பளமும் உண்ட பிறகு வாழைப்பழமும் ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது.

சாப்பிட்டு முடித்த ரவி, சார் கொஞ்சம் சைக்கிள் தர்றீங்களா, இவன் எங்கே போனான்னு பார்த்திட்டு வந்திடறேன் என்றான்.

அவரும் தாராளமா எடுத்துட்டு போப்பா. நான் வேணா பச்சைமலைய கூட அனுப்பறேன் என்று சொல்லி வண்டி சாவி தந்து தன் பணியாளையும் கூட அனுப்பி வைத்தார்.

ஊர் எல்லையில் வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த வயல் வெளியில் நடக்கத் தொடங்கினர் இருவரும். அவ்வப்போது சங்கர் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரவி அந்த காட்சியை பார்த்ததும் சட்டென்று உறைந்து நின்றான்.

பம்பு செட்டுக்கு அருகில் சங்கரின் உடல் மின்சாரத்தில் அடிபட்டு கருகி நின்றிருந்தது. பேச்சடைத்து நின்றான். சங்கரின் உடல் கரிகட்டை போல கறுப்பாக இருந்தது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top