Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அண்டமும் குவாண்டமும் – 13 (கருந்துளையில் ஹோலோகிராம் – Holographic Universe)

அண்டமும் குவாண்டமும் – 13 (கருந்துளையில் ஹோலோகிராம் – Holographic Universe)

கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், முடிவில்லா ஈர்ப்புவிசையால் அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும் என்றார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒளி கூட அதன் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வரும் எதுவானாலும், அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று, அந்த ஒருமைப் புள்ளியுடன் சங்கமமாகிவிடும்.

கருந்துளையானது ஆரம்பத்தில் கையளவேயுள்ள மிகமிகச் சிறிய விட்டமுடையதாகத்தான் காணப்படும். அதனுள்ளே விண்வெளியில் உள்ளவை ஒவ்வொன்றாக இழுக்கப்படுவதால், அது படிப்படியாகப் பெரிதாகிப் பிரமாண்டமானதாக மாறிவிடுகின்றது. “மிகச்சிறிய அளவுள்ள கருந்துளைக்குள், எப்படி மிகப்பெரிய கோள்களோ, நட்சத்திரங்களோ புகுந்து கொள்ள முடியும்?” என்று நீங்கள் இப்போது சிந்திக்கலாம்.

இதற்கான பதிலில்தான் அண்டமும், குவாண்டமும் ஒன்றாக இணையும் செயல் இருக்கிறது. அண்டத்தில் பிரமாண்ட நிலையிலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றுக்கும், குவாண்டம் நிலையில் மிகமிகச் சிறிய அளவிலிருக்கும் உபஅணுத்துகள்களுக்கும் (Subatomic Particles) இடையிலான தொடர்பு கருந்துளையின் மூலம் ஏற்படுகிறது. ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் இந்தத் தொடரைக் கூட ஒரு கருந்துளையுடன் நான் ஆரம்பித்ததற்கு இதுவே காரணமாகவும் இருந்தது.

கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லை’ வரை யாரும் செல்லலாம் என்று முன்னர் பார்த்திருந்தோம். அந்த எல்லையில் கால் வைக்கும் வரை நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த எல்லையைத் தாண்டிக் கால்வைக்கும் போது, மீண்டு வரமுடியாமல் கருந்துளையின் மையம் நோக்கி இழுக்கப்படுவோம்.

அதனாலேயே அந்த எல்லைப் புள்ளி, ‘திரும்பவே முடியாத புள்ளி’ (The Point of no return) என்று சொல்லப்படுகிறது. திரும்பி வரமுடியாத அளவுக்கு இழுக்கக் கூடிய ஆற்றலாக, கருந்துளையின் மையமான ‘ஒருமைப் புள்ளி’ இருக்கிறது. “கருந்துளை மிகச் சிறியதாக இருந்தாலும், அதற்குள் மிகப்பெரிய நட்சத்திரம் எப்படிப் புகுந்து கொள்கிறது?” என்ற கேள்வி நமக்குத் தோன்றியதல்லவா? கருந்துளை சிறிதாக இருந்தாலும் அதன் மையத்தின் ஈர்ப்பு விசையும், அடர்த்தியும் முடிவில்லாததாக இருக்கும்.

ஒரு மிகச்சிறிய கருந்துளையின் அருகே இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் செல்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்வு எல்லையைத் தாண்டி உங்கள் வலதுகாலை வைக்கிறீர்கள். அப்போது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுவீர்கள். முதலில் உங்கள் கால்பகுதியை அந்த ஈர்ப்புவிசை இழுக்க ஆரம்பிக்கும்.

நீங்கள் அந்த ஈர்ப்பு விசையின் வீரியத்தால் ஒரு மெல்லிய நூலிழை போல காலிலிருந்து தலைவரை நேராக்கப்படுவீர்கள். ஆறடி நீளமுள்ள உங்கள் ஒவ்வொரு பாகமும் அதீத ஈர்ப்புவிசையினால், அணுக்களாகச் சிதைந்து பின்னர் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டு, காலிலிருந்து தலைவரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டப்பட்டு, பல கிலோமீட்டர்கள் நீளமான ஒரு மெல்லிய நூல் போல மையம் நோக்கி உள்ளே செல்வீர்கள்.

அதாவது மாவைக் குழைத்து அதை கைகளால் அழுத்தி அழுத்தி மெல்லிய ‘நூடுல்ஸ்’ இழை போல மாற்றுவோமல்லவா? அதுபோல, நீங்கள் மாற்றப்படுவீர்கள். மெல்லிய இழையென்றால், உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு மெல்லிய இழையாக நீட்டப்பட்டு மையம் நோக்கி இழுக்கப்படுவீர்கள். இது போலவே, ஒரு நட்சத்திரமும் மிக மெல்லிய பகுதியாக நீட்டப்பட்டு கருந்துளையினால் உறிஞ்சப்படும்.

உலகிலேயே மிகப்பெரிய கட்டடம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்டடம் சீமெந்துக் கற்களினாலோ, செங்கற்களினாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். செங்கற்களும், சீமெந்துக் கற்களும் அணுக்களால் உருவானவை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டடம் கட்டப்பட்ட கற்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், அவற்றில் மொத்தமாக ட்ரில்லியன் மடங்கு ட்ரில்லியன் அணுக்கள் இருக்கின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களின் பருமன்தான் அந்தக் கட்டடத்தின் பருமனாக இருக்கும். இப்போது, ஒரு அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அணுவைப் பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதானது என்று கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதான அணுவினது அணுக்கரு ஒரு பந்தின் அளவில்தான் இருக்கும். அணுவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு சிறியது அணுக்கரு. அணுவின் கரு தவிர்ந்து மிகுதி எல்லாமே வெற்றிடம்தான்.

அதாவது, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதில் 99.9999 வீதமான பகுதி வெற்றிடமாகத்தான் இருக்கும். எஞ்சிய பகுதியில்தான் அணுவின் அணுக்கரு இருக்கிறது. அந்த அணுக்கருவினில்தான் அணுவின் மொத்த எடையும், உபஅணுத்துகள்களும் இருக்கின்றன. இப்போது, அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அதனுள் 1% பகுதியில்தான் உபஅணுத்துகள்கள் அனைத்தும் இருக்கின்றன. எஞ்சிய 99% வெற்றிடமாகத்தான் இருக்கின்றது. அணுவும் வெற்றிடம். அணுக்கருவும் வெற்றிடம். இதைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் நான் சொல்ல வருவது எல்லாமே புரிந்துவிடும்.

உலகிலேயே பெரிதான அந்தக் கட்டடத்தை மீண்டும் எடுத்துக் கொள்வோம். அதன் ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களில் உள்ள அத்தனை அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தால், ஒரு குண்டூசி முனையளவு பருமன் கூட அவற்றிற்கு இருக்காது. அந்த அணுக்கருக்கள் அனைத்தையும் பிளந்து, அவற்றினுள் உள்ள உபஅணுத்துகள்களை மட்டும் ஒன்று சேர்த்தால், கண்ணுக்கே தெரியாத மிகமிகமிகச் சிறிய புள்ளியின் பருமனுடன் அவை இருக்கும்.

உலகிலேயே பெரிய அந்தக் கட்டடம் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டால், கண்ணுக்கே தெரியாத ஒரு புள்ளியின் பருமனில்தான் இருக்கும். அந்தக் கட்டடம் கருந்துளையொன்றால் இழுக்கப்பட்டு, அதன் ஒருமை மையத்துடன் சேர்ந்தாலும், மையத்தின் பருமன் அதிகரிக்கவே மாட்டாது. ஒரு நட்சத்திரம் உபஅணுத்துகள்களாகச் சிதைந்தாலும் அவற்றின் மொத்தப் பருமன் கூடக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியின் அளவாகவே இருக்கும்.

நட்சத்திரங்களும், கோள்களும் கருந்துளை மையத்தில் ஒன்று சேர்ந்தும், அந்த ஒருமைப் புள்ளி மிகமிகமிகச் சிறிதாகவே இருப்பதன் காரணம் இதுதான். கருந்துளையின் மையப்புள்ளி மிகச்சிறியதாக இருந்தாலும், எல்லையில்லா அடர்த்தியையும், ஈர்ப்புவிசையயியும் கொண்டிருப்பதற்கான காரணமும் இதுதான். இப்படிப்பட்டதொரு நிலையில்தான், அண்டம் உருவாகக் காரணமான, ‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர் இருந்த ஒருமைப் புள்ளியும் இருந்தது. அதனால்தான் அதைக் ‘குவார்க் கூழ்’ (Quarck soup) என்றார்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top