ஆனந்தோட லவ் மேட்டர் பற்றி அவங்ககிட்ட சொன்னேன். அதோடு, ஹனிமூன் கொண்டாடுறதுக்காக ஊட்டிக்கு வரும் குணசீலன் மற்றும் அமுதா பற்றி தெரிஞ்சுகிட்டு, ஏதோ ஒரு ப்ளானோடத்தான் அவர் ஊட்டிக்குப் போறாரு; அந்தத் திட்டத்தால அவருக்கு எந்தப் பாதிப்பும் நேரக்கூடாது. அதேநேரம், என்னோட உயிர்த்தோழி சாவுக்கு காரணமான குணசீலன் நிச்சயம் தண்டிக்கப்படணும். அவனால, அவன் வாழ்க்கையில புதுசா வந்து இருக்குற அமுதா பாதிக்கப்படக் கூடாது. அதே அமுதா, இந்த ஆனந்த்துக்கு மனைவியா ஆகணும். அதுக்கு நான் அவர்கூடப் போய்த்தான் ஆகணும்னு சாந்திகிட்ட நிறைய விளக்கங்களுடன் சொன்ன பிறகுதான் அவங்க இதற்கு ஒப்புக்கொண்டாங்க.”
ஷ்ரவ்யா இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கேட்டார்.
“அப்படீன்னா… சாந்தி இப்போ எங்கே இருக்காங்க? அவங்க, ஆனந்த் கூட ஊட்டிக்கு வரலங்கறது அவங்களை அனுப்பி வைப்பதாகக் கூறி பணமும் வாங்கிக்கொண்ட கும்பலுக்குத் தெரியும்”
“தெரியாது சார். ஊட்டிக்குப் போகுறதா சொல்லிட்டுக் கிளம்பின சாந்தி, திருப்பூர் பக்கத்துல இருக்கற அவங்களோட சொந்த ஊருக்குப் போய் இருக்காங்க. அவங்களை அங்கே அனுப்பி வெச்சதில எனக்கு இன்னொரு திருப்தியும் கிடைச்சிருக்கு. காதலனால ஏமாற்றிச் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, விபச்சாரக் கும்பல்கிட்ட மாட்டிக்கிட்ட அவங்க 10 மாசத்துக்குப் பிறகு இப்பதான் சொந்த ஊருக்கு அப்பா, அம்மாவை பார்க்கப் போறாங்க. ஊட்டிக்கு நான் சாந்திங்கற பேருல வந்ததுனால, அவங்களுக்கு விபச்சார கும்பல்கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைச்சிருக்கு. என்னோட உயிர்த்தோழி லேகா உயிர என்னால காப்பாற்ற முடியல. அதே நேரத்துல, விபச்சாரக் கும்பல்கிட்ட சிக்கித் தினமும் செத்துக்கிட்டு இருந்த ஓர் அப்பாவிப் பெண்ணை காப்பாற்றினதில எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!”
ஷ்ரவ்யாவின் பேச்சில் ஆழ்ந்த அர்த்தமும், எதையோ சாதித்துவிட்ட திருப்தியும் வெளிப்பட்டது.
“மிஸ் ஷ்ரவ்யா… உங்ககிட்ட இன்னொரு முக்கியமான கேள்வி. ஆனந்த் ஆபீஸ்க்கு நீங்க போனப்போ, உங்களோட மொபைல் நம்பர்தானே அவருக்கு தவறுதலா மாறிப்போய் கிடைச்சது. அதே நேரத்துல, சாந்தி நம்பர் உங்ககிட்ட எப்படி வந்தது?”
“எதார்த்தமா நடந்த தவறுதான் இது. நான் அங்கிருந்த ஆபீஸ் பையன்கிட்ட ஆனந்த் மொபைல் நம்பரை நியூஸ் பிரிண்ட் நோட் பேடில் எழுதி, அந்தத் தாளைக் கிழித்து எடுத்து வரும்போது, அதில் இன்னொரு நம்பரும் இருந்தது. அதாவது, நான் அங்கே போவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாந்தியின் மொபைல் நம்பரை ஆனந்த் வாங்கி, அதை அந்த நோட் பேடில் எழுதி வைத்திருக்கிறார். அது தெரியாமல் நான் அந்தத் தாளை கிழித்துக் கொண்டு வந்து விட்டேன். ஆனந்த் என்னிடம், சாந்திங்கற பேருல பேசின பிறகுதான், நாம் கிழித்து எடுத்துவந்த தாளில் உள்ள நம்பர் சாந்தியுடையது என்று முடிவு செய்தேன். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்ட போது சாந்தியே பேசினார். அவங்களைத் தனியா ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு வந்து பேசும்போதுதான், நாங்களும் ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தோம்.”
“ரொம்ப நன்றி ஷ்ரவ்யா. நீங்க தைரியமா உண்மைகளைச் சொல்றத பார்க்கும் போது, உங்களுக்கும் நடந்த கொலைக்கும் தொடர்பு இருக்காதுன்னு நினைக்கறேன். அடுத்ததா ஆனந்த்கிட்ட கொஞ்ச நேரம் விசாரணை பண்ண வேண்டியிருக்கு. நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க…” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் இன்ஸ்பெக்டர் அறையில் இருந்து வெளியேறினாள் ஷ்ரவ்யா.
அவளுக்கு எதிரே மறுபடியும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஆனந்த் வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒருவித பதற்றம் தெரிந்தது. “ஒருவேளை குணசீலனைக் கொன்றது இவளாகத்தான் இருக்குமோ..!” என்றுகூட நினைத்தான்.