அமைதியானதொரு மாலைப்பொழுது..
எழுப்பும் ஓசைகளையெல்லாம் இசையாக மாற்றிக்கொண்டு தன்பாட்டிலே பயணம் செய்துகொண்டிருக்கும் அந்த நதிக்கரையோரம்.. எதிர்க்கரையில் அழகிய மலையும் அதன் அடிவாரத்தில் இருள் கவ்வ நிறம் மாறிக்கொண்டிருக்கும் பச்சை மரங்களையும் பார்த்தபடி மலையிடுக்குகளுக்குள் மாலை நேர மேகங்களோடு கண்ணாம்பூச்சியாடும் ஆதவனை ரசித்துக்கொண்டிருந்தான் இளங்கோ..
புஸ்..புஸ்.. என்று சரவுண்ட் சிஸ்டத்தில் சவுணட் கேட்பது போல் காதுக்கருகே ஒரு உணர்வு.. தன்பாதையில் குறுக்கறுக்கும் கற்பாறைகளோடு நதியவள் மோதும் சப்தங்களை ரசித்துக்கொண்டிருந்த காதுகளில் இது வித்தியாசமான ஊடுருவல்..
சுதாரித்துக்கொண்ட இளங்கோ அங்கும் இங்கும் பார்க்கிறான்..
“அந்தி சாயுற நேரத்துல ஆற்றங்கரைப்பக்கம் போகாதைங்கடா..அங்க பேய் பிசாசெல்லாம் அலையுதாம்”
இது சிறிய வயதில் பாட்டி பயமுறுத்துவதற்காகக் கூறியிருந்த வார்த்தைகள். தனக்குள்ளே அவற்றை நினைத்துப்பார்த்து உள்மனதில் சிரித்துக்கொண்டவன் ..
“சரி எதுக்கும் வீட்ட போவோம்.. நேரம் வேற போகுது..ம்.. இருட்டிட்டுது” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு எழுந்தபோது.. மீண்டும் அதே சத்தம்.
இந்தத் தடவை அவன் ஆர்வம் அதிகமானது.. ஒலி வரும் திசையை நோக்கிக் காதைக்கூர்மையாக்கி கேட்கத்தொடங்கினான்.
ஒவ்வொரு விநாடியும் நகர நகர ஒலியின் அதிர்வு அதிகமானது.. இப்போது தனதருகே மிகவும் நெருக்கமாக ஷ்…..ச்..ஷ்….ச்க்…..என்று இன்னும் அதிக நயத்துடன் கேட்கின்றது. எதற்குமாக தனது நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டவன் கட்டியிருந்த வேட்டியை சற்றே உயர்த்திக்கட்டிக் கொண்டு தவளத்தொடங்கினான்..
எந்தப்பக்கம் இருந்து சத்தம் வருகிறது? அவன் உள் மனது அவனிடமே கேள்வியெழுப்புகிறது.
இருந்தாலும் ஒரு ஊகத்தில் மிகவும் நிதானமாக அடிமேல் அடியெடுத்து சத்தமே வராமல் நடக்கிறான். ஏதோ இரண்டு சங்கிலிகளை ஒன்றாகப் பிணைத்து இறுக்குவது போல் ஒரு முறுக்கல் சத்தம் மெல்லமாக அவன் காதுகளைத் தொடுகிறது.. அவனை அறியாமலே அவன் உடம்பு வியர்த்து வழிகிறது.
“என்னவாயிருக்கும் ?” என்ற சந்தேகம் ஆனால் எதுவாயிருந்தாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா.. அடிக்கடி பாட்டிவேறு ஞாபகத்திற்குள் வந்து செல்கிறாள்.
“பெரியவங்க பேச்சை மதிக்காமல் போறோமோ ” என்ற உணர்வு இருந்தாலும் மனசு விடுவதாயில்லை.
இப்போது எழுந்து நின்று சுற்று முற்றும் பார்க்கிறான். வானில் இருள் நன்றாக சூழ்ந்துவிட்டது.. இருந்தாலும் ஏதோவொரு வகை வெறி அவன் மனதில்.. சத்தம் எங்கிருந்து வந்தது என்று பார்த்தே தீர வேண்டும் என்கின்ற அவா..
கண்ணுக்குத் தெரியாட்டியும் காதுகளை கவர்ந்திழுக்கின்றது.. எதற்கும் இதுவரை வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறான்.. அப்போது
உயரமாக வளர்ந்து நிற்கும் அந்தக் காட்டுச்செடிகளுக்கு நடுவே வானின் நட்சத்திர ஒளி பட்டுத்தெறிக்கும் ஒரு காட்சி..
வானில் அல்ல நிலத்தில்..
ஆம் அங்கிருந்து தான் சத்தம் வந்தது.. இப்போது இன்னும் அதிகரித்த ஆர்வத்தில் தனது பாதச் சத்தம் கேட்காமல் பெருவிரலால் நிலத்திலூன்றி மெதுவாக நெருங்கிச் சென்றான்.. இதோ ஓரளவு நெருங்கி வந்ததும் அவன் கண்ணையே அவனால் நம்பமுடியவில்லை..
வெள்ளிச் சங்கிலிகளிரண்டு ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு.. இறுக்கமாக.. மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்க அங்கே வானின் தாரகைகளின் ஒளி கூடப்பட்டுத்தெறிக்கின்றதோ..?
மெதுவாக நெருங்கியவன் உணர்ச்சிகளையும் தோற்கடித்து ஆறாக வழிந்தோடியது வியர்வை… களைப்பில் அல்ல பயத்தில்…
ஆம் அது சர்ப்பங்களிரண்டின் ஊடல் காட்சி..!
வாழ்க்கையிலேயே இன்றுதான் முதற்தடவையாக இந்த அரிய காட்சியைப் பார்க்கக் கிடைத்தது என்று எண்ணி ஆர்வமாகப் பார்க்கிறான். அந்தப் பாம்புகள் இரண்டும் ஒன்றையொன்று பிண்ணிப் பிணையும் காட்சியை ரசித்துக்கொண்டிருக்கும் போதே..
ம்…ஐயோ..அம்…..என்று அமுங்கிச்செல்லும் ஓர் முனகல்ச் சத்தம்..
இது பாம்பின் சத்தமல்ல மனிதச் சத்தம்….ம் மனிதச் சத்தம்…அவன் மனசு அடித்துக்கூறியது..
சத்தம் வந்த திசையை வேகமாகத் திரும்பிப் பார்க்க.. அங்கே அவன் கண்களையே நம்ப முடியவில்லை.. யாரது யாராயிருக்கும்…? மேலும் மேலும் வழியும் வியர்வையினால் முழுமையாக ஈரமாகியிருக்கும் சட்டையைக் கழற்றி வியர்வைத் துடைத்துவிட்டு ஒரு வேகத்துடன் சென்றவன்…
மலைத்து நிற்கிறான்..உணர்விழந்தவன் போல் மலைத்து நிற்கிறான்.
அவனை அறியாமலே அவன் உதடுகள் அ…ண்…ணி அண்ணி என்று மெதுவாக உச்சரிக்கின்றது… இதோ அரை நிர்வாணமாக இருக்கும் அண்ணியின் மெய் மீது ஆறுமுகம்…ஊருக்குள்ளே பெரிய கனவான்..
தாங்க முடியவில்லை இவன் மனசுக்குத் தாங்க முடியவில்லை..
கஷ்டப்படும் குடும்பம் ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்படும் குடும்பத்தில் வாடிக்கொண்டிருந்த இவளை எங்களது மூன்று இளைய சகோதரிகளைக் கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட மறந்து கட்டினானே…. அவன் பட்ட கஷ்டங்கள் எத்தனை?
என்னுடைய படிப்பு, தங்கச்சிங்க கல்யாணம் என்று எல்லாத்துக்குமா கஷ்டப்பட அங்கை அரபிக்காரனுட்ட அவன் மாடா உழைக்கிறான்..இங்கே..?
ஐயோ.. கடவுளே இவளை சும்மாவிடக்கூடாது.. என்ட அண்ணனுக்கு துரோகம் செய்த இவளை சும்மா விடக்கூடாது…
சிவந்த கண்களோடு வெறித்திருக்கும் இதயம் இதை நினைத்துக்கொண்டிருக்கும் போதே ….
பெரும் சத்தமாக அம்மா……என்று ஆறுமுகம் அலறும் சத்தம்….
என்ன நடந்தது?
மறு விநாடிக்குள் ஐயோ என்னைக் காப்பாற்றுங்….க…. அண்ணியின் மரண பயத்துடனான உருக்கமான கெஞ்சல்…ஆனால்..
அனைத்தும் ஓய்வதற்கு மொத்தமாக எடுத்தது 80 விநாடிகளாகத்தான் இருக்க வேண்டும். காமக்கணையில் வில்லும் அம்புமாகப் பிணைந்திருந்த உடல்கள் நிரந்தரமாக இரத்த ஆற்றில் நிலைத்திருக்கிறது..
வெறித்த முகத்தோடு இளங்கோ.. கையில் கூரிய இரும்புக்கம்பி….
இது எங்கிருந்து கிடைத்தது?
ஒருவேளை ஆறுமுகம் பாதுகாப்பிற்காகக் கொண்டு வந்திருந்தானோ………?
நல்லது செய்ய நாளும் உளுவோம்
தீயது கண்டால் தீயிலிடுவோம்;
சுட்டெரிக்கும் சூரியன் கூடப்
பயனில்லை என்றால் விட்டெறிவோம்.
தெய்வம் நின்று கொல்லட்டும்
நாம் அன்றே கொல்வோம்
அன்றேல் வீழ்ந்து மடிவோம்.
தர்மம்..
தலை காத்தது போதும்..
தலையெடுக்கவும் செய்யட்டும் !
-இவை இளங்கோவின் உதடுகள் தந்தது.
புஷ்ஷ்ஷ்…….. .மனு நீதி அறியாத அரவங்கள் இன்னும் நிம்மதியாக…….
தொடரும்…