Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 23
இரண்டாம் தேனிலவு – 23

இரண்டாம் தேனிலவு – 23

“ஆனந்த்… எனக்கு இந்த பொட்டானிகல் கார்டன் போர் அடிக்குது. வேற எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போங்க…” மதியம் 12 மணி தாண்டி கடிகாரம் ஓடியதுகூட தெரியாமல் ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகில் லயித்துக் கிடந்த ஆனந்த்தை உசுப்பி விட்டாள் ஷ்ரவ்யா.

“என்ன ஷ்ரவ்யா… அப்படியொரு வார்த்தை சொல்லிட்ட? நாள் முழுக்க இந்த பூங்காவோட அழகுல மூழ்கிக் கிடக்குற ஜோடிகள் எத்தனையோ பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, அங்கே தோளோடு தோள் உரசி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுகூட அடுத்தவர்கள் பார்வைக்குத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் ஜோடியைப் பார்… நாம இங்கே நுழையும் போதே அவர்கள் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த பூங்கா போர் அடிக்கவில்லை. உனக்கு மட்டும் எப்படி போர் அடித்தது?” பதிலுக்கு ஷ்ரவ்யாவை சீண்டிவிட்டான் ஆனந்த்.

“அவங்கள பார்த்தாலே தெரியல; புதுமணத் தம்பதிகள்னு! அதான் கொஞ்சிக் கொஞ்சி பேசிட்டு இருக்காங்க…” என்றாள் ஷ்ரவ்யா.

“அவங்களுக்கு மேரேஜ் ஆகி, குறைந்த பட்சம் எப்படியும் ஒரு வாரம் இருக்கலாம். அவங்களே இப்படிக் கொஞ்சிட்டு இருக்கும்போது… நேற்று காலையிலதான் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாம எப்படி இருக்கணும்?”

“ஓ… உங்களுக்கு இந்த ஆசையெல்லாம் இருக்குதா–? அவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி மொபைல்ல மணிக்கணக்கா பேசி இருப்பாங்க. ஏன்… அவங்களுக்கு பஸ்ட் நைட்கூட நடந்து இருக்கும். அந்தப் புரிதல்ல இப்படி பேசிட்டு இருக்கலாம் இல்லீயா–?”

“சரி சரி… நீ சொல்ல வர்ற விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். இன்னிக்கு நைட்டே, ஏன்… பகல்லயே அதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்.”

“ஏதோ… ஏற்பாடு பண்ணிடுறேன்னு சொன்னீங்களே… என்ன ஏற்பாடு பண்ணப் போறீங்க–?” ஆனந்த் எதற்காக அப்படிச் சொன்னான் என்பது தெரிந்தும், தெரியாதது போல் கேட்டாள் ஷ்ரவ்யா.

“அது சஸ்பென்ஸ். அதுக்கு முன்னாடி, இன்னொரு அழகான விஷயத்தை உனக்காகச் சொல்லப் போறேன்.”

“என்ன விஷயம்?” ஆனந்துக்கு மிக அருகில் வந்து ஆர்வமாகக் கேட்டாள்.

“இந்தப் பூங்கா போர் அடிக்குதுன்னு சொன்னல்ல… உண்மையிலேயே போர் அடிக்காம இருக்கத்தான் இந்த பூங்காவையே ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினாங்க…” என்று சொல்லி நிறுத்தினான் ஆனந்த்.

“இவ்ளோ புள்ளிவிவரமா சொல்றீங்களே… ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே, ஊட்டி பத்தின கைடு வாங்கி படிச்சி, கரைச்சிக் குடிச்சிட்டீங்களாக்கும்–?”

“ஆமா… நான் ஒரு இடத்துக்கு போறேன்னா, அந்த இடத்தப் பத்தின விவரங்களை முதல்ல சேகரிச்சு தெரிஞ்சுக்கறது என்னோட வழக்கம். அது, பல வழிகள்ல உதவியா இருக்கும். இப்போ, உனக்கு கூட என் மூலமாக ஊட்டி பத்தின பல விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும் இல்லீயா—? அந்த வகையில, இதை ஒரு சமூகசேவைன்னு கூட நெனைச்சிக்குவேன்.”

“நான் செய்யறது சமூகசேவைன்னு நாமலே சொல்லிக்கக்கூடாது. அடுத்தவங்கதான் அதை பெருமையாச் சொல்லணும். ஏதோ, இந்தப் பூங்கா பத்தி சொல்ல வந்தீங்க… அதை முதல்ல சொல்லுங்க. அதுக்கு அப்புறம், நீங்க செய்யறது சமூகசேவையா, இல்லையான்னு நான் சொல்றேன்…” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தின் இடது கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.

வழக்கம்போல் ஊட்டி தாவரவியல் பூங்கா பற்றிய புள்ளிவிவரத்தைச் சொன்னான் ஆனந்த்.

“1847-ஆம் ஆண்டு இந்தப் பூங்காவை நிறுவினாங்க. இதை வடிவமைச்சவர் வில்லியம் கிரஹாம் மெஹ்வார் என்கிற ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர். ஆரம்பத்துல இந்தப் பூங்கா காய்கறித் தோட்டமாகத்தான் இருந்துச்சு. கோடை காலத்துல சென்னையோட வெயிலை தாங்கிக்க முடியாம இங்கே வந்து குடியேறின ஆங்கிலேய அதிகாரிகள், பிரபுக்கள், ராணுவ அதிகாரிகளுக்கு தேவையான உணவுகள் இங்கே விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்தே தயாரானது.

இப்போ 22 ஹெக்டேர் பரப்பளவுள பரந்து விரிஞ்சி அமைஞ்சிருக்கு இந்தப் பூங்கா. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்துல இந்தப் பூங்கா அமைஞ்சிருக்கறதுனால எப்போதுமே இங்கே குளுகுளுன்னு இருக்கும். கோடை காலங்கள்லதான் இந்த குளுமையை நம்மால அனுபவிக்க முடியும். மழை காலங்கள்ல குளுமைக்கு பதிலா கடும் குளிர் இருக்கும். அந்த நேரங்கள்ல இங்கே மணிக்கணக்குல உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது. மீறி பேசிட்டு இருந்தா… சென்னையில வாழக்கூட நம்மள மாதிரியானவங்களுக்கு ஜன்னியே வந்துவிடும்…” என்றான் ஆனந்த்.

“பரவாயில்ல… ஊட்டி பற்றி நல்லாவே தகவல் சொல்றீங்க. இதைச் சமூகசேவைன்னே நான் ஒத்துக்கறேன். மத்தவங்க ஒத்துக்கறாங்களா, இல்லையான்னு எனக்குத் தெரியாது…” என்று கைவிரித்தாள் ஷ்ரவ்யா.

அப்போது ஆனந்த் அருகில், 28 வயது மதிக்கத்தக்க ஆணும், 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் வந்து நின்றார்கள், வெகுநேரம் மறைமுகமாக அமர்ந்தபடி பேசிக்கொண்டு ஆனந்த்- ஷ்ரவ்யாவின் கவனத்தை ஈர்த்த ஜோடிதான் அவர்கள். 28 வயது மதிக்கத்தக்க ஆணே பேசினான்.

“ஸார்… எங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது. ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம். எங்களை ஒரு போட்டோ எடுக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு, தனது டிஜிட்டல் கேமராவை ஆனந்திடம் தந்தான்.

“ஓ… யெஸ்…” என்ற ஆனந்த், கேமராவை வாங்கிக் கொண்டு, அந்த ஹனிமூன் ஜோடியைப் படம் எடுக்கத் தயாரானான். தனது மனைவியின் இடுப்பில் கை கோர்த்தபடி, மிகமிக நெருக்கமாக நின்று போஸ் கொடுத்தான் கேமரா தந்தவன். வெட்கத்தில் ஷ்ரவ்யா திரும்பிக் கொள்ள… ஆனந்த் வைத்திருந்த கேமராவில் இருந்து வேகமாக ப்ளாஷ் வெளியே வந்து, புதுமண ஜோடியைப் புகைப்படமாக்கிக் கொண்டது.

“தேங்கஸ் ஸார்…” என்று, ஆனந்த்துக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, கேமராவை வாங்கிக் கொண்டவன், “ஸார்… உங்க கேமரா இருந்தா குடுங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுத்துத் தர்றேன்” என்றான்.

ஆனந்த்தும் தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அவனிடம் நீட்ட… அவன் வாங்கிக் கொண்டான். தனக்கு அருகில், இன்னொரு ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து வெட்கத்தில் பூத்திருந்த ஷ்ரவ்யாவை கரம் பற்றி இழுத்த ஆனந்த், அவளை தனக்கு முன்பாக கொண்டு வந்து அணைத்தபடி போஸ் கொடுத்தான். அவர்களைக் கேமராவில் பதிவு புதுமாப்பிள்ளை, “ஸார்… நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா பொருத்தமான ஜோடியா இருக்கீங்க…” என்று வியந்து பாராட்டிவிட்டு போனான்.

எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாய் வெட்கப்பட்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா புல் தரையில் தனது கால் பெருவிரலால் கோலம் போட ஆரம்பித்துவிட்டாள் ஷ்ரவ்யா.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top