இரயிலை தொலைத்த அந்த தண்டவாளத்தில் தாஸூம், குணாவும் முழித்துக் கொண்டு நின்றிருக்க…
‘சே..! என்ன ஒரு முட்டாள்தனம்..’ குணா புலம்பினான்…
‘ச்சே’ என்று தாஸூம் புலம்பியபடி நின்றிருந்து… ஒரு சமயத்துக்குமேல் இருவருக்கும் அலுத்துவிடவே… வேறுவழியில்லாமல் அந்த தண்டவாளத்தில் ரயில் சென்ற திக்கில் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தனர்.
நீண்ட தூரம் நடந்துப் பார்த்தும் அதே காடுகள் சூழுந்த தண்டவாளம்தான் இருபக்கமும் தெரிகிறது.
‘இதுக்கு மேல நடந்து பயனில்லை குணா, பேசாம இந்த காட்டுவழியா கொஞ்ச தூரம் உள்ளே நடந்து பாப்போம், ஏதாவது கிராமமோ இல்ல தெருவோ தெரியுதான்னு பாப்போம்..’ என்று தாஸ் கூற, குணா தாஸை முறைத்தபடி சம்மதிக்கிறான்.
இருவரும் மீண்டும் காட்டுப்பாதைக்குள் நுழைய, மேகத்திரள்களில் மின்னல் கீற்றுக்கள் மெலிதான இடியோசையை சப்திக்கிறது.
நடக்கும் அலுப்போடு சேர்ந்து குணாவுக்கு திடீரென்று தன் உடமைகள் ஞாபகம் வரவே புலம்புகிறான்…
‘என் பர்ஸ், என் பேக், செல்ஃபோன் எல்லாம் டிரெயினோட போச்சு..’ என்று புலம்ப, உடனே தாஸ் தன்வசம் இருக்கும் உடமைகளை கைவைத்து சரிபார்த்துக் கொள்ள… தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை ஆர்வமுடன் எடுத்து பார்க்க… அதில் சிக்னல் இல்லாமலிருக்கிறது.
‘என்ன தாஸ்?’
‘சிக்னல் இல்லை’ என்று அலுப்புடன் கூற, மீண்டும் குணாவின் முகம் வாடிப்போகிறது.
இதை கவனித்த தாஸ் ‘சாரி குணா..’ என்று கூற, குணா அந்த சாரி-ஐ பொருட்படுத்தாமல்…
‘சிகரெட்டாவது இருக்கா..?’ என்று கேட்கிறான்.
தாஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து பார்க்க உள்ளே 5 சிகரெட்டுகள் இருக்கிறது. அதில் இரண்டை எடுத்து பற்ற வைத்து இருவரும் ஒரு மரத்தின் கீழே அமர்ந்தபடி தம் அடிக்கின்றனர்.
புகையை கக்கியபடி குணா பேச்சை தொடர்கிறான்…
‘நான் நாளன்னைக்கி அந்த பாம்பே க்ளையிண்ட்டை பாக்கலேன்னா என் வேலயும் போச்சு..’
‘நான் இப்படியாகும்னு எதிர்ப்பாக்கலை குணா’
‘அவன்மட்டும் என் கையில கிடைச்சான், அவனை இங்கேயே கொன்னு இந்த காட்டுக்கு உரமா போட்டுடுவேன்..’
‘யாரை சொல்றீங்க..?’
‘அதான், டிரெயின் 4 மணி நேரம் இங்கேயே நிக்கும்னு சொன்னானே வழுக்குமண்டையன்..’ என்று குணா புலம்பிக் கொண்டே நடந்துக்கொண்டிருக்க, தாஸின் கைகளில் நீர்த்துளிகள் விழுகிறது.
‘குணா, நாமதான் இந்த காட்டுக்கு உரமாகப்போறோம்னு நினைக்கிறேன்..’
‘ஏன்..?’
‘மழைவரப்போகுது..’
‘மழைதானே… அதனால என்ன?’
‘ஹ்ம்… அடர்ந்த காட்டுக்குள்ள மழையில மாட்டுறதைவிட ஆபத்து வேறெதுவுமில்ல..’ என்று கூறிய தாஸ் எழுந்து வானத்தைப் பார்க்க, மூடிய மரங்களுக்கிடையே கொஞ்சமாக தெரியும் வானத்தில் மழைமேகம் கடுமையாக சூரியனை மறைத்திருப்பது தெரிகிறது.
கனத்த மழை…
தாஸும் குணாவும், ஆளுக்கொரு வாழையிலைப்போன்ற பெரியதொரு இலையை தலைக்கு வைத்து அமர்ந்திருந்தனர். அந்த இலை அவர்களின் தலையை மட்டும் மறைத்திருந்தது.
தாஸ் தனது டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தான், 4 PM என்று காட்டியது.
‘கிளம்புங்க குணா, இங்கேயே இருக்கக்கூடாது, சீக்கிரமா இருட்டிடும், அதுக்குள்ள நாம இந்த காட்டை விட்டு வெளியேறிடணும்..’ என்று தாஸ் கூறியதை தொடர்ந்து, மழையை பொருட்படுத்தாமல் இருவரும் நடக்கின்றனர்.
தொடர்ந்து காட்டுக்குள் ஒரு மணிநேர பயணம்…
மழை ஓய்ந்திருந்தது… அவர்கள் நடை ஓயவில்லை…
தாஸ் கண்களுக்கு தூரத்தில் ஒரு இடம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் தாஸுக்கு மனதில் ஒரு புது தெம்பு வந்தது. அது மட்டும் அவன் நினைத்ததுபோல் இருந்தால், இரவு எந்த ஆபத்துமில்லாமல் கழியும் என்று நினைத்தான்… இன்னும் கொஞ்சம் அந்த இடத்தை இருவரும் நெருங்க… அந்த இடம் இப்போது நன்றாக தெரிந்தது. அது அவன் நினைத்தது போல்தான் இருந்தது.
அது… ஒரு காட்டுக் கோயில்…
‘அது என்ன கோவில்மாதிரி இருக்கு..’ என்று குணா சந்தேகத்துடன் கேட்டான்.
‘கோவிலேதான்…’ என்று கூற இருவரும் அதை சமீபித்தார்கள்.
‘ஓரே ஒரு மண்டபம்தான் இருக்கு..’
‘ஆமா… ஆனா 2 பேருக்கு தாராளமா போதும், உடனே இந்த இடத்தை தயார் பண்ணணும்..?’
‘எதுக்கு..?’
‘இங்கதான் நாம இரவை கழிக்கணும்..’
‘இங்கேயா.?’
‘இங்கேதான்..’ என்று தாஸ் கொஞ்சம் கடுமையாக கூற, குணா அவனை முறைத்தான்.
‘பேசிக்கிட்டிருக்காம… பக்கத்துல போய், மழையில நனையாமலோ, இல்ல கொஞ்சமா நனைஞ்ச மரக்கிளைகளோ, குச்சியோ… எது கிடைக்குதோ கொண்டு வாங்க..’
‘எதுக்கு..?’
‘நம்மகிட்ட ஆயுதம் எதுவுமில்ல, இன்னிக்கி நைட் நமக்கு நெருப்புதான் ஆயுதம்..’ என்று தாஸ் கூற, குணா கோபமடைகிறான். ஆனால் தாஸ், அந்த இடத்தை சுற்றி சுற்றி கண்களால் அளந்து கொண்டிருந்தான்
‘பாஸ், நாம இங்க வெகேஷன் கொண்டாட வரலை…’
‘எனக்கு தெரியும் சார்’ என்று சத்தம் போட்டு ஒரு சின்ன இடைவெளி விட்டு குரலை சாந்தப்படுத்திக் கொண்டு, ‘ப்ளீஸ் குணா, இந்த காட்டுக்குள்ள இரவு நேரத்துல நடந்துப்போறதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்ல..’
‘நீங்கதானே எக்ஸ்பீரியண்ஸ்டு ட்ரெக்கர்னு சொன்னீங்க..?’
‘அதனாலத்தான் சொல்றேன். நைட் இந்த காட்டுக்குள்ள பல விஷயம் சுத்திட்டிருக்கும். ஒழுங்கா இங்க தூங்கி எழுந்துட்டு காலையில நடக்கலாம்..’ என்று தாஸ் கூற, குணா மறுத்து பேசவில்லை…
சிறிது நேரத்தில் குணா, சில காய்ந்த குச்சிகளை கொண்டு வந்து அந்த மண்டபத்தில் கொட்டினான். தாஸ், அவைகளை ஒன்றாய் குவித்து, தனது சிகரெட் லைட்டரை எடுத்து பெரும்பாடுபட்டு பற்ற வைக்க முயற்சித்தான். ஆனால், அவைகளை எரிக்க ஏதாவது பேப்பர் தேவைப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்து, பிறகு ஏதோ நினைவுக்கு வரவே, தனது பர்ஸை எடுத்து பார்த்தான். உள்ளிருந்த சில விசிட்டிங் கார்டுகளும் நனைந்திருக்க, பணம் வைக்கும் பகுதியில் சில ரூபாய்கள் கண்ணுக்கு பட்டது, அதிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்தான்.
குணா இவன் செய்யமுனைவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே ‘ஹே ஹே… தாஸ் வேண்டாம்..’ என்று குணா சொல்வதை பொருட்படுத்தாமல், தாஸ் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, அந்த 500 ரூபாய் தாளை எடுத்து பற்ற வைத்தான். அதுவும் நன்றாகவே பற்றி எரிந்தது.
‘சாரி, நண்பா, இன்னிக்கி நைட் நம்ம ரெண்டு பேரோட உயிரோட விலை இந்த 500 ரூபாய்னு நினைச்சிக்கோ..’
‘ஏன்..’
‘இது இல்லன்னா, இந்த காட்டுல கடும்குளிரில நடுங்கி சாக வேண்டியதுதான்.. இதே கோவில் நம்ம 2 பேருக்கும் சமாதி கோவிலா மாறிடும்.’ என்று கூற, குணா பயத்தில் எச்சில் விழுங்கினான்.
அன்றிரவு அந்த கோவில் மண்டபம் கிட்டத்தட்ட அவர்களின் கூடாரமாக மாறியிருந்தது. கேம்ப் ஃபயர் போன்று அவர்கள் அமைத்திருந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். தாஸ் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான், அந்த சிலை அடையாளமிழந்திருந்தது. அருகில் ஒரு வாய் உடைந்த பெரிய அகல்விளக்கு இருந்தது. மற்றபடி பாழடைந்த கோவிலின் அத்தனை அம்சங்களும் தெரிந்தது.
‘தாஸ், ரொம்ப பசிக்குது…’
‘சாரி குணா, வர்ற வழியிலியே பாத்தேன். எல்லாம் காட்டுச்செடி. எதுவும் கிடைக்கலை, பலாப்பழ மரங்கூட இல்ல, சில இடங்கள்ல எழுமிச்சை மரம்தான் இருக்கு..’ என்று கூற, குணா தலையை குனிந்து கொண்டான். அவனைப் பார்க்க தாஸூக்கு பாவமாக இருந்தது. ஒரு வகையில் குணாவின் இந்த நிலைக்கு அவன்தான் காரணம் என்று எண்ணியதால் மிகவும் வருத்தப்பட்டான். மீண்டும் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது.
உடனே எழுந்து சென்று அங்கிருந்த விக்கிரஹத்துக்கு அருகில் இருந்த வாய் உடைந்த பெரிய அகல்விளக்கை எடுத்து வந்து, வெளியே சொட்டிக்கொண்டிருக்கும் மழை நீரை அந்த பெரிய அகல் விளக்கில் பிடித்துக் கொண்டான். அதை கொண்டு வந்து குணாவிடம் கொடுக்க, அதை பெரும் தாகத்துடன் அவசர அவசரமாய் பருகினான். இது போல் ஒரு 4, 5 தடவை இருவரும் அந்த விளக்கில் நீர்பிடித்து பருகியபிறகு… ஓரளவுக்கு பசி அடங்கியது.
இப்போது இருவரும் அந்த கேம்ப்-ஃபயர் போல் எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீயில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்தனர்.
‘பசி மொத்தமா அடங்கலை… ஆனா பசிக்கலை… ரொம்ப தேங்க்ஸ்’ என்று குணா பேச்சைத் தொடங்கினான்.
‘எதுக்கு தேங்க்ஸ்லாம்… அப்படி பாத்தா, நான்தான் உங்ககிட்ட சாரி சொல்லணும்…’
‘எதுக்கு தாஸ்..?’
‘ஒருவகையில உங்களோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்… அதான்… சாரி…’ என்று தாஸ் கூற, குணா பதிலளிக்காமல் சிரித்துக் கொள்கிறான்.
‘ஹ்ம்… சினிமாவுல மட்டும் ஹீரோயினுக்கு நடுக்காட்டுலயும் ஹீரோ சூப்பரான டின்னர் ரெடி பண்ணி கொடுக்கிறாரு..? ஆனா நிஜத்துல பச்சைத் தண்ணி கிடைச்சதே சொர்க்கம் மாதிரி இருக்கு’
‘அதெல்லாம் சினிமாதான் குணா… இங்க என்ன அதிகபட்சமா பலாப்பழம் கிடைக்கும், அப்படியும் இல்லன்னா தேன் எடுத்து குடிக்கலாம்… மத்தபடி வேற எதைச் சாப்பிட்டாலும் ரிஸ்க்..’
‘அப்படியா..?’
‘ஆமா.. காட்டுல எதவும் தெரியாம கைவைக்கக் கூடாது.. நம்மளைவிட இங்க வாழ்ற உயிரினங்களோட பாப்புலேஷன் ரொம்ப ஜாஸ்தி… நாம காட்டுல விருந்தாளியா டீஸன்ட்டா நடந்துக்கணும், இல்லன்னா நாமளே விருந்தாயிடுவோம்…’
‘ஹா..ஹா… நல்ல டயலாக்… நீங்க ரைட்டர்னு நான் இப்ப ஒத்துக்குறேன்..’ என்று கூறியபடி குணா அந்த மண்டபத்தின் தரையில் நெருப்புக்கு அருகே படுத்துக் கொள்ள… தாஸ் தூங்கப்பிடிக்காமல் தனது மொபைலில் ஒரு பழைய பாடலை ஓடவிடுகிறான்.
மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்…
என்று அந்த இனிமையான P.B.ஸ்ரீனிவாஸ் பாடலை கேட்டுக் கொண்டிருக்க, பாட்டுக்கிடையில் தாஸ் அந்த விக்கிரஹத்தை பார்த்துக் கொள்கிறான். தாஸூக்கும் கண்கள் இழுத்துக் கொண்டு தூக்கம் வருவது போல் தோன்றவே அப்படியே அவனும் அந்த மண்டப தரையில் சரிகிறான்.
தூக்கத்தில் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக்கொண்டு வர… கண்கள் முழுவதுமாக மூடாத நிலையில், எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் வெளிச்சத்தில் அந்த மண்டபத்தின் கூரைச்சுவர் தாஸின் கண்களுக்கு தெரிந்தது… அந்த விட்டத்தில் விழுந்த அரைகுறை வெளிச்சத்தில்… ஒரு ஓவியம் தெரிந்தது… அந்த ஓவியத்தைப் பார்த்த தாஸ்… தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்… அதில்…
தொடரும்…