“மேடம்… இன்னிக்கு விசாரணையை உங்ககிட்டே இருந்தே ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க ஒரு கால் கேர்ள். ஒரு வார அக்ரிமென்ட் போட்டுதான் உங்களை இங்கே கூட்டி வந்திருக்கறதா ஆனந்த் சொல்றாரு. உங்களோட நடவடிக்கைகளை பார்த்தால் ஒரு கால் கேர்ள் மாதிரி தெரியல. அதனால உண்மையை மறைக்காமல் சொல்லிடுங்க. எங்க விசாரணையும் ஈஸியா முடிஞ்சிடும்…” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது இருக்கையில் பலமாக அமர்ந்து கொண்டு ஆனந்தை நிமிர்ந்து பார்த்தார்.
“மிஸ்டர் ஆனந்த். இந்த விசாரணையோட முக்கியச் சாட்சியா இருக்கற வீடியோ காட்சிகளை நீங்க இன்னிக்கு மறுபடியும் பாக்கறதுக்கு முன்னாடி ஷ்ரவ்யா கிட்ட கொஞ்சம் விசாரணை நடத்த வேண்டியது இருக்கு. நீங்க கொஞ்சநேரம் வெளியில வெயிட் பண்ணிட்டு இருங்க. விசாரணை முடிஞ்சதும் கூப்பிடுறேன்.”
இன்ஸ்பெக்டர் சொல்லவும் எழுந்து நகர்ந்தான் ஆனந்த். அவனது கண்களில் ஒருவித கலவரம் தெரிந்தது.
“ஷ்ரவ்யா… நீங்க யாருங்கற விசாரணையில நாங்களும் ஈடுபட்டு இருக்கோம். நிச்சயமா, ஆனந்த் சொல்றபடி நீங்க கால் கேர்ள் இல்லை. இதுதான் உண்மை. அப்படீன்னா நீங்க யாரு? நீங்க ஏதோ ஒரு திட்டத்தோடதான் இங்கே வந்து இருக்கீங்க. அதுவும், ஆனந்துக்கு தெரியாம, அவரோட கால் கேர்ளா வந்து இருக்கீங்க? எதுக்காக நீங்க இவ்ளோ ரிஸ்க் எடுக்கறீங்க?”
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் கேள்வியை உள்வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா சிறிது நேரம் மவுனமாக எதையோ யோசித்தாள். பிறகு, மெள்ள வாய் திறந்தாள்.
“இன்ஸ்பெக்டர்… நான் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு. என்னோட சொந்த ஊர் மதுரை. சென்னையில என்ஜினீயரிங் காலேஜ்ல இந்த வருஷம்தான் படிப்பை முடிச்சேன். எனக்கு ஆனந்தைவிட குணசீலனை நன்றாகத் தெரியும். அதுவும், என் தோழி லேகா மூலமாகத்தான். இவளும் என்கூட ஒண்ணா படிச்சவதான். நானும் லேகாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருப்போம். எங்க ரெண்டு பேரையும் அக்கா, தங்கச்சின்னே ஹாஸ்ட்டல்ல உள்ள எல்லோரும் சொல்வாங்க. லேகாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நாங்க ரெண்டு பேரும் பிரைவேட் லேடீஸ் ஹாஸ்ட்டல்ல ஒண்ணா தங்கியிருந்து படிச்சிட்டு வந்தோம்.
ஒருநாள் ஜூரம் வந்ததுனால என்னால காலேஜ்க்கு போக முடியல. அன்னிக்கு ரோட்ட கிராஸ் பண்றப்போ பைக்ல வந்த ஒருத்தன் லேகா மேல இடிச்சிட்டான். பைக் மோதின வேகத்துல இவ கீழே விழுந்துட்டா. அப்போதான் அவ பக்கத்துல வேகமா வந்து நின்ன கார்ல இருந்து குணசீலன் இறங்கி இருக்கான். மயக்கமாகிக் கிடந்த லேகாவை தன்னோட கார்ல தூக்கிப் போட்டுட்டு போய் இருக்கான். அவ தன்னோட ப்ரெண்டுன்னும், விளையாடும்போது தவறி கீழே விழுந்துட்டான்னும் பொய் சொல்லி ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கான். லேசான காயம்தான் லேகாவுக்கு.
பைக் மோதுன அதிர்ச்சியிலதான் மயக்கமாகி இருக்கா. கொஞ்ச நேரத்துலயே அவ கண் முழிச்சி இருக்கா. தனக்கு உதவினது குணசீலன்னு தெரிஞ்சப்போ, யாருன்னே தெரியாத தனக்கு உதவின அவனோட மனிதாபிமானத்துக்கு தேங்ஸ் சொல்லி இருக்கா. இந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்க ரெண்டு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒருகட்டத்துல குணசீலன் லேகாவை காதலிக்கறதா சொல்ல… இவளுக்கு கொஞ்சம் தயக்கம். என்கிட்ட வந்து அதுபத்தி சொன்னா. “உன் மனசுக்கு என்ன தோணுதோ அதைச் செய்”ன்னு சொன்னேன்.
மறுநாள் அவ காலேஜ்க்கு வரலன்னு சொல்லிட்டு லீவு போட்டா. நான் வழக்கம்போல் காலேஜ்க்கு போயிட்டேன். லேகாவோ குணசீலனோட ஈ.சி.ஆர். ரோட்ல இருக்கற ரிசார்ட் ஒன்றுக்கு போய் இருக்கறா. தன் மனசாட்சிபடி குணசீலனை தாராளமா லவ் பண்ணலாம்னு அவ முடிவெடுத்து இருக்கா. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவன் அவளை அங்கே அழைச்சிட்டுப் போய் இருக்கான். பார்ட்டிங்கற பேர்ல ஒரு ரூமை அந்த ரிசார்ட்ல புக் பண்ணி இருக்கான் குணசீலன்.
லேகாவுக்காகவே ஸ்பெஷலா உணவு எல்லாம் ஆர்டர் பண்ணி, அவ எதிர்பார்க்காத உலகத்துக்கே அழைச்சிட்டு போய் இருக்கான். கடைசியா அவ குடிச்ச கூல் டிரிங்ஸ் கோக் என்பது மட்டும்தான் அவளுக்கு ஞாபகம். மறுநாள் காலை வரை என்ன நடந்தது என்பதே தெரியாமல் போனது. லேகாவை அடையணும்னு நினைச்சே குணசீலன் அங்கே அழைச்சுட்டு போய் இருக்கான். கோக் குடிச்சி மயங்கின லேகாவை அவள் உணர்விழந்த நிலையிலேயே கற்பழிச்சதோட மட்டுமில்லாம, அவளை ஆடையில்லாம போட்டோ, வீடியோவும் எடுத்து இருக்கான் அந்த ராஸ்கல்.
மறுநாள் காலையில் கண் விழிச்ச லேகா, தனக்கு என்னமோ நடந்ததாக உணர… அவள் அருகே படுத்திருந்த குணசீலன் பலமாக சிரித்து இருக்கிறான்.
“என்ன லேகா… கோக் குடிச்சி மயங்கிட்ட? அதுல கொஞ்சம்தான் ஒயின் மிக்ஸ் பண்ணி இருந்தேன். அதுக்கே நீ இப்படி ஆவேன்னு எதிர்பார்க்கல” என்று அவன் சொன்னாலும், அவளுக்குள், ஏதோ தப்பு நடந்து விட்டதாகவே ஒரு உறுத்துதல் இருந்தது. ஆனா, அவளால தனக்கு நேர்ந்ததை சட்டுன்னு உணர முடியல.
குணசீலனோடு சண்டையிடும் அளவுக்கு அவளுக்கு அப்போது தெம்பு இல்லாமல் போய்விட்டதால், அவனோடு சம்பிரதாயத்துக்காக கோபப்பட்டுவிட்டு திரும்பி இருக்கிறாள். அவள் ஹாஸ்டலுக்கு திரும்பின பிறகு அவளோட மொபைலுக்கு குணசீலன் எம்.எம்.எஸ். அனுப்பி இருக்கான். ஆடையின்றி படுத்து இருந்த லேகாவை 5 நிமிடங்களுக்கும் மேலாக காட்டியது அந்த வீடியோ. அதிர்ச்சி ஆன லேகா, குணசீலனை அவனோட ஆபீஸ்க்கே பார்க்க போய் இருக்கா.
அங்கே அவ போட்ட கூச்சலால தனக்கு அவமானம் ஏற்பட்டதா நினைச்ச அவன், அவளை பழிவாங்க தன்னோட ஃபேஸ்புக்லேயும் லேகாவின் அந்த மாதிரியான வீடியோ மற்றும் படங்களை போஸ்ட் பண்ணிட்டான். எங்க காலேஜ் பையன் ஒருத்தன் குணசீலனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ப்ரெண்ட் ஆக இருக்க… இவன் அந்த வீடியோ மற்றும் படங்களை எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் டேக் பண்ணிவிட்டான்.
அதன் விளைவு… ஹாஸ்டல்லயே தூக்கில் தொங்கிவிட்டாள் லேகா. என் உடன் பிறவா சகோதரியாக வலம் வந்த அவள், இப்போது இல்லாமலேயே போய்விட்டாள்…”
இதற்கு மேலும் ஷ்ரவ்யாவால் தெம்பாகப் பேச முடியவில்லை. அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய்க் கொட்டியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் விழியோரமும் ஈரமானது.