“வெல்கம் மிஸ்டர் ஆனந்த் அன்ட் ஷ்ரவ்யா. அக்யூஸ்ட் தப்பி ஓடி தலைமறைவாயிட்டா… இன்னும் ஒரு வாரத்துக்கு தலைவலி இருக்குமேன்னு நெனைச்சேன். நல்லவேளை, நீங்களாவே வந்து மாட்டிக்கிட்டீங்க..!”
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் பேச்சு ஆனந்தையும், ஷ்ரவ்யாவையும் நடுங்கச் செய்தது. என்றாலும், ஆனந்துக்குக் கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.
“இன்ஸ்பெக்டர்… நான் உண்மையை சொல்லிடுறேன். நீங்க சொன்னபடி நான்தான் குற்றவாளி. அவங்க ரெண்டு பேரோட சாவுக்கும் நான்தான் காரணம். ஆனா… ஷ்ரவ்யாவுக்கும் அந்தக் கொலைக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. இவங்க யாரு, எப்படி என்கூட வந்தாங்கங்கற கேள்விக்கு இந்த இடத்துல வெச்சு என்னால விளக்கம் தர முடியாது. தப்பு பண்ணினது நான்தான்; என்னை மட்டும் கைது பண்ணுங்க. ஷ்ரவ்யாவை கேஸ்க்கு உள்ளே இழுக்காதீங்க. ப்ளீஸ்..! இவங்களை நீங்க இந்த கேஸ்க்கு உள்ளே கொண்டு வந்தீங்கன்னா… மீடியாகாரங்க இன்னும் பரபரப்பா எழுதுவாங்க. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுச்சுன்னா… ஏற்கனவே வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கற இந்த ஷ்ரவ்யா, இனிமே இங்கே வாழ முடியாமலே போயிடும்..!”
“ஸ்டாப் மிஸ்டர் ஆனந்த். நான் விசாரணையையே இன்னும் ஆரம்பிக்கல. அதுக்குள்ள நீங்க எல்லா உண்மையையும் கொட்டிட்டீங்க. ஆனா, உண்மையான குற்றவாளி நீங்க ரெண்டு பேருமே கிடையாது. அதனால, அவசரப்பட்டு வார்த்தையை விடாம பார்த்துக்கோங்க.”
“நான் குற்றவாளி இல்லையா?”
“ஆமா… அவங்க ரெண்டு பேரோட சாவுக்கும் நான்தான் காரணம்னு சொன்னீங்க இல்லையா? அது தப்பு. ஒருத்தர்தான் செத்து இருக்காரு. ஐ மீன்… இறந்தது ஃசாப்ட்வேர் என்ஜினீயர் குணசீலன்தான். உங்களோட முன்னாள் காதலி, ஸாரி… குணசீலனோட இப்போதைய மனைவி அமுதா அல்ல. இந்த நேரத்துல, நான் இன்னொரு உண்மையையும் உங்களுக்கு சொல்லியே ஆகணும். சட்டப்படி நீங்க கொலையும் செய்யல.”
“நான் இல்லன்னா… வேறு யாரு?”
“இதோ… உங்களுக்கு பக்கத்துல நிக்கற இந்த ஷ்ரவ்யாகூட இருக்கலாம்.”
“இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க இன்ஸ்பெக்டர். ஷ்ரவ்யா அப்பாவிப் பொண்ணு. அவளை இங்கே அழைச்சுட்டு வந்ததே நான்தான். எனக்கும் அமுதாவுக்கும்தான் பிரச்னை இருந்துச்சே தவிர, இவளுக்கும் அவளுக்கும் பிரச்னையே இல்லை!”
“நீங்க சொல்றது கரெக்ட்தான் ஆனந்த். நீங்க இங்கே அழைச்சுட்டு வந்த ஷ்ரவ்யாவுக்கும், உங்கள் முன்னாள் காதலி அமுதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனா… குணசீலனுக்கும், இந்தப் பொண்ணுக்கும் நிறையவே சம்பந்தம் இருக்குது. அந்த சம்பந்தம்தான், குணசீலனை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியோடு இவளை இங்கே வரவழைத்தது. இதுதான் உண்மை.”
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படிச் சொன்னதை ஷ்ரவ்யா மறுப்பாள் என்று நினைத்தான் ஆனந்த். ஆனால், அவளோ, மவுனம் சம்மதத்துக்கான அறிகுறி என்பது போல் அமைதியாகித் தலைகுனிந்தாள்.
தொடரும்…