வா ரவி வாங்க சீஃப். உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம் என்று ரவியையும் முதலாளியையும் படுக்கையிலிருந்தே வரவேற்றான் ராஜேஷ்.
அவனுடன் பல வருடம் இருக்கும் வீட்டு பணியாள் ரங்கன் அவர்களுக்கு நாற்காலி சரிசெய்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்துவர அடுப்படி நோக்கிச் சென்றான்.
ராஜேஷின் அறை அவனைப்போன்று விநோதமானது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு நிறம். விளக்குகள் கீழ் இருந்து மேலாய். எல்லா அறைகளிலும் ஒரு கணினி. அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் வொயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் செர்ரி நிறத்தில் ஒரு சிறிய முக்காலி. அதன் மேல் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகள். முன் அறையில் ஆளுயர அன்டர்டேக்கரின் படம் டபிள்யு டபிள்யு எஃப்விலிருந்து. சுவற்றின் மேல் வெள்ளை போர்டு. கலர் மார்க்கர்ஸ். ஏதாவது குறிப்பு எழுதியிருந்தது. நிறைய எண்கள் எழுதியிருந்தது.
நிஜ பூக்கள் இருந்த பூத்தொட்டி. சிறிய பென்சில் பேனா. வெள்ளைத்தாள்கள். விவேகானந்தரின் படம். ஜெ கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள். ஆர் கே நாராயண்னின் புத்தகங்கள். சில அகதா கிரிஸ்டி. பல எர்ல் ஸ்டான்லி கார்ட்னர்.
ராஜகோபால் இதை நோட்டம் விட்டார். நல்ல வீடு ராஜேஷ் என்று தன் கருத்தை கூறினார்.
என்ன சீஃப் நீங்க வாங்கி கொடுத்த வீடு தானே. கிரஹபிரவேசத்திற்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்க.
என்ன சார் வாங்கி கொடுத்த வீடா? ரவி ஆச்சர்யத்துடன் கேட்டான். கோடம்பாக்கத்தில் இத்தனை பெரிய வீடு என்றால் சுமார் ஒரு கோடியாவது ஆகியிருக்கும். ஒரு சாதாரணமான நிருபருக்கு இவ்வளவு பெரிய வீட்டை டைரக்டெர் ஏன் வாங்கித்தர வேண்டும் என்று பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின.
அது இல்லை ரவி என்று விளக்கம் அளிக்க முயன்ற அவனை கண்களால் அமர்த்தினார் ராஜகோபால்.
பரவாயில்லை சார். ரவிக்கு தெரிஞ்சா என்ன? 3 வருஷமா எனக்கு எல்லாமே அவன்தான்.
டேய் ரவி நீ எங்க சானல்ல சேர்றதுக்கு முன்னாடி ஒரு இரண்டு வருஷம் இருக்கும். அப்ப ரெயின் டிவி டாப்ல இருந்தாங்க. கர்ணா ஸ்டோர்ஸ் இரண்டு வருஷம் விளம்பர கான்ட்ராக்ட். 13 கோடி ரூபாய். ரெயின் டிவிக்கு போக இருந்ததை நம்ம டிவிக்கு கொண்டு வந்தேன். அப்ப சீஃப் கேட்டாரு உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளு வாங்கித்தரேன். இந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டு மாடியில் தான் தங்கிருந்தேன். இந்த வீட்டு மேல ஒரு கண். இந்த வீடு வேண்டும் என்று கேட்டேன். டு மை சர்ப்ரைஸ் உடனே என் பேர்ல வாங்கி ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு. எனக்கு ஒரே ஷாக். அந்த நன்றி உணர்ச்சியில தான் நான் சீஃப்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கேன்.
இல்லை ரவி. ராஜேஷ்இதுக்கு தகுதியானவர் தான். அதவிடுங்க உங்க ஹெல்த் எப்படி இருக்கு?
பரவாயில்லை சீஃப். இன்னும் இரண்டு நாள்ல நான் ஆபீஸ்ல இருப்பேன்.
நீங்க ஆபீஸ்க்கு வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன் என்று கண்ணடித்தார்.
என்ன சீஃப் சொல்றீங்க? என்றான் ஆச்சர்யத்துடன்.
ரவி ஒன்றும் புரியாமல் சிரித்தான்.
உங்களுக்கு அந்த இமயமலை ப்ராஜெக்ட்காக ஒரு செக்ஸி செகரெட்டரியை ஏற்பாடு பண்ணியிருக்கேன் என்று நக்கலாக சிரித்தார்.
ரவி என்ன என்ன என்று கேட்டான்.
டேய் ரவி எப்ப பார்த்தாலும் ஆபிஸ்ல ஹெட்போன் வைச்சி பாட்டு கேட்டு கேட்டு உனக்கு காது செவிடாய் போச்சா என்றான்.
என்னடா சொல்ற என்று குழம்பி நின்றான் ரவி.
ஓகே. எனக்கு நேரம் ஆயிடுச்சு. உடம்பை பார்த்துக்கங்க். நாளை மறுநாள் உங்களை ஆபிஸ்ல சந்திக்கிறேன். வாங்க ரவி போகலாம்.
பை என்று சொல்லிவிட்டு குழப்பம் அகலாமல் ராஜகோபால் பின்னால் பூனை போல நடந்து சென்றான்.
ரங்கா டேபிளை க்ளீன் பண்ணிடுங்க. டிவியை ஆன் பண்ணிடுங்க. மழை எப்படி பெய்யுதுன்னு பாக்கனும்.
தொடரும்…