அப்பொழுது எனக்கு பதினாறு வயது, பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தேன், மூன்று கிலோமீட்டர் பள்ளிக்கு காட்டு குறுக்கு வழியில் நடந்து போவேன், அதே வழியில் நடந்து வருவேன் ஒரு நாளைக்கு மொத்தம் ஆறு கிலோமீட்டர் ஏழு வருடம் நடந்து இருக்கிறேன்,
அப்பா சைக்கிள் வாங்கி கொடுத்தார் ஆனால் அதில் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை, நடந்து செல்வதில் அதிக விருப்பப்பட்டேன், ஏனென்றால்! நடந்து சென்றால்தானே நண்பர்களோடு ஜாலியாக கதை பேசிக்கொண்டு, மாட்டுவண்டி பாதையில் உலவும் ஓணானை துரத்தி அடித்துகொண்டு, இலுப்பை தேப்பில் குடியிருக்கும் பச்சை கிளிகளை கண்டு ரசித்துகொண்டு, வேலியோரத்தில் விளைந்து இருக்கும் களாக்காய், ஆனாப்பழம், காரப்பழம், சூரைப்பழம், சப்பாத்திபழம், ஈச்சம்பழம் போன்றவைகளை சாப்பிட்டுகொண்டு சந்தோசமாக போக முடியும்? அதனால் நான் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை தவிர்த்தேன்.
அன்று விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை முதல் நாளே நாளைக்கு வெளி ஊருக்கு கிரிக்கெட் விளையாட போகவேண்டுமென்று நண்பர்களோடு பேசி முடிவெடுத்துவிட்டோம், வீட்டிற்கு வந்ததும் அப்பா சொன்னார் நாளைக்கு எங்கயும் போகாதே காட்டிற்கு கடலைக்கொடி பிடுங்க போக வேண்டுமென்று, எனக்கு கிரிக்கெட் விளையாட போகவேண்டுமென்ற எண்ணம் அதிகமாய் இருந்தது, நண்பர்களிடம் வேறு கிரிக்கெட் விளையாட வருகிறேன் என்று சொல்லிவிட்டேன், அப்பா வேறு காட்டில் வேலை இருக்கிறது என்கிறார், என்ன செய்வது? விளையாட போக வேண்டுமென்ற எண்ணம்தான் எனக்கு அதிகமாய் இருந்தது, விளையாட போயே தீரவேண்டுமென்று முடிவெடுத்தேன் இதைதான் விளையாட்டு புத்தி என்று சொல்வார்கள்,
ரெண்டு ஏக்கர் முத்துச்சோளம், ரெண்டு ஏக்கர் சூரியகாந்தி, ஒரு ஏக்கர் உளுந்து, ஒரு ஏக்கர் கடலை விதைத்து இருந்தோம், கணக்குப்படி பார்க்கப்போனால் ஒரு ஏக்கர் கடலையை பிடுங்க எட்டு ஆள் தேவைப்படும் காலையில் எட்டு மணிக்குத் தொடங்கினால் பிற்பகல் மூன்று மணிக்கு முடியும், இப்படி காட்டுவேலை இருக்கும்பொழுது நான் எப்படி கிரிகெட் விளையாட போவது? மீறி விளையாடச் சென்றால் அப்பாவிற்கு கோபம் வந்து பயங்கரமாக அடித்துவிடுவாரே… இதற்குமுன் பலமுறை அப்பாவிடம் அடிவாங்கிய அனுபவம் என் மனத்திரையில் ஓடியது, நான் குழப்பத்தில் தவித்துக்கொண்டு இருந்தேன்.
இரவு ஒன்பது மணி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டார்கள் நானும் கயிற்று கட்டிலில் மல்லார்ந்து படுத்தேன் நாளைக்கு விளையாட போகவேண்டுமென்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதனால் தூக்கம் வரவில்லை, பல எண்ண அலைகள் என்னுள் ஆர்பாட்டம் செய்துகொண்டு இருந்தது, என்ன செய்வது?
இரவு பத்துமணி ஆகிவிட்டது எனக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை உடனே எழுந்தேன், வீட்டில் எல்லோரும் நன்றாக தூங்கிகொண்டு இருந்தார்கள், நான் யாருக்கும் தெரியாமல் என் மணியை அழைத்துக்கொண்டு காட்டிற்கு நடந்தேன், (மணி என்னோட செல்ல நாயின் பெயர், நல்லா கருப்பா அழகா இருப்பான் மணி) காடு ஊரைவிட்டு ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது, நானும் என் மணியும் காட்டிற்கு நடந்தோம் காடு போய் சேரும்போது முன்னிரவு (முதல் சாமம்) பத்தரை மணி.
தொடரும்…