Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அண்டமும் குவாண்டமும் – 5 (விண்வெளியில் கருந்துளை)

அண்டமும் குவாண்டமும் – 5 (விண்வெளியில் கருந்துளை)

பூமியில் இருந்துகொண்டு, தலையை உயர்த்தி மேல் நோக்கி நாம் பார்க்கும் போது, இரண்டு விதமான வானங்களைப் பார்க்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பலர் இந்த வித்தியாசத்தைத் தங்கள் வாழ்நாளில் புரிந்து கொண்டதே இல்லை.

தலைக்கு மேலிருக்கும் வானம்தானே என்று, அது பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம் நாம். உண்மையைச் சொல்லப் போனால், இரவு வானத்துக்கும், பகல் வானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் மண்ணுக்கும், மலைக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘Sky’ மற்றும் ‘வானம்’ ஆகிய சொற்களை இரவு, பகல் இரண்டு வானங்களையும் குறிப்பதற்கு, ஒரே சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், நாம் பகலில் பார்க்கும் வானம் பூமியிலிருந்து வெறும் 300 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது.

இரவு வானமோ பல லட்சம் ஒளிவருடங்கள் தூரம் வரை செல்கிறது. நம் பூமி, தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புக் கவசமான அட்மாஸ்பியரில் (Atmosphere), சூரிய ஒளி தெறித்துச் சிதறும் பரப்பையே நாம் ‘வானம்’ (Sky) என்கிறோம். அந்த நீலநிற வானத்தினூடாக மேலே நம்மால் சூரியனையும், சந்திரனையும், சில கோள்களையும் தவிர வேறு எதையும் பார்க்க முடிவதில்லை.

இதெல்லாம் சூரிய ஒளி இருக்கும் வரைதான். சூரிய ஒளி மறைந்து இருட்டானதும் நாம் பார்ப்பது விண்வெளியை (Space). விண்வெளியில் பல ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் உள்ளவற்றைக் கூட, நம் வெற்றுக் கண்களால் பார்க்க முடிகிறது.

நம் கண்களுக்குத் தெரியும் விண்வெளி, முழுமையான அண்டத்தின் (Universe) மிகச் சிறிய ஒரு பகுதிதான். அண்டமென்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட 92 பில்லியன் ஒளிவருடங்கள் பரந்து விரிந்திருப்பது. இன்னும் விரிந்து கொண்டே இருப்பது.

இங்கு ஒளிவருடம் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். ஒளியானது ஒரு செக்கனில் 300000 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு பயணம் செல்லக் கூடியது. அவ்வளவு வேகம். அண்டத்திலேயே மிகை வேகத்துடன் செல்லக் கூடிய ஒன்று ஒளிதான்.

இதுவரை உள்ள அறிவியலின்படி, ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. சரியாகக் கவனியுங்கள் இந்த ஒளியானது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லும். அப்படியாயின் இது நிமிடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும், மணிக்கு எவ்வளவு தூரம் செல்லும், அப்படியே ஒரு வருடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்று பார்க்கும் போது கிடைக்கும் கிலோ மீட்டர்களின் அளவுதான் ஒரு ஒளிவருடம்.

நீங்களே ஒரு பேனாவை எடுத்துப் பெருக்கிப் பாருங்கள். அப்படி 92 பில்லியன்கள் ஒளிவருடங்கள் தூரத்துக்கு அகண்டிருக்கிறது நம் பேரண்டம். கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவு இது. நாம் வாழும் பூமியோ வெறும் 12750 கிலோமீட்டர்கள் அகலமானது. அண்டத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமேயில்லை. உங்கள் வலதுகையை நீட்டி, சுட்டுவிரலால் வானை நோக்கி சுட்டிக்காட்டுங்கள்.

உங்கள் விரல் சுட்டிக்காட்டும் அந்தச் சின்னஞ் சிறிய பகுதியில் மட்டும் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அண்டம் எவ்வளவு பெரிது என்பது இப்போது புரிகிறதல்லவா? இந்த அண்டத்தில் பூமியைப் போன்ற கோள்கள், சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல், வேறு பலவும் இருக்கின்றன. காலக்ஸிகள் (Galaxies), நெபுலாக்கள் (Nebulas), க்வேஸார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars) என்று பல விதமானவை இருக்கின்றன. இதில் ஒன்றுதான் கருந்துளைகள் (Blackholes).

இந்தக் கருந்துளைகள் பற்றித்தான் நாம் கடந்த பதிவில் பார்க்க ஆரம்பித்தோம். கருந்துளை என்பது பற்றிச் சொன்ன போது, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்ற கருந்துளையின் நுழைவாயிலைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதை வைத்து ஸ்டீபன் ஹாக்கிங்கும், லெனார்ட் சஸ்கிண்டும் நடத்தும் யுத்தம் பற்றியும் சொன்னேன். இனி இவற்றைப் பற்றி விரிவாக, விளக்கமாக நாம் பார்க்கலாம்.

விண்வெளி என்பது நாம் நினைப்பது போல, முப்பரிமாண வடிவத்தில் உள்ளதல்ல. தட்டையானது. அலையில்லாத ஒரு கடலில் நீரின் மேற்பரப்பு எப்படிப் பரந்து விரிந்து காணப்படுகிறதோ, அப்படித்தான் விண்வெளியும் இருக்கும். கடலின் மேற்பரப்பு நீரால் ஆனது போல, விண்வெளியும் மெல்லிய சவ்வு போல, அதாவது ஒரு பலூனின் மென்சவ்வு போலக் காணப்படும். இந்த விண்வெளியின் மேற்பரப்பில்தான், நான் மேலே சொன்ன நட்சத்திரங்கள்.

காலக்ஸிகள், நெபுலாக்கள், க்வேஸார்கள், கருந்துளைகள் என அனைத்தும் இருக்கின்றன. நீரின் மேற்பரப்பில் பூக்களைத் தூவிவிட்டால் எப்படி அந்த மேற்பரப்பில் பூக்கள் மிதந்து கொண்டிருக்குமோ, அப்படி இவையெல்லாம் விண்வெளியில் காணப்படுகின்றன. விண்வெளியில் காணப்படும் இவை சாதாரணமானவை அல்ல. மிகப் பிரமாண்டமானவை.

மிகப் பெரிய எடையைக் கொண்டவை. அவற்றின் எடைக்கு ஏற்ப, விண்வெளியின் மேற்பரப்பும் கீழ் நோக்கி அமிழ்ந்திருக்கும். ஒரு பலூனை விரல்களால் அழுத்தும் போது ஏற்படும் வட்டவடிவப் பள்ளம் போல அவை அமிழ்ந்திருக்கும். இப்படித்தான் கருந்துளையும் விண்வெளியில் அமைந்திருக்கிறது. கருந்துளையானது ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon), ‘ஒருமை’ (Singularity) என்று இரண்டு மிக முக்கிய பகுதிகளைக் கொண்டது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top