“என்னங்க… என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
குணசீலனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அமுதாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.
“என்னங்க… நான் கேட்டுட்டே இருக்கேன்ல. பதில் சொல்லாமலயே இருருந்தா என்ன அர்த்தம்?”
“நீ மறுபடியும் கூப்பிடனும்னு அர்த்தம்.”
“ஏன், நான் மறுபடியும் கூப்பிடணும்?”
“நீ, என்னங்கன்னு சொல்றீயே… அதுல அப்படியொரு கிக் இருக்குது தெரியுமா? அந்த கிக்குக்கு நான் உன்கிட்ட அடிமைன்னுகூட சொல்லலாம்.”
“என்னங்கன்னு சொல்றதுல அப்படியென்ன கிக் இருக்கு? நீங்க சொன்னா, நானும் தெரிஞ்சுக்குவேன்ல?”
“சரி, மறுபடியும் என்னங்கன்னு என்ன கூப்பிடேன்.”
“எத்தனை தடவைதான் கூப்பிடுறது…”
“இன்னும் ஒரேயொரு தடவை மட்டும்…”
“சரி…” என்று தலையாட்டிய அமுதாவை சட்டென்று மிக அருகில் வந்து பார்த்தான் குணசீலன். திடீரென வெட்கப்பட்டு சிலிர்த்தாள் அவள். பேச்சு வராமல் திணறினாள்.
“என்ன ஆச்சு அமுதா?”
“நீங்க கிட்ட வந்தீங்கள்ல… அதான் ஒருமாதிரி ஆயிடுச்சு…”
“என்னங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கிக் இருக்குன்னு கேட்டல்ல, அதுவும் இப்படித்தான் இருக்கும்” என்ற குணசீலன், தான் திறந்து வைத்திருந்த லேப் டாப்பை அவள் பக்கம் திருப்பிக் காட்டினான்.
அந்த லேப் டாப்பில், ஏதோ ஒரு வெப்சைட்டில் இடுகையிடப்பட்டு இருந்த ஒரு அழகான இளம்பெண்ணின் படம் பளிச்சென்று தெரிந்தது. சிவப்பு நிற சேலையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.
“இப்போ, இந்த படத்தை ஏன் எங்கிட்ட காட்டுறீங்க?”
அமுதா அப்பாவியாய்க் கேட்டாள்.
“இந்தப் படத்தை கொஞ்சம் கூர்ந்துதான் பாரேன்…”
குணசீலன், தன்னை வைத்து எதையோ பரிசோதிக்க முயற்சிக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் சொன்னபடி அந்தப் பெண்ணின் புகைப்படத்தை இன்னும் சற்றுக் கூர்மையாகப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதி சேலை கொஞ்சம் விலகி, அவளது தொப்புள் பகுதி வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவளுக்குப் பின்னால், ஒருவன் இருந்து கொண்டு அவளை அணைத்துக் கொண்டிருப்பதும் பளிச்சிட்டது.
அதைப் பார்த்த மாத்திரத்தில் வெடுக்கென்று திரும்பிவிட்டாள் அமுதா.
“ஏன் அமுதா… இந்தப் படத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுட்டியாக்கும்?”
அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. பதிலுக்கு, அவளது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத்துடிப்பும் கூடுதலாக எகிறியிருந்தது.
“அப்போ, இந்த தகவல் உண்மைதானா?”
தனக்குத்தானே கேட்டுக்கொண்ட குணசீலன், லேப் டாப்பை ஆப் செய்து, அதைப் பத்திரமாகப் பேக்கிற்குள் நுழைத்து வைத்தான்.
சிறிதுநேரம் வரை அமுதா பேசாமலேயே இருந்தாள். குணசீலன்தான், அவளது திடீர் மாற்றங்களை புரிந்து கொண்டு பேசினான்.
“கிக் எப்படி இருக்கும்ன கேட்டல்ல? இப்போ நீ சந்திச்சதும் ஒரு கிக்தான். கிக், எல்லா மனுஷங்களுக்கும் பிடிக்கும். சாப்ட்வேர் என்ஜினீயரான என்னை எந்தப் பெண்ணும், இதுவரைக்கும் என்னங்கன்னு கூப்பிட்டது கிடையாது. ஹாய், டியர், மச்சின்னு பலபலப் பெயர்கள்ல கூப்பிடுவாங்க. ஆனா, நீ முதல் முறையாக என்னங்கன்னு சொன்னதுல எனக்கு கெடைச்ச கிக், வேற எதுலேயும் கிடைக்கல. அதனாலதான், நீ என்னங்கன்னு சொல்றத திரும்பத் திரும்பக் கேட்டு ரசிச்சேன்.”
“அது ஓ.கே., லேப் டாப்ல உள்ள ஒரு பொண்ணு படத்தை என்கிட்ட ஏன் காட்டுனீங்க?”
“இப்போதான் நெட்ல ஒரு தகவல் படிச்சேன். சிகப்பு கலர்ல டிரெஸ் பண்ணுன பொண்ணுங்களைப் பாத்தா, ஆண்களுக்கு உடனே காதல் உணர்வு, அதாவது கிக் வரும்னு அதுல சொல்லியிருந்தாங்க. அது உண்மையா, இல்லையான்னு உன்ன வெச்சு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணினேன். அவ்வளவுதான்.”
“டெஸ்ட் எல்லாம் இருக்கட்டும். சிகப்பு கலர் டிரஸ்ஸை ஒரு பெண் போட்டுக்கொண்டு வந்தால், அவளைப் பார்க்குற ஆணுக்கு கிக் வரும்ன்னு எப்படி உறுதியாச் சொல்ல முடியும்?”
அமுதா இப்படிக் கேட்டதும் வெட்கம் கலந்த சிரிப்பை வெளிப்படுத்தினான் குணசீலன்.
“ஏன்… நான் கேட்குற கேள்வி, அடுத்தவங்க சிரிக்கிற அளவுக்கா இருக்குது?”
திடீர்ப் பொய்க் கோபம் கொண்ட அமுதாவைச் சமாதானப்படுத்தினான் குணசீலன்.
” இப்போ நான் ஏன் சிரிச்சேன்னு கொஞ்சநேரம் கழிச்சுச் சொல்றேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு, ஆமா, இல்லன்னு மட்டும் பதில் சொன்னப் போதும்.”
“கேள்வி கேட்பது யாரா இருந்தாலும் அவர்களுக்கு டாண்… டாண்னு பதில் சொல்றதுதான் என்னோட வழக்கம். நீங்க தாராளமா கேட்கலாம்.”
“லேப் டாப் படத்தைப் பார்த்ததும் உனக்குள்ள என்னமோ பண்ணிச்சுல்ல.”
“ஆமாம். ஆனா, அது என்னன்னு தெரியல.”
“அதுக்குப் பேருதான் கிக்…”
குணசீலன் இப்படிச் சொன்னதும், அவன் மீது பொய்க் கோபம் கொண்டு செல்லமாக கை ஓங்கி அதட்டினாள் அமுதா. தன்னை அவள் செல்லமாக அடிக்கத்தான் போகிறாள் என்று கணக்குப்போட்ட குணசீலன், அவள் கைகளைத் தடுக்கும் முயற்சியில், எதிர்பாராதவிதமாக அவளது சேலையின் முந்தானையை வேகமாகப் பற்றி இழுத்து விட்டான். அவன் இழுத்த வேகத்தில் சட்டென்று அவளது மேலாடை விலகியது.
அமுதாவின் மார்பகத்தை ஒட்டி, யாருக்கும் வெளியில் தெரியாத வகையில் பாதுகாப்பாக பதுங்கியிருந்த கறுப்பு மச்சம் முதன் முதலாக மீசை முளைத்த ஒரு ஆண் மகனுக்கு தெரிந்தது.
குணசீலன், தனது அந்த மச்சத்தைப் பார்த்து விட்டான் என்றதும் அதிர்ச்சியானாள் அமுதா. விலகிய முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, தலை குனிந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“நான் அவளது கணவன்தானே… நான் அதைப் பார்த்தது எப்படி தவறாகும்?” என்று தனக்குத்தானே அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டான் குணசீலன். அந்த மச்சத்தைப் பார்க்கும் தகுதி அசோக்கிற்கு மட்டும்தான் இருக்கிறது என்று அமுதா செய்த சத்தியம் இவனுக்கு எப்படித் தெரியும்?