என்னை சுற்றி ஆளுக்குமேல் வளர்ந்த அடர்ந்த சோளக்காட்டு தட்டைகள் ஆட்களைபோலவே அமைதியாக அசைந்துகொண்டு இருந்தன, அந்த நெடுங்கரு இரவின் பிரவேச பொழுதில் எனக்கு துணையாக இருந்தது எனது மணியும், அந்த பால் நிலவும், எங்கள் வேல மரத்தில் இருந்த ஆந்தையும்தான் என்பதை தெளிவாக உறுதிசெய்து கொள்ளலாம்.
சோளகாடு, கடலைகாடு, மொச்சைக்காடு, துவரங்காடு, வரகுகாடு, கரும்புகாடு, குச்சிக்காடு, புடலங்காடு, அவரைக்காடு, மிளகாய் காடு, கத்தரிகாடு, தக்காளிக்காடு, எள்ளுக்காடு, கொத்தமல்லிக்காடு, கடுகுக்காடு, நெல்காடு, பூக்காடு, பன்னபூக்காடு, காவட்டம் புல்காடு, ஏரி கோரைகாடு, ஏரி நாணல் காடு, ஏரி சம்பு காடு, மூங்கில்காடு இவைகளை எல்லாம் கடந்து — நாவல் மரம், வேப்பமரம், முருங்கை மரம், அரசமரம், ஆலமரம், புளியமரம், பனைமரம், தென்னைமரம், புங்கன்மரம், பூவரசமரம், நொநாமரம், நொச்சி மரம், கருவேலமரம், வாகைமரம், வாழைமரம், மாமரம், பலா மரம், பப்பாளி மரம், வன்னிமரம், வில்வேந்திரமரம், விலாமரம், அத்திமரம், அகத்தி மரம், கொளஞ்சிமரம், கொய்யாமரம், எட்டிமரம், எலுமிச்சை மரம், இலுப்பை மரம், இலந்தை மரம், நெல்லி மரம், தேக்கு மரம், அரளி மரம், கொடிக்காய்பள்ளி மரம் இவைகளிநூடே நுழைந்து — காரமுள், சூரமுள், கள்ளிமுள், அழிஞ்சி முள், வீரிமுள், வேலமுள், கொக்கிமுள், இலந்தை முள், ஈச்சமுள், வெடத்தரை முள், உன்னி முள், சளி முள், களா முள், ஆணை முள், குமலம் முள் போன்ற முள் வேலிகளை எல்லாம் தாண்டி கரும் இரவை அள்ளிப்பூசிக்கொண்டு வந்த இளம்பனி நிலாத்தென்றல் என்னை மென்மையாக தழுவிய பொழுதும் நான் வேர்த்துகொண்டு இருந்தேன். காரணம் நான் ஓயாமல் கடலைக்கொடியை பிடுங்கிகொண்டே இருந்தேன்.
வேகமாக கடலைக்கொடியை பிடிங்கிகொண்ட சென்றேன், என் நினைவுகள் நாளைக்காலை கிரிகெட் விளையாட போக வேண்டும் என்பதிலேயே இருந்தது, அப்பொழுது தரையில் படர்ந்துகிடந்த ஏதோ ஒரு செடியில் காலை வைத்தேன் அம்மா… என்று கத்திகொண்டே கீழே அமர்ந்தேன், எனது மணி கத்திகொண்டே எனது அருகில் ஓடிவந்தான், காலை பார்த்தேன் தரையில் படர்ந்து வளர்ந்து கிடந்த கண்டங்கத்திரி முள் என் இடது காலில் மானவாரித்தனமாக அப்பி இருந்தது, நகங்களால் ஒவ்வொன்றாக பிடுங்கி எடுத்தேன், சில முட்கள் காலிலேயே இத்தும் போய்விட்டன, விளையும் நிலத்தில் நிற்கும்பொழுது நாங்கள் யாரும் காலணி அணிவதில்லை, நிலம் நமது தெய்வம் அதில் நடக்கும்பொழுதோ வேலை செய்யும்பொழுதோ செருப்பு அணியக்கூடாது என்று எங்க தாத்த சொல்வார், அதையே நானும் கடைப்பிடித்து வந்தேன் அதனால் செருப்பி வரப்போரத்தில் கழட்டி வைத்திருந்தேன்.
ஒரு வழியாக முடிந்தவரை முள்ளை பிடுங்கிவிட்டு மீண்டும் எழுந்தேன், கடலைக்கொடியை பிடுங்கினேன், நேரம் எப்படி போனதென்று தெரியவில்லை, மூன்றாம் சாமம் நிலவு என்னைவிட்டு கொஞ்சம் தூரத்திற்கு சென்று இருந்தது, மூன்று மணி இருக்கலாம் நிமிர்ந்து திரும்பி பார்த்தேன் அரை ஏக்கர் அளவுக்கு நான் ஒருவன் கடலைக்கொடியை பிடுங்கி இருந்தேன், அதாவது நான்கு ஆள் செய்ய வேண்டிய வேலையை நான் ஒருவன் செய்து இருந்தேன், எனது அசாத்திய தைரியத்தை நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
மீண்டும் குனிந்தேன் கடலைக்கொடியை பிடுங்கத்தொடங்கினேன், கைக்கு மூன்று செடி இந்த கையில் மூன்று செடி அந்த கையில் மூன்று செடி மொத்தம் ஆறு செடி பிடுங்கி பிடுங்கி மண்ணை உதறி செடியை போட்டுக்கொண்டே வந்தேன். இப்படியே ஒரு அரைமணி நேரம் ஓடி இருக்கும் எனக்கு கையும் இடுப்பும் பயங்கர வலி, ஒரே சோர்வு தூக்கம் கண்ணை சொக்கியது, முக்கால் ஏக்கர் அதாவது ஆறு ஆட்களுக்கான வேலையை நான் ஒருவன் அந்த இரவில் செய்து இருந்தேன், இனியும் வேலை செய்ய முடியாது வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.
சலங்கை பூரான், நண்டு வாக்காலி, கருந்தேள், மர அட்டை, கம்பளி அட்டை, நெருப்பெறும்பு, கட்டெறும்பு, வாலெரும்பு இப்படி ஏதாவது பூச்சிகள் வந்து சட்டைக்குள் புகுந்து இருக்குமோ என்று வரப்பு ஓரத்தில் கழட்டி வைத்திருந்த எனது மேல் சட்டையை கையால் எடுத்து தூர நிறுத்தி நன்றாக உதறிவிட்டு தோள்மீது போட்டுகொண்டு, செருப்பை காலில் மாட்டிகொண்டு மணியை அழைத்துகொண்டு சோளக்காட்டு ஒத்தையடி பாதைவழியாக நடந்து மாட்டுவண்டி பாதையை பிடித்து வீட்டுக்கு நடந்தேன்.
தொடரும்…