Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 5
இரண்டாம் தேனிலவு – 5

இரண்டாம் தேனிலவு – 5

“பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க…” ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ் ஆர்வமாக காத்திருந்தான். ‘நான்தான் இந்த பார்ட்டியை உனக்காக ஸ்பெஷலா ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணத்தைத் தாராளமா செலவு செய்யக்கூடிய பார்ட்டிதான். அவன் உனக்காகத் தந்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து விடு’ என்று, தன் மனதிற்குள் உள்ள விஷயத்தை சொல்லத் தயாராக இருந்தான்.”ஹலோ…”ஷ்ரவ்யாவின் குரலைக் கேட்டதும் பிரகாஷின் முகம் மலர்ந்தது.

“அம்மாடி நான்தான் பிரகாஷ் பேசுறேன். நீ சேப்டியாதானே போய்க்கிட்டு இருக்க? உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே…”

“நான் சாந்திதான் பேசுறேன். இங்கே எந்தப் பிரச்சினையும் இல்ல. இப்போ, நீதான் பிரச்சினை.”

“அய்யய்யோ… அப்படி சொல்லதம்மா. உன்ன அந்த கஸ்டமர் கூட அனுப்பி வைக்க ரெக்கமென்ட் பண்ணுனதே நான்தான்.”

“சரி, இப்போ உனக்கு என்ன வேணும்?”

“அது வந்து…?”

படபடவென பேசிய ஷ்ரவ்யாவிடம், தனக்கான எக்ஸ்ட்ரா கமிஷன் பற்றி அவனால் சட்டென்று பேச முடியவில்லை. ஆனால், ஷ்ரவ்யாவுக்கு புரிந்து விட்டது.

“பொம்பள மாதிரி ரொம்பவும் வெட்கப்படாத. ஊட்டிக்குப் போயிட்டு வந்த உடனே உன்னையும் கவனிச்சிடுறேன்…” என்றாள் அவள்.

ஷ்ரவ்யா இப்படி சொன்ன பிறகுதான், பிரகாஷ் குரலில் உற்சாகம் பிறந்தது.

“சரி சாந்தி, அப்போ நாம அடுத்த வாரம் சந்திப்போம். மொபைல ஸார் கிட்ட குடுத்துடு. நான் மொபைலை வெச்சிடுறேன்…”

இதற்கும் மேல் அவனை பேசவிடாமல் மொபைலை ஆப் செய்தாள் ஷ்ரவ்யா.

ஆனந்த் எங்கே என்று தேடினாள். பல சந்தேகக் கேள்விகளை முகத்தில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஆனந்த்… நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஷ்ரவ்யா எப்படி சாந்தி ஆனாள் என்றுதானே யோசிக்கிறீங்க?”

“ஆமாம்…” ஆர்வமாகத் தலையாட்டினான் ஆனந்த்.

அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு, தனது ப்ளாஷ்பேக் கதையை மெதுவாய், கொஞ்சம் சோகமாய் சொன்னாள் ஷ்ரவ்யா.

“என்னோட உண்மையான பேரு சாந்திதான். சின்னக்குழந்தையில நான் அழகா மட்டுமில்லாம, அமைதியாகவும் இருப்பேனாம். என்னோட முகத்தைப் பார்த்தாலே அம்மாவுக்கு மன அமைதி கிடைக்குமாம். என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தது மட்டுமல்லாம, என் முகத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் என்னோட குடிகார அப்பா கூட குடும்பம் நடத்தி இருக்குறாங்க. எங்க அம்மாவுக்கு நான் சாந்தி, மனஅமைதி கொடுத்ததுனால, என் பேரையும் சாந்தின்னு வெச்சிட்டாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு சாந்திங்குற பேருல உள்ள பொண்ணுங்க பலரோட வாழ்க்கையை பாத்திருக்கேன். அவங்க யாருமே நிம்மதியா வாழல. என்னோட வாழ்க்கையும் அப்படி அமைஞ்சிடுமோன்னு பயந்தேன். அம்மா கிட்ட சொன்னேன். நாம இப்போ தங்கத்தட்டுல சாப்பிட்டு, மாளிகையிலயா வாழ்ந்துட்டு இருக்கோம். நாம கெடக்குறது இந்தக் கூவம் நாத்தத்துக்குள்ள. இதைவிட கேவலமா எந்த மனுஷனும் வாழ மாட்டான். உன்னோட வாழ்க்கை இதுக்கு கீழே எப்படியும் போகாது. அதனால, சாந்திங்குற பேரே இருக்கட்டும். உனக்கு பிடிக்கலனா மாத்திக்கோன்னு சொல்லிட்டாங்க. அம்மாவே இப்படி சொல்லிட்டதுனால எனக்கும் பெயரை மாத்தணும்னு தோணல.

அப்படியே விட்டுட்டேன். ஒருகட்டத்துல, குடிச்சு குடிச்சே அப்பா இறந்து போக… கொஞ்ச நாள்லயே அம்மாவும் பன்றிக் காய்ச்சலால பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க முடியாம இறந்து போயிட்டாங்க. நான் ஒரே பொண்ணுங்குறதுனால, பக்கத்து வீட்டுல உள்ளவங்க சாப்பாடு கொடுத்து உதவினாங்க. நான் வயசுக்கு வந்த அழகான பொண்ணா இருந்ததுனாலேயும், எனக்கு ஆதரவா பேச யாருமே இல்லங்குறதுனாலேயே எல்லா வாலிப பசங்களோடு பார்வையும் என் மேலத்தான் விழுந்தது…”தொடர்ந்து, ஷ்ரவ்யாவை பேச அனுமதிக்கவில்லை ஆனந்த். அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷ்ரவ்யா. அவனது கண்களின் ஓரமும் கசிந்திருந்தது.”ஸாரி ஷ்ரவ்யா. உன்னோட கடந்த கால வாழ்க்கை இப்படி இருக்கும்னு நான் நெனைச்சுக்கூட பார்க்கல. ஸோ… ஸாரி!”மறுபடியும் கலங்கினான் ஆனந்த்.

“நீங்க ரொம்ப நல்லவங்க ஆனந்த்…”

“எப்படிச் சொல்ற?”

“என்னோட கடந்த கால வாழ்க்கையில நடந்த ஒரு பார்ட் பத்தி சொன்னதுக்கே இவ்ளோ கண் கலங்கிட்டீங்களே. முழு கதையையும் சொன்னா… ஊட்டிக்கேப் போக வேண்டாம். இப்படியே சென்னைக்கு திரும்பிடுவோம்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க. அதனால, என்னோட கதையை நான் இதோட முடிச்சுக்கறேன்…” என்று சின்னக் குழந்தையைப் போல் சொன்னாள் ஷ்ரவ்யா. அவளது முகமும் மழை விட்ட வானம் போல் தெளிந்திருந்தது. உற்சாகமும் தெறித்தது.

“எப்படி ஷ்ரவ்யா… இவ்ளோ சோகத்தை உனக்குள்ள தாங்கிக்கிட்டு உன்னால சிரிக்க முடியுது? ஆனா, என்னால எந்தவொரு சோகத்தையும் தாங்கிக்க முடியலயே… இப்போ, நான் உன்கூட வர்றதுக்கு காரணமான பின்னணியிலும் ஒரு சோகம் இருக்கு. உன்னோட சோகத்தோட ஒப்பிடும்போது இது பெருசே இல்லதான். ஆனாலும் என்னோட மனசு மட்டும் நித்தம் நித்தம் வலிக்குது.”

ஆனந்த் இப்படி சொன்போது நிஜமாகவே அவனது நெஞ்சு வலிக்க ஆரம்பித்துவிட்டது. வலது கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டான். நா வறண்டு போனதாலும், துக்கம் நெஞ்சை அடைத்ததாலும் பேச முடியாமல் திணறினான். ரெயிலில் எதிர் வரிசையில் இருந்தவர்களும் அதை கவனித்துவிட்டு பரபரப்பானார்கள்.

இவ்வளவு பரபரப்பையும் எதிர்பார்க்காத, எதிர் சீட்டில் அமர்ந்திருந்த, அடிக்கடி காதலனுடன் மொபைலில் கடலைப் போட்டுக் கொண்டு வந்த இளம்பெண் ஸ்வேதா, தனது பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஷ்ரவ்யாவிடம் நீட்டினாள்.

நடுங்கிய கைகளோடு பாட்டிலைத் திறந்து, ஆனந்துக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தாள் ஷ்ரவ்யா. அவனது நெஞ்சையும் தடவிவிட்டாள்.

அவனது சட்டையில் வழிந்திருந்த மினரல் வாட்டரின் ஈரம், அவளது கையை மட்டுமின்றி அவளை மனதையும் நனைத்து குளிரச் செய்தது.

தனக்குள், தன்னையும் அறியாமல் விபரீதமாய் ஏதோ ஒரு கெமிஸ்ட்டி ஒர்க்கவுட் ஆகிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள்.

சில நிமிடங்கள் கரைந்திருந்தன.

எதிரே வந்து தன் மீது மோதிய காற்று தந்த சுகத்தில், தனது சோகத்தில் இருந்து மீண்டும் வந்து கொண்டிருந்தான் ஆனந்த். அதுவரை கலகலவென பேசிக் கொண்டு வந்த அவனது முகத்தில் திடீர் மவுனம். பேய் மழை பெய்வதற்கு முன்பு வானம் கரும் மேகங்களால் மூடுமே… அதேபோன்ற இறுக்கம் அவனது முகத்தில் தெரிந்தது. 3 நாட்கள் ஷேவிங் செய்யாமல் விட்டதில் கருமையாய் வளர்ந்திருந்த தாடி முடிகள் அவனை இளம் தேவதாஸாய் அடையாளம் காட்டின.

10 நிமிடங்களுக்கு அவனிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை. ‘இப்படிப்பட்ட ஒரு ஆளுடன், அவனது மகிழ்ச்சிக்காக உடன் செல்கிறோமே… நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் என்ன செய்வது” என்று ஷ்ரவ்யா யோசிக்க, அவளது ஒரு மனம் கட்டாயப்படுத்தினாலும், இன்னொரு மனதில் இரக்கம் சுரந்திருந்தது. ‘சோகங்களும், துக்கங்களும் இல்லாத மனிதர்களே இல்லை. அவை ஒருவனுக்கு இருந்தால்தான் சொர்க்கத்தை தேடிச் செல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் எழும்…’ என்று எப்போதே எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் அவளது மனக்கண் முன்பு அவசரமாய் வந்துவிட்டு போனது.

அதேநேரம், அதிரடி வேகத்தில் சென்று கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் திடீரென்று மவுனமாக பயணிக்க ஆரம்பித்தது. தன்னை திடீரென்று தாக்கிய சோகம், முகத்தில் தந்த தாக்கத்தை கர்ச்சிப்பால் துடைத்துவிட்டு வாட்சை பார்த்தான் ஆனந்த். இரவு 8.30 மணி ஆக 10 நிமிடங்களும், 35 நொடிகளும் பாக்கி இருந்தன.

ஏதோ ரெயில் நிலையம் வந்ததால், அது எந்த ஊர் என்பதை அறிய மஞ்சள் போர்டு எங்கே என்று தேடினான். ‘ஈரோடு ஜங்ஷன்’ என்ற பெயர்ப் பலகை பெரியதாய் பளிச்சிட்டது.

என்ன நினைத்தானோ, ஷ்ரவ்யாவிடம் எதுவும் சொல்லாமல் ரெயிலில் இருந்து இறங்கினான். ஷ்ரவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அவனது லக்கேஜ் பேக் எங்கே என்று தேடினாள். அது, அவன் பயணித்த சீட்டிற்கு அடியில் பத்திரமாக இருந்தது.

‘அப்படியென்றால், ரெயில் புறப்படுவதற்குள் வந்து விடுவான்’ என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள். 4 நிமிடங்கள் வரை அமைதியாக ஈரோடு ஜங்ஷனில் நின்றிருந்த ரெயில் புறப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ரெட் சிக்னல் அணைந்து எல்லோ சிக்னல் விழுந்தது. சில நொடிகளில் கிரீன் சிக்னலும் விழுந்து விடும். ஆனால், ரெயிலை விட்டு இறங்கிச் சென்ற ஆனந்த் மீண்டும் ரெயிலில் ஏறவில்லை.

கிரீன் சிக்னலும் விழுந்தாயிற்று. ரெயில் என்ஜின் டிரைவர் பலமான ஹாரனை சற்று இடைவெளியின்றி எழுப்பிவிட்டு ரெயிலை மெதுவாக நகர்த்தினார். ஷ்ரவ்யாவின் பதற்றம் அதிகமானது.

‘ரெயிலில் இருந்து இறங்கிப் போன மனிதன் வராமல் போனாலும் கூட பரவாயில்லை. தற்கொலை… என்று ஏதாவது விபரீத முடிவு எடுத்து விட்டால், அதற்கு நாமும் ஒருவகையில் காரணம் ஆகிவிடுவோமே…’ என்று மனதிற்குள் பரபரத்தாள்.

இருக்கையை விட்டு எழுந்தவள் கதவு நோக்கி வேகமாக ஓடினாள். அப்போதும், ரெயில் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஓடி வந்தால் நிச்சயம் ரெயிலை பிடித்து விடலாம். ஆனால், அவள் எங்கு தேடியும் ஆனந்தை காணவில்லை.

பதற்றத்தில் தலைக்கு மேல் இரு கையையும் வைத்துக் கொண்டு, ஓடிக்கொண்டிருந்த ரெயிலின் கதவு அருகே அப்படியே உட்கார்ந்து விட்டாள். எப்போதும் இல்லாத சோகம் திடீரென்று அவளை தாக்கியது. அவளை அறியாமல் கண்ணீரும் வந்தது. ஓவென்று கதறி அழுதும் விட்டாள்.

திடீரென்று தனது காலை யாரோ மிதித்தது போன்ற ஒரு உள்ளுணர்வு. வந்த கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள். வேகம் எடுத்திருந்த ரெயிலில் ஏறியிருந்தான் ஆனந்த். வேகமாக ஓடி வந்து ஏறியதில் மூச்சுவிட கொஞ்சம் சிரமப்பட்டான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் எழுந்த ஷ்ரவ்யா, அவனை வேகமாக ரெயிலுக்குள் பிடித்து இழுத்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ,தன்னையும் அறியாமல் அவனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அருகே நின்றிருந்த பயணிகளும், என்னவோ… ஏதோ… என்று அங்கே கூடிவிட்டார்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top