கேணிவனம் – 24

ஆஆஆஆ….!

லிஷா அலறிவிட்டாள். அவள் அலறல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

‘என்ன லிஷா என்னாச்சு..’ என்று சந்தோஷ் அவளை நெருங்கியபடி கேட்க, அப்போதுதான் அவனும் தாஸின் முகத்தைப் பார்த்தான். வித்தியாசமாக இருந்தது…

‘அய்யோ.. பாஸ்க்கு என்னாச்சு..?’ என்று அவனும் பதற்றமடைய… சக்கரவர்த்தி தாஸின் உடலை நெருங்கி வந்தார்.

‘இருங்க.. நான் பாக்குறேன்..’ என்றுகூறி, அவனது கையைப் பிடித்துப் பார்த்தார். அவனது மார்பில் காதுவைத்துப் பார்த்தார்…

‘பயப்படாதீங்க… உயிரோடத்தான் இருக்கார்… ஆனா மயக்கமடைஞ்சியிருக்கார்…’ என்று கூறி, தாஸ்க்கு அக்கம்பக்கத்தில் துணிகளை விலக்கி அங்குமிங்கும் பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரை நெருங்கி வந்து…

‘என்ன தேடுறீங்க..?’ என்று கேட்டார்.

‘இல்ல, ஏதாவது பூச்சியோ, பாம்போ கடிச்சியிருக்கான்னு பாக்குறேன். அப்படியிருந்தா இவர் உடம்புல கடிவாய் இருக்கும். அப்படி எதுவும் கண்ணுக்கு தெரியல… ஆனா, இவர் உடம்பு ரொம்பவும் பலவீனமா இருக்கு…’

‘எதனால அப்படி..’ என்று ப்ரொஃபஸர் கேட்டார்

‘நேத்து மழையில நனைஞ்சபடி நடந்துவந்தது இவருக்கு ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்… முகமெல்லாம் மஞ்சளா தெரியுது… ஏதாவது விஷக்காய்ச்சலா இருக்கலாம்..’

‘அய்யோ..! சார்… உயிருக்கு ஏதாச்சும் ஆபத்தா..?’ என்று சந்தோஷ் பதற்றத்துடன் கேட்க

‘உறுதியா சொல்லமுடியாது, காட்டுக்குள்ள மிருகங்களுக்கு இருக்கிற சில விநோத ஜூரம் சில சமயம் மனுஷங்களுக்கு பரவிடும். அதுக்கு வைத்தியம் பண்றது அவ்வளவு சுலபமில்ல… இது என்ன மாதிரி ஜூரம்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..’

‘அப்ப மேற்கொண்டு கேணிவனத்துக்கு போக முடியாதா..?’ என்று ப்ரொஃபஸர் கேட்க, சந்தோஷூக்கு கோபம் வந்தது… என்ன மாதிரி மனிதர் இவர், ஒருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போதும், பயணம் தடைபட்டதற்கு வருந்திக் கொண்டிருக்கிறாரே என்று குமுறினான்.

‘சார், கேணிவனம் போறதோட, இவர் உயிர்தான் இப்போ முக்கியம்…’ என்று கொஞ்சம் வருத்தத்துடன் கூற, சக்கரவர்த்தியும், ப்ரொஃபஸரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, ‘யெஸ், நானும் அதைத்தான் நினைக்கிறேன், இவர் உயிரை எப்படியாவது காப்பாத்தியாகனும், அதுக்கு முதல்ல ப்ரியாரிட்டி கொடுங்க… கேணிவனம் வேணும்னா இன்னொரு சமயம் வந்தும் பாத்துக்கலாம்..’ என்று கூற… சக்கரவர்த்தி மிகவும் குழப்பமடைந்தார். ஆனால் ப்ரொஃபஸர் தொடர்ந்தார்…

‘இன்ஸ்பெக்டர் சார், இன்னொரு தடவை வர்றதுங்கிறதெல்லாம் நடக்காத காரியம். அதுவும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துட்டு திரும்பி போறதுங்கிறது ரொம்பவும் அநியாயம். தாஸே இதை விரும்பியிருக்க மாட்டான்..’

‘ஆனா, உங்க உயிருக்கு ஏதாச்சும் இப்படி ஆகியிருந்தா, தாஸ் கண்டிப்பா உங்களை காப்பாத்துறதுதான் முக்கியம்னு சொல்லியிருப்பார்… இல்லன்னு சொல்லுங்க..?’ என்று லிஷா ப்ரொஃபஸரை மடக்கினாள். அவர் இந்த நேரம் பார்த்தா, தாஸ்க்கு இப்படி ஒரு விஷஜூரம் வரவேண்டும்..? என்று மனதிற்குள் மிகவும் நொந்துக் கொண்டார்.

சக்கரவர்த்தி தீர்க்கமாய் யோசித்தவராய்…

‘இன்ஸ்பெக்டர் சொல்றதுதான் சரி, இப்போதைக்கு இவர் உயிரை காப்பாத்துறதுதான் முக்கியம், நான் சில பேஸிக் வைத்தியம் பண்ணிடுறேன். அதுக்கப்புறம் இவரை திரும்ப ஊருக்கு கூட்டிக்கிட்டு போய் வைத்தியம் பண்ணி எப்படியும் பிழைக்க வச்சிடலாம். நாம கேணிவனத்தை மறந்துதான் ஆகனும்…’ என்று கூறி ப்ரொஃபஸரைப் பார்த்து, ‘வேற வழியில்ல..?’ என்று அவருக்கும் சமாதானம் சொன்னார். ப்ரொஃபஸர் அரைமனதுடன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

சக்கரவர்த்தி சில அடிப்படை மருத்துவங்களை தாஸூக்கு செய்துமுடிக்க மணி 8 ஆனது… இன்ஸ்பெக்டரும் சந்தோஷூம் தாஸை தூக்கிச்செல்ல மரக்கொம்புகளில் டெண்ட் விரிப்பை சுற்றி ஒரு குட்டி ஸ்ட்ரெச்சர் போல் செய்துக் கொண்டார்கள்.. தாஸின் மயக்கநிலை உடலை தூக்கி அதில் கிடத்தி அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்…

அப்போது சக்கரவர்த்தி கிளம்பும்முன் இன்னொரு குண்டை தூக்கி போட்டார்…

‘கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு சின்ன டீல்-க்கு நீங்க எல்லாரும் ஒத்துப்போகணும்…’

‘என்னதது…’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்…

‘ஒருவேளை தூக்கிட்டுபோற வழியில தாஸ் இறந்துட்டா, அவர் உடம்பை நாம இந்த காட்டுலியே விட்டுட்டு போக வேண்டியதாயிருக்கும்…’ என்று கூற, சந்தோஷும் லிஷாவும் அதிர்ந்தனர்…

‘ஏன் அப்படி சொல்றீங்க… அவருக்கு எதுவும் ஆகாது..’ என்று லிஷா கூற

‘இல்ல லிஸா… இதை சொல்லிடுறது நல்லது… இவருக்கு வந்திருக்கிறத என்ன மாதிரி ஜூரம்னு தெரியல… ஒருவேளை அது பரவுற ஜூரமா இருந்தா, அவர் இறந்துட்டாருன்னா, ஏகத்துக்கும் ஸ்பீடா பரவும்… அதனால, ஒருவேளை இவர் போற வழியில இறந்துட்டார்னா, இவரோட உடம்பை போட்டுட்டு நாம பாட்டுக்கு திரும்பி பாக்காம போயிட்டே இருக்கணும், நோ சென்டிமெண்ட்ஸ், நோ ட்ராமா..! என்ன சொல்றீங்க..? எல்லாருக்கும் இதுல சம்மதமா..? என்று கேட்க, அனைவரும அரைமனதுடன் சம்மதித்தனர்.

————————————–

ஏற்கனவே பெய்திருந்த மழையினால் நடக்கும் பாதை பயங்கர சேறும் சகதியுமாக வழுக்கிக் கொண்டிருக்க, தாஸை தூக்கிக் கொண்டு நடப்பது மிகவும் கஷ்டமாய் இருந்தது. இன்ஸ்பெக்டரும், சக்கரவர்த்தியும், சந்தோஷூம் மாறி மாறி 4 மணி நேரமாக பாரத்தை பகிர்ந்து கொண்டபடி நடந்துவந்தார்கள். ப்ரொஃபஸர் ஏகத்துக்கும் கடுப்பாய் நடந்துக் கொண்டிருக்க, லிஷாவுக்கும் சந்தோஷூக்கும் தாஸை நினைத்து கவலை அதிகமாய் இருந்தது…

இடையில் ஓரிடத்தில் பாரம் தாங்க முடியாமல் ஸ்ட்ரெட்சரை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் தன்னிடமிருந்த பேக்-இல் கைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருக்க, சக்கரவர்த்தி அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் பேக்-லிருந்து வாக்கி டாக்கியை எடுக்கவும், சக்கரவர்த்தி திரும்பி கொண்டார்…

இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கியின் மூலம் ‘ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்’-டன் தொடர்பு கொள்ள முயன்றார். பலனில்லை…

ஒரு  மணி நேர நீண்ட இளைப்பாறுதலுக்கு பின் மீண்டும் தாஸை கிடத்தியிருக்கும் ஸ்ட்ரெட்சரைத் தூக்கிக் கொண்டு அனைவரும் நடையைத் தொடர்ந்தனர்… பாரத்தை தூக்க சந்தோஷ் சிரமப்படுவதைப் பார்த்த லிஷா, பாரத்தை பகிர முன்வந்தாள்.

‘கொஞ்ச நேரம் வேணும்னா நானும் ஒரு கை கொடுக்கிறேனே..?’ என்று கேட்க, சந்தோஷ் மறுத்தான்.

‘வேண்டாம் லிஷா, உன்னால வலியைத் தாங்க முடியாது. நாங்க பாத்துக்கறோம்..’ என்று கூற, மீண்டும் மௌனமாய் பயணம் தொடர்ந்தது…

திடீரென்று இன்ஸ்பெக்டரின் பேக்-லிருந்து ஏதோ விழுந்த சத்தம் கேட்டது…

‘இன்ஸ்பெக்டர் சார்… இந்தாங்க…’ என்று துப்பாக்கியை சக்கரவர்த்தி எடுத்துக் கொடுத்தார்…

‘பேக்-லருந்து விழுந்திடுச்சி… பத்திரமா வச்சிக்கோங்க…’ என்று திருப்பிக் கொடுத்தார்… இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை முறைத்தபடி வாங்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டார்

‘நாம சரியான பாதையில போயிட்டிருக்கோமா..? இதுதான் திரும்பி போற ரூட்டா..?’ என்று இன்ஸ்பெக்டர் சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டார்.

‘ஆமா… இது சரியான ரூட்தான்..’ என்று சக்கரவர்த்தி கூற…

‘எப்படி அவ்வளவு ஷ்யூரா தெரியும்..? காட்டுக்குள்ள ரூட்-ஐ ஞாபகம் வச்சிக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன..?’ என்று மீண்டும் கேட்க…

‘கடல்லயும் காட்டுக்குள்ளயும், திசைகளை இலக்கா வச்சி நடக்கனும். இங்க சூரியன்தான் நமக்கு வழிகாட்டி.. இதோ இப்போ நாம நடந்துப் போயிட்டிருக்கிறது நேத்து நடந்த பாதையோட ரிவர்ஸ் ஆர்டர்… நல்லா நினைவு படுத்தி பாருங்க நேத்து நம்ம முகத்துக்கு நேரா மேகமூட்டத்துக்குள்ளருந்து சூரியவெளிச்சம் அதிகமா இருந்தது… இப்போ நம்ம முதுகு பக்கம் வெளிச்சம் அதிகமா இருக்கு..’ என்று கூற, பயணக்களைப்பும் பாரமும் கொஞ்சம் மறந்தபடி அனைவரும் அவர் பேச்சில் கவனம் செலுத்தி வந்தனர். சக்கரவர்த்தி தொடர்ந்தார்…

‘அதுமட்டுமில்ல… காட்டுக்குள்ள போகும்போது, நம்மளை இடைமறிக்கிற சின்ன சின்ன கிளைகளை கத்தியால வெட்டிக்கிட்டே போகணும். நமக்கு வழியும் கிடைச்ச மாதிரியாச்சு, திரும்பி வர்றதுக்கு ஒரு அடையாளமாவும் ஆச்சு…’ என்று கூறியபடி நடையைத் தொடர…

லிஷா ஒரு மரக்கிளையில் ஒரு அடையாளத்தைப் பார்த்தாள்.

‘இந்த மாதிரியா..?’ என்று காட்ட, அனைவரும் நின்றனர்… அங்கிருந்த மரங்களில் குட்டிக்கிளைகள் வெட்டப்பட்ட அடையாளங்கள் அதிகமிருந்தன…

இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தியிடம் திரும்பி…

‘நீங்க எப்போ நேத்து மரத்தை வெட்டிக்கிட்டு வந்தீங்க..?’ என்று கேட்டார்…

சக்கரவர்த்தி இன்ஸ்பெக்டரைப் பார்த்து…  ‘இது நான் வெட்டுனதில்ல..’

‘பின்ன யாரு வெட்டுனது..?’ என்று சந்தோஷ் ஆர்வமாய் கேட்க…

தூரத்தில் திடீரென்று ஏதோ ஒரு சலசலப்பு கேட்டது… தாஸை கீழே கிடத்திவிட்டு, அனைவரும் அந்த திக்-ஐயே பார்த்துக் கொண்டிருக்க…

மீண்டும் சத்தம்.

இன்ஸ்பெக்டர் உஷாரானார். தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, சத்தம் வந்த திக்கில் குறி வைத்துக் காத்திருந்தார்.

திடீரென்று ஏதோ ஒன்று காட்டைக்கிழித்துக் கொண்டு ஓடி வர… இன்ஸ்பெக்டர் சட்டென்று சுட்டார்… சரியாக அவர் சுட்டபோது, சக்கரவர்த்தி அவர் கையை உயர்த்திவிட்டார்…

டம்டம்டம்டம்ம்ம்ம்ம்ம்…. என்ற துப்பாக்கி சத்தம் வானத்தில் ஒலித்தது…

‘ஏன்…?’ என்று கோபமாய் கத்தியபடி சக்கரவர்த்தியை முறைக்க… அவர் சுடவிருந்த இடத்தை சக்கரவர்த்தி சுட்டிக்காட்டினார்… அங்கிருந்து, குணா மூச்சுவாங்கியபடி ஓடிவந்தான்…

‘சுடாதீங்க… சு…டாதீங்க.. ஹஹ்ஹ்… ஹஹ்… ப்ளீஸ்…’ என்று வந்து இவர்களருகில் வந்து விழுந்தான்.

குணாவைக் கண்டதும் சந்தோஷ், லிஷா, மற்றும் இன்ஸ்பெக்டர் மூன்று பேரும் ஒருசேர அதிர்ந்தனர். ப்ரொபஸரும், சக்கரவர்த்தியும் இவன் யார்..? எப்படி இங்கே வந்தான்? என்று யோசித்தபடி பார்த்துக் கொண்டு நின்றனர்.

குணா நிதானமாக பேச பத்து நிமிடங்களானது.

‘நாங்க இந்த காட்டுக்குள்ள வந்து 5 நாளாச்சு… நீங்கள்லாம் இப்போதான வந்தீங்க… நாங்க முதல்லியே வந்துட்டோம்… ஆனா… ப்ச்… தொலைஞ்சி போயிட்டோம்…’ என்று ஒரு திணுசாக பேசினான்.

‘நீங்க கேணிவனம் கோவிலை பாத்தீங்களா..?’ என்று சக்கரவர்த்தி ஆர்வமாய் கேட்க…

‘இல்ல… அதைத்தேடுறது வேஸ்ட்… ‘

‘ஏன்..?’

‘அது இங்க இப்ப இல்ல..?’ என்று கூற, அனைவரும் அதிர்ந்தனர்…

‘அதெப்படி இல்லாம போகும்..’

‘என்ன நடந்துச்சுன்னு தெரியல… இந்த காட்டுக்குள்ள நல்லா தேடிப்பாத்துட்டோம். மைனா… குருவி… காண்டாமிருகம்லாம் பாத்தோம்… ஆனா, அந்த கோவிலை மட்டும் காணலை..’ என்று மீண்டும் குழப்பமாக பேசினான்.

‘உங்ககூட வந்த மத்த டிவி ரிப்போர்ட்டர்ஸ்லாம் எங்கே..?’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்

‘எல்லாம் இருக்காங்க… அங்…க… அங்க இருக்காங்க…’ என்று ஒரு சின்ன குழந்தையைப் போல் ஒரு திசையை சுட்டிக்காட்டினான்.

‘யாருக்கும் எதுவும் ஆபத்து இல்லியே..?’

‘கேமிராமேனோட அஸிஸ்டெண்ட் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு… அவரு சாகறதுக்குள்ள டாக்டர்கிட்ட போய் ஊசி குத்தனும்…’ என்று பேசியபடி அவனும் மயங்கி விழுந்தான்.

அவன் புத்தி சுவாதினமற்று பேதலித்திருப்பது அனைவருக்கும் புரிந்தது…

‘என்ன சந்தோஷ், இவன் பைத்தியம் மாதிரி பேசுறான்…’ என்று லிஷா கேட்க, சக்கரவர்த்தி பதிலளித்தார்.

‘இன்னும் 5 நாள் இங்கேயே ரூட் தெரியாம சுத்திட்டிருந்தா… நாமளும் இப்படித்தான் பேசுவோம்’ என்று கூற, லிஷா பயந்தாள்.

‘சீக்கிரம் இங்கருந்து போயிடலாமே..?’ என்றாள்

‘எப்படி… ஏற்கனவே ஒருத்தரை தூக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம், இப்போ இவன் வேற மயங்கிட்டான்..’ என்று ப்ரொஃபஸர் கூற

‘இவன் கூட வந்தவங்களையும் காப்பாத்தியாகணும்’ என்று இன்ஸ்பெக்டர் கடைமதவறாமல் பேச, சக்கரவர்த்தியும் ப்ரொஃபஸரும் அவரை முறைத்தனர்.

சந்தோஷூக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். குணாவை பார்த்ததலிருந்து அவனும் மிகவும் பயந்தான். குணா பேராசையால் பைத்தியமாக மாறியிருந்ததை எண்ணி உண்மையில் வருந்தினான்.

இப்படி அனைவரும் ஆளுக்கொரு விதத்தில் அடுத்த என்ன செய்வது என்று பயந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் வாக்கி-டாக்கி கதறியது…

‘ஷ்ஷ்…க்.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…. அ… Hello Hello… Do you Copy… Do you Copy… Over’ என்றதும் இன்ஸ்பெக்டர் குதூகலமானார்…

‘Yes I Do… Over’ என்று மேற்கொண்டு அவர்கள் பேசியதின் தமிழாக்கம்…

‘காட்டுக்குள் துப்பாக்கிச்சத்தம் கேட்டதே… அது உங்களுடையதா..?’

‘ஆமாம்…’

‘நீங்கள் யார்… சட்டவிரோதமாக காட்டுக்குள் வேட்டையாடுபவரா..?’

‘இல்லை, நான் தமிழ்நாட்டை சேர்ந்த போலீஸ் ஆஃபீஸர்… மிருகவேட்டைக்காக சுடவில்லை… தற்காப்பிற்காக சுட்டேன். மீண்டும் சொல்கிறேன்… நான் வேட்டையாடவில்லை.. எங்களுக்கு உங்கள் உதவி தேவை..?’

‘நீங்கள் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்..?’

‘என்னுடன் சேர்த்து, 10 பேர்.. இதில் 2 பேரின் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது… எங்களுக்கு உங்கள் உதவி தேவை…’

‘சரி… நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி இருக்கும் மரங்களில் தடினமான மரம் ஏதாவதிருந்தால், அதில் பச்சை கலரில் பெயிண்ட் அடித்த எண்கள் இருக்கும். அதை தெரிவியுங்கள்..’ என்று கூற, அங்கிருந்த அனைவரும் ஆளுக்கொரு பக்கம் தடினமான மரங்களாக தேடி பார்க்க ஆரம்பித்தார்கள்… ஒரு மரத்தில் ‘KFD78854293’ என்றிருந்தது… அந்த எண்களை இன்ஸ்பெக்டர் வயர்லெஸ்-ல் படித்து காண்பித்தார்.

‘சரி… நீங்கள் அந்த மரத்தின் அருகிலேயே நில்லுங்கள். நாங்கள் உங்களை காப்பாற்ற விரைவில் வருகிறோம்…’ என்று கூறியதுடன் அந்த உரையாடல் முடிந்தது…

‘இனிமே பிரச்சினையில்ல… அவங்க வந்து நம்மளை காப்பாத்திடுவாங்க…’ என்று இன்ஸ்பெக்டர் கூற… அனைவர் முகத்திலும் நிம்மதி…

————————————

2 நாட்களுக்குப் பிறகு…

ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடலில்… தாஸ் ஒரு பெட்-ல் சாய்ந்தபடி புத்தகத்தில் முகம் புதைத்திருந்தான்.

லிஷாவும் சந்தோஷூம் உள்ளே நுழைந்தனர்…

‘பாஸ்… இப்போ எப்படி இருக்கு..?’

‘பரவாயில்ல…’

‘கெட் வெல் சூன்..’ என்று லிஷா வாழ்த்து தெரிவித்து ஒரு பொக்கே-வை கொடுத்தாள்.

‘தேங்க்ஸ் லிஷா… சாரி, காட்டுக்குள்ள உங்களுக்கெல்லாம் ரொம்பவும் கஷ்ட்ம் கொடுத்துட்டேன்..’

‘பரவாயில்ல பாஸ்… எதுக்கு சாரியெல்லாம் கேட்டுக்கிட்டு, என்னவோ ஆகும்னு நினைச்சி காட்டுக்கு போனா… என்னென்னவோ நடந்திடுச்சி… போனதுல ஒரு நல்லது என்னன்னா, குணாவையும் சேத்து ஒரு 4 பேர் உயிரை காப்பாத்த முடிஞ்சது… இன்ஸ்பெக்டர் புண்ணியத்துல, கர்நாடகா ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்கிட்டருந்து தப்பிக்க முடிஞ்சது… ஆனாலும், அந்த இன்ஸ்பெக்டர் காட்டுக்குள்ள ஃபயரிங் பண்ணதுக்காக அவர் மேல கேஸ் ஃபைல் பண்ண போறதா சொல்லி மிரட்டி அனுப்பிட்டாங்க…’

தாஸ் அமைதியாக இவர்கள் இருவரும் பேசுவதை ரசித்தப்படி பார்த்திருந்தான்.

‘நல்ல வேளை, யாரோட உயிருக்கும் எதுவும் ஆகலை…’

‘ஆனா, போன காரியமும் நடக்கலையே லிஷா…’

‘கேணிவனத்தை சொல்றியா..?’

‘ஆமா… ஏதோ அந்த அதிசய கோவிலை பார்க்கலாம்… நிறைய விஷயம் தெரியவரும்னு நினைச்சு, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்போட காட்டுக்குள்ள போனா, உயிரை பிடிச்சிக்கிட்டு திரும்பி வர்ற மாதிரியாயிடுச்சி..’

‘விடு சேண்டி(Sandy), சில விஷயங்கள் எல்லார் கண்ணுலயும் மாட்டுறதில்ல… அந்த அதிசயக் கோவில், தாஸ் கண்ணுலயும் குணா கண்ணுலயும் மாட்டுனதே பெரிய விஷயம்’

‘இரகசியங்கள் இரகசியமாவே இருக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றே..? கரெக்ட்தான்.. இரகசியங்கள் அம்பலமாகும்போது, எல்லாருக்கும் பிரச்சினைதான்…’ என்று கூற

இதுவரை அமைதியாயிருந்த தாஸ்  தொடர்ந்தான்…

‘ஹலோ! ஹலோ! ஒரு நிமிஷம்… என்ன நீங்க ரெண்டு பேரும் இத்தோட கதை முடிஞ்சதுங்கிற மாதிரியே பேசிட்டிருக்கீங்க..? இன்னும் கதை முடியலை… என் மொபைல் ஃபோனையும் லேப்டாப்பையும் கொடுங்க..?’ என்று கூற. இரண்டும் அவனிடம் தரப்பட்டது…

மொபைல் ஃபோன் அணைந்திருந்தது. பின்பக்கமாக மொபைலை கழற்ற, அங்கே பேட்டரி இருக்குமிடத்தில் பேட்டரிக்கு பதிலாய் ஒரு மெமரி கார்டு இருந்தது…

‘என்ன பாஸ்? இது என்ன மெமரி கார்டு..?’ என்று ஆர்வம் தாங்காமல் சந்தோஷ் கேட்டான்.

‘இது நம்ம ப்ரொஃபஸர் கொண்டு வந்த ஹேண்டி கேமிராவோட மெமரி கார்டு…’ என்று கூறியபடி அதை தனது லேப்டாப்பில் கனெக்ட் செய்து, அதிலிருந்த ஃபைல்களில் ஒரு வீடியோ ஃபைலை இயக்கினான்.

ஒரு காட்டு பிரதேசம் மிகவும் பசுமையாய் சுற்றிலும் ஆங்காங்கே மரங்கள் மிக அடர்த்தியாய் தெரிந்துக் கொண்டிருந்தது…

‘இது நாம போயிட்டு வந்த காடுதானே…? ஆனா, இது வித்தியாசமான மரங்களா இருக்கே..?’

‘இதெல்லாம் சந்தன மரங்கள்..’ என்று கூற, இருவரும் குழப்பத்துடன் தாஸை பார்த்தனர்…

‘புரியலை பாஸ், நாம போனப்போ, இந்த காட்டுல சந்தன மரங்கள்லாம் இல்லியே..?’ என்று சந்தோஷ் கேள்வியெழுப்பினான்.

‘இது நாம போன காடுதானே தாஸ்..?’ என்று லிஷாவும் சந்தேகத்துடன் கேட்க…

தாஸ் இருவரையும் சற்றே நெருங்கி வந்து, ரகசியமாய் கூறினான்… ‘அதே காடுதான், ஆனா, இந்த வீடியோ 12ஆம் நூற்றாண்டுல எடுக்கப்பட்டது..’ என்றதும் சந்தோஷூம் லிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top