க்ர்ர்க்..டக்..
ம் வெளியிலெடுத்து கன நாளாயிட்டுது..இப்போ எல்லாம் முன்னம் மாதிரி வெளிய போக முடியுறுதில்லை.. என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிறியதொரு முக்கலுடன் இடக்கையால் கீழிளுக்க..மீண்டும் ட்ட்க்க் என்ற சத்தம்.. சிறியதாய் ஆனால் மெதுவாய்க் காணப்பட்ட அந்த வெள்ளைத்துணியால் பூவைக் கசக்காமல் வருடுவது போல் வருடிவிட்டு .. இலேசாய் திறந்திருந்த யன்னல் வழியே எட்டிப்பார்த்தான்..
சில்…லென்று வீசிய அந்த வாடிப்போன காற்று முகத்தில் படவே தனது இடக்கையால் முகத்தை தடவிய படி.. சட்..என்ற மெல்லிய ஒலியோடு யன்னலை மூடிவிட்டு திரும்பிப்பார்க்கிறான். யன்னல் திறந்திருந்ததனால் அதனூடே உட்புகுந்த கீறலொளியின் வெளிச்சம் இருந்தது.
இப்போது கும்மிருட்டு.. தட்டித் தடவி யன்னல் கட்டிலிருந்த தீப்பெட்டியைக் கையிலெடுத்து சுர்…ரென்ற சீறலுடன் பற்றிய ஜோதியில்.. எங்கே வைத்தேன் இந்த மெழுகுவர்த்தியை.. ஓ இங்கையிருக்குதா என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவன் தீச்சுவாலையில் மெழுகுவர்த்தியை சீண்ட.. கட்டி கட்டியாக கண்ணீர் வடிக்கத்தயாரானது இள மஞ்சள் ஒளியுடன் அந்த உருகும் பாவை.. மெல்லிய வெளிச்சத்தில் அவன் கையிலிருந்ததும் மினுங்கியது. தீச்சுவாலையின் அருகே விளிம்புகளை மிகவும் அவதானமாக பார்த்தபோது .. இந்தப்பக்கம் சரி என்று அவன் மனது கூற மிக நெருங்கிய பார்வையுடன் மறு பக்கத்தினை பார்க்கிறான்.. மேலும் கீழுமாக உன்னிப்பாக கவனித்தவன்.. திடீரென ஒரு இடத்தினை உற்று நோக்கினான்.. தெளிவு பெற்றவன் போல் மீண்டும் அந்தச் சிறிய வெள்ளைத் துணியையெடுத்து.. அழுத்தித் தேய்த்து.., பதிந்திருந்த அந்த அடையாளத்தினை நீக்கி மீண்டும் உருகும் மெழுகின் ஒளியில் பார்த்தபோது அவனை அறியாமல் ஒரு புன்முறுவல்…. சற்றே அட்டகாசமாய்.
இப்போது புரிந்திருக்கும் இது ஊர் இறங்கும் இரவு நேரம் என்று..
தன் ஓலைக்குடிசையின் வாயிற் கதவை சாத்திவிட்டு கட்டியிருந்த வேட்டியை முழங்காலுக்கு மேல் வரை தூக்கியபோது….ஞாபகம் வரவே
கை நுழைத்துப் பார்க்கிறான்.. ம் அரை ட்ரவுஸர் போட்டுத்தான் இருக்கிறான்.
சர்க் சர்க் என்று சறுகுகள் எழுப்பும் ஓசைகளுடன் மெதுவாய் ஆரம்பித்து .. வேகமாகி .. நிதானித்து .. தூரத்தே தெரியும் சிறியதோர் வெளிச்சத்தை நோக்கி நடக்கிறான்.
நடைபாதையில் கல்லிருந்தாலும் முள்ளிருந்தாலும் அவனை ஒன்றும் செய்திருக்கப்போவதில்லை. நடக்கும் பாதை இதுதான் என்பதை
நிர்ணயித்து நடக்கும் லட்சியவாதி இவன். முடிவுகள் இவனுக்கு மௌனத்தைக் கொடுத்திருந்தாலும் முகத்தில் தெளிவு இருக்கிறது..
குனிந்த தலை, வாட்டசாட்டமான உடம்பு, கறுநிறத் தோல், சுருட்டை முடிகொண்ட தலை..இலக்கை மாத்திரம் நோக்கும் பார்வைகளுடன்
வெறுங்காலுடன் நடந்து கொண்டிருக்கும் இவன் பாதையில்… காற்றடித்ததோ இல்லை யாரும் தள்ளிவிட்டதோ தெரியவில்லை சாய்ந்திருந்தது ஒரு சிறிய மரம். இந்த மனுசங்களே இப்புடித்தான்.தேவைன்னா மரத்தை சாய்த்து காயையோ பழத்தையோ புடிங்குப்போட்டு அப்புடியோ விட்டுட்டு போயிருக்காங்க…ம்..தம் பிடித்து அந்தச் சிறிய மரத்தை பாதையின் ஓரத்திற்குத் தள்ளிப் போடுகிறான்..அப்போது..
ஏய் கவுத மே ? (யாரது) சிங்களக் குரல் கேட்கிறது.. டோர்ச் வெளிச்சம் நேராகக் கண் பார்வையைக் குழப்பினாலும் நிலை தளராது.. மம கேசவன் என்று தனது பெயரைக் கூறுகிறான். ஒஹெப் பளயங்..கொஹேத மே ரே வேலே.. (எங்கே போகிறாய் இந்த இரவிலே).. நிகங் கடயட (சும்மா கடைப்பக்கம் போறேன்).. குரல் வந்த திசையை நோக்கி சரளாமாய் பதில் கூறிவிட்டு தன் பாட்டில் நடக்கிறான்.
காட்டு வழி தாண்டி ஓடுபாதையை நெருங்கிவிட்டான். அங்கிருந்து பார்க்க.. தூரத்தில் மங்களாய்த் தெரிந்த வெளிச்சம் இங்கும் மங்கலாய்த்தான் தெரிகிறது. பத்தடி நீள அகலத்தில் மூங்கில் தாங்கிகள் கொண்டு களிமண்ணால் அமைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய கடையின் ஓலைக் கதவுகளை சாத்திவிட்டுக்கொண்டிருந்தான் கேசவனின் நண்பன் சமன்.. அவனைப் பார்த்து இவனும் இவனைப் பார்த்து அவனுமாய் தலையை ஆட்டிக்கொள்ள கடையை அடைத்தவாறே… எனது வேலைகள் முடிந்துவிட்டது நாளை வருகிறேன் என்று தனது முதலாளியிடம் கூறிவிட்டு தன்னைத் தாண்டித் தன்பாட்டில் நடந்து கொண்டிருக்கும் கேசவனின் பாதையைப் பின்தொடர்கிறான்.
அண்ணளவாய் ஒரு கால் மைல் தூரம் சென்றிருந்த வேளையில் ம்..ஹம்..என்ற மெல்லிய கனைப்புச்சத்தத்துடன் இருளோடு இருளாக இன்னுமொரு உருவம்.. அருகில் சென்ற கேசவன் நின்றிருக்க.. அவர்கள் இருவரையும் சமன் நெருங்குகிறான். மூவரும் கூடிக் கதைக்கின்றனர்.. இடையில் ஆத்திரப்பட்ட கேசவன் சமனின் தோளில் போட்டிருந்த துண்டுகளை இறுக்கிப் பற்றி இழுத்து.. தன் முகத்தருகே வைத்து ஏதோ ஆணித்தரமாய்க் கூற.. மூன்றாமவன் இருவரது கைகளையும் தட்டிவிடுகிறான்…
மயான அமைதி நிலவுகிறது..
ஒரு கணம் அமைதியாய் நின்றவர்கள் திடீரென சுதாரித்துக்கொண்டு நகர்கின்றனர்.
குப்பி விளக்கு வெளிச்சம் கொடுக்கும் அந்தக் குக்கிராமத்தில் பெரிய வீடென்றால் இந்த வீடாகத்தான் இருக்கும். சுற்றிவர வேலி, பெரிய பெரிய தென்னை மரங்கள் நிறைந்திருக்க சுமார் 200 மீற்றர் தொலைவில் சிறிய வெளிச்சம் தெரிகிறது. ஆம் அது அந்த வீட்டில் இருந்து வெளிவரும் வெளிச்சம் தான்…
அக்கம் பக்கம் இயந்திரமாகத் திரும்பித்திரும்பிப் பார்த்த அந்த இளைஞர்கள்.. திடீரென இதுவரை நின்ற இடத்தில் தென்படவில்லை… சற்று நேரத்தில் பாரிய தகரப் பெட்டிக்குள் கல்லொன்று வீழ்ந்தது போன்ற ஒரு சத்தம்…இது இந்த ஊருக்கு ஒன்றும் புதிதல்ல..மலையடிவாரத்தின் இயற்கைக் குக்கிராமமல்லவா…
இரவு மறைந்தது. உதயத்தின் சின்னம் கதிரவன் மெல்லத் தலை காட்டுகிறான்.. வழக்கத்திற்கு மாறான காட்சிகளை இன்று கிராமத்தில் காணுகிறான். தோட்டங்களுக்கும்,கூலி வேலைகளுக்கும் விடியப்புறமே உற்சாகமாய் வேலைக்குச் செல்லும் பாட்டாளிகள் வாழும் இந்த ஊர்.. இன்று பட்டுப்போனதோ..? என்று நினைக்குமளவுக்கு காய்ந்து போயிருந்தது. மனிதர்களை சுமந்துசெல்லும் மாட்டு வண்டிகள் கூட வாடி நிற்கின்றது..
வெறிச்சோடிப் போயிருக்கும் ஊரின் விடிகாலைப் பொழுதிலே..
கேசவன்..கேசவன்..உரத்த குரலில் கேசவனை துயிலெழுப்பி உள் நுழைகிறான் நிசார்…
டேய் எழுந்திருடா..
விழிக்க மறுக்கும் விழிகளைக் கசக்கிய வண்ணம் ம்… எனும் கேசவனிடம்..
டேய் நம்ம அரசியல்வாதி லொகுபண்டார செத்துட்டானாம்….
இவன் இதைக் கூறும் பொழுதே வெளியில் இரண்டு ஊர்வாசிகள் சிங்களத்தில் இப்படிக் கூறுகிறார்கள்.. நேற்றைக்குத்தான் கூட்டத்திலை வைச்சு இது சிங்கள தேசம்.. நாளைய நாள் நமக்குத்தான் என்று சத்தமாப் பேசினாரு.. இண்டைக்கு அவரையே காணையில்லை..
உரையாடலைக்கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் இருக்கும் நிசாரையும் கேசவனையும் பார்த்து தூரத்தில் நின்று சமன் கையசைப்பது தெரிகிறது…. தூரத்தில் இருக்கும் நிசாரைப் பார்த்த போது நேற்று இரவு இருளில் கண்ட உணர்வு பிறக்கிறது.. அது நிசார்தானா? இல்லை தற்போது சமனுக்கருகில் நிற்கும் அன்டனியா என்று புரியவில்லை. நான்கு பேருமாக கையசைத்து சிரிக்கும் போது கேசவன் மறைப்பில் இருந்து தடீல் என்ற சத்தத்துடன் வீழ்கிறது இரவு துடைக்கப்பட்ட அந்தத் துப்பாக்கி…!
தொடரும்…