‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வரப்போகிறது என்ன, வந்துவிட்டது.
எனவே ‘குவாண்டம் என்றால் என்ன?’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன்.
இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
குவாண்டம் என்றால் என்ன? என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது? என்பதுவரை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். குவாண்டத்தின் மிகச் சிக்கலான ஒவ்வொரு முடிச்சையும், ஒவ்வொரு கட்டுரை மூலம் நாம் அவிழ்த்துக் கொள்ளலாம்.
கருந்துளைகள் (Blackholes) இருக்கின்றனவா?
இன்றைய தேதியில், அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம், ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்பதுதான். நாஸா உட்படப் பல ஆராய்ச்சி நிலையங்களில், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இப்படியானதொரு சந்தேகம், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும்தான் நமக்கு ஏற்படுத்தும். ஆனால் அவ்வளவு சுலபமாக நாம் இந்தச் சந்தேகத்தைச் சாதாரணமானது என்று சொல்லி ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது.
அதற்குக் காரணம், இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் ஒரு சாதாரணமான ஆளே கிடையாது என்பதுதான். உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) என்பவர்தான் இந்தச் சந்தேகத்தையே எழுப்பியுள்ளவர்.
தொடரும்…