தொடர்ந்து நந்தினியை தாண்டி வெளியே செல்லும் முன் தன்னுடைய வேகத்தை குறைத்து ராதிகாவை முன்னே செல்லவிட்டு தான் கிறுக்கி வைத்திருந்த போஸ்ட் இட்டை அவள் பார்க்கும் போது அவளுடைய போன் போர்ட் மீது ஒட்டிவிட்டு லிப்டுக்குள் நுழைந்தான்.
அதை படித்ததும் அவளுக்கு தலைசுற்றியது.
இந்த ரோஜா வாடக்கூடாது.
அதை கை நடுங்க எடுத்தாள். தன் முகம் வாடியிருந்ததை அவன் பார்த்திருக்கிறான். மெதுவாக அதை முத்தம் இட்டாள். டாய்லெட் ஓடிச்சென்று 100 முறை படித்தாள். அம்மாவுக்கு போன் செய்தாள்.
அம்மா இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் ராஜேஷைலஞ்ச்சுக்கு கூப்பிட்டேன். அவன் வரமாட்டான்னு சொல்லிட்டு ராதிகாவோட போயிட்டான். நானும் டல்லா திரும்பி என் சீட்டுக்கு வந்துட்டேன். போகும் போது ஒரு போஸ்ட் இட்ல இந்த ரோஜா வாடக்கூடாதுன்னு எழுதி கொடுத்திட்டு போயிட்டாம்மா என்றாள் உற்சாகக்குரலில்.
என்னடா இது அவன் ஐ லவ் யூ சொன்ன மாதிரி குதிக்கிற என்றாள் தோழி போன்ற அம்மா.
இது போதும்மா எனக்கு. ஒரு நாள் அவனை சொல்ல வைக்கிறேன் என்றாள்.
ஆமாம். அவன் சொல்றதுக்குள்ள உனக்கு வயசு ஆயிடும்.
அம்மா ஓளவையாரா ஆனாலும் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறி வைத்தாள்.
மீண்டும் மீண்டும் அந்த சீட்டிற்கு முத்தமிட்டாள். காதல் என்பது ஒரு வித மூளைக்கோளாறுதானோ?
லிப்ட்டில் செல்லும்போது அவன் கை ராதிகாவின் இடையில் பட்டுவிட்டது. ஸாரி என்று சொன்னான். பரவாயில்லை என்றாள் ராதிகா.
ராதிகா நாம செய்யறது ரொம்ப ரசசியமான ப்ராஜெக்ட். அதனால ஹோட்டல்ல எதுவும் பேசவேணாம்.
அதுக்கு எதுக்கு ஹோட்டலுக்கு போகனும் பேசாம ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்கலாமே?
ஹோட்டலுக்கு போறது சாப்பிட மட்டும் இல்லை உங்களை பத்தி இன்னும் தெரிஞ்சிக்கத்தான் என்றான் அவன்.
அந்த மாதத்தின் சிறந்த ஊழியனாக ராஜேஷைதேர்ந்தெடுத்த செய்தியை அனைவருக்கும் இமெயிலில் அனுப்பியிருந்தனர்.
ரவி அந்த மெயிலலை படித்துவிட்ட ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நானும் அவனும் ஒரே உயரம் தான். என்னை ஸ்மார்ட்டா இருக்கேன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஆனா நானும் அவனும் பக்கத்தில் நின்றால் எல்லாரும் அவனைப் பத்தியே பெருமையா பேசறாங்க. அவன் முன் நான் அடிப்பட்டுப் போய்விடுகிறேன். நான் அவனை விட நல்ல நிறம் வேற. என்னக் குறைச்சல் என்னிடம்?
ரவி சூப்பர் டிவி சேர்ந்த கதை உங்களுக்கு சொல்லவேணாமா? கதைக்கு இவன் பெரிய முக்கியத்துவம் இல்லாத பாத்திரமாக இருந்தாலும் அவனிடத்திலும் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கிறது.
அவன் சூப்பர் டிவியில் சேர்ந்த கதை. இதற்கு முன் ரெயின் டிவியில் இதைவிட நல்ல சம்பளத்தில் இன்னும் பெரிய நிலையில் வேலை செய்துக்கொண்டிருந்தான்.
வழக்கமாக போட்டி டிவியிலிருந்து யார் வந்தாலும் அவரை சேர்த்துக்கொள்ளமாட்டார் ராஜகோபால். இது ஒரு வித்தியாசமான பழக்கம். ஆனால் அவர் ஓன்ஸ் என் எம்ப்ளாயி ஆஃப் அ கம்பெனி ஹி இஸ் ஆல்வேஸ் தெர் எம்ப்ளாயி என்பார்.
ஆனால் இவனை சந்தித்து இவன் சோகக்கதையை கேட்டதும் இப்ப உங்க பொஸிஷனுக்கு இடம் இல்லை காமிராமேனுக்கு மட்டும் காலியிடம் இருக்கு பரவாயில்லையா? என்றார்.
ரொம்ப நன்றி சார் என்று கூறி அதை ஏற்றுக் கொண்டான். காமிரா மேனுக்கே உரிய தொப்பி ஜீன்ஸ் டைட் டீ ஷர்ட். கை எட்டும் தூரத்தில் காமிரா.
சேர்ந்த பிறகு வழக்கமான வேலையே செய்து வந்தான். ஒன்றும் சிறப்பாக செய்யாததால் இன்னும் காமிராமேனாகவே இருக்கிறான்.
இவனுடைய ரெயின் டிவி முதலாளி இவனுடைய முதல் தங்கைக்கு முழு கல்யாண செலவும் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கல்யாணத்திற்கு 10 நாள் முன்பாக மறுத்துவிட்டார். அவர் தரும் 20 லட்சத்ததை நம்பி அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்து ஆடம்பரமாக நிச்சயதார்தம் நடத்தி ஏகப்பட்ட இடத்தில் கடன் வாங்கி வீட்டுப் பொருட்கள் நகைகள் துணிமணிவாங்கியிருந்தான்.
தங்கையும் மாப்பிள்ளையும் பல இடங்களுக்கு சேர்ந்து செல்வதை தடுக்கவில்லை. நிச்சயம் ஆன பிறகு வெளியே செல்வதில் என்ன தவறு?
நிச்சயமான திருமணம் காதலாக மாறியிருந்த நேரத்தில் இந்த அதிர்ச்சி. மாப்பிள்ளை வீட்டிடம் மிகவும் கெஞ்சினான். எப்படியாவது ஒரு வருடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை செய்வதாகவும் அதனால் திருமணத்தை நிறத்த வேண்டாம் என்றும் கெஞ்சினான். ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் பக்குவம் அடைந்துவிடுவதில்லை. இளம் வயதில் டாக்டராக பட்டம் பெற்று பிறகு வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தள்ளி வைத்த படித்த மேதையும் அமெரிக்காவில் இருந்தவன் தான்.
குறிபிட்ட நாளில் திருமணம் ஆகாத அதிர்ச்சியில் தங்கையின் பேச்சு நின்றுவிட்டது. தினமும் காலையில் எழுந்து குளிப்பாள் உடை உடுத்திக் கொள்வாள். எதிரில் உணவு இருந்தால் சாப்பிடுவாள் தண்ணீர் இருந்தால் குடிப்பாள். எதிரில் ஒன்றும் இல்லையென்றால் பல மணி நேரம் கூட சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் இருப்பாள்.
மூன்று மாதம் ஆகியும் இந்த நிலமை மாறாததால் டாக்டர்கள் அந்த மாப்பிள்ளைளை ஒரு முறை பார்த்தால் சரியாக வாய்ப்பிருக்கிறது என்று கூறினர்.
மாப்பிள்ளை பையினிடம் தனியாக பேசி மன்றாடி டிக்கெட் செலவை ஏற்றுக் கொண்டு படாதபாடுப்பட்டு அழைத்தான். அவனைப் பார்த்தும் கூட அவள் மீது எந்த மாற்றமும் இல்லை. வேறு வழியில்லை இனிமேல் திருமணம் அவனுடன் நடந்தால் அவள் நிலை மாறும் என்று கூறிவிட்டனர்.
பிறகு இது பொய் கல்யாணம் தான். மனிதாபிமான அடிப்படையில் நான் உதவி செய்கிறேன். எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரம் எழுதி நான் முழ மனதுடன் சம்மதிக்கிறேன் என்று ரவியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் அந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒரு போலி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்.
மண்டபம் அமைத்து நாதஸ்வரம் வைத்து நிஜ திருமணம் போல் பொய்யான ஒரு போலி மனோ மருத்துவ திருமணம் ஒன்று நடந்தேறியது.
இது எதுவும் அவளை பேச வைக்கவில்லை. அவள் கண்ணில் சலனமும் இல்லை. அழவும் இல்லை. சிரிக்கவும் இல்லை.
நடந்தது நடந்துவிட்டது இனிமேல் அவள் என் தலையெழுத்து என்று போலி மாப்பிள்ளைக்கு நன்றி கூறி அவனை வழியனுப்பி வைத்தான்.
அன்றிலிருந்து அவனுக்காகவே வாழ்கிறான். முதலாளி செய்த துரோகத்தை அவனால் தாங்க முடியவில்லை. இந்த அவமானத்துடன் அவன் அங்கு வேலை செய்யவும் முடியவில்லை. பல மாதங்கள் வேலையில்லாமல் இருந்த பிறகு ரெயின் டிவியை பழிவாங்குவதாக நினைத்து அதன் எதிரியான சூப்பர் டிவியில் வேலைக்கு சேர்ந்தான்.
அவன் அதிகம் பேசுவதும் பழகுவதும் ராஜேஷுடம் மட்டும் தான்.
அவனைப் பார்த்து இவன் அசராத நாள் இல்லை. சற்று பொறாமையும் படுவதுண்டு.
கங்கராஜுலேஷன்ஸ் மச்சான் என்று அவனுக்கு ஒரு மெயில் தட்டிவிட்டு புகைப்பிடிக்க வெளியே வந்தான். நந்தினியைப் பார்த்து ஒரு புன்னகை பதிலுக்கு அவள் நிஜமான ஒரு புன்னகை அளித்தாள். அவள் நிஜமான புன்னகை சில பேருக்கு மட்டுமே. ரவி ராஜேஷின் நண்பன் என்பதால் அவனுக்கு இந்த பாக்கியம் உண்டு.
சிகெரெட்டை எடுத்து பெட்டியின் மேல் தட்டி புகையிலையை நன்றாக கீழே இறக்கி வெற்று இடத்தை முதலில் கொளுத்திவிட்டு மீண்டும் தடித்த அந்த புகையிலையை பற்றவைத்து நன்றாக இழுத்தான். வானம் நோக்கி புகையை விட்டான்.
ஒருவர் புகையை எப்படி விடுகிறார் என்பதை வைத்து அவருடைய குணத்தை கூறலாம் என்று எப்போதோ படித்த புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறது.
புகைப்பிடித்துவிட்டு நேராக புகைவிட்டால் அவர் நம்பிக்கையானவர் என்றும் தலையை குனிந்து புகைவிட்டால் தன்னம்பிக்கை குறைவானர் என்றும் மேலே பார்த்து புகைவிட்டால் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்றும் கூறுவர். இவன் மேலே பார்த்து புகைவிட்டுக் கொண்டிருந்தான்.
தொடரும்…