ஐந்தருவிக்கு எல்லோரும் குளிக்கச் சென்ற இடத்தில், அமுதா மட்டும் குளிக்கச் செல்லாமல் திரும்பிவர, தனி ஆளாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்ற அசோக் அவளைப் பார்த்து விட்டான்.
அசோக்கிடம் நிறைய பேச வேண்டும் என்பது அமுதாவின் எதிர்பார்ப்பும்தான் என்பதால்தான், அவள் உல்லாசக் குளியலைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அசோக்கைத் தேடி வந்தாள்.
இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.
“அசோக்… நீ, இங்கே என்ன செஞ்சுட்டு இருக்க?”
“மெயின் அருவியில் குளிச்சது போதும், குற்றால அழகை ரசிக்கலாமேன்னு வந்தேன்.”
“அட, நான்கூட அதுக்காகாகத்தான் வந்தேன். நமக்குள்ள என்ன ஒற்றுமை பாத்தாயா-?”
அமுதாவின் பதில் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறது? என்பது அசோக்குக்குப் புரிந்து விட்டது.
இதுதான் ஐ லவ் யூ சொல்ல சரியான நேரம். அவளும் இதைத்தான் எதிர்பார்க்குறாங்குறது கன்பார்மா தெரியுது. கோட்டை விட்டுடாதடா அசோக்கு… என்று தனக்குள்ளேயே சொல்லி உசுப்பேற்றிக் கொண்டான் அசோக்.
“அசோக்… ரொம்பவும் டீப்பா எதையோ நீ யோசிக்கற மாதிரி தெரியுதே…”
“கொஞ்ச தூரம் காலாற நடந்து போயிட்டு வரலாம்னு தோணுது. அத, உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல.”
“இதுல என்னடா இருக்கு. நான் உன்னோட அத்தைப் பொண்ணு மட்டுமல்ல, முறைப் பொண்ணும்கூடத்தானே?”
அமுதாவின் இந்தப் பதில் அசோக்கிற்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.
கண்ணா… ரெண்டு லட்டு திங்க ஆசையான்னு கேட்கற மாதிரி இருக்குதே… என்று, காதல் பரவசத்தில் தத்தளித்தான் அசோக்.
தொடர்ந்து, இருவரும் குற்றால அழகை ரசித்தபடி குற்றால வீதியில் நடந்து சென்றனர்.
சிகப்பு நிறச் சுடிதாரில் வந்திருந்த அமுதா, துப்பட்டாவை எப்படி அணிய வேண்டுமோ… அதைச் சரியாக அணிந்திருந்தாள். துளியும் விரசம் இல்லாத அவர்களுக்கு இடையேயான பேச்சுக்கள், அவர்களது காதல் புனிதமானதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.
இவர்களது ஆத்மார்த்த காதல் குற்றால மலை அருவிகளை முத்தமிட்டு வந்த தென்றல் காற்றுக்குதான் பிடிக்கவில்லை. திடீரென்று வேகமாக வந்த அந்தக் காற்று, அமுதாவின் துப்பட்டாவை பறந்தோடச் செய்தது.
அமுதா மட்டுமல்ல, அசோக்கும் இதை எதிர்பார்க்கவில்லை. காற்று அடித்த வேகத்தில் வேகமாக பறந்து சென்ற துப்பட்டாவை நோக்கி வேகமாக ஓடினர், இருவரும்!
ஒருவழியாக அதைப் பிடித்துவிட்ட அசோக், எதையோ சாதித்து விட்டதைப் போல உணர்ந்தான்.
துப்பட்டாவை அவன் எடுத்துக் கொண்டு திரும்ப… அவனைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடிவந்த அமுதா, மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி வந்து நின்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் அசோக். இந்தக் காத்து இப்படிப் பண்ணும்னு நான் எதிர்பார்க்கல…” என்றாள் அமுதா.
“நானும் எதிர்பார்க்கல, ஆனா… நல்லாத்தான் இருக்குது… என்று சொன்ன அசோக், துப்பட்டா இல்லாத அவளது தேகத்தை திடீரென்று பார்த்தான்.
அமுதா என்ன நினைத்தாளோ, சட்டென்று அசோக்கிடம் இருந்து வாங்கிய துப்பட்டாவை தனது மாராப்பில் வேகமாகப் போட்டுக் கொண்டாள்.
“அமுதா… நான் நல்லாத்தான் இருக்குதுன்னு சொல்ல வந்தது உன்னப் பத்தி இல்ல… காத்துல பறந்துபோன ஹீரோயினோட துப்பட்டாவை தேடி ஓடும் ஹீரோக்களை படத்தில்தான் பார்த்திருக்கேன். நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமான்னு அப்போ தோணும். அதே சம்பவம் இப்போ நிஜமாகவே நடக்குறது ஆச்சரியமாகத்தான் இருக்கு…” என்று பேச்சை மாற்றினான்.
அவன் பொய் சொல்வது அமுதாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும், அவனது பொய்யை ரசித்தாள்.
அப்போதுதான் திடீரென்று குனிந்து எதையோ எடுத்தாள் அமுதா. துப்பட்டா ரேஸில் ஜெயித்துவிட்டு திரும்பிய அசோக், தனது மொபைலைத் தவறவிட்டிருந்தான். அதைத்தான் அவள் எடுத்தாள்.
சட்டென்று அமுதா குனிந்துவிட்டு திரும்பியபோதுதான் அந்தக் காட்சியை பட்டென்று பார்த்துவிட்டான் அசோக். அமுதாவின் துப்பட்டா திடீரென்று சரிந்து விலகியதில், அவளது மார்பிற்கு சற்று மேலே தனியாய் தவித்திருந்த அந்த அழகான மச்சத்தை பார்த்து விட்டான்.
அமுதாவும் அதைக் கவனித்து விட்டாள். உடனடியாகத் தனது மாராப்பை சரிசெய்தாள். ஆனால், மச்சத்தைப் பற்றி அப்போதைக்கு அவன் எதுவும் கேட்கவில்லை.
சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு அசோக்கே வாய் திறந்தான்.
“அமுதா… நீ ரொம்ப அழகுன்னா, உன்னோட மச்சம் இன்னும் அழகா இருக்கு.”
“என்னது… மச்சமா? அப்படி எதுவும் என்கிட்ட இல்லீயே…”
“மச்சம் இல்லன்னு உன் வாய்தான் சொல்லுது. ஆனா, இருக்குன்னு உன்னோட ரெண்டு கண்ணும் சொல்லுதே…”
“வாயாலத்தான் உண்மையைச் சொல்ல முடியும். கண்ணால சொல்ல முடியாது.”
“யார் சொன்னது? காதல்ல கண்களுக்குத்தான் முதலிடம். முதல்ல கண்கள் பேசிக்கொண்டால்தான் பிறகு வாயால் பேசிக்கொள்ள முடியும்.”
“காதலா? யாரோட காதல சொல்ற?”
“நம்ம காதலைத்தான்!”
இப்படிச் சொன்ன பிறகுதான், எதையும் அறியாமல் காதலை வெளிப்படுத்தி விட்டதை உணர்ந்தான் அசோக். அமுதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தாலும், காதலுக்கான சம்மதத்தைச் சொல்லவில்லை. அதேநேரம், அசோக் தன்னை உறுதியாகக் காதலிக்கிறான் என்கிற பரவசத்தில் தன்னை மறந்தாள். ஒருகணம் கண்கள் மூடி அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தாள்.
திடீரென்று யாரோ தன்னைப் பிடித்து உலுக்க, கண் விழித்தாள் அமுதா. குணசீலன்தான் அவளை உலுக்கினான்.
“ரொம்ப நேரமாகக் கண்ண மூடிட்டு இருந்த. சரி, உறங்கறேன்னு நினைச்சேன். ஆனா, நீயாவே சிரிக்குற. அதனாலதான், உனக்கு என்ன ஆச்சுன்னு எழுப்பினேன்.”
குணசீலன் விளக்கம் தந்த பிறகுதான், அசோக் தனது கனவு கலந்த நினைவில் வந்துவிட்டு போனதை உணர்ந்தாள் அமுதா.
அதேநேரம், அமுதாவும் குணசீலனும் பயணித்த பேருந்து திருப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது.