ஆகஸ்ட் 12 – 2002, இரவு 9.49..
சடக் சடக் என வந்த அந்த அழுத்தமான சத்தங்களுடன் …
கண்களுக்கு நேர் எதிரே அந்தப் பெரிய விளக்குகள் இரண்டும் எரியத்தொடங்கின..
கண்களைத்திறக்கமுடியவில்லை வெளிச்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது..
இருந்தாலும் கண்களைத் திறந்தே ஆக வேண்டும்… தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய
ஆவல் கொண்ட அவள் கண்கள் .. கஷ்டப்பட்டு திறந்து கொள்ள முற்பட்டன…
மூடியிருந்த கண்கள் திறந்தவுடன் கனமான அந்த வெளிச்சம்… ஒரு கணம் மீண்டும் மூடிக்கொண்டாலும்…உடனடியாகவே கண்களைத் திறந்து கொண்டாள்… சித்ரா..
விழிகளை மெதுவாக உருட்டி வலப்புறம் இடப்புறம் பார்க்க முற்படுகின்றாள்…
எங்கும் பச்சை…எதிலும் பச்சை… அவளால் உணர முடியவில்லை… ஆம் .. அந்த பச்சை நிற முகமூடி ஆசாமி அவள் அருகே வந்து திறந்திருக்கும் கண்களை அகல விரித்து அருகே வந்து உற்று நோக்கும் வரை
அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை…
பச்சை நிறத்துணியால் போர்த்தி…பச்சைத்துணியால் வாயையும் மூடி… சிந்திக்க முதல் இடப்பக்கம் திரும்பினாள்… இன்னும் நான்கைந்து பச்சை நிற ஆசாமிகள்… எங்கே எங்கே இருக்கின்றேன்…
உயரமான கட்டில்… நேர் எதிரே விளக்குகள்… அருகில் ஆசாமிகள்… அவர்கள் கையிலே.. ஆம் இப்போது அவளால் தெளிவாக பார்க்க முடிகிறது… ஆயுதங்கள்… மெதுவாகக் குனிந்து தன் பாதங்களைப் பார்க்க முற்பட… இல்லை முடியவில்லை… முழங்கால் தெரிகிறது… அருகில் அவர்கள்…
மூன்று நாள் பசி மயக்கம்… தண்ணீரோடு காலம் தள்ளினாலும்…மயக்கம் விடவில்லை… காலையில் பாதையோரம் சரிந்தவள்… இப்போது… இங்கே… சித்ராவுக்கு மேலும் குழப்பம்….இப்போது மெதுவாகத் தன் கையை அசைக்க முனைந்தாள்…இல்லை அதுவும் முடியவில்லை… எதையோ பேச வேண்டும் போல் இருக்கின்றது.. ஆனால் பேச்சு வரவில்லை… உணர்வுகள் அலைமோதின…
திடீரென அவள் எண்ணங்கள் ஒருமுகமாகின… எங்கே.. எங்கே.. என் குழந்தை எங்கே… அவள் உள்ளம் தடுமாறியது… நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு தன் குழந்தையின் ஞாபகம்..தேடுகிறாள்… அலை மோதும் எண்ணங்களோடு போராடி .. உந்தி எழுந்து நிற்க முற்படுகின்றாள்.. பாவம்.. முடியவில்லை…
டாக்டர்….
ஓ… மருத்துவ மனையில்…. இருக்கின்றேன்… சித்ராவுக்குள் ஒரு புத்துணர்வு… ஆனால் மறு கணம் மறு கேள்வி… என் குழந்தை … ? பிறந்துவிட்டதா….
அப்போது அவள் அருகில் வந்த அந்த டாக்டர்…
கண் விழிச்சிட்டிங்களா… பயப்படறதுக்கு ஒன்றும் இல்லை… ஆனா இக்கட்டான சூழ்நிலை… அவர் கனிவான பேச்சைக் கேட்டதும் அவளுக்குள் ஒரு புது நம்பிக்கை…
இப்போது பேச முற்பட்டாள்… சத்தம் .. இல்லை… ஆனால் காற்றோடு மெதுவாக அவல் குரல் கலந்து வருகிறது… என் குழந்தை…
ஆமா… உங்க குழந்தைப் பிரசவத்துக்குத்தான் பாத்திட்டிருக்கம்… நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கனும்…
சித்ராவுக்குள் ஒரு குழப்பம் … என்ன சொல்லுறார் டாக்டர்…?
அதற்கான விளக்கமும் மறு நொடியே கிடைத்தது..
குழந்தை வெளிய வரனும் .. உங்க ஒத்துழைப்போடதான் வெளிய எடுக்கலாம்.. இதுல பயப்படுறதுக்கு எதுவும் இல்லை… நல்லா மூச்சை இறுக்கி பிடிச்சு … குழந்தை வெளிய வாரதுக்கு உதவுங்க… ஓகே..
இப்போது சித்ராவுக்கு புரிகிறது… பத்து மாதம் வயிற்றில் சுமந்தெடுத்த செல்வம் உலகைக் காண வரப்போகின்றது… இழுத்தெடுக்க டாக்டர்கள் தயார்…. வெளியில் வர குழந்தையும் தயார்.. ஓகே.. இதோ என் செல்வமே என்று தன் மனதுக்குள் திடமாக நினைத்தவள்… முழுப்பலம் கொண்டு இடம் கொடுத்தாள்….
டாக்டர்கள்… தாதிமார்கள் பதட்டத்துடன்…
ஏற்கனவே குழந்தை நிலை மாறியிருக்கின்றது… எப்போது குழந்தையின் உறுப்பொன்று வெளியே தெரியும் என்று அகலக் கண்களால் அவர்கள் மலைக்க மலைக்க பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…
சித்ராவும் முயற்சிக்கிறாள்… அவளை அறியாமலே அவள் அழுகிறாள்…கதறுகிறாள்…குளறுகிறாள்…அவள் கைகள் தலையணையைத் தோண்டிவிட்டன….கழுத்து நரம்புகள் புடைத்தெறிகிறது…விழிகளில் பிதுங்கி வழியும் கண்ணீர்…. வாய்க்காலாகிறது… அவள் அழுகிறாள்… இன்னும் அழுகிறாள்…
மருத்துவர்களுக்குள் ஒருவித பயங்கலந்த சூழ்நிலை….. இப்போது இவள் கைகளைப்பற்றிக்கொண்ட அந்த டாக்டர்… ஓகே… எதுவும் பயப்படற மாதிரி இல்லை… இன்னும் கொஞ்ச நேரத்துல உன் குழந்தை உன் கையில… சரியா என்று அவளைத் தட்டிக்கொடுத்தார்…
இப்போது அவள் கண்கள் அந்த அறையைச் சுற்றிச் சுழன்றன… மீண்டும் தன் மனதை திடமாக்கிக்கொண்டாள்… இதோ… முயற்சிக்கிறாள்…. குழந்தை வருவதற்கு ஏதுவாக சிறியளவு கீறல்… அதில் வழியும் ரத்தத்தினைத் துடைத்துவிட்டுக்கொண்டே…. அவள் கால்களை அகல விரிக்க உந்துகிறாள் அந்தத் தாதி…
யெஸ்… அதோ அந்த டாக்டரின் சிறிய உறுமல்… கமான் கமான்…
சித்ராவின் உந்துததல்… இது மரண வேதனை … பெற்றெடுக்கும் தாய் .. வயிற்றில் சுமப்பதை விட உலகிற்கு ஒரு குழந்தையை பிரசவிப்பது மாபெரும் மரண வேதனை… சித்ரா தயங்கவில்லை… மீண்டும் முயற்சிக்கிறாள்… இந்தத்தடவை மிகவும் பலமாக…
மருத்துவர்கள் முழிக்கிறார்கள்… தலை வரவில்லை…. குழந்தை தடம் புரண்டிருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தவர்கள்… சிசேரியன் செய்வது இவள் உயிருக்கும் ஆபத்தாகிவிடலாம் என்று கருது சுகப்பிரசவத்திற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர்கள்.. இப்போது முழிக்கிறார்கள்…. வேதனையின் உச்சத்தில் சித்ரா அலறுகிறாள்… அவள் கண்கள் சுழலுகின்றன….
இதோ குழந்தையின் கால்கள் மெதுவாக வெளி வருகிறது….
மருத்துவர்களுக்குள் பயங்கலந்த உற்சாகம்… நெடுநேர போராட்டம்… அழுதழுது இனியும் அழ அவளிடம் கண்ணீரில்லை… அந்த அளவுக்குக் கதறுகிறாள்…. ஓ… வென அலறும் அவள் இரு மருங்கிலும் அவளைத் தாங்கிக்கொண்டும் இருவர்…. இப்போதுதான் அவள் கண்கள் சுதந்திரமாக சுழலுகின்றன… மருத்துவக் கைகள் குழந்தையை இழுத்தெடுக்கப் போராடுகின்றன.. இவள் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியேற்ற அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன…
வேதனையின் உச்சத்தில் மறு புறம் திரும்ப வேண்டும் போல் இருந்தது சித்ராவுக்கு…. அம்…மா.. என்று தலையைச் சற்று வலப்புறம் சாய்த்தாள்.. அங்கே.. அவள் கணவன் தயாளன்… வேதனையின் உச்சத்தில் இருந்த சித்ராவின் கண்கள் இரத்தக் குழம்பாகின…. இதோ குழந்தையின் கால்கள் வெளிவந்துவிட்டது… விடா முயற்சியில் மருத்துவர்கள்… கமான் … இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் .. சித்ராவின் வயிற்றை அழுத்திவிடுகிறார் இன்னொருவர்…. சித்ரா… சித்ரா…. சிலையானாள்… தன் முழுப்பலத்தையும் இறுக்கி வைத்து மூச்சை இழுத்துப்பிடித்தாள்….
தள்ளுங்க… கமான்… கமான்… மூச்சை விடுமா… மருத்துவர் அவசரப்படுத்துகிறார்…
பற்களை இறுக்கிப்பிடித்த சித்ரா… மூச்சை விட மறுக்கிறாள்… இடைவெளியில் வந்து நிற்கும் குழந்தையை இழுத்தெடுக்கவும் முடியவில்லை… மருத்துவர்கள் திண்டாடுகிறார்கள்…. சித்ரா இப்போது பின்நோக்கித் தன் பலத்தைக் கொண்டு தடுக்கிறாள்…. போராட்டம் வலுக்கிறது… சித்ராவின் அருகில் இருந்த உதவியாளர்கள் அவளை ஆசுவாசப்படுத்தி மூச்சை வெளிப்புறம் தள்ள வைக்கப் போராடுகிறார்கள்… ஆனால் சித்ராவோ.. வெறிபிடித்தவளாக தயாளனைப் பார்த்தவாறே தன் மூச்சை இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறாள்…
பிரசவ அறை அல்லோல கல்லோலப்பட்டது…. வட் இஸ் ஹப்பனிங்… மருத்துவர்கள் திணறிப்போய்விட்டார்கள்… சித்ரா… ரிலீஸ்… மூச்சை வெளிப்புறம் விடுங்க… குழந்தை இடைவெளியில நிக்குது… இன்னும் கொஞ்சம்…. மூச்சை விடு…..
சித்ராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை… அவள் மூச்சை விடவும் இல்லை… அவளை இறுக்கிப்பிடித்தவர்களால் அவளை அசைக்கக்கூட முடியவில்லை… திடமானாள்.. மிகவும் திடமானாள்.. இறுக்கிப்பிடித்த மூச்சை விட மறுத்தாள் … உள்ளேயும் விடவில்லை… வெளியேயும் விடவில்லை… பாவம்… தாங்காத இதயம் வெடித்துப்போனது…. அவள் வாயிலிருந்து மெதுவாக இரத்தம் வழிகிறது… மருத்துவர்கள் அதிர்ச்சியானார்கள்… அவள் மூர்ச்சையானாள்….அவள் பலம் எல்லாம் பலவீனமாகி கட்டிலில் சாய்ந்தாள்…இதோ குழந்தையும் இழுத்தெடுக்கப்பட்டது…
நேரம் 10.29…
இவ்வளவு நேர போராட்டம் வீணாகிப்போன சோகம் மருத்துவர்களை ஆட்கொண்டது….
ஒரே கட்டிலில் தாயும் பிள்ளையும் பிணமாக….
மருத்துவர்களால் உணர்ந்துகொள்ளக் கூட முடியவில்லை…
பிறக்கப்போகும் ஒரு குழந்தையை பிறக்கவிடாமல் .. கட்டியிழுத்து அதுவும் ஒரு தாய்… ஆம்…மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை… மனைவியையும் உலகத்தையே காணாமல் மூச்சடைத்துப்போன குழந்தையையும் மாறி மாறிப் பார்த்து விம்மி விம்மி அழுகிறான் தயாளன்….
சித்ரா…. ஐயோ சித்ரா…. தயாளனின் அடக்க முடியாத அலறல்… வெறிச்சோடிப்போன அந்த அறையின் மூலை முடுக்கெங்கும் எதிரொலிக்கிறது…
பிரசவ அறையின் கதவுகள் திறக்கப்பட்டன….
உயிரிழந்த சடலங்களைக் கொண்டு செல்ல வண்டி வந்திருந்தது….
மெதுவாக இழுத்தெடுக்கப்பட்ட தயாளன் அந்த ஓரத்தில் இருந்த கதிரையில் சாய்க்கப்பட்டான்…. சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வெளியேற்றப்பட்டன….
சிறுது நேர சிந்தனை… பின் தயாளனின் தோளினைத் தட்டிவிட்டு டாக்டர்களும் வெளிச் சென்றுவிட்டனர்…
யாருமில்லாத அறையில் தயாளன்… அவன் கண்கள் சுழன்று சுழன்று மூடுகிறது… கதறி அழ அவனால் முடியவில்லை.. ஆனால் அழுகிறான்…. அப்போது அங்கு வீசிய அந்தக் காற்றில் அறைக்கதவு தடார் என சாத்திக்கொண்டது…
இப்போது எழுந்து செல்ல முற்பட்டான் தயாளன்…
அப்போது அவன் கண்களில் அந்த செருப்புகள் தென்பட்டன…
அருகில் சென்று அதை எடுக்க முற்பட்டபோது… அவனை அறியாமலே அவனுக்குள் ஒரு அசரீரி பேசியது..
ஓ.. அழுகிறாயா….. இன்று இந்த செருப்புகள் தான் உனக்கு மிச்சம்…
வைத்துக்கொள்…. பத்திரமாக வைத்துக்கொள்…
கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல்… தாயை..தந்தையை…குடும்பத்தை விட்டு ஓடி வந்து உனக்காகவே வாழ்ந்த என்னை இதே செருப்பால் அடித்துத்தானே வெளியே தள்ளினாய்… வைத்துக்கொள்…
வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று தெரிந்தும் இந்த வயிற்றுக்கு எட்டி உதைத்தாயே… ம்… இப்போது மட்டும் என்ன குழந்தையை பார்க்க வந்தாயா… வைத்துக்கொள் … போய் அந்த பிணத்தை வைத்துக்கொள்…
குடும்பத்தோடு சேர்ந்து என்னை பரிகசித்து…வெளியேற்றி…சந்தோசப்பட்ட போது இல்லாத கண்ணீர் .. இப்போது எதற்கு உனக்கு…போ … போ .. என்னைப் போல இன்னும் யாராவது உன்னை நம்பி… வருவாள்… போ… அவள் பிணத்தையும் கட்டியழு… போ…
இந்த அசரீரி சமூகத்தின் வெகுதூரத்து மூலையில் சின்னஞ்சிறிதாக கேட்டது… அது தயாளனுக்கு மட்டுமே விளங்கியது… சாத்தப்பட்ட கதவுகள் திறக்கும் வரைதான் அவன் கண்களும் கண்ணீர் மல்கப்போகிறது… இது முடிவுமில்லை..திருப்பமுமில்லை… இன்னும் ஒரு அத்தியாயம்….
விளக்கிச்சொல்லப்படாத வார்த்தைகளுக்குள் ஒரு வரலாறு மறைந்து நிற்கிறது… இன்னும் ஒரு இரவு இரைதேடிக்கொண்டது..!
முற்றும்.