ப்ரொஃபெஸர் கணேஷ்ராம், ஃபோனில் தாஸிடம், தான் ஓவியத்தில் கண்டுபிடித்த மூன்றாவது நபர் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.
‘அந்த மூணாவது நபர், அரசருக்கு பக்கத்துல, உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு… ஒரு அரசன் நின்னுட்டிருக்கும்போது, பக்கத்துல உக்கார்ற தகுதி ரொம்ப சிலருக்குத்தான் இருக்கும்… அந்த வகையில பாக்கும்போது, ஒண்ணு யாராவது ஒரு பெரிய புலவரா இருக்கலாம்… இல்லன்னா யாராவது ஒரு முனிவராவோ இல்லை சித்தராவோ இருக்கலாம்..’
‘நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?’
‘எனக்கு தெரிஞ்சு அது புலவரா இருக்க வாய்ப்பில்லை..!’
‘ஏன்..?’
‘ஏன்னா, புலவர்னா, சரியான தோரணையில நேரா உக்காந்துட்டிருந்திருக்கனும். ஆனா, இந்த உருவம், ஒரு காலை மடக்கி இன்னொரு காலை தரையில வச்சமாதிரி, கிட்டத்தட்ட ஒரு அரை சப்பணம் போட்டு உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு… அதனால, இது முனிவரோ இல்லை சித்தரோவாத்தான் இருக்கணும்..’
‘நல்ல கெஸ்ஸிங் சார்… எனக்கும் அது சித்தரா இருக்கணும்னுதான் எதிர்பார்க்குறேன்..! சார்? இந்த ஓவியம் எந்த நூற்றாண்டுதுன்னு தெரிய வந்துதா..?’
‘ஆமாய்யா..! நீ என்கிட்ட ஒரிஜினல் ஓவியத்தையா கொடுத்தே..? வெறும் நகல் எடுத்து அனுப்பிட்டு எந்த நூற்றாண்டுன்னு கண்டுபிடின்னா… நான் நகலை வச்சிக்கிட்டு, கார்பன் டேட்டிங்-ஆ பண்ண முடியும்..? இதுவரைக்கு தெரிஞ்சதே பெருசுய்யா..!’
‘அய்யோ சார் கோச்சுகாதீங்க… ஜஸ்ட் ஏதாச்சும் கெஸ் பண்ணீங்களான்னுதான் கேட்டேன்..’
‘அநேகமா இது சோழர் காலத்து ஓவியமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா ஓவியத்துல தஞ்சை ஓவியங்களுக்கான டச் எதுவும் இல்ல… அதே சமயம், பாறையில வரைஞ்சி, கோவில் ரூஃப்ல ஏத்தியிருக்காங்கன்னு வேற நீ ஃபோட்டோ எடுத்துட்டு வந்திருக்கே….ரொம்பவு குழப்பமா இருக்குய்யா..! உள்ளே சில இடங்கள்ல ‘நாடி, விநாடி, தற்பரை’ன்னு கால அளகுகள் பத்தி சில ஹிண்ட்ஸ் வேற தெரியுது..! எழுத்துக்கள் பிராமியோ, வட்டெழுத்தோன்னா கண்டிப்பா 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னாடின்னு சொல்லலாம்… ஆனா தெளிதமிழ்ல எழுத்துக்கள் இருக்கிறதால, கண்டிப்பா சோழர்காலத்துதோ இல்ல அதுக்கப்புறமாவோ வரைஞ்சதா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, எதுவும் கன்ஃபர்மா சொல்ல முடியல…’
‘சரி சார்.. தகவல்களை பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி..!’
‘நன்றியெல்லாம் இருக்கட்டும்… இதையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன செஞ்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன்னா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியும்…’
‘அது… வந்து சார்… ஒரு கதை எழுதுறதுக்காக…!’ என்று தாஸ் கூறிமுடிக்கும்முன்பே ப்ரொஃபெஸர் மறுத்தபடி…
‘கதை எழுதுறதுக்காகன்னு சொல்லி என் காதுல பூவை சுத்தாத… நான் நம்பமாட்டேன்… நீ என்னமோ பண்ணிட்டிருக்கிறே… இதுல என்னென்னமோ விஷயம் அடங்கியிருக்குன்னு தெரியுது… என்னன்னுதான் சொல்லேன்… கேட்டுக்குறேன்..’
‘சார்… நான் கூடிய சீக்கிரம் உங்ககிட்ட சொல்றேனே..! அதுவரைக்கும் எதுவும் கேக்காதீங்க சார் ப்ளீஸ்..’
‘சொல்லமாட்டியே நீ..! சரி… சொல்லும்போது சொல்லு… கேட்டுக்குறேன்… வச்சிடுறேன்யா..!’ என்று சற்று அலுப்பாகவே ப்ரொஃபெஸர் ஃபோனை வைக்கிறார்…
தாஸ், உடனே தாத்தாவிடம் திரும்பி…
‘தாத்தா… இந்த ஓவியத்துல, சித்தர் ஒருத்தர் இருக்கிறதாவும் தெரிய வந்திருக்கு… அதுவும், அரசனுக்கு பக்கத்துல உக்காந்துட்டு இருக்கிற மாதிரியாம்..’ என்று கூறியபடி தனது லேப்டாப்பிலிருக்கும் அந்த ஓவியத்தில், ப்ரொஃபெஸர் சொன்ன அந்த சிதைந்த பகுதியை சூம் (ZOOM) செய்து காட்டுகிறான். அதில் ஒரு பாதம் ஆசனத்திலும், இன்னொரு பாதம் தரையில் வைத்தபடியும், மிகவும் மங்கலாக இருப்பது தெரிகிறது. தாத்தா அந்த ஓவியத்தை மேலும் உற்று நோக்குகிறார்.
லிஷாவும் ஓவியத்தில் அந்த பகுதியை உற்றுப் பார்த்தபடி, ‘தாஸ், அப்படின்னா, ஒரு சித்தரோட சொல்முறைப்படி, ஒரு அரசன், தன்னோட ஆளுங்களை வச்சி இந்த சாங்கியத்தை இந்த ஓவியத்துல நடத்திட்டிருக்கான்… இல்லையா..?’
‘ஆமா லிஷா..?’
‘ஒரு வழியா இப்பத்தான் இந்த ஓவியத்தை பத்தி மொத்த விஷயங்களும் தெரிய வந்திருக்குன்னு நினைக்குறேன்..’ என்று லிஷா சந்தோஷப்பட
‘ஆனா இன்னும் அந்த சித்தர் யாருன்னு தெரிய வரலியே லிஷா..?’ என்று தாஸ் வருத்தப்பட்டான்.
தாத்தா இருவரையும் பார்த்தபடி, ‘இந்த சித்தர் யாருன்னு கண்டுபிடிக்க இன்னொரு சுலபமான ஒரு வழியிருக்கு..’ என்று கூற…
‘என்ன வழி தாத்தா’ என்று தாஸ் அவரை ஆர்வமாக பார்த்தபடி கேட்டான்.
‘சித்தர்கள்ல பெரும்பாலானவங்க, சிவபெருமானை கும்பிடுறவங்கதான் இருக்காங்க… சில பேர் முருகப்பெருமானை கும்பிடுறவங்க… இன்னும் சில பேர் பெருமாளையும் கும்பிடுறவங்க… ஆனா… நாம தேடிட்டிருக்கிற சித்தர்… பிரம்மாவை கும்பிட்டவருன்னு தோணுது…’ என்று தாத்தா கூறவும், தாஸுக்கும் விஷயம் புரிகிறது…
‘அட ஆமா…? இந்த ஓவியத்துலயும், பிரம்மாவை நடுவுல வச்சிதானே சுத்தி வழிபடுறாங்க… இந்த சாங்கியத்தை வழிநடத்துறவருன்னா இந்த சித்தரும் பிரம்மாவை கும்பிடுறவராத்தானே இருக்கணும்…’ என்று கூற, தாத்தா தொடர்கிறார்…
‘ஆமா… பிரம்மா கடவுளுக்கு உலகத்துலியே கோவில் விரல் விட்டு எண்ணுற அளவுக்குத்தான் இருக்கு.. அதே மாதிரி, அவரை கும்பிட்ட சித்தரும் ரொம்ப சிலர்தான் இருப்பாங்க… இந்த வகையில ஃபில்டர் பண்ணி தேடுனா… அந்த சித்தர் யாருன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்.’
‘எப்படி தாத்தா கண்டுபிடிக்கிறது..?’ என்று தாஸ் தயக்கமாய் கேட்க…
தாத்த எழுந்து சென்று அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறார்… வெளியே நிலா வெளிச்சத்தில் வயல்வெளிகள் அமைதியாக தெரிகிறது…
அவர் திரும்பி லிஷாவையும், தாஸையும் மாறி மாறி பார்க்கிறார்…
‘நீ அவரை தேடவேணாம் தாஸ்… அவர்தான் அந்த காட்டுக்கோவில் மூலமா உன்னை தேடி கண்டெடுத்திருக்காரு… அந்த சித்தரே தன்னை அடையாளம் காட்டிக்குவாரு… நீங்க ரெண்டு பேரும் பயணக்களைப்புல இருப்பீங்க… ரொம்பவும் மண்டையப் போட்டு குழப்பிக்காம போய் தூங்குங்க… நான் என்னால முடிஞ்சளவுக்கு அந்த சித்தரை பத்தி எங்கிட்ட இருக்கிற புத்தகங்கள்ல தேடிப்பாக்குறேன்… எதுவாயிருந்தாலும் விடிஞ்சதும் பேசிக்குவோம்’ என்று அவர் நம்பிகைக்கையாய் கூறுவதை தொடர்ந்து இருவரும் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
சிறிது நேரத்தில், தாஸ், பால்கணியில் நின்றபடி, ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.
லிஷா நைட் ட்ரெஸ்ஸில் அங்குவந்து அவனுக்கருகில் நிற்கிறாள்.
‘என்ன தாஸ், உங்க தாத்தா… நீங்க சிகரெட் பிடிக்கிறதை பாத்து திட்டமாட்டாரா..?’
‘சே! சே! அவரு ஜெண்டில்மேன்..! தெரிஞ்ச மாதிரி காட்டிக்கமாட்டாரு..’
‘நீங்களும்தான்..! உங்க தாத்தா முன்னாடி ஒரு குழந்தை மாதிரி விஷயங்களை கேட்டுக்குறீங்க… தெரிஞ்சாலும், தெரியாதமாதிரி அவரையே விஷயங்களை சொல்லவிட்டு அழகுபாக்குறீங்க..?’
‘ஹாஹா… எனக்கு அவர் சொல்லி கொடுத்து, விஷயங்களை தெரிஞ்சிக்கிறது பிடிச்சிருக்கு… சின்ன வயசுலருந்து என்னை பக்குவமா நடந்துக்க சொல்லிக்கொடுத்தது அவருதான்… அவர் முன்னாடி எனக்கு இது தெரியும், அது தெரியும்னு என்னால சொல்லிக்கமுடியலை…’
‘ஹ்ம்ம்… Thats so nice of you…’ என்று கூற, அவன் சிரித்தபடி புகைவிடுகிறான். லிஷா மீண்டும் தொடர்கிறாள்…
‘தாஸ், மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு, நாம எப்போ போவப்போறோம்..?’
‘கூடிய சீக்கிரம் கிளம்பியாகணும்..! ஏன் கேக்கறே..?’
‘இல்ல… நம்மகிட்டதான் போதுமான தகவல் இருக்கே..! நாம ஏன் இன்னும் லேட் பண்ணிட்டிருக்கோம்னு கேட்டேன்..!’
‘இல்ல லிஷா… போன தடவை அங்க போனப்போ, நான் எந்த ஒரு ப்ரிப்பேரேஷனும் இல்லாம போயிட்டேன். இந்தவாட்டியும் அப்படி போயிட்டா நல்லாயிருக்காது… அதான், முடிஞ்சவரைக்கும், தகவல்களை திரட்டிட்டு போலாம்னு பாக்குறேன்…’
‘அடுத்த தடவை நீங்க அந்த கேணிவனத்துக்கு போகும்போது, என்னையும் சந்தோஷையும் கூட்டிக்கிட்டு போவீங்களா..?’ என்று கேட்க
‘இதென்ன கேள்வி லிஷா… கண்டிப்பா நாம மூணுபேரும்தான் போறோம்… இன்னொரு முறையும் குணா மாதிரி ஒரு ஆளோட போய், தனியா மாட்டிக்கிற ஐடியா எனக்கில்ல..!’ என்று அவனே மெலிதாக சிரித்தபடி சிகரெட்டின் கடைசி மூச்சை இழுத்து புகைவிட்டபடி… ‘குட் நைட் லிஷா…’ என்று சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து நகர…
‘குட்நைட் தாஸ்..’ என்று அவனை வழியனுப்பிவிட்டு, அந்த பால்கணியில் லிஷா இப்போது தனியாக நின்றிருந்தாள்…
அவளுக்கு சந்தோஷின் நினைவு வருகிறது. அவன் குணாவைப் பற்றி விசாரித்துவிட்டு, இரவு ஃபோன் செய்வதாக கூறியும், இன்னும் அவனிடமிருந்து எந்த ஃபோன்காலும் வராதது குறித்து கவலை கொள்கிறாள்.
———————————
அதே நேரம்
குணா அவனது அறைக்குள் மேலே சுழலும் ஃபேனை பார்த்தபடி, ஒரு பீர்பாட்டிலை கையில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.
டிவியில், கார்டூன் ஓடிக்கொண்டிருந்தது…
அவன் மனதிற்குள் அன்று ஏதோ சாதித்து முடித்தது போல் உணர்ந்துக்கொண்டிருந்தான்.
கார்டூனில் வரும் சின்ன சின்ன நகைச்சுவைக்கும் அதீதமாக சிரித்தபடி பீர் குடித்துக்கொண்டிருந்தான்.
பாட்டிலில் பீர் காலியாகிவிடவே… எழுந்து சென்று ஃப்ரிட்ஜை திறந்து இன்னொரு பாட்டில் பீரை எடுத்து ஃப்ரிட்ஜை மூட… ஃப்ரிட்ஜ் கதவுக்கு அந்தபக்கம் சந்தோஷ் நின்றிருந்தான்.
‘என்ன குணா… எப்படியிருக்கே..?’ என்றவன் கேட்க… அவனை சற்றும் எதிர்பார்க்காத குணா சத்தம் போட ஆரம்பித்தான்…
‘ஏய்… ஏய்… நீ எப்படிடா இங்க வந்தே..? போடா வெளியே..?’ என்று நிதானமிழந்து சத்தம் போட்டான்…
‘போயிடுறேன் குணா… ஆனா, நீ இன்னிக்கு எங்க போயிருந்தேன்னு மட்டும் சொல்லிடு… அதுக்கப்புறம் எனக்கு இங்க என்ன வேலை..?’
‘டேய்.. நான் ஏண்டா உங்கிட்ட சொல்லணும்… என் இஷ்டம் நான் எங்கே வேணா போவேன்… எங்கேவேணாம் வருவேன்… அதைக்கேக்க நீ யாருடா..?’ என்று அரைபோதையில் சத்தம் போட்டான்.
‘குணா… நீ ஏதோ தப்பு பண்றே… அந்த கேணிவனத்தை பத்தி எங்கே போய் சொல்லியிருக்கேன்னு சொல்லு…?’
‘ஆங்.. B.B.C.ல சொல்லியிருக்கேன். நாளைக்கு நியூஸ்ல வரும் போய் பாத்துக்கோ..’ என்று ஏளனம் செய்ய… சந்தோஷ் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவனை தள்ளி சுவரோரமாய் நிறுத்தி, அவன் சட்டைக் காலரை பிடித்து மிரட்டினான்…
‘டேய்… குணா… மரியாதையா உண்மைய சொல்லு… கேணிவனத்தைப் பத்தி எங்கேயாவது, இல்ல யார்கிட்டயாவது சொல்லியிருக்கியா..?’ என்று மிரட்ட.. அவன் சந்தோஷைப் பார்த்து சிரித்தான்…
‘ஏன்.. சொல்லக்கூடாதா… டேய்… நானும் அந்த கிணத்துல இறங்கியிருக்கேன்டா… எனக்கும் உரிமையிருக்கு…’ என்று கூற, சந்தோஷ் அவன் பொறுமையை இழந்தவனாக, குணா கையிலிருந்த பீர்பாட்டிலை பிடுங்கி, சுவற்றில் இடித்து உடைத்தான்….
அந்த சிலீர் என்ற சத்தத்துடன் ஒடிந்தது… அந்த கண்ணாடி துகள் ஒன்று, குணாவின் கன்னத்தை பதம் பார்த்தது.. கன்னம் கீறி ரத்தம்வழிய ஆரம்பித்தது…
‘ஆ….’, குணா கத்தினான்.
அந்த கத்தலில், சந்தோஷ் பிடியை தளர்த்தவே, குணா அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அருகிலிருந்து ஸ்விட்-ஐ அணைக்க, ரூமிலிருந்த லைட் அணைந்து இருட்டு பரவியது…
சந்தோஷ், தடுமாறி கீழே விழுந்திருந்தான். எழுந்து தடவி தடவி ஸ்விட்சை போட… அறையில் குணா இல்லை…
எங்கே போயிருப்பான் என்று அந்த வீட்டிற்குள் வெவ்வேறு அறைகளில் தேடிப்பார்த்தான். அவனை எங்கும் காணவில்லை…
சரி… அவன் எங்காவது போகட்டும் என்று அவனை விட்டுவிட்டு, அந்த அறையில் வேறு ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக, அந்த அறையை எல்லாப் பக்கமும் துழாவ ஆரம்பித்தான்.
மிகவும் குப்பை போன்ற அறை என்பதால், சந்தோஷ்-ற்கு தேடிப்பார்க்க மிகவும் நேரம் பிடித்தது.
சுமார் 15 நிமிட தேடல்களுக்கு பிறகு, மேஜைக்கு அருகில், சுருட்டிவைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் சார்ஜருக்கு அடியில், ஒரு விசிட்டிங் கார்டு கிடைத்தது…
சந்தோஷ் அதையெடுத்து ஆவலாய் படித்துப் பார்த்தான்.
‘மிஸ்டர் இளங்கோவன்… மிஸ்ட்ரி டிவி…’ என்றிருந்தது.
இந்த கார்டு இவனிடம் எதுக்கு வந்தது… ஒரு வேளை இவன் இந்த கேணிவனத்தைப் பற்றி மிஸ்ட்ரி டிவிக்கு சொல்லியிருப்பானோ…? என்று சந்தோஷ் மனதிற்குள் கணித்துக் கொண்டிருந்த சமயம், வாசலில், போலீஸ் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது… சந்தோஷ் தன் நிலையை உணர்ந்து, அங்கிருந்து வெளியேறிவிட நினைத்து வாசலை நெருங்க…
அங்கே ஒரு போலீஸ் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்தார்…
‘யோவ்… இவன்தானேயா..?’ என்று போலீஸ் தன்னுடன் வந்து நின்றிருந்த குணாவைப் பார்த்து கேட்க… அவன் ‘இவனேதான் சார்..?’ என்று கூற… சந்தோஷ் இருவரையும் மாறி மாறி பார்த்தான்…
போலீஸ் சந்தோஷைப் பார்த்து முறைத்தபடி, ‘ஏய்.. லவ்வு மேட்டருக்காக வீட்டுக்குள்ள புகுந்து ஆளை அடிக்கிற அளவுக்கு பெரிய ரவுடியா நீ..? வாடா ஸ்டேஷனுக்கு..’ என்று அவனை ஜீப்பில் ஏற்றினார்…
———————————————
தாஸ், கேணிவனத்தில் அந்த காட்டுக்கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தான்… குளிருக்காக மூட்டிய தீயில் குளிர்காய்ந்தபடி அமர்ந்திருக்க… அவனுக்கு அருகே லிஷா நைட்ட்ரெஸ்ஸில் அமர்ந்திருந்தாள்…. அவள் முகம் மிகவும் பதட்டமாயிருந்தது…
‘ஏன் லிஷா ஒரு மாதிரியிருக்கே..?’
‘இல்ல..!? சந்தோஷை இன்னும் காணோம்… அதான் பயமாயிருக்கு..? இந்த காட்டுக்கோவிலுக்கு தனியா வந்துடுவானா இல்ல அவனுக்கு ஏதாவது ஆயிடுமான்னு பயமாயிருக்கு..’ என்றவள் அழுவதுபோல் கூற… அவள் பயத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் தூரத்தில் புலியின் உறுமல் ஒன்று கேட்கிறது.
இருவரும் பயந்து அந்த சத்தத்தை கேட்டுக்கொண்டிருக்கும் சமயம், கோவில் கருவறையில் கற்கள் நகரும் சத்தம் அவர்கள் கவனத்தை கலைக்கிறது… எழுந்து சென்று தாஸ் அந்த கருவறைக்குள் நுழைகிறான். சுவரைச் சுற்றிலும், அம்புக்குறிகள் வெவ்வேறு திசையை சுட்டிக்காட்டியபடி இருக்கு… கருவறை சிலையின் அடியிலிருக்கும் அந்த கல் மீண்டும் சத்தம் எழுப்புகிறது… அந்த கல்லை, தாஸ் மிகுந்த சிரமத்துடன் நகர்த்துகிறான்.
உள்ளே… குணா கிணற்றில் தொங்கியபடி புலம்புகிறான்…
‘யோவ் ரைட்டர்… என்னை காப்பாத்து… உன்னாலதானே நான் இப்படி ஆனேன்… ப்ளீஸ் என்ன காப்பாதுய்யா..’ என்று புலம்பிக்கொண்டிருக்க… நீண்ட குழப்பத்தில் தாஸ் அவனை காப்பாற்ற கைக்கொடுக்கிறான். உடனே குணா அவன் கையை பிடித்து தாஸையும் அந்த கிணற்றுக்குள் இழுத்துக் கொள்கிறான்….
தாஸ் அந்த கிணற்றுப் பள்ளத்தில் விழுகிறான்… அவன் கண்களுக்கு எதிரே… வட்டவடிவத்தில் தீப்பந்த வெளிச்சத்தில் கருவறை தெரிகிறது… அதில், லிஷாவின் முகம் எட்டிப்பார்த்தபடி அழுதுக்கொண்டிருக்கிறது…’
டப் டப் டப் என்று ஏதோ பலத்த சத்தம் கேட்கவே… தாஸ் பதறியடித்து எழுகிறான்…
நள்ளிரவு 1.00 மணி…
கண்டது கனவு என்று நம்ப சிறிது நேரம் பிடிக்கிறது… மீண்டும் டப் டப் டப்… என்ற கதவு தட்டப்படும் சத்தம்…
எழுந்து சென்று கதவை திறக்க… தாத்தா நின்றிருந்தார்…
‘என்ன தாத்தா இந்நேரத்துல..?’
‘அந்த சித்தர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்… அதான் சந்தோஷம் தாளல… வந்து உன்னை எழுப்பிட்டேன்..!’
‘யாரு தாத்தா அந்த சித்தர்..?’ என்று தாஸும் ஆர்வமாய் கேட்டான்…
தொடரும்…