8.30 மணிக்கு வீடு சென்றவன் மேசையின் மேல் உள்ள காகிதத்தில் 2 என்று எழுதிவிட்டு குளியலறைக்குச் சென்றான்.
குளியலறையையும் ரசித்துக் கட்டியிருந்தான். பெரிய அறை. ஒரு புறம் பெரிய கண்ணாடி. சின்ன டேபிள். அதன் மேல் சில புத்தகங்கள். நடிகை சோனாலி பிந்த்ரேயின் கவர்ச்சி போஸ்டர். காலடிகள். பெரிய டப். நீல வண்ண டைல்ஸ் ஒரு கடல் போல தோற்றத்தை அளித்து. வெள்ளை டப் மற்றும் வசதி சாதனங்கள் விலை உயர்ந்த பீங்கானில். சிறிய தொங்கும் பெட்டியில் பல வகையான சோப்புச்சீப்க்கண்ணாடிகள். வாசனை திரவங்கள்.
ஒரு டேப்ரிக்கார்டர். ஒரு போன். இரண்டுக்கும் பாலிதீன் உறை போட்டிருந்தான் நீர் படாமல் இருக்க. ஸ்டிவீ வான்டர் ஃபார் த சிடி பாட்டு போய்கொண்டிருந்தது.
டப்பை அதிவேகத்தில் தண்ணீர் நிரப்ப ஒரு சிறிய மோட்டர். அதை தொடக்கிவிட்டு உடலையும் மனதையும் அமைதிப்படுத்த ஒரு மூலிகை திரவத்தை டப்பில் ஊற்றினான். அது வேகமாக பாய்ந்து தண்ணீரில் பட்ட உடன் நுரை கொடுத்தது. இரண்டு நிமிடங்களில் 100 லிட்டர் டப் நிறைந்தது. தண்ணீர் தட்டுப்படவில்லை வெறும் நுரைதான். ஜாக்கி உள்ளாடைகளை களைந்துவிட்டு குழந்தையாய் அந்த நுரைக்குள் புகுந்தான். மென் ஆர் ஃபரம் மார்ஸ் விமென் ஆர் ஃபரம் வீனஸ் புத்தத்தை இடக்கை பக்க சிறிய பெட்கத்திலிருந்து எடுத்து 31ம் பக்கத்திலிருந்து படிக்கத்துவங்கினான். நந்தினி வந்துவிட்டுப் போனதால் இந்த புத்தகம் தேவைப்பட்டது. இப்போது ராதிகாவை புரிந்துக் கொள்ள படிக்கத் துவங்கினான்.
ஒரு இருபது நிமிடம் இருந்திருப்பான் போன் ஒலித்தது. பல மணி நேரம் டப்பில் உட்கார்ந்திருப்பது வழக்கம். பல புத்தங்களை டப்பிலிருந்தே படித்து முடித்திடுவான்.
குளியலறை அழகாக இருந்தால் எல்லேரும் அதில் தான் அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் மனிதனோ குளியலறையை சின்னதாக கட்டி அதன் முக்கியத்துவத்தை இழக்கடித்து விடுகிறான். ஆனால் ராஜேஷ்அந்த முட்டாள்களில் ஒருவர் இல்லை. ஹால் வந்தவர்களை சந்திப்பதற்கு மட்டும். படுக்கை அறை தூங்க மட்டும். படிக்கும் அறை படிக்க மட்டும். சாமியறை கடவுளை வேண்ட மட்டும். ஆனால் குளியலறை மற்ற எல்லாவற்றிற்கும். மன அமைதியில்லாமல் இருந்தாலோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாலோ இல்லை மனதை சந்தோஷப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாலோ குளியலறைதான்.
எழுந்தவுடன் ஒரு அழகான அமைதியான முகத்தை பார்க்கவே விரும்புவான். சில வருடம் முன்பு வரை திப்தி பட்நாகர். தற்போது சோனாலி. தற்போது என்ன பல வருடங்களாகவே அவள்தான். அவளுக்கு பிறகு ஒரு அழகியே அவன் பார்க்கவில்லை என்று ஒரு நினைப்பு அவனுக்கு.
பல முறை போன் ஒலித்ததும் எடுத்து யா என்றான். ராதிகா மறுபுறம் பதட்டமாக பேசினாள்.
ராஜேஷ்ராஜேஷ்இன்னிக்கு அந்த இரண்டாவது அமைச்சரை தொடர்ந்து போனேன் இல்லையா?
பரவாயில்லையே முதல் நாளே பொறுப்பாக வேலையை ஆரம்பித்துவிட்டாளே!
சரி என்னாச்சு?
இங்கே ஒரு பிரச்சனை. அவசரமா ஆல்வார்பேட்டையில வீனஸ் காலனிகிட்ட அவசியம் வாங்க என்றாள்.
ஏன் என்னாச்ச?
நான் அதிகம் பேசமுடியாது. சீக்கிரம் வாங்க அமைச்சர் வீட்டுக்கு என்றாள்.
டப்பிலிருந்த வெளிப்பட்டு உடம்பு குளிர பிறந்த மேனியா வார்ட்ரோப்புக்கு ஓடி அவசரமாக கிடைத்த க்ரோக்கடைல்களைப் போட்டுக்கொண்டு குளிர் அதிகமாக இருக்கிறதே என்று ஒரு ஜாக்கெட்டையும் க்ளவுசுகளையும் எடுத்துக் கொண்டு ஹெல்மெட்டை குழந்தை போல தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
ஓடும் முன் 2 அவன் கண்ணிற்கு பட்டது.
இன்னிக்கென்ன இரண்டு என்று யோசித்துக் கொண்டே சென்றான்.
கோடம்பாக்கம் பிரிட்ஜ் கடக்கும்போது மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவென். மேரேஜ் கார்ட்ஸ் ஆர் பிரின்டட் இன் மேனகா என்று பிரிண்டிங் பிரஸ்ஸின் பெரிய எழுத்துக்களை படித்துக் கொண்டே சென்றான். எனக்கு கல்யாண வயது வந்துவிட்டதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
நுங்கம்பாக்கம ஹைரோடை பிடித்து ஜெமினி பாலம் கீழே அமெரிக்கன் கன்ஸ்லேட்டை கடந்து வலப்புறம் திரும்பி நிமிடங்களில் வீனஸ் காலணி வந்தடைந்தான்.
அங்கு ஒரு மரத்தின் கீழ் ராதிகா நின்றிருந்தாள். மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள்.
ராஜேஷ்ராஜேஷ்அமைச்சர் கரிகால வளவனை யாரோ கொன்னுட்டாங்க என்றாள்.
என்ன என்று கேட்கும் போதே ஒரு காவல் வாகனம் விரைந்து அவனை நோக்கி வந்தது.
இவளை எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள விடக்கூடாது என்று நினைத்து ராதிகா நீ இங்க இருந்து உடனே போயிடு. ஆபிஸ்ல யாருகிட்டையம் எதுவும் சொல்லாதே. போயிடு. போயிடு என்று அவசரப்படுத்தினான். அவளும் என்ன ஏது என்று புரியாமல் பக்கத்திலிருந்த மரத்தின் பின் சென்று ஒளிந்துக் கொண்டாள்.
வந்த போலீஸ் வண்டி அவன் முன் வந்து நின்றது.
நீங்க யாரு? என்று கேட்டார் விக்ரமன்.
சார். குட் ஈவ்னிங். என் பேர் ராஜேஷ் நான் சூப்பர் டிவியில சீஃப் ரிப்போர்டர் என்றான்.
ஸாரி ராஜேஷ்இட்ஸ் பேட் ஈவ்னிங் ஃபார் யூ. குற்றம் நடந்த இடத்தக்கு அருகாமையில் இருக்கீங்க. அமைச்சர் சில நிமிடங்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்காரு. அவர் பாடிக்கு பக்கத்தில உங்க ஐடென்டிடி கார்ட். வீட்டுக்கு 20 அடி கிட்ட நீங்க. கையில க்ளவுஸ். உங்களை சந்தேகத்தின் பெயரில் கைதி பண்றோம்.
வாட் நான்சென்ஸ் இன்ஸ்பெக்டர். நான் இன்னொஸென்ட்.
எதுக்காக இந்த நேரத்தில இங்க வந்தீங்க?
இந்த கேள்விக்கு அவன் தயாராக இல்லை. ராதிகா அழைத்து இங்கு வந்ததாக சொல்ல விரும்பவில்லை. அந்தப் பிராஜெக்ட் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது.
மௌனமாக இருந்தான். பிறகு சரி சார் என் பைக்கை யாராவது ஓட்டி வரட்டும் நான் உங்க கூட ஜீப்பில் வரேன் என்றான.
உங்க க்ளவுஸ்?
கொடுத்தான். அதை ஒரு பாலிதீன் ரேப்பரில் வாங்கிக் கொண்டார். இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று நினைத்தான்.
உங்க மொபைல் ப்ளீஸ்?
மொபைலை அணைத்துவிட்டு கொடுத்தான்.
வண்டியை கான்ஸ்டபிள் ஸ்ரீரங்கம் வாங்கிக் கொண்டார். ஹெல்மெட் போட்டுட்டு போங்க சார். காவலே சட்டத்தை மதிக்கலைன்னு கிண்டல் பண்ணப்போறாங்க அவன் நகைச்சுவையாய் பேசி சகஜ நிலைக்கு வர நினைத்தான். உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள்.
கான்ஸ்டபிள் சிரித்தார். விக்ரமன் சிரிக்கவில்லை. இந்த நகைச்சுவையையும் அவர் ரசிக்கவில்லை.
இரண்டாவது அமைச்சர் கொலை. அதுவும் முதல் அமைச்சர் கொல்லப்பட்ட ஒரே வாரத்தில். முதல்வர் கொடுத்த கெடு என்றோ முடிந்துவிட்டது. எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் யாருடைய ஜோக்கையும் கேட்க அவர் தயாராக இல்லை. குறிப்பாக கொலையாளி என்று கைதி செய்த ஒருவனிடமிருந்து. நோ வே!
வண்டி நேராக பீச்ரோடில் இருக்கும் கமிஷ்னரின் ஆபீஸை நோக்கிச்சென்றது.
மரத்தின் பின் ஒளிந்திருந்த ராதிகா அதிர்ந்து போயிருந்தாள். பாஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். சொல்ல வேண்டாம் என்று ராஜேஷ் சொல்லி விட்டானே என்று நினைப்பு. வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே இப்படியா என்ற அதிர்ச்சி. மெதுவாக வண்டி ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்…